Wednesday, January 19, 2022
முகப்பு கட்சிகள் பா.ஜ.க போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை - மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்

போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை – மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்

-

1. கரூர்

ஜனநாயக உரிமைகளைப் பறித்தால்தான் ‘ஜனநாயகத்துக்கான’ தேர்தலை நடத்த முடியுமா?

kovai-hindu-munnani-riots-karur-protest-poster-129-09-2016 வியாழன் மாலை கரூர் பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயகம் மாத இதழை விற்பனை செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேலையும் அவருடன் இருந்த மற்றொரு தோழரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இரவு 11 மணிக்கு மேல் நீதித்துறை நடுவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று முன்னிறுத்தி சக்திவேலை திருச்சி மத்திய சிறையிலும் மற்றவரை அரியலூர் சிறுவர் சிறையிலும் அடைத்தனர்.

இந்த வகையில் அதிரடியாக கைது செய்யுமளவுக்கு இவர்கள் செய்த குற்றம் என்ன? ஹவாலா கொள்ளையில் ஈடுபட்ட பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஒரு சுவரொட்டியும், கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலையை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சூறையாடியும் கொளுத்தியும் வெறியாட்டப் போட்ட இந்து மதவெறியர்களை கண்டித்து ஒரு சுவரொட்டியும் 27-09-2016 செவ்வாயன்று அதிகாலையில் ஒட்டியதுதான் இவர்கள் செய்த கொடிய குற்றமாம்.

ஒட்டிய சுவரொட்டிகளை அப்போதே நகரம் முழுக்க தேடியலைந்து கிழித்துப் போட்ட காவல்துறை, அந்த செயலுக்காக 29-ம் தேதி பேருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களை- இவர்கள்தான் ஒட்டினார்களா என்பதைக் கூட உறுதி செய்யாமல் அடாவடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

kovai-hindu-munnani-riots-karur-protest-poster-2காவல்துறை மக்களின் நண்பன் என்றும் சட்டத்தைப் பாதுகாப்பதுதான் அதன் கடமை என்றும் குற்றங்களைத் தடுப்பதற்காக 24 மணி நேரம் பணியாற்றுவதாகவும் கூறிக்கொள்கிறது காவல்துறை. ஆனால், கரூர் – பரமத்தி ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை நகர காவல் துணை ஆய்வாளர் சரவணன், வேலாயுதம் பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோர் ஹவாலா நிழல் உலக தாதா கோடாலி ஸ்ரீதருடன் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது பற்றி செய்தித்தாள்களில் நாறுகிறது. இந்தப் பட்டியல் இவர்களோடு நிற்காமல் நீண்டு கொண்டே போவதையும் பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இது ஏதோ கரூரில் மட்டும் நடக்கும் பிரச்சினை அல்ல. காவல்துறை மொத்தமும் கீழிருந்து மேல் வரை இப்படிப்பட்ட கிரிமினல் கும்பலுடன் நெருக்கமாக இருப்பது அன்றாடம் அம்பலப்பட்டு வருகிறது. அதை செய்தித்தாள் படிக்காத பாமரனுக்கும் தெரிவிக்கும் நோக்கில் எமது அமைப்பு சுவரொட்டியாகப் போட்டு ஒட்டியது குற்றம் என்கிறது காவல்துறை.

கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் கொலையால் கோவை மாநகரமே அல்லோலப்பட்டது. போலீசு வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தபட்டு தீக்கிரையாக்கப்பட்டது. மாற்று மத்த்தினரின் வழிபாட்டுத் தலங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இத்தனையும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் அரங்கேறியது. 10 கி.மீ தூரம் ஊர்வலம் செல்ல அனுமதித்து வெறியாட்டத்தை அனுமதித்தது. இந்த காலித்தனத்தை நடத்த அனுதித்த காவல்துறைதான் இதை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய ‘குற்றத்துக்காக’ எமது தோழர்களைக் கைது செய்து பொய் வழக்கு போட்டுள்ளது. இதற்காக காவல்துறை பயன்படுத்தியுள்ள சட்டப்பிரிவுகள், இரு பிரிவுகளுக்கிடையே மோதலை ஏற்படுத்துதல், காவல் துறை சட்டப்பூர்வமாக செயல்படுவதை பலவந்தமாக தடுத்தல் மற்றும் தமிழ்நாடு பொது இடங்களை (சுவரொட்டி ஒட்டி) அசிங்கப்படுத்துதல் என்பனவாகும்.

இந்து மதவெறிக் காலிகளுடன் கூட்டு சேர்ந்து பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை தாக்கி மோதலை உருவாக்கவும் தேர்தல் விதிமுறை அமுலில் உள்ளபோதே அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தி காலித்தனம் செய்யவும் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க ஆகிய அமைப்புகளை அனுமதிக்கும் காவல்துறை அதை கண்டிக்கும் எங்களை இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதாக அறிவித்து கைது செய்கின்றனர். ஹவாலா கொள்ளையனுடன் கூட்டு சேரந்து இவர்கள் மேற்கொள்ளும் ‘சட்டப்பூர்வ’ நடவடிக்கைகளை தடுப்பதாக சித்தரிக்கின்றனர்.

ஆபாச சுவரொட்டிகளால் அசிங்கப்படாத பொது இடங்களை எங்களது சுவரொட்டிதான் அசிங்கப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொள்கின்றனர். என்னே காவல்துறையின் கடமை உணர்ச்சி!

இப்படி அடிமுதல் நுனி வரை அழுகி நாறும் காவல்துறை தனது அடாவடி செயலுக்கு தேர்தல் நடத்தை விதிகளையும் துணைக்கு வைத்துக்கொள்கிறது. சுவரொட்டிகளை அவசர அவசரமாக பாய்ந்து கிழித்ததற்கும் எமது தோழர்களைக் கைது செய்ததற்கும் காவல் துறை கூறும் மற்றொரு காரணம், “தேர்தல் நடத்தை விதிகள்” அமுலில் இருக்கிறது என்பதாகும். தேர்தல் ஆணையம் என்கிற அதிகார வர்க்கமும் இதற்கு ஆமாம் போடுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்து விட்டு நடத்தும் தேர்தல் மூலம் இவர்கள் ஜனநாயத்தை உயிர்ப்பிக்கப் போகிறார்களாம்.

எனவேதான் சொல்கிறோம் இது போலி ஜனநாயகம் என்று. இந்த அரசின் ஒவ்வொரு அங்கமும் அதற்கென்று அறிவிக்கப்பட்ட நெறிகளை அதுவே பின்பற்றாததுடன் அதற்கெதிரானதாகவும் மாறிவிட்டது. மொத்த அரசுக்கட்டமைப்பும் மக்களுக்கு வேண்டாத சுமையாகி விட்டதோடு மக்களுக்கு எதிரானதாக மாறி மக்களையே ஒடுக்குகிறது. இந்த கட்டமைப்பு நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மக்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பது ஒன்றே மாற்று என்கிறோம். இதுவே மக்கள் அதிகாரம்.

அந்த வகையில், கரூர் காவல்துறையின் இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப்ப்பெற வேண்டுமென கோருகிறோம். இந்த அடக்குமுறை தொடருமானால், சுவரொட்டி மட்டுமல்ல, துண்டுப்பிரசுரங்கள், தெருமுனைப்பிரச்சாரங்கள், வீடுவீடாக சென்று மக்களை சந்திப்பது என்ற பல வகையிலும் எமது கருத்தை மக்களிடம் கொண்டு சென்று இந்த மக்கள் விரோத அரசுக்கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம். எத்தகைய அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எமது ஜனநாயகக் கடமையை முன்னெடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
(பெ. கபிலன்)
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம், கரூர்.

2. கோவில்பட்டி

மக்கள் அதிகாரம் கோவில்பட்டி அமைப்பாளர் தோழர் ஆதி மீது கோவில்பட்டி போலீசு கொலைவெறித் தாக்குதல் !

கோவையில் இந்து முன்னணி காலிகள் போலீசின் துணையுடன் நடத்திய கலவர வெறியாட்டத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக சுவரொட்டி ஒட்டிய தோழர் ஆதி நள்ளிரவில் போலீசால் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் வைத்து தாக்கப்பட்டார்.

kovai-hindu-munnani-riots-pp-demo28-09-2016 அன்று இரவு 11 மணியளவில் போஸ்டர்களை ஒட்டிவிட்டு தோழர் ஆதி வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டாரா என்பதை நோட்டம் விட்டு இரண்டு போலீசு அவரைப் பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. அவர்கள் போஸ்டர்களை தின்னத்தான் செல்கிறார்கள் என்பதை யூகித்து தோழர் ஆதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். ஒரு இடத்தில் நமது போஸ்டரை பார்த்தவுடன் இரண்டு போலீசும் கிழித்துள்ளனர். தோழர் ஆதி “எதுக்காக போஸ்டரை கிழிக்கிறீங்க, கிழிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். “போஸ்டரை கிழிக்க எவனக் கேக்கணும்” என்று திமிராக பேசியுள்ளனர். அதற்கு மேல் தோழர் ஆதியை பேசவிடாமல் “எங்களயே கேள்வி கேக்குறியா’’ என்று கூறி இரண்டு போலீசும் அடித்துள்ளனர். அடித்தது மட்டுமில்லாமல் “இன்னும் ஒரு மணி நேரத்தில் போலீசு யாரென்று காட்டுறோம் பார்றா’’ என்று கூறி தோழர் ஆதியை அவர்களோடு பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர். அடித்து கூட்டிச் சென்றவர்களில் ஏட்டு ராஜாவும் ஒருவர்.

பின்னர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிவன் அருள் கந்தசாமி என்ற ஸ்பெஷல் பிராஞ்சைச் சேர்ந்த SSI இருந்துள்ளார். அவரிடம் விசயத்தைச் சொல்லியுள்ளனர். அப்போது கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் அங்கு இல்லை. பவுல்ராஜூக்கு போன் போட்டு சிவன் அருள் கந்தசாமி பேசியுள்ளார். பின்னர் எந்த கேள்வியும் கேட்காமல் தோழர் ஆதியின் சட்டையையும், வேட்டியையும் வலுக்கட்டாயமாக கழட்டி, அவரை தாறுமாறாக அடித்துள்ளார். தலையிலிருந்து கால் வரை உடலின் எல்லா பக்கங்களிலும் அடித்துள்ளார். தோழர் வலியால் துடித்ததை பார்த்து சிரித்து விட்டு “என்னடா பொட்ட மாதிரி கத்துற, மக்கள் அதிகாரம்னா என்னடா பெரிய பு…..யா?’’ என்று ஆபாசமாக திட்டியுள்ளார்.

அப்படியும் வெறி அடங்காமல் பூட்ஸ் காலால் தோழரின் முகத்தில் வைத்து மிதித்ததில் தோழரின் உதடு கிழிந்துள்ளது. இரண்டு கால்களையும் நீட்டச் சொல்லி இரு பாதங்களிலும் மிருகத்தனமாக அடித்ததில் இரண்டு பாதங்களும் நடக்க முடியாத அளவிற்கு வீங்கியுள்ளது.

kovai-hindu-munnai-riots-com-aadhi-arrest-2கடந்த மூடு டாஸ்மாக்கை இயக்கத்தின் போது டாஸ்மாக் சாராயத்தை விற்கும் ஜெயா அரசினை அம்பலப்படுத்தி ஒட்டிய போஸ்டர்களை இதே போல் போலிசு கிழித்தது. அப்போது தோழர் ஆதி ஊர்மக்கள் பார்க்க போலீசாருடன் வாக்குவாதம் செய்து சுவரொட்டியைக் கிழித்தது தவறுதான் என்று பகிரங்கமாக நம் தோழர்களிடம் சம்பந்தப்பட்ட போலீசை மன்னிப்புக் கேட்க வைத்தார். அன்றிலிருந்து தோழர் ஆதி மீது வன்மம் கொண்டிருந்தது போலீசு.

அதேபோல் மே 5, 2016 அன்று டாஸ்மாக்கை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அன்று அதிகாலையிலேயே தோழர் ஆதியை வீட்டில் வைத்து கைது செய்தது போலீசு. தோழர் கைதானபோதும், போராட்டம் திட்டமிட்டபடி நடந்தது. பிற தோழர்களிடமிருந்து ஆதியை தனிமைப்படுத்தி போராட்டத்தை முடக்க நினைத்த போலீசு மூக்கறுபட்டது. மேலும் கைதான தோழர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்றால், எங்கள் தோழர் ஆதியை ஒப்படை என்று மண்டபத்திற்குள் போலீசுக்கு நிபந்தனை விதித்தனர். வேறு வழியின்றி போலீசும் தோழர் ஆதியை மண்டபத்திற்கு அழைத்து வந்து தோழர்களிடம் ஒப்படைத்தது. அன்றும் மூக்கறுபட்டது போலீசு. இதுதான் இன்று தோழர் மீது கொலைவெறி கொண்டு தாக்கியதற்கு காரணம்.

நள்ளிரவில் கைது செய்துவிட்டு அமைப்புக்கு அல்லது குடும்பத்திற்கு தகவல் தர அனுமதிக்காமல் சட்டவிரோதமாக (செல்போனையும் பறித்து) நடந்து கொண்டது.

காலையில்தான் தோழர்களுக்கு தகவல் தெரிந்தது. தோழர்கள் நேரில் போய் பார்த்த போது எந்த முதலுதவியும் கொடுக்காமல் தோழரை அடைத்து வைத்திருந்தனர். தோழர் ஆதி மீது நான்கு பிரிவுகளில் (294(B), 353, 506(i), TNOPP- DA ACT) வழக்கு போட்டு கோர்ட்டிற்கு கூட்டி வந்து ரிமாண்ட் செய்தனர். தோழருக்கு மருத்துவ சிகிச்சை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் போலீசு குறியாக இருந்தது. அதேநேரம் நமது வழக்கறிஞர்கள் போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதலை நீதிபதியிடம் விளக்கி போலீசின் மீது நடவடிக்கையையும், தோழர் ஆதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் போராடியதன் விளைவாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செக் அப்புக்காக அனுப்பப்பட்டார். அங்கேயும் எப்படியாவது தோழரை 70 கி.மீ.க்கு அப்பால் உள்ள பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று டாக்டர்களிடம் தங்கள் வேலையைக் காட்டிப் பார்த்தனர். ஆனால் மருத்துவர் தோழரின் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு கோவில்பட்டி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். காவல்துறையின் சதிக்கு துணைபோக மறுத்துவிட்டார்.

kovai-hindu-munnai-riots-com-aadhi-arrest-1நாம் போலீசின்மீது நடவடிக்கை எடுப்போம் என்பது உறுதியான நிலையில் வேறு வழியில்லாத போலீசு எல்லா வழிகளிலும் தோழருக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அன்று முழுக்க தோழர்களும், அவர்களது குடும்பத்தாரும் பார்ப்பதற்கோ, உணவு கொடுப்பதற்கோ கூட அனுமதிக்கவில்லை.

தலைமை மருத்துவரை விலைபேசமுடியாத நிலையில் அவருக்கும் மேலே மேல்மட்டத்தில் சரிக்கட்டி தன் வேலையை சாதித்துக்காட்டினர் காக்கி மிருகங்கள். இரவோடு இரவாக தோழர் ஆதிக்கு கடுமையான காயங்கள் இருந்தபோதும் சட்டத்திற்குப் புறம்பாக டிஸ்சார்ஜ் செய்து சிறையில் அடைத்துள்ளது கிரிமினல் போலீசு. அதன் பின்பும் மருத்துவரிடம் சென்று தோழர் ஆதிக்கு உடம்பில் காயங்கள் இல்லை என்ற வகையில் சர்ட்டிபிகேட் வழங்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளது.

மேலே சொன்னது ஒரு கிரிமினல் குற்றவாளியின் மீதான போலீசின் தாக்குதல் அல்ல. மக்களுக்காகப் போராடும் ஒரு தோழரின் மீதான கிரிமினல் போலீசின் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.

கோவையில் இந்து முன்னணிக் காலிகள் பஸ் கண்ணாடிகளை நொறுக்கி, ஆட்டோக்களை எரித்து கடைகளை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்றபோதும், அதன் பின்னர் தமிழகம் முழுக்க இந்து மதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட போதும் அவர்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்த போலீசு, அதைக் தட்டிக்கேட்ட மக்கள் அதிகாரம் தோழர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுக்கவே போலீசின் காட்டாட்சி வரைமுறையின்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சங்கர் மீதான தேவர்சாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய காரணத்திற்காக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்ய தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் அரிராகவனை கைது செய்து சிறையிலடைத்தது. அரசைக் கண்டித்தோ அதிகார வர்க்கத்தைக் கண்டித்தோ போஸ்டர் ஒட்டினால் எப்.ஐ.ஆர் போட்டு மிரட்டுவது, மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு துணை போவது என எல்லா வகையிலும் கிரிமினல் தனமாகவும், காட்டுமிராண்டித் தனமாகவும், சட்ட விரோதமாகத்தான் நடந்து வருகிறது.

அதாவது ரியல் எஸ்டேட் கும்பல்கள், கட்டப் பஞ்சாயத்துக் கும்பல்கள், மாபியா முதலாளிகளின் அடியாள்படையாகத்தான் போலீசு இங்கு செயல்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மட்டுமல்ல, சாதாரண அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை கூட விரும்புவதில்லை. அப்படிக் கேட்பவர்களை குறிவைத்து சந்தர்ப்பம் கிடைக்கும்போது கொடூரமாக ஒடுக்குகிறது. அதனால்தான் ஏன் போஸ்டரை கிழிக்கிறீங்க என்று தோழர் கேட்டதும் அதற்கு மிருகங்களைப் போல் தோழர் மீது பாய்ந்துள்ளனர் போலீசு காலிகள். மனித உணர்வு என்பதே இல்லாத அதிகார வெறிகொண்ட மிருகங்களாகவும், ஆணாதிக்கப் பொறுக்கிகளாகவும் போலீசு சீரழிந்து நாறுவதைத்தான் மேற்கண்ட சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

சிவகாசி ஜெயலட்சுமி புகழ் போலீசானது இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாக்குதல் , சிவகங்கை சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது முதல் மூன்று போலீஸ் காலிகளின் திருட்டுக் குற்றங்கள் வரை போலீசின் கிரிமினல் குற்றம் என்பது அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அதிகாரவெறி, பண வெறி, காம வெறி பிடித்தலையும் போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் போராட்டங்களை முன்னெடுக்காமல், மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து இந்தக் கிரிமினல்களை வீதியில் வைத்து தண்டிக்காமல் வேறு எந்த வழியிலும் நமக்குத் தீர்வில்லை. தற்போது தோழர் ஆதி பிணையில் வெளி வந்துள்ளார் என்றாலும் போலீசை அம்பலப்படுத்தி, மக்கள்  பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எமது போராட்டம் தொய்வின்றி தொடரும்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவில்பட்டி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க