privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமுசுலீம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரிதான் ஆர்.எஸ்.எஸ் !

முசுலீம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரிதான் ஆர்.எஸ்.எஸ் !

-

கோவை இந்து முன்னணி கலவரம் – சென்னை ஆர்ப்பாட்ட உரைகள் – 2

ந்துமதவெறி காவி கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அக்டோபர் 1, 2016 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட உரைகள் – 2

“இஸ்லாமியர்கள் மட்டும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் எதிரிகளல்ல அவர்கள் இந்துக்களுக்கும் எதிரிகளே” – தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மைய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்.

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-kaliappan”சசிகுமார் என்ற இந்து முன்னணி நபர் கொல்லப்பட்டதற்காக இந்து மதவெறி பாசிஸ்டுகள் கோவையில் கலவரம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வெவ்வேறு கட்சிகளில், தி.மு.க கட்சியில் கூட கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு தெரியும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று, யாரும் எங்கள் கட்சிக்காரர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கலவரம் செய்வதில்லை.

இவர்கள் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ரவுடிகள் கிரிமினல்கள் இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் கொல்லப்படலாம். கொலை செய்தவனை கைது செய் என்று தான் சொல்லனும் அது தான் நியாயம். இவர்கள் மற்றவர்களுக்கு அதை தான் சொல்கிறார்கள். சட்டத்தின் படி நடந்து கொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் கலவரத்தை நடத்தி மக்களை அச்சத்தில் வைத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.

“பாகிஸ்தான் மக்களுடன் பேச போகிறேன். பாகிஸ்தானின் மக்களே உங்கள் தலைவர்களை கேளுங்கள் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு எங்களோடு போட்டி போடுவதற்கு தயாரா? பாகிஸ்தானிலே வறுமையை ஒழிப்பதற்கு போட்டி போட தயாரா? வேலையின்மையை ஒழிப்பதற்கு போட்டி போடுவோமா? வளர்ச்சியை நிலைநாட்டுவதற்கு போட்டி போடுவோமா? வாருங்கள் போட்டி போட்டு பார்ப்போம் அதிலெல்லாம் நாங்கள் தான் ஜெயிப்போம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, அமைதி, இதையெல்லாம் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தானும், இந்தியாவும் போட்டி போட்டால் இந்தியா தான் ஜெயிக்கும்” என்று பாகிஸ்தான் மக்களுக்கு சவாடல் விட்டிருக்கிறார் மோடி.

பா.ஜ.க.காரனும் அதையே பேசுகிறான். கோயம்பத்தூரில் 22-ம் தேதி முதல் நேற்று வரை அமைதியான வாழ்க்கை நீங்கள் சீர்குலைத்திருக்கிறீர்கள். திருப்பூரின் பொது அமைதியை சீர்குலைத்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கெங்கெல்லாம் கலவரம் செய்கிறீர்களோ மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல அந்த பகுதியில் இருக்கக்கூடிய தொழில் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. பி.ஜே.பிக்காரன் வளர்ச்சி என்று சொல்வது பொய். வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அவர்கள்.

இஸ்லாமியர்களுக்கு மட்டும் அவர்கள் எதிரிகளல்ல அவர்கள் இந்துக்களுக்கும் எதிரிகள். எல்லா நிலைகளிலும் அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள். இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் கால் பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப் பெரும் எதிரியாக இருக்க கூடியவர்கள்.

குஜராத்தில் என்ன நடக்கிறது? மோடி சவடால் விட்டிருக்கிறார். ”தாழ்த்தப்பட்டவர்களை தாக்காதீர்கள். உங்களுக்கு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் வந்தால் என்னை கொலை செய்யுங்கள்” என்று அயோக்கியத்தனமாக பேசுகிறார். என்னை கொல்லுங்கள் என்றால் எப்படி முடியும் 100 போலிஸ்காரன் துப்பாக்கி வைத்து கொண்டு 7 கிலோமீட்டர் மக்களை தடுத்து விட்டு என்னை கொல்லுங்கள் என்று வெற்று சவாடல் அடிக்கிறார். இதே குஜராத்தில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு கர்ப்பிணி பெண்ணை செத்த மாட்டை எப்படி அப்புறப்படுத்த மறுக்கிறாய்? என்று சொல்லி அடித்து மனிதாபிமானமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறான். இந்த நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரும் எதிரியாக இருக்கின்றன இந்துத்துவ அமைப்புகள்.

இந்த கும்பல் கலவரத்தை திட்டமிடுவதின் மூலமாக இந்த நாட்டில் உள்ள மக்களை மதவாத அடிப்படையில் இரண்டாக பிளவுபடுத்தி பல்வேறு தரப்பு மக்களும் இணக்கமாக வாழ்கின்ற சூழலை அழித்து நிரந்தரமான பகையை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ள முயல்கிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலை போல அபாயமானவர்கள் எவரும் இல்லை.

இந்த மாதிரி சூழ்நிலையில் நம் நாட்டில் இருக்க கூடிய அரசியல் சக்திகள் குறிப்பாக பா.ம.க ராமதாஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் அந்த கோவை கலவரம் என்பது தன்னுடைய கட்சிக்காரர் சசிக்குமார் கொல்லப்பட்டதால் ஆதங்கத்தினால் வெளிப்பட்டது என்கிறார். இது அயோக்கியத்தனமானது. இப்படி சொல்லி கோவை கலவரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார். ராமதாஸ் மட்டுமல்ல அவரை போல சாதி மதவெறி அமைப்புகள் இப்படி தான் பேசுகின்றன. இந்த பிரச்சனையை எப்படி நாம் பார்ப்பது? இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதல்ல.

பாசிச கும்பலை ஒழித்துக்கட்டுவதன் மூலமாக மட்டும் தான் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்கு தான் இங்கு இருக்கூடிய ஜனநாயக சக்திகள், தமிழ் உணர்வாளர்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், அமைதியை நேசிப்பவர்கள் எல்லோரும் இன்று ஒன்று திரண்டுயிருக்கிறோம். பெரியார் பிறந்த மண் என்று பேசிக்கொண்டிருப்பதிலே பலனில்லை. பெரியாரை செருப்பாலே அடிப்போம் என்று பேசும் அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது என்று சொன்னால் நாம் தோற்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இனியும் இது போன்ற கலவரங்களை தூண்டுகின்ற சக்திகளை நாம் என்ன விலை கொடுத்தேனும் முறியடிக்கவில்லை என்று சொன்னால். எதிர்கால தமிழகம் என்பது ஒரு குஜராத்தாக மாறும் என்ற அபாயமிருக்கிறது.

தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் என்று கோவை கலவரத்தில் கூட போலீசை வைத்து கொண்டே பேசுகிறான். இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான சூழலிலே நாம் இருக்கிறோம். இன்று பாசிச சக்திகள் மேலும் அதிகாரத்தை பெற்று வருகின்றன. காவல்துறையே பாசிசமயமாகி வருகிறது. எந்த ஜனநாயகத்தையும் அவர்கள் மதிப்பவர்களாக இல்லை. கோவை கலவரத்தை எதிர்த்து கூட்டம் போட்டால் என்ன ஆர்ப்பாட்டம் நடத்தினால் உனக்கு என்ன? போஸ்டர் ஒட்டினால் என்ன?

காவல் துறை கிரிமினல்மயமாகி வருவது மட்டுமல்ல. இந்து மதவெறி கும்பலாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனுடைய விளைவு தான் கோயம்பத்தூரில் நடந்த கலவரம். கோயம்பத்தூர் கடந்த 15, 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே ஒரு தனித்து விடப்பட்ட பகுதியாக மாறியிருக்கிறது. தன்னுடைய சொல்லை மீறி காவல்துறை செயல்படாது என்ற அளவில் ஆர்.எஸ்.எஸ் பிடி ஓங்கியிருக்கிறது. ஒட்டு மொத்த காவல்துறையும் கையாளாக இருக்கிறது என்பது மிகப்பெரிய சோகம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை சீர்குலைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது, அனுமதிக்க கூடாது. ஆகவே உழைப்பாளி மக்கள் நம்முடைய அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்துமத வெறி சக்திகளை முறியடிப்பதில் ஒற்றுமை நிலைநாட்ட வேண்டும் அதை நோக்கி எல்லா சக்திகளும் அணி திரள வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறேன். காவிவெறி கும்பலை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் என்று கூறி எழுச்சியுரையாற்றினார்.

“ஆர்.எஸ்.எஸ் யை விரட்டியடிக்க‌ தெருக்கள் வாரியாக பகுதி வாரியாக ஏராளமான குழுக்களை நியாயமுள்ளவர்கள், மக்களை பாதுக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.” – தோழர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மாநில செயற்குழு உறுப்பினர்

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-cpm-com-kanagaraj“கோவையில் 23-ம் தேதி தொடங்கி 24, 25 தேதி வரை அவர்கள் கலவரத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மூன்று குழுக்கள் 26-ம் தேதி சென்றிருந்தோம்.

பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடைகள் சூறையாடப்பட்டிருந்தன. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் கொளுத்தப்பட்டிருந்தன. போலிஸ் வண்டி எரிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் தாக்கப்பட்டன. இரண்டு மசூதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கிறது. சர்ச் தாக்கப்பட்டிருக்கிறது. துடியலூர் பகுதியில் ஆறு குடும்பங்கள் வசிக்கிற ஒரு வீடு முழுவதும் முற்றிலுமாக தாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாட்டிறைச்சி கடை கிட்டத்தட்ட சூறையாடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தான் மாடுகள் திறந்துவிடப்படுகின்றன. கன்றுக் குட்டிகளை தூக்கி செல்வது சமூக வலைத்தளங்களில் வந்திருக்கிறது.

ஒரு சூறையாடுகிற சமூக விரோத கும்பல் போல தான் இவர்கள் நடந்து கொண்டார்கள். அவர்கள் எங்கெல்லாம் திருட முடியுமோ சூறையாட முடியுமோ அங்கெல்லாம் திருடியிருக்கிறார்கள் சூறையாடியிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது. தாக்கப்பட்ட வீடுகளில் இருந்த ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது. இந்த கும்பல் வருகிறது என்ற சொன்ன போது அவர்கள் அந்த வீட்டை காலி செய்ததன் காரணமாக அவர்கள் தப்பித்தார்கள்.

கடந்த 13-ம் தேதி திருப்பூரில் அப்படி ஒரு வன்முறையை செய்ய முயற்சி செய்திருந்தார்கள். 13-ம் தேதி அன்று பக்ரித் அன்று தான் ஒரு பந்த்க்கு அவர்கள் அறைகூவல் விடுகிறார்கள். வேலூரில் இருக்க கூடிய ஒரு இந்து முன்னணி அமைப்பினுடைய ஒரு நிர்வாகியின் அலுவலகத்தில் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும். எனவே அதை கண்டித்து திருப்பூர் நகரில் ஒரு பந்த் நடத்த போவதாகவும் சொல்கிறார்கள். பக்ரீத் தினத்தன்று முஸ்லீம்கள் வெளியே வரகூடாது என்பது தான் அவர்களின் நோக்கம்.

ஆனால் 12-ம் தேதி அ.தி.மு.க தவிர அங்கிருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் “அடுத்த நாள் பந்த்தை முறியடிப்போம் என்றும் மக்கள் கடையை திறந்து வைக்க வேண்டும் நாங்கள் பாதுகாப்பு தருவோம்” என்று சொன்னார்கள். தொழிற்சங்கள் அப்படி கூட்டாக அறிவிப்பு விடுத்த பிறகு அவர்கள் 18 -ம் தேதி ஆர்ப்பாட்டம் என்று மட்டும் சொன்னார்கள்.

அதே போல் துடியலூர் பகுதியில் அவர்கள் தாக்குதல் இருந்திருக்கிறது. மகாலட்சுமி என்ற பேக்கரி உரிமையாளர் முதல் தலைமுறையாக இப்போது தான் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் அந்த இடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களிடம் கேட்ட போது இந்து முன்னணி ஒரு விநாயகர் ஊர்வலம் நடத்துகிறது. பி.ஜே.பி ஒரு விநாயகர் ஊர்வலம் நடத்தியிருக்கிறது. இவர்கள் 2000 ரூபாய் பணம் கேட்கிறார்கள். தர முடியாது 500 ரூ மட்டும் தான் தருகிறார் என்று கூறுகிறார். நீ கடை வச்சிருவியா என்று சொல்லிவிட்டு வந்து அந்த கடை முழுவதையும் அழித்திருக்கிறார்கள்.

அதே போல பல இடங்களில் கதவை உடைத்து திறந்து எடுத்திருக்கிறார்கள். யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும். அதே போல இதை தூண்டியவர்களை, இதை திட்டமிட்டவர்களை கடுமையாக ஒடுக்க வேண்டும். டி.ஜி.பி பெரிய பதற்றமடையவில்லை. மாநில காவல்துறை கண்டும் காணாமல் இருக்கும் போக்கை கடைப்பிடித்திருக்கிறது.

யாரெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பது வலைத்தளங்களில் வந்திருக்கிறது அவர்களை கைது செய்ய வேண்டும். ஒரு காவலரிடம் பேசும் போது வெறும் 26 லட்சம் தான் இழப்பு ஏற்பட்டதாக சொல்கிறார். ஊடகங்களில் வந்ததன் மூலமே எவ்வளவு திருட்டு நடந்திருக்கிறது என்பது தெரியும். கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் இப்படி செய்கிறார்கள். இப்படி நடந்தவுடன் போலீசை குவித்திருக்க வேண்டாமா? பொது மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை.

சசிகுமார் புனிதராக கூட இருக்கட்டும். அவரை கொன்றவரை தவிர மற்றவர்களை அடித்த போது காவல்துறை திருப்பியடித்திருக்க வேண்டாமா? இப்படி இருப்பது சமூகத்தை ஒரு காட்டுமிராண்டி கூட்டத்திடம், அவர்கள் தயவில் வாழ்வதற்கு நிர்பந்திக்கும் விஷயமில்லையா? எஸ்.பி.யும் கலெக்டரும் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் என்ன பேசுகிறார்கள் என்றால் நாங்கள் இந்த ஊருக்கு புதியது என்று பேசுகிறார்கள்.

தென்காசி கலவரத்தின் போது குண்டு வைத்து விட்டு முஸ்லிம்களின் தொப்பியை போட்டு விட்டு முஸ்லிம்கள் தான் கொன்றார்கள் என்று சொல்லிவிட்டு போக முடிகிறது. யாரோ ஒன்று இரண்டு அதிகாரிகள் கண்டு பிடித்த பிறகு தான் உண்மை தெரிகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் நடக்கிறது.140 குண்டுவெடிப்புகளில் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள். உடனடியாக எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மக்கா மஸ்ஜித் வழக்கில் 70 பேர் கைது செய்யப்படுகிறார்கள். 7 வருடங்கள் கழித்து வேறு அமைப்பு தான் காரணம் இவர்கள் இல்லை கண்டுபிடிக்கிறார்கள். அபினவ் பாரத் என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கிறது. இப்படி பல.

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு கைதானவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். “உள்ளே சிறைக்கு சென்றிருப்பவர்கள் உடனே வெளியே வர வேண்டாம். அங்கே கிரிமினல்கள் உள்ளே இருக்கிறார்கள். எவன் அரிவாளும் கத்தியும் எடுக்க தயாராக இருக்கிறானோ அவனெல்லாம் ஆண்மையுள்ளவன். அவர்களை ஆர்.எஸ்.எஸ் நோக்கத்திற்கு பயன்படுத்த தயார் பண்ணுங்க. உங்களுக்கு வேண்டிய சாப்பாடு எல்லாம் தரப்படும்.” திட்டமிட்டே சமூக விரோதிகளை தங்களுக்காக வெளியே நிற்க வைக்கும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே பரந்துபட்ட ஜனநாயக அடிப்படையில் அளவில் கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்கள் இல்லாதவர்கள் என அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டிருக்கிறது.

ஒரு நல்ல உதாரணம் கோவையில் விஜயா என்ற ஒரு பெண் தோழர் முதலில் 10 பேருடன் சேர்ந்து இவர்களை தடுத்து நிறுத்தினார். எதிரில் 50 பேர் வருகிறார்கள். ஆனால் இந்த பத்து பேரை பார்த்து விட்டு இன்னும் கொஞ்சம் ஆளை கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று போகிறார்கள். அதற்குள் தெருவில் இருக்கும் எல்லோரையும் கூப்பிட்ட பிறகு அந்த தெருவில் இருந்த வியாபாரிகள் முழுவதும் வந்து திருப்பியடித்திருக்கிறார்கள்.  விரட்டியடிக்க முடிந்திருக்கிறது.

இப்படி தெருக்கள் வாரியாக வீதிகள் வாரியாக ஏராளமான குழுக்களை நியாயமுள்ளவர்கள், மக்களை பாதுக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எல்லாம் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு இருக்கு.

அனேகமாக நம்முடைய தொழிற்சங்களும் அரசியல் கட்சிகளும் இதனுடைய ஆபத்தை முழுமையாக புரிந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. நாளைக்கே இங்கு மனித சங்கிலி போராட்டம் என்று வைத்தால் தொழிற்சங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனையில் நாம் கலந்து கொள்ள வேண்டுமா என்ற தயக்கம் இருக்கிறது. ஆனால் தனியாக சி.ஐ.டி.யு செய்யட்டும் மற்றவர்கள் போகட்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுக்கிறேன் என்று சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்க வேண்டிருக்கிறது.

கோவை கலவரத்திலும் கூட மிக அதிகமாக பயன்படுத்தியிருப்பது தலித் சமூகத்தை சார்ந்த இளைஞர்களை அவர்கள் குறி வைக்கிறார்கள். விநாயக சதுர்த்தியை ஒட்டி ஏராளமான பணத்தை கொட்டுக்கிறார்கள். அவர்களுக்கு சாராயம் வாங்கி தருகிறார்கள். அதில் சிலர் எங்கள் பிள்ளைகளை வெளியில் எடுங்கள் என்று இப்போது சொல்கிறார்கள். அவர்களிடமும் 20000 பணம் கேட்கிறார்கள்.

இப்படி கொள்ளை கும்பலை போல நடந்து கொள்கிற ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சங்பரிவார் அமைப்புகள் மிக திறமையாக ஒவ்வொரு கலவரத்திற்கு பின்பாகவும் ஒரு அரசியல் வெற்றியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். கோயம்புத்தூரும் அதற்கு உதாரணம். இப்போது கூட அவர்களுடைய ஒரு தலைவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் இந்த முறை நாங்கள் 15 வார்டுகளில் கட்டாயம் வெற்றிப்பெற்று விடுவோம். நான்கில் ஒரு பங்கு வார்ட் என்று அவர் சொல்கிறார்.

வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கிறவர்களை அவர்கள் முழுமையாக ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பணம் தருகிறார்கள். ஏராளமான பணம் கொட்டப்படுகிறது. நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் ஒற்றுமை. பரந்துப்பட்ட ஒற்றுமையில்லாமல் இதை முறியடிப்பது என்பது சிரமம். இன்னொன்று இப்படி நிற்கிற போது முஸ்லிம் அமைப்புகள் அல்லது மற்ற அமைப்புகள் என்பதற்கு மாறாக மத நம்பிக்கையுள்ள இந்து மக்கள் நாங்கள் தான் உண்மையான இந்து மக்கள் என்று திருப்பி அடிப்பதற்கு முறையாக நிற்க வைப்பதன் மூலம் தான் இதை நாம் எதிர்கொள்ள முடியும். இத்தகைய இயக்கங்கள் தமிழக மக்கள் மத்தியில் இந்த பிரச்சாரத்தை எல்லா பகுதிகளிலும் கொண்டு போவது அவசியம்.

மக்கள் அதிகாரம் நடத்திகிற இந்த ஆர்ப்பாட்டம் அதனுடைய கோரிக்கைகள் வெல்லட்டும் நன்றி. காவல் துறையானாலும் சரி நிர்வாகமானாலும் சரி வியாபாரிகளாலும் சரி இவர்களிடம் இருக்கக்கூடிய ஜனநாயக பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் தான் இதை உருவாக்க முடியும். அது போராட்டங்களாக மட்டுமல்லாமல் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

“இந்துக்களின் எழுச்சியா காலிகளின் வன்முறையா?” – விடுதலை ராஜேந்திரன் – திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர்

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-viduthalai-rajendran
விடுதலை ராஜேந்திரன்

மக்கள் அதிகாரம் தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக இந்த கண்டன ஆர்ப்பட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

நேற்று திருப்பூரில் இதே போல ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். 2000-க்கும் மேற்பட்ட மக்களை கைது செய்திருக்கிறார்கள். தடையை மீறி அவர்கள் போராடியிருக்கிறார்கள். இந்த கோவை கலவரத்தை மட்டுமே வைத்து கொண்டு அந்த ஒரு பிரச்சனையை மதவெறி சக்திகளோடு இணைத்து ஒரு எல்லைக்கோடு போட்டு கொண்டு முடித்து விட முடியாது. ஒட்டு மொத்தமாக இந்த சக்திகள் எப்படி கலவரத்திற்கு திட்டமிடுகின்றன. இவர்களுக்கு பின்னால் உண்மையிலேயே இந்துக்கள் என்று சொல்லப்படுகின்ற மக்கள் அணிதிரணடிருக்கிறார்களா? இந்த சக்திகளிடமிருந்து மக்களை எப்படி நாம் பிரித்து எடுக்க போகிறோம். அதற்கு எந்தெந்த முறைகளை நாம் கையாள போகிறோம் என்பது தான் நம் முன்னே உள்ள முக்கிய பிரச்சனையாக உள்ளது.

சில வன்முறையாளர்களை தேடிப்படித்து சிறையில் இருக்க கூடிய முன்னால் குற்றவாளிகளை  வெளியே கொண்டு வந்து வெளி மாநிலங்களிலிருந்து சில கலவரக்காரர்களை கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் வைத்து கலவரங்களை திட்டமிட்டு நடத்துகிறார்கள். அதன் வழியாக  ஒட்டுமொத்தமாக இந்துக்களின் எழுச்சி என்ற ஒரு பொய்யான ஒரு மாயையை அவர்கள் உருவாக்கும் முயற்சிதான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர இந்த கலவரக்காரர்களுக்கு பின்னால் எந்த மக்களும் அணிதிரண்டு நிற்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இது ஆர்.எஸ்.எஸ் தோன்றிய காலத்திலிருந்தே அவர்கள் உருவாக்கிய உத்தி, ஒரு இடத்தில் ஒரு கலவரத்தை உருவாக்குகிறார்கள் என்று சொன்னால் அந்த கலவரத்தின் வழியாக மக்களை கூறுபோட்டு அவர்களில் ஒரு பகுதியை தனக்காக வென்றெடுப்பது என்பது ஆர்.எஸ்.எஸ் காலங்காலமாக பின்பற்றுகின்ற நடைமுறை. ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து வடநாட்டிலே இது பின்பற்றப்பட்டு வந்தது. வடநாட்டில் இந்த முறைக்கு ஓரளவு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்.

ஆனால் அப்படிப்பட்ட ஒருநிலை தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதற்கான சூழல் தமிழக மண்ணை பொருத்தவரை கிடையாது. பெரியார் பிறந்த மண் என்று சொன்னால், ஏதோ இங்கிருக்கும் மண்ணை குறிப்பதாக அர்த்தமல்ல மாறாக மண்ணினுடைய ஒரு சிந்தனையோட்டம் என்பதை தான் அது உணர்த்துகிறது. வடநாட்டில் ஒரு மதக்கலவரம் துவங்குகிறது என்று சொன்னால், ஒரு இடத்தில் தொடங்கும் கலவரம் ஊர் கலவரமாக மாறி மாவட்ட கலவரமாக மாறி மாநில கலவரமாக மாறும். அளவிற்கு கொண்டு போக கூடிய ஒரு மதவெறி என்பது படிந்து போயிருக்கிற ஒரு சூழல் வடமாநிலங்களில் இருந்தாலும் தமிழகத்தில் நீங்கள் என்னதான் முக்கி முக்கினாலும் கலவரத்தை உருவாக்கினாலும் அந்த கலவரம் அந்த பகுதியை தாண்டி அடுத்த பகுதிக்கு இவர்களால் கொண்டு செல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு கண்டிப்பான சூழலில் தான் அவர்கள் இயங்க வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட வன்முறை சக்திகள் கலவரத்தை தூண்டி மக்களை அணிதிரட்டுகின்ற ஒரு முயற்சியை நாம் எவ்வாறு முறியடிக்கப்போகிறோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்து முன்னணிக்காரர்கள் தான் இப்படி நடத்து கொள்கிறார்கள் என்பதல்ல மத்தியிலே இருக்க கூடியவர்கள் கோவையில் கலவரம் செய்த இந்து முன்னணிக்காரனை விட மிக மோசமான மனநிலை உள்ளவர்களாக இருப்பதை நாம் பாத்துக் கொண்டிருக்கிறோம்.

உலக வங்கிக்காரனிடம் ஒப்பந்தம் போட்டு 1960-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் இருக்கிறது. அந்த நதி நீரை நான் உனக்கு தர மாட்டேன் என்று அடாவடி செய்கிறார்கள். கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு எப்படி தண்ணீர் தரமாட்டேன் என்று ஒரு கன்னடவெறியோடு பேசுகிறானோ அதே பார்வையில் நான் உன்னை பழிவாங்குவேன் என்று நாட்டை ஆளுகின்ற நிலையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிரதமராக இருக்க கூடியவருடைய யோக்கியதை இப்படி இருக்கிறது.

தண்ணீர் தர முடியாது என்று இவர்கள் சொன்னவுடன் அதிகாரிகளெல்லாம் விளக்கம் தருகிறார்கள். அந்த முடிவிலிருந்தே பின்வாங்கி விட்டோம் என்று சொல்கிறார்கள். நாங்க பேசினால் தேச விரோதி என்பீர்கள் இப்போது ஆங்கில, தமிழ் ஹிந்து தினசரி பத்திரிகையில் எழுதுகிறார்கள். ஆனந்த விகடனில் எழுதுகிறார்கள் நிதானம் காட்டுங்க என்று எழுதுகிறார்கள். இரண்டு பேரும் அணு ஆயுதத்தை வைத்து கொண்டிருக்கிறான் யாருக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது.

இஸ்லாமியர்கள் என்று சொன்னால் அவர்களை எதிரியாக சித்தரித்து அவர்கள் மீது ஒரு யுத்தத்தை தொடங்க வேண்டும். மதம் என்கின்ற உணர்வை வெறியாக மாற்றுவதற்கு ஒரு சின்ன எல்லைக்கோடு தான் இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் ஒரு வெறியாட்டத்திற்கு தயாராக இல்லையென்றாலும் அவர்கள் உணர்வுகளை வெறியாக மாற்றுவது என்பது இன்று கட்டமைக்கப்படுகிறது.

பெரியார் கூட சொல்லியிருக்கிறார் மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலேயே கடவுள் என்ற கண்டுபிடிப்பை விட மதம் என்ற கண்டுபிடிப்பு மிகவும் ஆபத்தானது. கடவுள் முன்னாடி எல்லாரும் சமம் என்று சொன்னால் எல்லோரும் ஏற்று கொள்வார்கள் எல்லா மதத்துக்காரனும் ஒன்று என்று சொன்னால் எந்த மதத்துக்காரர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள். சமூகத்தில் இருக்கும் அமைப்புகளிலேயே மோசமான ஒரு அமைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வாதம் மதவெறியோடு முடிச்சு போடும் போது மிகவும் எளிதாக மாறுகிறது.

பெரும்பான்மை மக்கள் இன்று சுரண்டப்படும் மக்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அடிப்படை உரிமையில்லாமல் இருக்கிறார்கள். இந்துக்கள் நாங்க பெரும்பான்மையாக இருக்கிறோம் என்று பேசுகிறார்கள். சரிசமம் என்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்பது எங்கே வருகிறது. பெரும்பான்மை என்பது தவறான கோட்பாடு.

தேசபக்தியை மதவாதத்தோடு இணைக்கிறான். ‘மதவாதம் தான் தேசபக்தி. தேசபக்தனாக இருப்பவன் மதவாதத்தோடு தான் இருக்கனும்’ என்கிறான். தேச வெறியை கட்டமைத்து அதன் மூலம் மதவெறியை தூண்டுகிற ஒரு ஆபத்தாக இருக்கிறது.

தேசம் என்பது யாருக்காக? தேசம் என்றால் என்ன. மக்களுக்காகத் தான் தேசம், தேசத்திற்காக மக்கள் இல்லை. மக்களுக்கு அதிகாரமுள்ள ஒரு தேசத்தை நாம் உருவாக்குவோம்.

சாதி, மதம் யாரும் ஏற்று கொள்ளப்பட்ட அடையாளம் இல்லை. மக்களுக்கான, மக்கள் விடுதலைக்கான அடையாளத்தை நாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறோம். இந்த அடையாளத்தில் குறுக்கிடுக்கின்ற மதமாக இருந்தாலும், சாதியாகயிருந்தாலும், தேசமாகயிருந்தாலும் அதை எதிர்த்து பெரியார் மொழியில் பேசுகின்ற ஒரு போராட்டம் இங்கு வர வேண்டும்”

தகவல்

மக்கள் அதிகாரம்,

சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க