கோவை இந்து முன்னணி கலவரம் – சென்னை ஆர்ப்பாட்ட உரைகள் – 1
இந்துமதவெறி காவி கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அக்டோபர் 1, 2016 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட உரைகள் – 1
“பக்தி இல்லாவிட்டாலும் நட்டமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்” – தோழர் குமரன், மாவட்டச் செயலாளர், த.பெ.திக
“தோழர்களே, செப்டம்பர் 22 அன்று இரவு சசிக்குமார் வெட்டிக்கொல்லப்படுகிறார். செப்டம்பர் 23-ம் தேதி ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எதற்கு 12 மணி நேர இடைவெளி? தமிழகம் முழுவதும் இருந்து ஆட்களை திரட்டுவதற்கு அந்த இடைவெளியை கொடுத்து உள்ளது காவல்துறை. 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கிறது.
சிறையில் கொல்லப்பட்ட ராம்குமார் சடலத்தை பார்க்கக் கூட அனுமதி இல்லை. ஆனால், கோவையில் கலவரம் செய்ய அனுமதி உண்டு. 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி உண்டு. கலவரம் செய்த அத்தனைபேரும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள்தான். ஒருவன் கூட பார்ப்பனன் கிடையாது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாஸ்போட், விசா முடக்கப்படும் என்று காவல்துறை அறிவித்து இருக்கிறது. அதிலும் நம்ம முண்டங்கள்தான் பாதிக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் அல்ல.
ஒவ்வொருமுறை வினாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னரும் கலவரம் வருகிறது, ஊர்வம்பு வாங்கியதற்கு கொல்லப்படுகிறார்கள். வினாயகர் சதுர்த்தியில் வசூலை பிரித்துக்கொள்வதில் மோதல் வருகின்றது. இதற்கு கொலை நடக்கிறது. திண்டுக்கலில் தாங்களே பெட்ரோல் பாம் வீசிக்கொண்டு இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள்.
ஆணவக்கொலையில் எவ்வளவு பேர்கள் கொல்லப்படுகிறார்கள்! அவர்களுக்கு எச்சு ராஜா போன்ற யாராவது குரல் கொடுக்கிறார்களா? ஒரு நாய் குரல் கொடுக்கிறதா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? தாழ்த்தப்பட்ட பெண்கள் வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், இதைக்கேட்க துப்பில்லையா?
யார் இந்து? பார்ப்பனர்கள் தானே சிறுபான்மையினர்? தன்னை பெரும்பான்மையினராக மாற்றிகொள்ள இந்து என்ற போர்வையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள். கலவரம் செய்கிறார்கள். அன்றே பெரியார் சொன்னார் “பக்தி இல்லாவிட்டாலும் நட்டமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்”. அவர் சொன்னது கோவையில் நடந்ததா இல்லையா? இம்மாதிரி நேரத்தில் இப்படிப்பட்ட கண்டனக்கூட்டத்தை நடத்திய மக்கள் அதிகாரத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்போராட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”
“இறுதி மூச்சு இருக்கும் வரை இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை விட மாட்டோம்” -தோழர் பிரின்ஸ் என்னரெசு பெரியார், மாநில மாணவர் செயலர், திராவிடர் கழகம்
“எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக போராடுவோம் என்ற உணர்வு இருக்கக்கூடிய அருமைத்தோழர்களே! இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கும் தோழர்களே தலைவர்களே! அனைவருக்கும் வணக்கம்.
மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் ஏராளமான செய்திகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாம் யாருக்கு முக்கியமாக என்றால் நம்மைச் சுற்றி நம் பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டுள்ள அல்லது இந்துத்துவ சக்திகள் இங்கே வந்தால் அவர்களின் பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டுள்ள காவல் துறையினருக்குத்தான். காவல்துறையில் பணியாற்றக்கூடிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர்கள், பெண்கள் இவர்கள் அத்தனை பேருக்குமாக போராடக்கூடிய பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்புக்கள் போராடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் யாருக்காக போராடுகின்றோமோ அவர்களைக்கொண்டுதான் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களைக்கொண்டுதான் கலவரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன. அப்படித்தான் இந்த அரசாங்க கட்டமைப்பு அமைக்கப்பட்டு இருக்கின்றது. நாம் யாருக்காக போராடுகிறோமோ யார் தன்னை இந்து என்று சொல்கிறானோ யார் அந்த இழிவை சுமந்து கொண்டு இருக்கின்றானோ அவன் இச்செய்திகளைக் கேட்க வேண்டும்.
இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதை தோழர்கள் பதிவு செய்தார்கள். இந்தியா முழுவதும் ஏராளமான வரலாறுகள் அதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. பாபர் மசூதி தொடங்கி பிரியாணி திருட்டுவரை அப்படித்தான் நடைபெற்று இருக்கின்றது. முகநூலிலே எவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தால் எவ்வளவு பேர்களை கொலைசெய்வேன் என்றும் அதற்கு இவ்வளவு பணம் பேங்க் அக்கவுண்ட்டில் போட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவிக்கின்ற இந்துத்துவ ரவுடிக்கும்பல் இருக்கின்றதே காவல் துறையின் உளவுத்துறை என்ன செய்துகொண்டு இருக்கின்றது?
இல.கணபதி அனுமான் என்பவன் ஒரு பதிவைப் போடுகிறான். 1000 ரூபாய், 5000 பேர் எனக்கு அனுப்பினால் அடுத்தமாதம் 5 பேருக்கு பூஜைகள் போடப்படும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்களே. 1980-களிலே தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் நுழைகிறபோது ஆசிரியர் வீரமணி அய்யா சொன்னார் “கூலிப்படைதான் ஆர்.எஸ்.எஸ்” என்று. இன்று இந்து மக்கள் கட்சி, வி.ஹெச்.பி, இந்துமுன்னணி… மயிறு மக்காணி என்று வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை தகுதி என்ன? கட்டப்பஞ்சாயத்து செய்வதும் பொறுக்கித்தனம் செய்வதும்தானே?
500 பேரைக்கொன்னால் பிரதமர் வேட்பாளர். 2000 பேரைக் கொன்றால் பிரதமர். அதுதானே அதிகபட்ச அளவுகோல். ஆக இந்தக் கட்சியில் சேர்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? காவல்துறையின் பட்டியலிலே குண்டாஸ் பட்டியலிலே இருப்பவர்கள் தானே அவர்கள் . இவர்களை ஒடுக்குவதற்கு எங்களைவிட யாருக்கு அக்கறை இருக்க வேண்டும்.
கர்நாடகாவில் முத்தாலிக் என்று ஒருவன். காதலர்தினம் கொண்டாடியபோது முகத்தில் பூசியதும் தாக்குதலை நடத்தியதும் அவன்தான், அவனுக்கு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை அனுப்பியது வேறு செய்தி. அந்த முத்தாலிக் என்பவனைப்பற்றி தெகல்கா ஸ்டிங் ஆப்ரேசன் மூலம் ஒரு செய்தியை கொண்டு வந்தது அதாவது “ ஒரு ஊரில் கலவரம் நடத்த வேண்டும் என்றால் 60 லட்ச ரூபாய் கொடு. நான் கலவரம் செய்து தருகிறேன் ” என்று அவன் தன் வாயால் ஒப்புதல் அளித்திருக்கிறான் . அவன் கைது செய்யப்பட்டு இருக்கின்றானா?
வன்முறையாளர்கள் இந்துத்துவா வேடத்தில் காவியைக்கட்டிக்கொண்டு கலவரம் செய்கிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்கு பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் சொன்னால் செய்வதற்கு காவலர்கள் என்று இந்த அமைப்பே தெளிவாக திட்டமிடப்பட்டு உள்ளது. எங்களைவிட யாருக்கு அக்கறை வேண்டும் என்றால் அரசுக்குத்தானே? அப்படி நடைமுறையில் இல்லையே. அதை நடைமுறைப்படுத்தி வருவதுயார்? அத்தனை ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து நிற்பதுதான் அதற்கான அடையாளம்.
இந்த நாட்டின் மக்களுக்காக போராடுவது யார்? ஏன்? பார்ப்பனர்களுக்கு எதிராகப் போராடுவது யார்? கருப்புச் சட்டைகளும் சிவப்புச் சட்டைகளும் தானே. சங்கரராமனை கொன்றவர்களை கைது செய்யப் போராடியது யார்? சுவாதி கொலைவழக்கில் விசாரணை நடத்தாதே என்கிறான் அவன்? விசாரணை செய் என்று நாம் தானே சொல்கிறோம். பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் அதற்கு இது பெரியார் பிறந்த மண் என்பதுதானே காரணம்.
“கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாளு கமிஷனர் எல்லாம் அவாளு” என்ற முழக்கத்தை முன்வைத்தோம் . காவல்துறையினரே உங்களுக்கு பாதுகாப்புகூட எங்களைப்போன்ற அமைப்பில் தான் கிடைக்குமே தவிர அங்கு இல்லை. ஆனால் எங்களைப்போன்ற ஜனநாயக சக்திகளுக்கு என்ன செய்தீர்கள் தெருமுனைக்கூட்டம் நடத்த தடை, பிரச்சாரம் நடத்த தடை, ஆர்ப்பாட்டம் நடத்த தடை, மாநாடு நடத்த தடை. இங்கே உள்ள பெரியாரிய இடதுசாரி அமைப்புக்களுக்கு எல்லாம் தடையைப் போட்டால் இந்துத்துவ அமைப்புக்கள் வளராமல் வேற என்ன எழவு வளரும்?
எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மருத்துவருக்கு, நோய்த்தடுப்பு ஊசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் தொற்றுநோய்கள் தான் பரவும்.
இது பெரியாருடைய மண். இந்த மண்ணிலே கழிவு நீரை கொட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் முயல்கிறது ஒருபோதும் அதை விடமாட்டோம். இறுதி மூச்சு இருக்கும் வரை இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை விட மாட்டோம். இத்தகைய பொதுவான களங்களில் நாம் அணி திரளவேண்டும்.”
“நாட்டை அச்சுறுத்துவது எது?” தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு
“ஆர்.எஸ்.எஸ் நடத்துகின்ற காவி பயங்கரவாதம், ராணுவமும் போலீசும் நடத்துகின்ற அரச பயங்கரவாதம். இதை யாரும் மறக்க முடியுமா?
கோவையில் நடைபெற்றதை பற்றி பல்வேறு பத்திரிகைகள் பல்வேறுவிதமாக கருத்துக்கள் கூறி வரும் நிலையில் பார்ப்பன பயங்கரவாதத்தை பரப்பும் துக்ளக்கோ சசிக்குமார் மரணத்திற்கு கோவை கொந்தளித்தது என்று எழுதுகிறது. பெரியார் பிறந்த மண்ணில் சோ ராமசாமிக்கு இந்தத்திமிர் எங்கிருந்து வந்தது. கோவைக்கலவரத்தை ஆதரித்து எழுதுகிறார். மக்கள் கொந்தளித்தார்களா? இல்லை.
தமிழகம் முழுவதும் பார்ப்பன பரிவாரக்கும்பல் திரட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்து மதவெறி பயங்கரவாதத்தை அடிமட்டத்தில் இருந்து தூண்டிவிட்டு கலவரம் செய்தே ஆட்சியை பிடிப்பதுதான் பி.ஜே.பி.யின் வேலை. அப்படித்தானே முசாபர் நகரில் கலவரத்தை உருவாக்கி மோடி ஆட்சியைப்பிடித்தார். அப்படி ஒன்றை ஏற்படுத்த தமிழகத்தில், பெரியார் பிறந்த மண்ணில் துடிக்கிறார்கள். அதற்கான முயற்சிகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுத்தாலும் இந்து பயங்கரவாதசக்திகள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
காவிரியில் தண்ணீர் தர மறுத்து அங்குள்ள தமிழர்களை எப்படி தாக்கினார்களோ அப்படித்தான் இங்கும் கோவையிலும் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கலவரம் செய்ய ஆட்கள் சிறையிலிருந்து கிடைக்கிறார்கள். அதனால்தான் போலீசுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் அப்படி ஒரு நெருக்கம்.
கோவையிலும் திருப்பூரிலும் பல்வேறு வேலைக்காக குவிகிறார்கள். ஏதாவது குற்றம் செய்யும் இளைஞர்களை சிறையிலிருந்து கொண்டு வந்து ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியின் அடியாட்படையாக மாற்றுகிறார்கள். இந்து முன்னணியின் – பார்ப்பன பரிவாரகும்பலின் நபர்கள் அனைவரும் பொறுக்கிகள்தான். கிரிமினல்கள்தான்.
இவர்களைப்போலத்தான் சசிக்குமாரும் ஏனைய பரிவாரக்கும்பலும். இவர்கள் எப்படி சாவார்கள்? 3 நாட்கள் கோவையை ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறார்கள். எங்கள் ஆட்கள் செத்தால் தமிழகத்தில் யாரும் நிம்மதியாக வாழமுடியாது என்ற நிலையை உருவாக்க நினைக்கக்கிறார்கள். எப்படி குஜராத்தில் கலவரம் செய்து மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தார்களோ அப்படி தமிழகத்திலும் ஒரு நிலையை உருவாக்க துடிக்கிறார்கள்.
ஐ.ஐ.டி.யில் பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராக பு.மா.இ.மு.வும், அ.தி.மு.கவைத்தவிர அனைத்து கட்சிகளும் களத்தில் நின்ற போது பின்வாங்கியது பார்ப்பன கும்பல். என்றாலும் கூட மீண்டும் முயல்கிறார்கள். கோவையில் துண்டறிக்கைகளை கல்லூரியில் கொடுத்தால் கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ், பிஜேபி. மாணவர்களை திரட்டி எதிர்கொள்கிறது பு.மா.இ.மு. இந்துத்துவ கும்பலின் வானரங்கள் வரவில்லை. மாறாக போலீசு வந்து நிற்கிறது. ‘ஏன் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறீர்கள்? அமைதியாக போ’ என்கிறது. ஏன் பெரியார் திடலில் போலீசு வந்து தாலியறுப்பு நிகழ்ச்சிக்குப்பின்னரும் கூட மற்ற நிகழ்ச்சியை நிறுத்த சொல்கிறது. அவர்களுக்கு ஒரு அஜெண்டா உள்ள இந்த நாட்டை பார்ப்பனீயமாக, இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்பதுதான் அது.
அதற்காகத்தான் மாணவர்களை கவர்ந்து இழுக்க அரசின் துணையோடு போலீசோடு சேர்ந்து கல்லுரிகளுக்குள் நுழைகிறார்கள். கோவையில் முழக்கமிடுகிறார்கள் “ தமிழகத்தை குஜராத்தாக மாற்றிக் காட்டுவோம்” என்று.இவர்களின் கலவரங்களுக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்கிறார்கள். ஏனென்றால் ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில். இன்றுமட்டுமல்ல. எப்போதும் அப்படித்தான்.
போலீசு கலவரத்தை தடுக்காது. முடியவில்லை என்பதல்ல அது தடுக்காது என்பதுதான் உண்மை. போலீசு இந்து மனசாட்சி கொண்ட அமைப்பு. குஜராத்தில் கலவரத்தை செய்தது ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல போலீசும்தான். அப்படித்தான் கோவையிலும் செய்தார்கள்.மேலிருந்து கீழாக அப்படித்தான் போலீசு துறையே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரான துறை.
கர்நாடகாவில் தமிழகர்களைத்தாக்கிய ஆர்.எஸ்.எஸ் கும்பலை கண்டித்து அதன் தலைமையகமான சென்னை சேத்துப்பட்டில் 20-க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் முற்றுகையிட்டார்கள். அப்போது 50 ஆர்.எஸ்.எஸ் காலிகளோடு போலீசும் சேர்ந்து கொண்டு பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் இருந்து கொண்டு முற்றுகையிட வருபவர்களை ஒருகை பார்க்கலாம் என்று நிற்கிறார்கள். அன்றையை கொந்தளிப்பான சூழலில் பின் வாங்கி இருந்தார்கள். கர்நாடகாவில் தமிழர்களை தாக்கும் போதும் கோவையில் மக்களைத்தாகும் போதும் போலீசு எப்படி இருந்ததோ அப்படித்தான் இங்கும் இருந்தது. கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக ஒரு கும்பலை எப்படி கூடவிடலாம்? அதற்கு தலைமை உத்தரவு போடவேண்டிய அவசியம் இல்லை. போலீசின் மனசாட்சியே அப்படித்தானே உள்ளது.
அதனால் தோழர்களே, உழைக்கின்ற மக்களே, நண்பர்களே நம்முடைய கடமை மிகப்பெரியது. ஆர்.எஸ்.எஸ் அபாயம் நாட்டை அச்சுறுத்துகிறது. தமிழகத்தையும் கைப்பற்றத்துடிக்கிறார்கள். ஆனால் ஒன்றை மறந்துவிட்டார்கள் 2002-ல் தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் குஜராத் இன்று எப்படி இருக்கின்றது?
எந்த தலித்துகளை பயன்படுத்தி கலவரம் செய்தார்களோ அந்த தலித் மக்கள் இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். செத்த மாடுகளைக்கொண்டு அரசு அலுவலகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி அலுவலகங்களிலும் நிரப்புகிறார்கள். இந்தியா முழுவதும் இதுதான் பி.ஜே.பி கும்பலுக்கு இனி நேரப்போகும் கதி . அதை தமிழகத்தில் நிரூபித்துக்காட்டுவோம். தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்கிறார்கள். அதுமுடியாது என்று அவர்களுக்கு மரண அடி கொடுப்போம், அதை செய்து காட்டுவோம்.
மாணவர்களை, இளைஞர்களை, மக்களை, தமிழின உணர்வாளர்களை ஓரணியில் திரட்டுவோம். ஆர்.எஸ்.எஸின் பி டீம் ஆக இருக்கும் அ.தி.மு.க.வையும் வீழ்த்துவோம். தோற்றுப்போனது இந்த காவல்துறை. மக்களுக்கு எதிராய்ப்போனது இந்த காவல் துறை. ஆர்.எஸ்.எஸ் எப்படி மக்களுக்கு எதிரியோ அப்படித்தான் காவல்துறையும் இந்த அரசுக்கட்டமைப்பும். கண்டிப்பாக மக்களின் பாதுகாப்பை இவர்களிடம் விடமுடியாது. நாமே அதிகாரத்தை கையில் எடுப்போம் என்று சொல்லும் மக்கள் அதிகாரத்தோடு இணைந்துதான் இந்த ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரக் கும்பலுக்கு முடிவு கட்ட முடியும். இந்தக்காலித்தனத்தை தமிழ் மண்ணில் இருந்து வேரறுக்க முடியும். அதற்கு அனைவரும் அணி திரள வேண்டும்.
தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை