Monday, September 28, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்

தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்

-

கானல் நீராகும் காவிரி நீர்…
நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!

தருமபுரியில் மக்கள் அதிகாரம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம்

மாவட்டம் முழுவதும் வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு 10-10-2016 அன்று மாலை மக்கள் அதிகாரம் சார்பாக கருத்தரங்கம் எழுச்சியுடன் நடந்தது.

muthukumar-pp
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்

இக்கூட்டத்துக்கு மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பருவமழை பொய்த்தும், குறைந்தும் வருகிறது. அச்சு ஊடகங்கள் மாதத்திற்கு 4,5 பத்திரிகைகளை கொண்டு வருகின்றனர், இதற்காக மரங்களை அழித்துதான் காகிதத்தை பெறுகின்றனர், அதோடு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், எஸ்டேட் கட்டுவதும், மேட்டுக்குடியினர் கும்மாளம் அடிப்பதற்கும் என்று மேற்கு தொடர்ச்சி மரங்களை அழித்துவருவதும் அதிகரித்திருக்கிறது, அதோடு இந்தியாவிலேயே நகரமயமாக்கத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழகம்தான். தமிழகத்தில் ஒர் ஆண்டிற்கு மழையினால் கிடைக்கும் தண்ணீர் 4,323 டி.எம்.சி. இந்த மழை நீரை சேமிக்க நீர் நிலைகள் இல்லை, எல்லாம் அழிக்கபட்டிருக்கிறது. தமிழகத்தின் இலக்கியமும் பொருளாதாரமும் காவிரியோடு பிணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை பாதுகாக்க சமூக போராளிகள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

pennagaram-pp-conference-on-protection-of-water-bodies-3அடுத்தாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசுகையில், “காவிரி ஆற்றில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழம்பூவும், மூலிகைச் செடிகளும் பூத்துக் குலுங்கும், பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும், அதோடு தண்ணீரை குடித்தால் போது வாசனையாக இருக்கும். அந்த வாசனைகள் எல்லாம் அழித்து இன்றைக்கு கழிவு நீரை கலந்து பச்சை நிறமாக வருகிறது. காவிரி நீருக்கும், தருமபுரிக்கும் தொடர்பு இருக்கிறது. தஞ்சாவூரில் விளையும் நெல்லை இன்றைக்கு 60 சதவீத மக்கள் பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தும் பெரிய அளவில் போராட்டம் இல்லாமல் இருப்பது வேதனையான விஷயம்.

கெயில் குழாய் திட்டத்தால் விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லை என்றும், டாஸ்மாக் பிரச்சினையில் ரெட் ஒயின் உடலுக்கு நல்லது என்றும், பாலியல் இணையங்களை தடை செய்ய முடியாது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குகிறது நீதித்துறை. இப்படி மேட்டுக்குடி நலன்களுக்காவே பேசுகிறார்கள், பார்ப்பன நீதிபதிகள் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குகிறார்கள். எனவே தோல்வியடைந்த நீதிமன்றத்தை வைத்துக்கொண்டு நீதியை பெறமுடியாது மாற்று மக்கள் அதிகாரம் சொல்லும் தீர்வால்தான் தீர்க்க முடியும்” என்றார்.

thiruppathi-army
முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் திருப்பதி

கடந்த ஒருவருட காலமாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன்களுக்காக அங்குள்ள நீர், நிலைகளை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்திவருபவர் முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் திருப்பதி. ஓய்வு பெற்றவுடன் பல அரசு உயர் பதவிகளுக்காக அவரை அழைத்த போதிலும் அதற்கு செவிசாய்க்காமல் மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு போராடி வருபவர். அவர் பேசுகையில்,

“தண்ணீருக்காக உலகப் போரே நடக்கும் என்கிறார்கள். அதுதான் உண்மை. ஏனென்றால் 10,20 ஆண்டுகளுக்கு முன்பு குளம், குட்டை, ஏரி, ஆறுகளில் நாமெல்லாம் நீச்சல் அடித்து மகிழ்ந்தோம். அதுமட்டுமல்லாமல் 30,40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடியில் நிலத்தடி நீர் இருந்தது. ஆனால் இன்றைக்கு 1000 அடி போட்டால் தான் தண்ணீர் கிடைக்கிறது. காரணம் மேலை நாடுகள் அவர்களின் வளர்ச்சிக்காக நம்முடைய இயற்கை வளத்தை அழித்து நம்மை குப்பைத்தொட்டி போல பயன்படுத்துகிறார்கள். இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியே பெய்யக்கூடிய மழைநீரையும் சேமிக்கவில்லை.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசும் செய்யவில்லை. இந்தக் காலத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் லஞ்ச ஊழலில் திளைக்கிறார்கள். உயிர் காப்பது நீர் இதை பாதுகாப்பதை விட வேறு என்ன வேலை இருக்கிறது? 1 குவார்ட்டருக்கும், 1 பொட்டலம் பிரியாணிக்கும் தன்மானத்தை இழக்காமல் வாழ வேண்டும் அதற்கு ஒரு நல்ல அரசாங்கத்தை அமைத்தால் தான் நம்ம பேரக் குழந்தைகளையாவது இந்த அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும்” என்றார்.

vc-pandiyan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன்

அடுத்தாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் பேசுகையில், “தமிழகத்திற்கு சாபகேடாக இருப்பது தண்ணீர் பிரச்சினை, பல நாடுகளில் சண்டையில்லாமல் தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் தமிழகத்திற்கு காவிரி பிரச்சினை தீராத பிரச்சினையாக இருக்கிறது. தழிழகத்தில் உருவாகும் நீர் நிலைகள் இல்லை. இதனால் அண்டைய மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். இப்பிரச்சினையில் நடுநிலையாக இருந்து தீர்க்க வேண்டிய மத்திய அரசாங்கம், மதவாதம் பிடித்த பி.ஜே.பி அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று வருகின்ற சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்கிறார்கள், ஆனால் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க தண்ணீர் தர மறுப்பதில்லை. ரியல் எஸ்டேட், பள்ளி, கல்லூரி கட்டி நீர் ஆதாரங்களை அழித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக எல்லா நதிகளையும் இணைக்க வேண்டும், தேசியமயமாக்க வேண்டும்” என்றார்.

krishnan-thi-ka
திராவிட கழகம் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணன்

திராவிட கழகம் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணன் பேசுகையில், “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே கவிஞன் பூங்குன்றனார் பாடினார். காவிரிப்பிரச்சினை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நீதி மன்றத்திலே வழக்கு நடந்து வருகிறது, ஒரு வழக்கு தொடுத்தவனே செத்து போனாலும் வழக்கு நடக்கிறது. நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லாத போது இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் மக்கள் வரிப்பணத்தை சூறையாடி ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.

1924-ல் நீர் நிலைகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. காவிரி ஆறு 800 கிலோ மீட்டர் ஓடுகிறது, நம்ம தமிழ் நாட்டில் 417 கிலோ மீட்டர் ஓடுகிறது. அங்கே தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் தடுப்பணை கட்டக்கூடாது என்பதுதான் ஒப்பந்தம். 1947-லிருந்து 1967 வரைக்கும் 20 ஆண்டுகளாக காங்கிரசு ஆட்சியில் கபிணி அணை, சொர்ணமுகியில் ஒரு அணை என்று பல அணைகள் கட்டப்படுகிறது. அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் இதை கேட்கவில்லை, மற்றொரு புறநாநூறு பாடல் வரிகளை போல தீதும் நன்றும் பிறர் தரா வாரா என்று தமிழர்கள் தூங்கிக் கொண்டதனால் பல அணைகளை கட்டிவிட்டனர். இன்றைக்கு சாதிக்கு, கட்சிக்கு, சாராயத்துக்கு அடிமையாகி இருக்கிறோம். வரலாற்று ரீதியாக பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே நாம் தேசியக் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டாட்சி உருவாக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

pennagaram-pp-conference-on-protection-of-water-bodies-5
மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்

மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசுகையில்,

சுயசார்பாக இந்த நாட்டை வழிநடத்துகின்ற, தீர்மானிக்கின்ற திறமை அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் மக்களுக்கு கடமையாற்ற வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தகுதியை இழந்து நிற்கின்றனர். இந்த உண்மையைத்தான் நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்று இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சசிசேகர் சொல்கிறார். நீதி மன்றம் சட்ட விதியில் இருந்து நீதி வழங்காமல் சொந்த விருப்பத்திற்கு செயல்படுகிறார்கள். அதுவும் ஒரு சாரருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இந்தியா முழுவதும் நீர் நிலைகளை அழித்து பெருநகரமாக மாற்றிவிட்டனர். நகரமயமாக்கலால் நீர் நிலைகள் அனைத்தும் கழிவு நீர் குட்டைகளாக மாறிவிட்டன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பச்சமுத்து கல்லூரி இவையெல்லாம் ஏரிகளை அழித்துதான் கட்டப்பட்டிருக்கிறது. இதனை எல்லாம் யார் அழித்தது. நீர் நிலைகளும், நீர் வழித்தடங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருக்கும் ஐ.டி துறைக்காக சதுப்பு நிலங்களை அழித்துதான் கட்டியிருக்கிறார்கள். இது அரசுதான் செய்கிறது. 1970 வரை நீர் நிலைகள் கிராம மக்கள் பராமரிப்பில் இருந்தது. அதன் பிறகு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் போன பிறகு நகரமயமாக்கலுக்கு, கிராமப்புற பொருளாதாரத்தை அழித்தது, நீர் நிலைகளை அழித்து பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்காக ஆடுகின்ற அரசாங்கமாக இருக்கிறது. எனவே மக்கள் அதிகாரத்தை நிறுவததுதான் ஒரே மாற்று” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்பிற்கு யார் காரணம் என்பதையும், அதற்கு எதிராக நாம் எப்படி போராடுவது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு 8148573417

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க