Sunday, February 5, 2023
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் - சிறப்புக் கட்டுரை

மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை

-

“மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது”

யார் உயிர்வாழ வேண்டும், நாங்களா அல்லது உழவுக்குப் பயன்படாத மாடுகளா? இந்த அரசாங்கம் எதை விரும்புகிறது? என்று ஆத்திரமாகக் கேட்கிறார் ரேவாஜி சவுத்ரி என்ற மகாராட்டிர மாநில விவசாயி. தனது ஒரு ஜோடி காளைகளை விற்க முடியாமல் தவிக்கும் ஒரு விவசாயியின் கோபக்குரல் அது.

ஒரு மாட்டைப் பராமரிக்க நாளொன்றுக்கு 70 லிட்டர் தண்ணீரும், 200 ரூபாய் தீவனமும் வேண்டும். மகாராட்டிரத்திலோ பாலின் கொள்முதல் விலை லிட்டர் 24 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக வீழ்ந்து விட்டது. வறட்சி காரணமாகத் தண்ணீரும் இல்லை. நிலத்தை விற்று பால்மாடு வாங்கியவர்கள், இப்போது மாட்டை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். மாடுகளை (அடிமாட்டுக்கு) விற்றால் 5 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் என்று மகாராட்டிர மாநில அரசு போட்டிருக்கும் சட்டம், மாடுகள் விவசாயிகளின் சொத்து என்ற நிலையை மாற்றி அவற்றை விவசாயியின் கடன் சுமையாக்கி விட்டது.

பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.
பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.

விவசாயிகளிடமிருந்து மாடுகளை வாங்கிய கசாப்புக் கடைக்காரர்களும் மாட்டை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். கடன் காரணமாக கறிக்கடைக்காரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. இறைச்சி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழில்ளை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் இசுலாமியர்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“நகர்ப்புறத்து சேட்டுகள்தான் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள். பயன்படாத மாடுகளையெல்லாம் நகரத்தில் விடுகிறோம். அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும்” என்கிறார் ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா என்ற விவசாயிகள் அமைப்பின் தலைவர் ரவிகாந்த் துப்கார். பா.ஜ.க.வின் அஷ்டி தொகுதி எம்.எல்.ஏ. பீம்ராவ் தோண்டே, மராட்டிய சட்டமன்றத்திலேயே இச்சட்டத்தை எதிர்த்து மாட்டுக்கறி உண்ணும் உரிமைக்காக குரல் எழுப்பியிருக்கிறார்.

மாதம் சுமார் 3 இலட்சம் மாடுகள் வெட்டப்பட்ட அந்த மாநிலத்தில் இப்போது பயனற்ற மாடுகளின் எண்ணிக்கை பல இலட்சங்களாகப் பெருகி வருகிறது. பராமரிக்க முடியாதவர்கள் தம் மாடுகளைக் கோசாலைகளுக்கு கொடுத்துவிடுமாறு முதல்வர் பட்நாவிஸ் கூறியது விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கிளறியிருக்கிறது. “50,000 ரூபாய் கொடுத்து வாங்கிய மாட்டை அரசாங்கத்துக்கு இலவசமாக ஓட்டிவிடவேண்டுமா?” என்று கொதிக்கிறார்கள் விவசாயிகள்.

“மாட்டை வெட்டினால் பத்து ஆண்டு சிறை” என்று சட்டம் போட்டு, மாடுகளுக்காகத் தனி மந்திரியும் போட்டிருக்கும் மாநிலம் ராஜஸ்தான். இங்கே ஜெய்ப்பூர் மாநகராட்சி நடத்தும் கோசாலையில் 100 ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை 15 பேர் செய்கிறார்கள். அவர்களுக்கும் 3 மாதமாக சம்பள பாக்கி. ஆகஸ்டு 2016-இல் அவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். அடுத்த சில நாட்களில் 500 மாடுகள் செத்துப்போயின. முறையான பராமரிப்பு இல்லாமல், சாணியிலும் சகதியிலும் உழன்று மாடுகள் நோயில் விழுகின்றன. 8000 மாடுகள் கொண்ட ஒரு கோசாலையில் மாதந்தோறும் 1053 மாடுகள் செத்துப்போவதாக அரசு ஆவணங்களே கூறுகின்றன.

மாடுகளைப் பராமரிக்க மாநிலம் முழுவதும் முகாம்கள் கட்டப்போவதாக பா.ஜ.க. அரசு கூறியபோதிலும் எதுவும் நடக்கவில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு மாட்டுக்கு 70 ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர். இப்படியாக, “முப்பத்து முக்கோடி தேவர்கள் குடியிருக்கும்” கோமாதாவை, தேசியப் பேரிடராக மாற்றி விட்டது பா.ஜ.க. அரசு.

***

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.

மாட்டிறைச்சித் தடை என்பது மதவெறி அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது ஊரறிந்த விசயம். அக்லக் கொலை முதல் உனா தாக்குதல் வரை கோமாதாவின் பெயரால் நடத்தப்பட்டுள்ள அனைத்து தாக்குதல்களும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. மாட்டிறைச்சி என்பதை இந்து மத நம்பிக்கையின் மீதான தாக்குதலாகவே சங்க பரிவாரத்தினர் சித்தரிக்கின்றனர்.

ஆனால் மாட்டுக் கறித் தடைச் சட்டம் எதுவும் (இந்து) மத நம்பிக்கையைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் கொண்டு வரப்படவில்லை. மாறாக, “வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்வது, பசு -அதன் கன்றுகள், பிற பால் தரும் விலங்குகள், பண்ணை விலங்குகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடை செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்வது” என்ற இந்திய அரசமைப்பின் உறுப்பு 48-இல் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் கோட்பாட்டின்படி, கால்நடைச் செல்வத்தைப் பெருக்குவதே சட்டத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

பால் தரும் “கால்நடைச் செல்வங்களில்” எருமை மாடுகள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன என்ற போதிலும் எருமையை வெட்டுவதையோ, ஏற்றுமதி செய்வதையோ எந்த சட்டமும் தடுக்கவில்லை. பசுவுக்கும் காளைக்கும் மட்டும் பாதுகாப்பு வழங்கும் இந்த “மதச்சார்பற்ற” சட்டத்தையும் அதற்குத் தரப்படும் அயோக்கியத்தனமான ‘அறிவியல் விளக்கத்தையும்’ உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

மாட்டுக்கறி சாப்பிடுவதையே குற்றமாக்கியிருக்கும் மராட்டிய மாநிலச் சட்டமும் செல்லத்தக்கதே என்று மும்பை உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. அதே நேரத்தில் வெளி மாநில – வெளிநாட்டு மாட்டுக்கறியை மகாராட்டிரத்துக்குத் தருவித்து விற்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை என்று விலக்கும் அளித்திருக்கிறது. “வெளிநாட்டவர்களும் பணக்காரர்களும் மும்பை நட்சத்திர விடுதிகளில் மாட்டுக்கறி சாப்பிடலாம் – தடையில்லை” என்பதே இத்தீர்ப்பு கூறவரும் கருத்து. “ஏழைக்கும் எருமைக்கும் ஒரு நீதி – பணத்துக்கும் பசுவுக்கும் (பார்ப்பானுக்கும்) ஒரு நீதி” என்பதுதான் இந்த தீர்ப்பின் உள்ளடக்கம்.

beef_3
“குடும்பத்துக்கே சோறு போட முடியாத நிலையில், மாட்டுக்குத் தீவனம் வாங்கிப் போட முடியுமா?” என வினவுகிறார், மரத்வாடாவைச் சேர்ந்த விவசாயி சதீஷ் சோலங்கி.

“மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாட்டுக்கறி உண்ணும் மக்கட்பிரிவினருடைய அடிப்படை உரிமையைப் பறிப்பதுடன் அவர்களை குற்றவாளிகளாக்குவதையும் அங்கீகரிப்பதால், இத்தீர்ப்பு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது; உணவுப் பழக்கங்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது; விரும்பிய உணவை உட்கொள்வது உறுப்பு 21-இன் கீழ் உயிர் வாழும் உரிமை; பரம ஏழைகளான 30% மக்களுக்கு மலிவு விலையில் புரதச்சத்தை வழங்கும் மாட்டிறைச்சி அம்மக்களுடைய அடிப்படை உரிமை” – என்பன போன்ற வாதங்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

பசுவதைத் தடைக்கு எதிராக இதுநாள்வரை இறைச்சிக் கடைக்காரர்கள்தான் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்றும், முதன் முறையாக உண்பவர்களின் கோணத்திலிருந்து எழுப்பப்படும் இக்கேள்விகள், பசு பாதுகாப்பு என்ற விசயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளின் முரண்பாடுகளை வெளிக்கொண்டு வரும் என்றும் கூறுகிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். மதச்சார்பின்மையின் பெயரால் பார்ப்பன மதவாதத்தைத் திணிக்கும் நடவடிக்கைகள் மோடி ஆட்சிக்கு வந்தபின் தீவிரமடைந்திருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் இந்த முயற்சி அரசியல் சட்டத்தை எழுதும்போதே தொடங்கி விட்டது.

***

சு வதைத் தடுப்பை, உறுப்பு 25-இன் கீழ் (மத உரிமை) இந்துக்களின் அடிப்படை உரிமையாக இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே நடந்திருக்கின்றன. “அவர்கள் வெளிப்படையாக சொல்லட்டும். பசுவைக் கொல்லக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை. எனவே, இதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று கேட்கட்டும். பொருளாதாரக் காரணங்களுக்காகத்தான் பசுவதை தடை கேட்பதாக கூறுவதென்பது கொல்லைப்புறம் வழியாக இந்து உணர்வைத் திணிக்கிறீர்கள் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்று அன்றைய அரசியல் நிர்ணயசபை விவாதத்தில் வெளிப்படையாக சாடியிருக்கிறார் அசாமைச் சேர்ந்த பிரதிநிதி சாதுல்லா.

caption-1“நம்முடைய இந்து சமூகம் அல்லது இந்திய சமூகம் பசுவை சமூக உறுப்பினராகவே கருதுகிறது. தன்னுடைய தாயை, மனைவியை, குழந்தைகளைக் கொலை செய்தவனைக் காட்டிலும், பசுவை பாதுகாக்க விரும்பாத மனிதனைக் கொல்வதற்கு இந்த நாட்டில் ஆயிரக்கணக்கானோர் தயாராக உள்ளனர்” என்று ஆர்.வி.துலேகர் என்ற உறுப்பினர் அரசியல் நிர்ணய சபையிலேயே பேசியிருக்கிறார். துலேகருடைய மறுபிறவிகள்தான் உனா-வில் தலித் மக்களைத் தாக்கியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ன?

அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 48 என்பது அடிப்படை உரிமையல்ல. அது வெறும் வழிகாட்டும் கோட்பாடுதான் என்ற போதிலும், காங்கிரசு கட்சிக்குள்ளேயே பார்ப்பன இந்து மதவாதம் பெரும் செல்வாக்கு செலுத்திய காரணத்தினால்தான் பல மாநிலங்களிலும் பசுவதை தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும், மாட்டுக்கறி உணவு பரவலாக சமூகத்தின் உணவுப் பழக்கமாக இருந்த மாநிலங்களிலும், இந்து மதவாத அரசியல் செல்வாக்கு செலுத்தாத மாநிலங்களிலும் பசுவதைத் தடையைத் திணிக்க முடியவில்லை.

பசு வதைக்கு வட கிழக்கிந்திய மாநிலங்களில் முற்றிலுமாகத் தடையில்லை. அரசியல் சட்டப்பிரிவு 371(A) வடகிழக்கிந்திய மாநிலங்களுக்கு காஷ்மீரைப் போல சிறப்புரிமைகளை வழங்குவதாலும், அப்பகுதி முழுவதும் மாட்டுக்கறிதான் மக்களுடைய முக்கியமான இறைச்சி உணவு என்பதாலும் அங்கே தடை விதிக்க முடியவில்லை. கேரளா, தமிழகம், மே.வங்கம், அசாம் மாநிலங்களில் “பயனற்ற கால்நடை” என்பதற்கான சான்றிதழுடன் வெட்ட அனுமதி உள்ளது.

1950களில் பிகார், உ.பி. அரசுகள் பசுவை மட்டுமின்றி காளையை வெட்டுவதற்கும் முற்றாகத் தடை விதித்துச் சட்டமியற்றின. “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று இறைச்சிக் கடைக்காரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. “குரேஷி வழக்கு” என்றழைக்கப்படும் இவ்வழக்கில் 1958-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, “பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்குத் தடை விதித்தால், அத்தகைய தடை பயனுள்ள கால்நடைகளுக்கான தீவனத்தைப் பறிப்பதுடன் நாட்டின் வளங்களையும் வீணாக்கும். எனவே அத்தகைய தடை பொதுமக்களின் நலனுக்கு எதிரானது” என்று கூறியது. இது ஒரு மழுப்பலான தீர்ப்புதான் என்ற போதிலும், பசு வதைக்கு முற்றுமுழுதான தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

caption-22001-இல் வாஜ்பாயி அரசு, கால்நடைகளுக்கான தேசிய கமிசன் ஒன்றை அமைத்தது. ஜனசங்க கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவராக இருந்து, பின்னாளில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட குமன்மால் லோதா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். “கோல்வால்கரின் சீடர் என்ற முறையில் வாஜ்பாயி, பசுவதைத் தடையை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக்க வேண்டும். பசுவதைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்துக்கு இணையான ஒரு சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும்” என்றெல்லாம் பரிந்துரைத்தார் லோதா. இந்த கமிசனின் உறுப்பினராக இருந்த எல்.என்.மோடி என்ற பிரபல கால்நடைத்துறை வல்லுநர் “பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்கும் தடை விதிப்பதென்பது, பொருளாதார ரீதியாக நாட்டுக்கே பெரும் நாசத்தை விளைவிக்கும்” என்று கூறி லோதாவின் உளறல்களை எதிர்த்து ராஜிநாமா செய்தார். சட்டமியற்றும் முயற்சியை வாஜ்பாயி அரசு கைவிட்டது.

இதற்குப் பின்னர் 2005-இல் தலைமை நீதிபதி லகோதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய “மிர்சாபூர் தீர்ப்பு” என்று அழைக்கப்படும் தீர்ப்பு, முந்தைய குரேஷி தீர்ப்பை தலைகீழாக்கி, இன்று மகாராட்டிரம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இயற்றப்பட்டிருக்கும் கொடிய சட்டங்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

“மாடுகள் எந்தக் காலத்திலும் பயனற்றவை ஆவதில்லை” என்பதுதான் இந்த தீர்ப்புக் கூறும் கருத்து.

“மாடுகள் கறவைக்கோ உழவுக்கோ பயன்படாமல் போனபிறகும், அவற்றின் சாணம் மற்றும் மூத்திரத்தைக் கொண்டு தயாரிக்க கூடிய எரிவாயு, பூச்சிகொல்லிகள் மற்றும் இயற்கை உரத்தின் மூலம் ஒரு விவசாயி ஆண்டுக்கு 20,000 ரூபாய் ஆதாயம் பெறலாம். மாட்டுச்சாணம் என்பது கோஹினூர் வைரத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்கது” என்று இந்த வழக்கில் வாதாடியது திருவாளர் மோடியை முதல்வராகக் கொண்ட குஜராத் அரசு. அவ்வளவு ஆதாயம் இருந்தால் உழவுக்குப் பயன்படாத மாட்டை எந்த விவசாயியாவது விற்பானா என்ற கேள்வி நீதிமன்றத்துக்கு எழவில்லை. மேற்படி புள்ளிவிவரத்தை அளித்த கட்டுரையை, “ஆதாரமற்ற குப்பை” என்று 1996-இல் வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அதையும் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, மாட்டுச் சாணத்தை கோஹினூர் வைரமாக சித்தரித்த மோடி அரசின் வாதத்தைத் தனது தீர்ப்பில் மேற்கோளாகவே காட்டியிருக்கிறது.

“இந்தத் தீர்ப்பு முழுவதும் இத்தகைய எண்ணிலடங்காத ‘கோஹினூர் வைரங்கள்’ கொட்டிக் கிடக்கின்றன” என்று கேலி செய்கிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். “மாட்டுச்சாணி மற்றும் மூத்திரத்தின் மதிப்பை 1958-இல் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதா? அல்லது 1958-இல் இருந்ததைவிட மாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்துக்கான சந்தை மதிப்பு 2005-இல் பன்மடங்கு உயர்ந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொரு வழக்கறிஞர்.

“1958 குரேஷி தீர்ப்பு” பாலும் நெய்ய்யும் சாப்பிட முடியாத ஏழைகளின் ஊட்டச்சத்து மாட்டுக்கறிதான் என்று அங்கீகரித்தது. 2005-இல் லகோதி வழங்கிய தீர்ப்போ, “ஊட்டச்சத்து என்பதை மாமிச உணவு அல்லது மாட்டுக்கறியுடன் மட்டும் ஏன் இணைத்துப் பார்க்க வேண்டும்?” என்று அறிவியலுக்கு எதிரான, அப்பட்டமான பார்ப்பனியக் கண்ணோட்டத்துடனும், ஏழைகள் குறித்த அலட்சியத்துடனும் கருத்து தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் பொருட்டு, “மொத்த மாமிச உணவு நுகர்வில் மாட்டுக்கறி என்பது 1.3% மட்டும்தான்” என்ற ஆதாரமற்ற ஒரு புள்ளி விவரத்தையும் தீர்ப்பில் அவிழ்த்து விட்டுள்ளது.

“மாட்டுக்கறி உண்பவர்கள் ஆகச் சிறுபான்மையினரே” என்ற கருத்தை வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், அந்தச் சிறுபான்மையினரின் உணவுப் பழக்கத்தை பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்திலிருந்து எப்படித் தடை செய்ய முடியம்? “சமூகத்தின் ஒரு பிரிவினரின் நலன் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது மொத்த சமூகம் அல்லது நாட்டின் நலனோடு ஒப்பிடும்போது இரண்டாம் பட்சமானதுதான்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் நியாயம் போலத் தெரிகின்ற இக்கருத்து, பார்ப்பன இந்து மதவாதத்தை, சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் பல்வேறு தேசிய இனங்களின் மீது திணித்து அவர்களுடைய உணவு உரிமையைப் பறிக்கிறது. ஒரு உணவுப் பழக்கத்தையே தேச விரோதம் போல சித்தரிக்கிறது.

நமது உரிமைகள் எனப்படுபவை அனைத்தும் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டவை அல்ல. உண்பது, உறவு கொள்வது போன்றவை மனிதனின் இயற்கையான உரிமைகள். அவற்றைக் கொடுப்பதற்கோ பறிப்பதற்கோ எந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் அதிகாரம் இருக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் மனிதனின் இயற்கையான உரிமைகளையும், சமூக உரிமைகளையும் பறிக்கின்ற பார்ப்பனியம்தான், யார் எதை உண்ண வேண்டும், உடுத்த வேண்டும் என்று விதிக்கிறது. இந்து சமூகத்தைப் பொருத்தவரை, “தீண்டத்தக்க” சாதிகளையும் “தீண்டத்தகாத” சாதிகளையும் பிரிக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு அளவுகோல் மாட்டுக்கறி உணவு. அந்த வகையில் மாட்டுக்கறித் தடையை நியாயப்படுத்தும் தீர்ப்பு, தீண்டாமையை நியாயப்படுத்துகிறது.

அதே அரசியல் சட்டத்தின் உறுப்பு 38, மக்கள் நலனுக்கு உகந்த சமூக அமைப்பை உருவாக்குதல், வருவாய்-வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் பல்வேறு பிரிவு மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பது பற்றிக் கூறுகிறது. உறுப்பு 46, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட நலித்த பிரிவினரை சமூக அநீதியிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் பாதுகாப்பது பற்றி பேசுகிறது. இந்த தீர்ப்போ சிறுபான்மை, தலித், பழங்குடி மக்களின் ஊட்டச்சத்துள்ள மலிவான உணவைப் பறிக்கிறது. இறைச்சிக்கடை, தோல் பதனிடும் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போர் முதல் விவசாயிகள் வரையிலான கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போடுகிறது. அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, உயிர்வாழும் உரிமை போன்றவற்றை வழிகாட்டும் கோட்பாடுகளின் ஒளியில் விரிவுபடுத்தி பல தீர்ப்புகள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. இந்தத் தீர்ப்போ வழிகாட்டும் கோட்பாட்டை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறது

பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பெயரால் அடிப்படை உரிமைகளை வெட்டுகின்ற இந்தத் தீர்ப்பின் கண்ணோட்டம்தான், பசுவைப் பாதுகாப்பது என்ற பெயரில் மனிதர்களைக் கொல்லும் நடவடிக்கையில் வெளிப்படுகிறது. சமூகம், நாடு ஆகியவற்றை அதன் மக்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அரசியல் சட்டம் ஒரு குடிமகனுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளையே பறிக்கிறது இந்தத் தீர்ப்பு என்று சாடுகிறார் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

“கால்நடைச் செல்வத்தைப் பேணி வளர்ப்பது” என்ற மதச்சார்பற்ற நோக்கத்துக்காகத்தான் இந்த சட்டம் என்று கூறுவது ஒரு பம்மாத்து. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிதி லகோதி, தனது தீர்ப்பிலேயே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். “இந்துக்கள் புனித நாட்களில் காளை மாடுகளை வழிபடுகிறார்கள். கோயில்களில் உள்ள நந்தி சிலையை வணங்குகிறார்கள்” என்றெல்லாம் சொல்லி, கோமாதா மட்டுமல்ல காளையும் வழிபாட்டுக்குரியதே என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனது தீர்ப்பின் மதச்சார்பை வெளிப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்.

தனது ஆதிக்க நோக்கத்தையும் அதனால் தான் பெறுகின்ற ஆதாயத்தையும் மறைத்துக் கொண்டு, வருண சாதி அமைப்பு முதல் மாட்டுக்கறி தடை வரையிலான அனைத்தையுமே அறிவியல் பூர்வமானவை என்று நியாயப்படுத்த முனைகிறது பார்ப்பனியம். ”ஹிந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கலையில் தேர்ந்திருந்தார்கள் என்பதற்கான சான்று விநாயகரே” என்று உளறும் நபர் பிரதமராக இருக்கும் நாட்டின் நீதிமன்றம், மாட்டுச் சாணியே கோஹினூர் வைரத்தினைக் காட்டிலும் உயர்ந்தது என்று கூறுவதில் வியப்பென்ன?

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதன் காரணமாகத்தான் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், விவசாயம் அழிந்து வருகிறது என்றும் கூறி மாட்டிறைச்சித் தடையை நியாயப்படுத்துகிறது பா.ஜ.க. ஆனால் மகாராட்டிரத்தில் இந்த சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குள் மாட்டுச் சந்தைகள் அழிந்து வருகின்றன. மாடுகளை வாங்க விவசாயிகள் தயாராக இல்லை. பல கிராமங்களில் மாடுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதெனக் கூறுகின்றன அம்மாநிலப் பத்திரிகைகள்.

காலப்போக்கில் வாலைத் தொட்டுக் கும்பிடுவதற்குக்கூட மாடு கிடைக்காமல், சிலையைத் தொட்டுக் கும்பிட வேண்டிய நிலையை பார்ப்பன பாசிசக் கும்பல் எய்தும். மொத்தத்தில், கத்தியின்றி ரத்தமின்றி மாடுகளை ஒழித்துக் கட்டும் பணியை சங்க பரிவாரமே சாதித்துக் காட்டும்.

– சூரியன்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

  1. மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு ஒரு அரிய யோசனை, 5% மாட்டுச்சாணியின் மகத்துவம் வரியை (cess ) ஏற்படுத்தி இந்தியாவை உலக வல்லரசுகளின் ஒன்றாக மாற்றலாம். தகுதியானவர்கள் இந்த யோசனையை பிரதமரிடம் எடுத்துச்செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பெட்டி கடை வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் டேஷ் பக்தி அதிகம் கொண்டவர்கள் அதனால் இந்த வரியை அவர்கள் மிகவும் வரவேற்பார்கள். மாச சம்பளம் வாங்கும் தேச துரோகிகளே வரி பிடித்தம் போக சம்பளம் வாங்குவதால் அவர்கள் இத்தகைய வரிகளை எதிர்க்கலாம், அவர்களையும் பக்கத்து நாடுகளை கைப்பற்றி அண்டா பாரதம் அமைப்பதை பற்றி பேசி மயக்கலாம்.
    குப்பை ஒழிப்புக்கென தனி வரி போட்டு நாட்டை தூய்மையாக்கிய அந்த மாமனிதரால் முடியாதது எதுவுமே இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க