Tuesday, January 26, 2021
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்

மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்

-

வேலூர் மாவட்டம் எசையனூர் மக்களின்
மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம் கற்பிக்கும் பாடம் !

esaiyanur-river-sand-miningவேலூர் மாவட்டம் எசையனூர் கிராம பாலாற்று படுகையில் சட்ட விரோதமாக மணல் திருடிய இரண்டு ஹிட்டாச்சி இயந்திரத்தை கைப்பற்றிய ஊர் மக்கள் ஊருக்குள் கொண்டு வந்து சிறைபிடித்தனர். இது பாலாற்றையே நாசமாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான மணற்கொள்ளையன் கரிகாலனின் இயந்திரம் என்பதால் ஊர் மக்கள் தகவல் சொல்லியும் வருவாய்த்துறை அதிகாரிகளோ, பொதுப் பணித்துறையோ, போலீசோ அங்கு வரவில்லை. உடனே ஊர் மக்கள் சாலை மறியல் செய்து போக்குவரத்தை தடுத்தவுடன் டி.எஸ்.பி மதிவாணன், ஆற்காடு தாசில்தார் சாந்தி ஆகியோர் போலீசு படை சகிதமாக வந்து மறியலை கைவிடுமாறு ஊர்மக்களை மிரட்டினர்.

மணல் அள்ளிய இயந்திரத்தை பறிமுதல் செய்து மணற் கொள்ளையன் கரிகாலனையும் கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம் என் மக்கள் கோரியதை அதிகாரிகள் ஏற்றதால் மறியல் கைவிடப்பட்டது. ஊர் பொதுமக்கள் சார்பில் கையெழுத்திட்டு புகார் அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த மணல் கொள்ளையன் போலீசு துணையோடு மக்களை மிரட்டிப் பார்த்தான். மக்கள் அனைவரும் அவனை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து அடிக்க பாய்ந்தனர். ஓடிப்போய் அவன் வந்த ஜீப்பிற்குள் உட்கார்ந்து கதவை சாத்திக் கொண்டான். அவன் ஜீப்பை மக்கள் முற்றுகையிட்டனர். அதன் பிறகு போலீசு ‘பாதுகாப்பு’டன் மணற் திருடிய குற்றவாளி கரிகாலன் தப்பிச் சென்றான்.

இரண்டு ஹிட்டாச்சி இயந்திரங்களையும் எப்படியாவது மீட்டு மணல் திருடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ‘கடமை’ உணர்வோடு காத்திருந்த டி.எஸ்.பி மதிவாணன் இரவு ஆனதும் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு பறிமுதல் செய்த எந்திரத்தை கொண்டு செல்வதாகவும் மணல் திருடன் மீது வழக்கு போடுவதாகவும் கூறி இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றை கடந்து மணல் திருடன் கரிகாலனிடமே ஒப்படைத்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

எப்பேர்பட்ட கடமை உணர்ச்சி பாருங்கள். ‘வேலியே பயிரை மேற்கிறது’ என்ற பழமொழியை நடைமுறையில் நிருபித்து காட்டியுள்ளார். மதிவாணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. மணற்கொள்ளைக்கு எதிராக நடத்த பல மக்கள் போராட்டங்களை போலீசை வைத்து ஒடுக்கி மணற் கொள்ளையனுக்கு அடியாள் வேலை செய்து வருபவர்தான் இந்த மதிவாணன்.

palar-sand
கோப்புப் படம்

மறுநாள் காலை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று எசையனூர் கிராம மக்கள் கைப்பற்றிய இயந்திரம் பற்றி கேட்ட போது அங்கிருந்த போலீசு ‘‘எங்க ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உங்கள் ஊர் வராது” என்று கூறிவிட்டனர். அதன் பிறகு டி.எஸ்.பி மதிவாணனிடமே ஊர் மக்கள் போன் செய்து பறிமுதல் செய்த இயந்திரம் எங்கே என்று கேட்ட போது ஊர் மக்கள் தந்த பொதுவான புகார் மூலம் நடிவடிக்கை எடுக்க முடியாது என்றும் குறிப்பாக ஒருவர் ஆற்காடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் தந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை தொடர்ந்து ஊர் மக்கள் 7 பேர் ஆற்காடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றனர்.

அங்கு போலீசு படையுடன் காத்திருந்த ஆய்வாளர் விஜயகுமார் ஊர் மக்கள் கொண்டு வந்த புகாரை பெறாமல் ஹிட்டாச்சியின் கண்ணாடியை உடைத்ததற்கும், சாலை மறியல் செய்ததற்கும் உங்கள் அனைவரையும் ரிமாண்டு செய்கிறேன் என்று மிரட்டி போலீஸ் நிலையத்திலேயே உட்கார வைத்து ரிமாண்ட் செய்யாமல் வெளியே விட்டால் போதும் என்ற மனநிலைக்கு ஊர் மக்களை தள்ளிய போலீசு “இனிமேல் மணல் எடுக்கும் விசயத்தில் தலையிடக் கூடாது” என மிரட்டி அனுப்பி வைத்துள்ளது.

சாலை மறியல் செய்த போது அங்கு வந்த ஆற்காடு தாசில்தார் சாந்தி அவர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி என்றும் மேலிடத்து அழுத்தம் காரணமாக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவரே கூறியதாகவும் ஊர் மக்கள் கூறினர். சகாயம், சாந்தி போன்ற நேர்மையான அதிகாரிகளால் மக்களுக்கு என்ன பயன் நேர்மையானவர்களின் அதிகாரம் இந்த அரசுக் கட்டமைப்பில் செல்லாக்காசாகிப் போயுள்ளது என்பதே இச்சம்பவம் நமக்கு தெரிவிக்கும் தெளிவான உண்மையாகும்.

வேலூர் மாவட்டத்தில் தலையாரி முதல் கலெக்டர் வரையிலும் சாதாரண போலீசு முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரையிலும் மணற் கொள்ளையின் பங்குதாரர்களாக உள்ளனர். பாலாற்றிலும் குவாரி அமைத்து சட்டத்திற்கு உட்பட்டு மணல் அள்ளும் வேலையை பொதுப்பணித்துறை செய்ய வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய வேலையை மணற் கொள்ளையன் கரிகாலன் செய்கிறான். வேலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் மணற்கொள்ளையின் பங்குதாரராக உள்ள போது இதனால் பாதிக்கப்படும் மக்கள் யாரிடம் சென்று சட்டப்படி முறையிடவும் தீர்வு காணவும் முடியும்? மணற் கொள்ளையால் பாதிக்கப்படும் கிராமத்தின் வார்டு கவுன்சிலர் முதல் பஞ்சாயத்து தலைவர் வரையிலும் மாதச் சம்பளமாகவே மணற்கொள்ளையின் பங்கு போய் சேர்கிறது. இது ஊரறிந்த ரகசியமாகும்.

இந்த மணல் திருட்டு சம்பவம் மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளில் வெளிவந்தும் கூட சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை பற்றி வருவாய்துறை அதிகாரிகளோ, பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, போலீசோ கவலைப்படவில்லை. தான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் விலங்குகள் போல ஆற்றையும் நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டி மக்கள் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுப்பணித்துறையே அதை அழித்து நாசம் செய்கிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் தகுதியை இழந்து தோற்று போய் நீர் நிலைகளை அழிக்கும் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்டது பொதுப்பணித்துறை.

சட்டப்படி வழக்கு பதிவு செய்ய முடியாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தகுதியை இழந்து சட்டப்படி புகார் கொடுத்த மக்களையே எதிர்நிலையில் நின்று மிரட்டுகிறது போலீசு. இச்சம்பவம் மொத்த அரசு கட்டமைப்பும் மக்களை ஆளும் தகுதியை இழந்து தோற்றுப் போய் மக்களுக்கு எதிரான சக்தியாக மாறிபோய் உள்ளது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்து தோற்றுப் போய் நாட்டின் ஆகப் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை நாம் தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும். இந்த அரசுக் கட்டமைப்பிற்கு வெளியேதான் பிரச்சனையை தீர்க்க முடியும், இதுதான் தீர்வு.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க