Sunday, December 6, 2020
முகப்பு செய்தி ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு

ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு

-

karur inspector
காவல் துணை ஆய்வாளர் சரவணன்

ஸ்காட்லாந்து யார்டுக்கு போட்டியாக புகழப்பட்ட தமிழ்நாடு போலீசின் சாம்ராஜ்ஜியத்தில்தான் திருச்சி ராம்ஜி நகர் திருடர்களும் வாழ்கின்றனர். இருவரில் யார் அதிக புத்திசாலி? ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கத்தி – ரத்தம் – யுத்தமின்றி புத்தியை வைத்து மட்டும் திருடுவார்கள்.

அதாவது இந்தியா முழுவதும் ஆளுக்கொரு கும்பலாக செல்வார்கள். பணம் புழங்கும் இடத்தில் பத்து ரூபாயைப் போட்டு “இது உங்களுடையதா?” என்று கேட்ட உடன் சேட்டு குனிவார். உடனே காரில் இருக்கும் பணப் பையுடன் ராம்ஜி நகர் ‘அறிஞர்கள்’ பறந்து போவார்கள். இது போன்று ஏகப்பட்ட ‘புத்தி’ திருட்டுக்கள்! ஆனாலும் இத்தகைய ‘புத்தி’ ஏதுமின்றி தமது சீருடை, வாகனத்தை மட்டும் வைத்தே தமிழக போலிசு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க முடியும்.

யுவராஜ் முதலான சாதிவெறியர்களும், அரவக்குறிச்சியில் வோட்டுக்கு நோட்டால் ஆட்டம் போட்ட அன்புநாதன் போன்ற அ.தி.மு.க பினாமிகளும் வாழும் திருத்தலம் கரூர். இவர்கள் இப்படியாக இருப்பார்களென்றால் கரூர் போலீசு மட்டும் இளித்தவாயர்களா என்ன?

கரூர் மாவட்டம் வீராக்கியத்தில் ஆகஸ்டு 2, 2016 அன்று ஒரு பால்பண்ணை அதிபர் வீட்டில் கொள்ளை நடக்கிறது. கொள்ளையர்கள் பணத்தோடு வீட்டு காவலாளிகளையும் கடத்திச் சென்றனர். சுவாதி கொலைவழக்கில் தனிப்படை நியமிக்கப் பட்டது போல இங்கும் அமைத்தனர். அவ்விசேட படையில் கரூர் பரமாத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் இடம்பெற்றனர். கொள்ளையோ, கொலையோ எதுவாக இருந்தாலும் நியமிக்கப்படும் குற்றவாளிகளை கைது செய்வதை விட குற்றத்தின் பலனை, ஆதாயத்தை அறுவடை செய்யவே தனிப்படை முனையும்.

பால் பணம் எங்கே போனது, எப்படி பிரிக்கலாம் என்று கரூர் தனிப்படை கோவைக்கு வந்தது. அப்போது இப்படை கோவை வந்ததை அறிந்த தப்பான தொழில் முறை பங்காளிகள் வேறு ஒரு திட்டம் போட்டனர். அதன்படி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அவ்வப்போது காரில் கடத்தப்படும் ஹவாலா பணத்தை ஸ்வாகா பண்ணலாம் என்று ஹவாலா ஏஜெண்ட் கோடாலி ஸ்ரீதர், ஆய்வாளர் முத்துக்குமாரிடம் கூறியிருக்கிறார்.

ஹவாலா பணத்தை முழுங்கினால், பறிகொடுத்தவரும் புகார் தரமாட்டார். பணத்தின் நதி மூலம், ரிஷி மூலத்தை கண்டுபிடிப்பதும் கடினம். எல்லாம் கச்சிதம் என்று பால் பணத்துக்கு ஏங்கி வந்த முத்துக்குமார் அணி முடிவு செய்தது. அதன்படி கோடாலி கூறிய தகவலின் படி ஆகஸ்டு 25, 2016 அன்று ஒரு ஹவாலா கார் வருகிறது. கேரள தொழில் அதிபர் அன்வர் சதாத்தின் ஹவாலா பணம் 3 கோடியே 93 இலட்சம் அந்தக் காரில் இடம் பெற்றிருக்கிறது.

காத்திருந்த காக்கிச் சட்டை கொள்ளையர்கள், கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே சோதனை என்ற பெயரில் ஹவாலா காரில் இருந்த நால்வரை இறக்கி விட்டு பணத்தோடு காரை கடத்துகிறார்கள். காரைக் காணவில்லை என்று அன்வர் சதாத் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இதில் முக்கியமான விசயம், அந்த அன்வர் சதாத் பணம் கொள்ளை போனதை மறைத்துவிட்டு கார் திருடப்பட்டது குறித்து மட்டும் புகார் செய்திருக்கிறார்.

காரில் ஹவாலா பணம் இருந்தது இத்தொழிலில் தொடர்புடைய பலரும் அறிந்த விசயமென்பதால் இறுதியில் இதை விசாரித்த போலீசு வேறு வழியின்றி அதை ஏற்க வேண்டி வந்தது. அப்படித்தான் விசாரணையில் கரூர் போலீசு பங்காளிகளின் கொள்ளை தெரியவந்தது.

போலீசுக் கொள்ளையர்கள்!
போலீசுக் கொள்ளையர்கள்! படம் நன்றி: தி இந்து

அன்வர்சதாத்திடம் தொழில் தொடர்பாக பழக்கம் வைத்திருந்த சுபாஷ், சபீர், சதீஷ் ஆகியோரும் இக்கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடம் இந்த ஹவாலா கொள்ளை தொடர்பாக விசாரித்ததும் ஒரு தனிப்படைதான். மேற்கண்ட கொள்ளையர்கள் மேற்கண்ட கொள்ளைக்கு  தலைமை வகித்தவர்கள் கரூர் போலீசு என்ற உண்மையை தெரிவித்திருக்கிறார்கள். அந்த ஹவாலா பணத்தில் இரண்டு கோடியை கரூர் போலீசுக்கும், மீதியை இவர்களும் பங்கிட்டிருக்கின்றனர். இதில் போலீசு வேனில், காக்கிச் சட்டை  சீருடையோடு அடியாள் வேலை செய்த கரூர் போலீசுக்கு கிடைத்த பணம் இரண்டு கோடி என்றால் மத்த போலீசின் பொறாமை, தொட்டபெட்டாவைத் தாண்டி எகிறியிருக்கும்.

இறுதியில் ஊரே காறித்துப்பிய நிலையில் திருச்சி சரக டிஐஜி அருண், மேற்படி ஸ்காட்லாந்து யார்டு போலீசாரை இடை நீக்கம் செய்திருக்கிறார்.

ஆக திருட்டோ, கொலையோ, கொள்ளையோ எதுவாக இருந்தாலும் போலீசிடம் புகார் தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது மற்றுமொரு ‘சாதனை’. நீங்கள் அ.தி.மு.க அமைச்சர் கூட்டம், மத்திய அரசின் ஆளும் கட்சிக் கூட்டம், பார்ப்பன அதிகார வர்க்க கூட்டம், இலக்கிய – கலையுல அதிகாரக் கூட்டம் போன்ற அணிகளோடு தொடர்பில் இல்லை என்றால் எந்தப் போலீசும் உங்களுக்கு எதையும் கண்டுபிடித்து தராது.

போகட்டும், தனிப்படை வேலை தொடர்பாக கோவைக்கு வந்த போதே இப்படி இரண்டு கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள் என்றால் இவர்கள் சாதாப் படையாக கரூரில் என்னவெல்லாம் தின்று தீர்த்திருப்பார்கள்? இவர்களிடம் புகார் கொடுத்த ஏழை மக்களின் கதி என்ன? அந்த புகார்கள் எந்த குப்பைக் கூடையில் புதைக்கப்பட்டிருக்கும்?

இந்த அரசு மற்றும் சமூக அமைப்பு காலாவதியாகிவிட்டது என்பதை கரூர் போலீசு தமது கோவை சீனில் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள். இனி திருட்டு, கொள்ளை, சாதிவெறி, மதவெறியிலிருந்து நம்மைப் பாதுகாக்க ஊருக்கு ஊர் மக்கள் பாதுகாப்பு படை கட்ட வேண்டும் என்றால் நீங்கள் எதிர்ப்பீர்களா, ஏற்பீர்களா?

  1. பல திருட்டு வழக்குகளில் கிடச்ச லாபத்துல நீதிபதிகளுக்கும் பங்கு தரணும். அத மறந்துட்டீங்க.

  2. பணம் பத்திரமா இருக்கணும்னு வீட்டுக்கு எடுத்துட்டு போனாங்க
    …நீங்க தப்பா நெனைக்காதீங்க…
    கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாததால்
    வழக்கை “தள்ளுபடி” செய்ய” நீதிபாதி தயார்!

  3. நிச்சயம் உனது வருகை எங்களுக்கு தெம்பை அதிகப்படுத்தும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க