Thursday, January 21, 2021
முகப்பு செய்தி ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !

ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !

-

தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்த காரணத்திற்காக ஜார்கண்டு மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகள் நான்கு பேர் காவல்துறை கயவர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாத முகாம்களின் மீது அறுவை சிகிச்சைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக தனது 56 இஞ்ச் மார்பு துடிக்கப் பேசிய மோடியின் பா.ஜ.க தான் ஜார்கண்டு விவசாயிகள் மீது இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

அபிஷேக்கின் குடும்பம்
சுட்டுக் கொல்லப்பட்ட 18 வயது மாணவன் அபிஷேக்கின் குடும்பம்

ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியான பாக்ககானில் (Badkagaon) காய்கறிகள், கரும்பு, கோதுமை, பருப்பு வகைகள், நறுமணப் பொருட்கள் அனைத்தும் முப்போகம் விளைகின்றன. பசுமைப் போர்த்திய பாக்ககானின் வயல்களின் ஆழத்தில் புதைந்துள்ள 33,000 கோடி ருபாய் மதிப்புள்ள நிலக்கரி முதலாளிகளுக்கு வேட்டைக்காடாகவும் விவசாயிகளுக்கு துயரமாகவும் அமைந்துவிட்டது.

அப்பகுதி மக்களை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியான நெருக்குதலுக்கு உள்ளாக்கியதன் மூலம் சுரங்கம் அமைக்கத் தேவைப்படும் 8,055 ஏக்கரில் 4,043 ஏக்கர் நிலங்கள் 2015 ஆம் ஆண்டில், இழப்பீடு தருவதாகக் கூறி கையகப்படுத்தப்பட்டது.

நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 8745 குடும்பங்களில் 2614 குடும்பங்கள் மட்டுமே இழப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். நிலக் கையகப்படுத்துதல் மறுவாழ்வு சட்டம் – 2013-ன் படி சந்தை மதிப்பை விட 4 மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.

இழப்பீட்டுத்தொகை எவ்வளவு கொடுத்தாலும் 36 கிராமங்களை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

“ஆண்டு முழுவதும் காய்கறிகளையும் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களையும் உற்பத்தி செய்வதன் மூலம் தன்னிறைவாக வாழ்கிறோம். எங்களது நிலங்களை பிடுங்கிக்கொண்டால் நாங்கள் எதைச் சாப்பிடுவது” என்கிறார் விவசாயி சுத்லால் சவ். நிலக்கரிச் சுரங்கம் இருக்கும் பக்ரி பர்வாதி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிதான், ஜார்கண்டின் காய்கறிக் கூடை என்று அழைக்கப்படுகிறது.

நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதென்பது விவசாயத்துடன் சேர்த்து தங்களது எதிர்காலத்தையும் அழித்துவிடும் என்பதை அம்மக்கள் அறிந்தேயிருந்தனர். அப்பகுதியின் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படுகொலை நிகழ்ந்த 2016, அக்டோபர் 1 -ம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத்தின் அருகிலுள்ள சிரு பர்வாதி கிராமத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். இந்தப் போராட்டம் ஒருவார காலமாக நடந்து கொண்டிருந்தது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது அதிகாலை 5 மணிக்கு கொலைவெறித் தாக்குதலை நடத்தியது.

ஒரு கட்டத்தில், அப்போராட்டத்தை ஊக்கப்படுத்த கலந்துகொண்ட பெண் எம்.எல்.ஏவான நிர்மலா தேவியை கைது செய்ய முயன்றது காவல்துறை. அதைத்தடுக்க முயன்ற பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மீது ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐவர் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் படுகாயமடைந்தனர்.

பவன் குமார் குடும்பம்
படுகொலை செய்யப்பட்ட பவன் குமாரின் குடும்பம்

படுகொலை செய்யப்பட்டவர்களில் 19 வயதே நிரம்பிய மூன்று மாணவர்களும் அடங்குவர். அம்மூவரில் ஒருவரான பவன்குமாரைத் துப்பாக்கி குண்டால் துளைத்தப்பிறகு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு இழுத்துச்சென்று அடித்தே கொன்றுவிட்டதாக அவரது தந்தை மகி ராம் கண்ணீருடன் கூறுகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாக்கியதால் தான் திருப்பி அவர்களைச் சுட வேண்டியதாயிற்று என்றும் காணொளி ஆதாரம் கூட இருக்கிறது என்று காவல்துறை கதை கட்டுகிறது. அப்படியெனில் காயம்பட்ட காவல்துறையினரின் தகவல்களை கொடு என்று ஹசாரிபாக் சதார் மருத்துவமனை கேட்டதற்கு கல்லுளிமங்கனைப் போல் காக்கி கிரிமினல்கள் பதிலேதும் சொல்லவில்லை.

“உங்களது சொந்த அனுபவத்தில் இருந்து படிப்பினையைக் கற்றுக்கொள்ளுங்கள். நிலக்கரிச் சுரங்கவேலையைத் தொடர்ந்து நடக்கவிடுங்கள். இல்லையெனில், மேலும் பிணங்கள் விழும்” என்று இறந்த உடல்களைப் பெற்றுக்கொள்ள சென்ற மக்களிடம் காவல்துறையினர் திமிராகப் பேசியுள்ளனர்.

நக்சலைட்டுகள் தான் இந்த போராட்டத்தை நடத்தியதாக ஊடகங்கள் பரப்புரைச் செய்வதை சிந்த்வர் கிராமத்தைச் சேர்ந்த சுதேஸ்வர் வர்மா மறுக்கிறார். நாங்கள் சாதாரண விவசாயிகள், நக்ஸலைட்டுகள் உள்ளிட்ட அமைப்புகளோடு எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாதென்று கூறுகிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக போராடும் பிரிவினரை ஒடுக்கவே இந்த நக்சலைட் பூச்சாண்டியை பயன்படுத்துகிறார்கள். எனில் நக்சலைட்டுகள் எனப்படுவோர் பயங்கரவாதிகள் அல்ல, மக்களுக்காக துணிந்து போராடுபவர்கள் என்பதை ஆளும் வர்க்கமே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறது.

இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசும் – பா.ஜ.க-வும் கூட்டாக நடத்தியது, நடத்துகிறது. அதன்வழிதான் ஜார்கண்ட் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துல்லியத் தாக்குதல் என்ற பாலிவுட் கதையை வைத்து தேசபக்தியை எடுத்து விடும் பா.ஜ.க அரசுதான் இங்கே மண்ணின் மக்களை, விவசாயிகளை சுட்டுக் கொல்கிறது. ஜார்க்கண்ட விவசாயிகளுக்கு இத்தகைய போர்ஜரி துல்லியத் தாக்குதல் தேவையில்லை. அந்த எளியை மக்களின் போராட்டம் இவர்களுக்கு நாள் குறிப்பது உறுதி.

மேலும்  படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க