Wednesday, October 21, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !

சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !

-

கள்ளர் சாதி வெறியர்களின் அட்டகாசம்! சிவகங்கை அரசனூரில் தலித்துகளின் வீடுகள் உடைப்பு! பொருட்கள் சூறையாடல்!
சாதிவெறியைத் தூண்டி விட்ட எச்.ராஜா, லொடுக்கு கருணாஸ் கும்பல்! அமைச்சர் பாஸ்கரன் அம்பலத்தின் ஆசீர்வாதம்!

சிவகங்கையிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, அரசனூர். இங்கு கள்ளர் சாதியினர் சுமார் 650 வீடுகளில் பெரும்பான்மைச் சாதியினராக வசிக்கின்றனர். ஆதிதிராவிடர் சமூகத்தினர் சுமார் 85 வீடுகளில் வசித்து வருகின்றனர். இவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்திலும் கள்ளர் சாதியினரே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதில்லை.

08-09-2016 அன்று இரவு சுமார் 07.30 மணி. அரசனூர் தலித் குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் திருமணம். அதேசமயம் இன்னொரு திருமணத்திற்காக பெரும்பாலான இளைஞர்கள் அருகிலுள்ள கிராமமான தமறாக்கிக்குச் சென்றிருக்கின்றனர். அரசனூரில் மணமகன் வீட்டில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென மின்சாரம் தடைபடுகிறது. சுமார் பத்து பெண்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் கொண்ட கும்பல், கம்பு, அரிவாள், கடப்பாறை ஆகியவற்றுடன் தலித் குடியிருப்பிற்குள் நுழைகிறது. வீட்டின் ஓடுகளையும் ஆஸ்பெட்டாஸ் தகடுகளையும் அடித்து நொறுக்குகிறது. வீடுகளின் கதவுகளை உடைத்து வீட்டிலிருந்த பீரோ, பெட்டி, டி.வி. பிளாஸ்டிக் குடங்கள், சில்வர் பானைகள், பாத்திரங்கள், அம்மா கொடுத்த கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை அடித்து நொறுக்குகின்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆவேசக் கூச்சலுடன் வந்த அக்கும்பல் திருமண வீட்டில் நுழைகிறது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து ஓடுகின்றனர். கண்ணில்படும் பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்குகிறது. விருந்தில் மொய் எழுதிக் கொண்டிருந்தவரிடமிருந்து 30,000 ரூபாய் இருந்த பணப்பெட்டியைப் பறித்துக் கொள்கிறது. மண வீட்டிற்கு வந்திருந்த ‘டவேரா’ காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அங்கு நின்றுகொண்டிருந்த ‘பைக்குகள்’ அடித்து நொறுக்கப்படுகின்றன. மொத்தம் ஒன்பது பைக்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. ஒரு ‘ஆட்டோ’வும் அடித்து நொறுக்கப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை உயிருக்குப் பயந்து பைக்கை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். கும்பல் அவரை விரட்டி மறிக்கிறது. பைக்கைப் போட்டுவிட்டு தப்பி ஓடி அருகிலுள்ள சமத்துவபுரத்தில் ஒளிந்துகொள்கிறார். சுமார் அரைமணிநேரம் வெறியாட்டம் ஆடித்தீர்த்துவிட்டு அக்கும்பல் சென்றுவிடுகிறது.

ஊருக்குக் கிழக்கே தலித் மக்கள் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. இவர்கள் கடந்த பதினாறு வருடங்களாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடி வருகிறார்கள். “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” எனும் சீர்காழியின் பாட்டு, வருடந்தோறும் ஒலிக்கும். ஆனால், இந்த வருடம் அந்த விநாயகனே வினையைக் கொண்டு வந்துவிட்டான்.

விநாயகர் சதுர்த்தி வினை

broken-roof
உடைக்கப்பட்ட கூரை

இத்தனை ஆண்டு காலமாக இல்லாத பழக்கமாக இந்த ஆண்டு தாங்களும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட வேண்டும், பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும் எனக் கள்ளர் சாதியினர் போலீசிடம் அனுமதி கேட்டுள்ளனர். முதலில் அனுமதி மறுத்த போலீசு பின்னர் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஊர்வலம் நடத்த அவர்களுக்கும் அனுமதி கொடுத்துள்ளது.

05-09-2016 அன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை வழக்கம்போல ஊரிலுள்ள மந்தை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தச் சென்ற தலித்துகளை கோவிலுக்குள் நுழையக்கூடாதென்று கள்ளர் சாதியினர் தடுக்கின்றனர். பின்னர் போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு தலித்துகள் கோவிலுக்குள் நுழைகின்றனர்.

அன்று இரவு தலித் மக்கள் ஏற்பாடு செய்திருந்த வள்ளி திருமண நாடகத்தை கிராமப் பொது மேடையில் நடத்தக் கூடாது எனக்கூறி கள்ளர் சாதி இளைஞர்கள் மேடையின் மீதேறி அமர்ந்து கொள்கின்றனர். மீண்டும் போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு நாடகம் நடைபெறுகிறது.

மறுநாள் 06-09-2016 அன்று காலை 06.00லிருந்து 08.30 மணி வரையில் தலித்துகளுக்கும் 08.30லிருந்து 10.00 மணி வரையில் கள்ளர்களுக்கும் பிள்ளையாரின் களிமண் சிலையைக் கரைப்பதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது போலீசு.

காலை எட்டு மணிக்கெல்லாம் தலித்துகள் சிலையைக் கரைத்து முடித்துவிட்டனர். ஆனால், கள்ளர்கள் கரைக்கவில்லை. போலீசார் கேட்டதற்கு பாஜக தலைவர் எச்சு.ராஜா வருவதாகவும் அவர் வந்துதான் சிலையைக் கரைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். வினை மாலை 04.00 மணியளவில் வருகிறது. ராஜாவும் வருகிறார்; பேசுகிறார்; பற்றவைத்துவிட்டு சென்றுவிடுகிறார்.

சாதிவெறி நிகழ்வுகள்

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் சுவரொட்டிஅரசனூரில் கள்ளர் சாதியைச் சேர்ந்த பெண் புவனேஸ்வரி. அவர் திருமணமாகி குழந்தையுடன் இருந்தார். தனது கணவனால் ஒதுக்கப்பட்டு இருந்த அவரும் முத்துப்பாண்டி எனும் தலித் இளைஞரும் காதலித்தனர். குழந்தையுடன் இருவரும் ஊரை விட்டுச் சென்று விடுகின்றனர். புவனேஸ்வரியின் உறவினர்கள் அவர்களைக் கண்டுபிடித்துத் தனியாகப் பிரித்து மீண்டும் ஊருக்குக் கூட்டிவந்து விடுகின்றனர். ஆனால், பத்து நாட்களில் மீண்டும் அவர்கள் சேர்ந்து ஓடிவிடுகின்றனர். இதனால் வெறுப்படைந்த புவனேஸ்வரியின் குடும்பத்தார் முத்துப்பாண்டியினது குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையை மட்டும் வாங்கிக்கொண்டு அவர்களை விட்டு விலகி விடுகின்றனர். இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

08-09-2016 தலித் குடியிருப்பில் நடந்த திருமணத்திற்கு சென்னையிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் அங்கிருந்த பெட்டிக்கடையில் செல்போனில் பாட்டுக் கேட்டவாறு இருந்துள்ளனர். ‘நா ரெடி, நீங்க ரெடியா’ பாடல் ஒலிக்கிறது. இரண்டு உள்ளூர்ச் சிறுவர்கள் அந்தப் பாடலோடு சேர்ந்து தாங்களும் பாடிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அவ்வூரைச் சேர்ந்த கள்ளர் சாதிப் பெண் பேருந்திலிருந்து இறங்கி அந்தப் பக்கமாக நடந்து வருகிறார். சிறுவர்கள் பாடியதைக் கேட்ட அவர், தன்னைத்தான் கேலி செய்கிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, சிறுவர்களைத் நோக்கித் திரும்பிப் பார்த்து, ‘செருப்பு பிஞ்சிரும்’ எனச் சொல்ல சிறுவர்களும் எதிர்த்துப்பேச, அப்பெண், தனது அப்பாவிடம்போய்த் தன்னைச் சிறுவர்கள் கேலி செய்ததாகக் கூற, யாரென்று விசாரித்து அச்சிறுவர்களையும் அவர்களது பெற்றோரையும் வரச்சொல்லி அச்சிறுவர்களை அடித்துக் கண்டித்து அனுப்பி விடுகிறார். ஆனால், அதன்பிறகு பலரது ஆலோசனைக்குப் பிறகு அவர் பூவந்தி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார்.

மாலையில் நான்கு போலீசார் வந்து கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் இப்பிரச்சினை குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் அந்தக் கும்பல் தனது சூறையாட்டத்தை நடத்துகிறது. திருமண வீட்டையும் தாக்குகிறது.

எச்சு.ராஜா உசுப்பேத்தல்

இரண்டு நாட்களுக்கு முன்பாக 06-09-2016 அன்று இரவு கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, கலப்பு திருமணங்களுக்கு எதிராக பேசி “நீங்கள்லாம் என்ன செய்றீங்க?” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி’ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.

‘முக்குலத்தோர் புலிப்படை’ எனும் அமைப்பை வைத்துப் பிழைப்பு நடத்தும் நடிகர் லொடுக்கு பாண்டி கருணாஸ், சில மாதங்களுக்கு முன்னால், அரசனூருக்குள் வந்து கொடியேற்ற முயன்றபோது, கள்ளர் சமூகத்துப் பெரியவர்களே கடுமையாக எச்சரித்து அதனைத் தடுக்கவும் சிவகங்கை – மதுரை ரோட்டிலேயே கூட்டத்தை நடத்திவிட்டுப் போகிறார். பின்னர் ஒருநாள் சாமி கும்பிட வருவதாகச் சொல்லி சிலர் அவரை அழைத்துவந்து திடீரெனக் கம்பை ஊன்றிக் கொடியையும் ஏற்றிவிடுகின்றனர். ஊர்க்காரர்கள் சொல்லை மீறியதாலும் பேருந்து திரும்புவதற்கு அக்கம்பு இடையூறாக இருப்பதாலும் அதை அகற்றவேண்டும் என கொடி ஊன்றியவர்களிடம் கெடு வைக்கிறார்கள். ஆனால், அவர்களோ, அன்று இரவே கொடிக்கம்பின் அடிப்பாகத்தில் செங்கல், சிமிண்ட் வைத்துக் கட்டிவிடுகின்றனர்.

இப்பகுதியின் எம்.எல்.ஏ அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். கூட்டுறவுத் துறைக்கான அமைச்சராக இருக்கிறார். ஏற்கனவே சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர். தமறாக்கியைச் சேர்ந்தவர். கள்ளர். பெயர் பாஸ்கரன் அம்பலம். அரசனூரில் இவரது நெருங்கிய உறவினர்கள் பலர் உள்ளனர். சூறையாட்டத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை அரசனூர் வந்த அவர் அவரது உறவினர்களை மட்டும் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்.

சூறையாடல் நடந்த அன்று இரவே கலெக்டர், எஸ்.பி, அதிரடிப்படையுடன் வந்துள்ளனர். காலை 10.00 மணிக்குள் குற்றவாளிகளைக் கைதுசெய்துவிடுவோம் என உறுதி கொடுத்துள்ளனர். தலித் மக்களுக்குச் சாப்பாடு கொடுத்துள்ளனர். பிறகு ரேசன் கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளச் சொல்லி டோக்கன் கொடுத்துள்ளனர். ஆனால், ரேசன் கடைக்காரர் 100 ரூபாய் கொடுத்தால்தான் பொருள் தருவேன் என்று சொல்லி வசூலித்துள்ளார். இது குறித்து புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டே நாட்களில் உடைக்கப்பட்ட ஓடுகளும் வீட்டுக் கதவுகளும் சரி செய்யப்பட்டு விட்டன. ‘டவேரா’ காரும், ஆட்டோவும் ஒர்க்‌ஷாப்பிற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. தடயத்தை மறைப்பதில் அரசுக்கு அவ்வளவு அவசரம்.

வீரணன் என்பவரும் இவரது அண்ணன் தினகரனும்தான் சூறையாடியதில் முன்நின்றவர்கள். இதில் தினகரன் ஊராட்சி மன்ற 3ஆவது வார்டு உறுப்பினர். இவர்தான் மூளை. தினகரன் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஊருக்குள்தான் திரிகிறார்.

38 பெயர் தெரிந்த குற்றவாளிகள்மீது தலித் மக்கள் சார்பில் கெளரி என்பவர் புகார் கொடுத்துள்ளார். 48 பேரை அழைத்துச்சென்ற போலீசு அதில் 13 பேரை மட்டும் கைது செய்துவிட்டு மற்றவர்களைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

போலீசா கொக்கா?

08-09-2016 அன்று ஒரு பெண்ணைக் கேலி செய்ததாக பூவந்தி போலீசில் அப்பெண்ணின் தந்தை கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் 10-09-2016 அன்று அதாவது இரண்டு நாட்களுக்குப் பிறகு சூறையாடல் குறித்து புகார் கொடுத்த கெளரியின்மீது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததான பிணையில் வர முடியாத பிரிவின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது பூவந்தி போலீசு. அமைச்சர் பாஸ்கரன் அம்பலத்தின் ஆணைப்படி இது நடந்துள்ளது.

“சும்மாதான் எஃப்.ஐ.ஆர் போட்டு வைத்திருக்கிறோம். கைதெல்லாம் செய்யமாட்டோம்” என சிவகங்கை எஸ்.பி கூறியிருக்கிறார். எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டு, அதைக் கைது செய்வதற்காகப் போடவில்லை என்று எஸ்.பி சொல்வதை எந்த இளிச்சவாயன் நம்புவான்? ஒருவேளை கலெக்டர் நம்புவாரோ!

“வெறும் சாதி வெறியர்கள்”

சி.பி.எம்மும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தங்களது கண்டனச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை மக்களைத் திரட்டி 13-09-2016 அன்று சிவகங்கையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பல்வேறு அமைப்பினரும் அதில் கண்டன உரையாற்றினர். சி.பி.ஐயின் மூத்த தலைவர் நல்லகண்ணு இதில் கலந்து கொண்டார். ஆனால், அதில் எச்சு.ராஜா, கருணாஸ், பாஸ்கரன் அம்பலம் ஆகியோர்மீது யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. வெறும் சாதி வெறியர்கள், சாதி வெறியர்கள் என்றுதான் சொன்னார்களே தவிர, அவர்கள் கள்ளர் சாதி வெறியர்கள் என்று யாரும் சொல்லவில்லை.

cpm-tntom-poster
சி.பி.எம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போஸ்டர்

மக்கள் அதிகாரம் அமைப்பானது, கள்ளர் சாதி வெறியையும், எச்சு.ராஜா, கருணாஸ், அமைச்சர் பாஸ்கரன் அம்பலம் ஆகியோரையும் அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்டவர்கள் வெளியூர்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசியில் மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் மிரட்ட முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதிலிருந்தே ‘அம்மாவின் டாஸ்மாக் தண்ணி’யடித்துக்கொண்டு கும்பலாக உட்கார்ந்து பேசுகிறார்கள் என்பது தெரிகிறது.

எச்சு.ராஜாவுக்கும் கருணாஸுக்கும் அமைச்சருக்கும் இதில் சம்பந்தமில்லையென்று போனில் பலர் சொல்கிறார்கள். அப்படியானால், அவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். உலகிலேயே மிகப்பெரும் சோம்பேறியான ‘மனித உரிமை ஆணய’மே வந்துபோய்விட்டது. இன்னமும் தொகுதி எம்.எல்.ஏயும் அமைச்சருமான பாஸ்கரன் அம்பலம் அங்கே வரவில்லையே. ஏன்?. நரித்தனமாகக் கொடி ஊன்றிச் சென்ற கருணாஸ் எங்கே?. ‘தெய்வமே, தெய்வமே’ எனப் பாடிக் கொண்டு திரிகிறாரா?

வினாயகர் சதுர்த்திக்காகத்தான் எச்சு.ராஜா வருகிறாரென்றால், தலித் மக்களின் வினாயகர் சதுர்த்திக்கும் வரலாமல்லவா? ஏன் வரவில்லை? தலித் மக்கள் வணங்கும் பிள்ளையார் என்ன ‘பாகிஸ்தானி’லிருந்து வந்தவரா? அவருக்குத் தெரியும், பிள்ளையாருக்கும் சாதி இருக்கிறது. பிள்ளையாராகவே இருந்தாலும் அது ஆதிக்க சாதி இந்துக்களின் பிள்ளையாராக இருந்தால்தான் எச்சு.ராஜா வருவார்.

கள்ளர் சாதி வெறி என்றால் ஏன் கோபம்?

கள்ளர் சாதி வெறியென்றால் ஏன் கோவப்படுகிறார்கள்? அவ்வெறிச் செயலைச் செய்தவர்கள் கள்ளர் சாதியினர் இல்லையா? இது கோபமல்ல. அச்சம். அம்பலப்பட்டுப் போனதால் வருகின்ற அச்சம். மொட்டையாக சாதி வெறிச் செயல் என்று சொன்னால் அவ்வெறிச் செயலைச் செய்த ‘கோழை’களுக்குக்கூடக் கோவம் வருவதில்லை. ஆனால், சாதியின் பெயரைச் சொல்லி ‘இந்தச் சாதி வெறி’ என்ற உண்மையைச் சொன்னால் சாதி உணர்வை மறைத்துக் கொண்டு இருக்கும் ‘மாவீரர்’களுக்குக்கூட முகம் வெளுக்கிறது. வாய் உளறுகிறது. கை,கால் நடுங்குகிறது. உதறல் எடுக்கிறது.

அப்படிப் பலருக்கும் எடுத்திருக்கிறது. இந்த சுவரொட்டியைப் படித்த சி.பி.எம்மின் மாவட்டப் பொறுப்பிலுள்ள முக்கியப் பிரமுகர் ஒருவர், ‘வெறித்தனமாக சுவரொட்டி அடித்திருக்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார். கள்ளர் சாதிவெறி என்று சொல்வதில் இவருக்கு ஏன் வெறி வருகிறது? குற்றம் செய்யும் சாதியின் பெயரைச் சொல்லத் துப்பில்லாத சூரப்புலிகள்தானே இவர்கள். வெறிச் செயலைச் செய்த சாதியின் பெயரை இவர்களால் ஒருநாளும் சொல்லமுடியாது. காரணம், நாளைக்கு ஓட்டு வாங்க இதே சாதிக்காரர்களிடம்தானே போய் நிற்க வேண்டும். கள்ளர் சாதிவெறி என்று சொன்னால் கள்ளர் ஓட்டு விழுமா? அதனால்தான் மொட்டையாக சாதி வெறி, சாதி வெறி என முழங்குகிறார்கள். கள்ளர் சாதிவெறி என்று சொல்லப் பயப்படுகிறார்கள். உண்மையைச் சொல்வதன் மூலமாக, சாதி, மத வெறியர்களை மட்டுமல்ல இது போன்ற ‘கருத்து கந்தசாமி’களையும் உதறல் கொள்ள வைக்கும் ஆற்றல் புரட்சிகர அமைப்புகளின் சுவரொட்டிகளுக்கும் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பி.ஜே.பி சாதிவெறி அரசியல் திட்டம்

இத்தனை ஆண்டு காலமாக வெளிப்படாத சாதி வெறி இன்று வெளிப்பட்டதோடு மட்டுமல்லாமல் தலைதூக்கி ஆட்டம் போடுவதற்கு, எச்சு.ராஜாவின் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான பேச்சும் தூண்டுதலுமே காரணம். கருணாஸ் போன்ற சாதி வெறியர்கள்தான் இச்சாதி வெறியர்களுக்குத் தார்மீகப் பலமாக இருக்கின்றனர்.

அரசனூர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பி.ஜே.பியின் திட்டமே இதுதான். சாதிய ஒழுங்கைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதையே இந்து தர்மமாக உருவாக்க நினைக்கும் இந்துத்துவ பயங்கரவாத நரித்தனத்தின் ஒரு சின்ன சாம்பிள்தான் அரசனூர் அட்டகாசம்.

சிவகங்கைப் பகுதியில் உள்ள தி.மு.க; அ.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் உள்ள சொந்த சாதிக்காரனோடு போட்டிபோட முடியாததால், கொள்ளையடித்துச் சம்பாத்திக்க முடியாமல் புலம்பித் திரிந்த ஆதிக்க சாதியினரையெல்லாம் இந்து எனும் பெயரில் அணுகித் திரட்டிச் சிறிதுசிறிதாக இப்பகுதியில் மத, சாதி வெறியினை வளர்த்து வருகிறது பி.ஜே.பி.

வாசனைகூடத் தெரியாமலிருந்த இந்து முன்னணி சிவகங்கையில் மண்டபம் பிடித்துக் கூட்டம் நடத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அரசுக் கலைக் கல்லூரி மைதானத்தில் தினமும் ‘சாகா’ நடத்துகிறது. அரசுக் கலைக் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு சந்தில் வருவாய்த் துறையில் வேலை செய்யும் அரசு ஊழியரான ராமநாதன் என்பவர் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் விடுதி கிடைக்காத மாணவர்களை இலவசமாகத் தங்க வைத்துள்ளார். அதோடு கல்லூரியில் விடுமுறை விடப்பட்டு விடுதிகள் அடைக்கப்படும்போது அந்த விடுதி மாணவர்களையும் அங்கே தங்கவைத்து தினமும் பலரைக் கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவினை நடத்தி இந்துத்துவ மூளைச் சலவை செய்து வருகிறார். இந்த வீட்டைக் ‘காரியாலயம்’ என்றே மாணவர்கள் அனைவரும் அழைக்கின்றனர்.

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் காலங்காலமாகத் தொழில் நடத்தியும் குடியிருந்தும் வருகின்ற ‘நேரு பஜார்’ பகுதியில் இதுவரை சீந்துவாரத்துக் கிடந்த பழைய இடிந்துபோன இரண்டு கோயில்களை புதியதாக்கி தற்போது தினந்தோறும் ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பக்ரீத் பண்டிகையின்போதுகூட மசூதியின் பக்கமாக ஸ்பீக்கரைத் திருப்பி வைத்து அந்த ஒலிபரப்பை நடத்தினார்கள்.

ஒருபுறம் முஸ்லீம்களுக்கும் மறுபுறம் தலித்துகளுக்கும் எதிராகக் குறிவைத்து இந்துத்துவ வாதிகளும் ஆதிக்க சாதியினரும் இணைந்து செயல்படுகிறார்கள். இந்து மத உணர்வை இந்து மத வெறியாக மாற்றுவதையே இந்தியாவிற்கான கொள்கையாகக் கொண்டுள்ள இந்துத்துவக் கும்பல், இப்போது சாதிய உணர்வை சாதிய வெறியாக மாற்றுவதைத் தமிழகத்திற்கான கொள்கையாகக் கொண்டு களமிறங்கியுள்ளது. அதன் விளைவுதான் அரசனூரில் நடைபெற்ற கள்ளர் சாதிக் கும்பலின் சூறையாடல்.

இதுவரை சிவகங்கைச் சுற்றியுள்ள பகுதியில் இன்னும் தாக்குதலுக்கு உள்ளாகாமலிருக்கும் தலித்துகளுக்கு அரசனூர் சூறையாடல் ஒரு எச்சரிக்கை. எல்லோரும் எதிர்க்கத் தயாராகுங்கள். இந்துத்துவம் எனும் பெயரில் உள்ளே நுழையும் ஆதிக்க சாதி வெறித்தனத்தை அனுமதிக்காதீர்கள். பதிலுக்குப் பதில். முடிந்தால், கேள்விக்கே பதில் சொல்லவும் தயாராகுங்கள். புரட்சிகர அமைப்புகள் உங்கள் அருகிலேயே களத்தில் நிற்கின்றன. அவற்றோடு இணைந்து கொள்ளுங்கள்.

தகவல்

செய்தியாளர்
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. ஏன் தலித்துக்களை ஆதித் திராவிடர்கள் என்று குறிப்பிடுகின்றீர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க