privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை

-

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை!

கேஜ்ரிவாலைச் சந்தித்திருக்கிறார் இரோம் சர்மிளா. ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தனது 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்டபோது, தனது போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும், போராட்ட முறையை மாற்றி, தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூர் முதல்வராகி, அதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் பத்திரிகையாளர்களிடம் அவர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியே கேஜ்ரிவாலுடனான இந்தச் சந்திப்பு.

அதாவது, டில்லி போலீசு கான்ஸ்டபிளின் மீது கூட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமில்லாத நிலையில் உள்ள கேஜ்ரிவாலிடம், இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழியை சர்மிளா கேட்டறியப் போகிறார் என்றும் இந்த சந்திப்புக்குப் பொருள் கொள்ளலாம்.

குறிப்பிட்ட அரசியல் – சமூக சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத போராட்ட முறைகளும், தீர்வுகளும் அவற்றை முன்னெடுக்கின்ற நல்லெண்ணம் கொண்ட மனிதர்களை எங்ஙனம் பரிதாபத்துக்குரிய வகையில் ஒரு சுழலில் சிக்க வைத்து விடுகின்றன என்பதற்கு இரோம் சர்மிளா ஒரு எடுத்துக்காட்டு.

நாவில் தேனைத் தடவித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் இரோம் சார்மிளா.
நாவில் தேனைத் தடவித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் இரோம் சார்மிளா.

நாசித்துவாரமே உணவுக்குழலாக மாற்றப்பட்ட நிலையில், நாவில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் படாமலும் மருத்துவமனையின் நிரந்தரத் தனிமையிலும் 16 ஆண்டு காலம் தாக்குப்பிடித்து நின்ற அந்தப் பெண்ணின் உறுதி மணிப்பூர் மக்களுக்குப் பெருமை சேர்த்தது. சர்மிளாவின் 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தையும், அந்த சட்டத்தை நியாயப்படுத்துகின்ற அதிகார வர்க்கம், ஓட்டுக்கட்சிகள், நீதிமன்றம் உள்ளிட்ட இந்த அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் போராட்டமாக அது இருந்தது.

இன்னொருபுறம், அந்தப் போராட்டம் நிறுவனமயமாகிக் கொண்டும் இருந்தது. மணிப்பூர் அரசின் அங்கமாகவே இந்திய இராணுவம் மாற்றப்பட்டிருப்பதைப் போலவே, இராணுவச் சட்டத்துக்கு எதிரான சர்மிளாவின் போராட்டத்தையும் இந்திய அரசு நிறுவனமயமாக்கியது. ஆண்டுக்கு ஒருமுறை சர்மிளா விடுவிக்கப்படுவதும், மீண்டும் கைது செய்யப்படுவதும், அன்றைக்கு மட்டும் தொலைக்காட்சி காமெராக்கள் அவரை மொய்ப்பதும், காலப்போக்கில் ஒரு சடங்கிற்குரிய உணர்ச்சியற்ற நிலையை எய்தி விட்டன. இந்த நிலையில்தான், சர்மிளா போராட்டத்தைக் கைவிடுவது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

சர்மிளாவின் உயிரைப் பாதுகாப்பதற்கா? மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்கா?

மணிப்பூரில் ஒரு இலட்சம் இராணுவத் துருப்புகள் – பல பத்து ஆயுதக்குழுக்கள் – 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் சட்டமன்றத் தேர்தல் – அரசு அதிகாரத்திலமர்ந்து தின்றுகொண்டே, ஆயுதக்குழுக்களுடன் இரகசிய உறவு வைத்துக் கொள்ளும் கட்சிகள் – என முரண்பட்டவை போலத் தோற்றம் தரும் பல போக்குகள், தமக்குள் ஒரு ஒத்திசைவை எய்தியிருந்த பின்புலத்தில், இரோம் சர்மிளாவின் போராட்டத்தை நாம் பார்க்கவேண்டும்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்து உரையாடும் இரோம் சர்மிளா.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்து உரையாடும் இரோம் சர்மிளா.

ஐந்து மருத்துவர்கள், 12 செவிலியர்கள், 2 சிறைத்துறை மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய சுமார் 40 பேர் அடங்கிய குழு சர்மிளாவைப் பராமரித்து வந்தது. அவரது மூக்கு வழியாக உட்செலுத்தப்பட்ட ஊட்டச்சத்து உணவுக்காக மட்டும் மணிப்பூர் அரசு மாதம் 10,000 ரூபாய் செலவிட்டிருக்கிறது. இத்துடன் மேற்கூறிய 40 அலுவலர்களின் ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடுவோமேயானால், இரோம் சர்மிளாவைப் பராமரிக்கும் பொருட்டு அரசு ஆண்டுதோறும் சில கோடிகளைச் செலவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் செலவு, மணிப்பூர் மக்களின் உயிர்வாழும் உரிமைக்காகப் போராடிய சர்மிளாவின் உயிரைப் பாதுகாப்பதற்கான செலவு அல்ல; மணிப்பூர் மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்கு இந்திய அரசு பெற்றிருக்கும் அதிகாரத்தின் தார்மீக நியாயத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கானது. இது சர்மிளாவின் போராட்டத்திற்கு அரசு அளித்த மதிப்பு அல்ல, அவமதிப்பு.

இந்த உண்மை இரோம் சர்மிளாவுக்கு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் புரிந்திருக்கிறது என்று கூறவியலாது. 16 ஆண்டுகளுக்கு முன் மைலோம் படுகொலையின் கொடூரத்திற்கு எதிர்வினையாக சர்மிளா தொடங்கிய போராட்டம் என்பது ஒரு இளம்பெண்ணின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினை. தான் நடத்தும் போராட்டம் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்றும் வல்லமை பெற்றதா என்று யோசித்து தொடங்கப்பட்டதல்ல அந்தப் போராட்டம். ஆனால் இன்று அவர் எடுத்திருப்பது நன்கு யோசித்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.

போகாத ஊருக்கு வழி என்பது போராட்ட வடிவம் குறித்த பிரச்சினை அல்ல!

ஒரு போராட்ட வடிவம் பயனற்றது என்றோ, நிறுவனமயமாகிவிட்டது என்றோ புரிந்து கொண்டவுடனே பொருத்தமான மாற்று வடிவம் தெரிவு செய்யப்பட்டு விடுவதில்லை. உண்ணாநிலைப் போராட்டம் தோற்றுவிட்டதால், தேர்தலில் நிற்கப் போவதாகவும், போராட்ட வடிவத்தை மாற்றியிருப்பதாகவும் கூறியிருக்கிறார் சர்மிளா. முதல்வர் பதவியையே கைப்பற்றினாலும், அந்த சட்டத்தை இம்மியளவும் அசைக்க முடியாது என்பது சர்மிளாவுக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மணிப்பூர் தாய்மார்கள், அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள துணை இராணுவப் படை முகாம் முன்பு நடத்திய நிர்வாணப் போராட்டம். (கோப்புப்படம்)
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மணிப்பூர் தாய்மார்கள், அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள துணை இராணுவப் படை முகாம் முன்பு நடத்திய நிர்வாணப் போராட்டம். (கோப்புப்படம்)

இருந்தபோதிலும், ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கு பதிலாக, “என்னுடைய வரம்பு இதுதான்” என்று தீர்மானித்துக் கொண்டு, அந்த வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகள் மூலமாகவே நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்பும் தலைவர்கள், அதே நம்பிக்கையை மக்களுக்கும் ஏற்படுத்த முனைகிறார்கள்.

தனது கோரிக்கைக்குப் பொருத்தமான போராட்ட முறையைத் தெரிவு செய்து கொள்ளத் தெரியாத அல்லது அதற்குத் தயாராக இல்லாத சமூகமும், “இது போகாத ஊருக்கு வழி” என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொருபுறம் அதன் மீதே நம்பிக்கையும் வைக்கிறது. வேறு வழியென்ன இருக்கிறது என்று கூறி தனது முரண்பட்ட நிலையை நியாயப்படுத்தவும் முனைகிறது.

ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு, இரோம் சர்மிளாவின் காந்திய போராட்டத்துக்கும் ஆதரவு, சட்டமன்றத் தேர்தலில் 80% வாக்குப்பதிவு – இதுதான் மணிப்பூர் சமூகத்தின் நிலை. மணிப்பூர் மக்களின் இந்த நிலை விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படாதவரை, தமது சொந்த நடைமுறையின் வழியாக அம்மக்கள் தங்களது முரண்பட்ட நிலையைப் புரிந்து கொள்ளாதவரை இதற்கு முடிவில்லை. இது போராட்ட வடிவங்களுக்கிடையிலான முரண்பாடு குறித்த பிரச்சினை அல்ல, மக்களுடைய அரசியல் புரிதலில் நிலவும் முரண்பாடு குறித்த பிரச்சினை.

ஏமாற்றம் மக்களுக்கா, சர்மிளாவுக்கா?

உண்ணாநிலையைக் கைவிட்டு தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்த இரோம் சர்மிளா மீது அதிருப்தி கொண்ட மணிப்பூர் சமூகத்தைப் பற்றி, எழுத்தாளர் ஷிவ் விசுவநாதன் கூறும் கருத்து நம் கவனத்துக்குரியது. “ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் ஒரு சமூகம், தியாகம் செய்யும் உண்மையான நாயகர்களிடம் மட்டும் வாழ்க்கையின் உயிர்த்துடிப்புகள் அனைத்தையும் துறந்த ஒரு நேர்மையை எதிர்பார்க்கிறது” என்று மக்களின் போலித்தனத்தை அவர் சாடுகிறார். இதனை போலித்தனம் என்பதா, அல்லது இலட்சியத் தலைவர்களிடம் மக்கள் கொண்டிருக்கும் வழிபாட்டுணர்வு கலந்த நியாயமான எதிர்பார்ப்பு என்பதா?

வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)
வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)

நாயகர்கள் எனப்படுவோரும் மக்களும் எதிரெதிராக நிறுத்தப்படும் இந்த நிலையில், யார் விமரிசனத்துக்குரியவர்கள்? இத்தனை காலம் எந்த மக்களுக்காக உடலை உருக்கிப் போராடினாரோ, அந்த மக்களே தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதுகிறார் சர்மிளா. தேர்தல் அரசியல் சபலங்களுக்கு ஆட்படாத இரும்புப் பெண்மணியாக தங்களால் கொண்டாடப்பட்ட சர்மிளா, தன்னிச்சையாக போராட்டத்தை முடித்துக் கொண்டதுடன், முதல்வராக விரும்புவதாகவும் கூறியதன் மூலம் தாங்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலும் மதிப்பிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டதாக எண்ணுகிறார்கள் மணிப்பூர் மக்கள்.

காந்திய சாகசம்!

இரோம் சர்மிளாவைப் பொருத்தவரை, அவரே சொல்லிக் கொள்வது போல அவர் ஒரு காந்தியவாதி. “பதினாறு ஆண்டுகள் உண்ணாநிலை” என்ற காந்தியவாதியின் தனிநபர் சாகசம், எதிர்முனையில் மணிப்பூரில் இயங்கும் சுமார் 40 ஆயுதக்குழுக்களின் சாகசம் – இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது மணிப்பூர். காஷ்மீரோடு ஒப்பிடத்தக்க போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்கள் எதுவும் மணிப்பூரில் இல்லை. சர்மிளா என்ற தனிப்பட்ட பெண்ணின் போராட்டத்தையே தங்களது போராட்டமாக எண்ணி அம்மக்கள் இறுமாந்து இருக்கக்கூடும். சர்மிளாவை இரும்புப் பெண்மணியாகவும் தெய்வமாகவும் ஆக்கிய சூழல் இதுதான்.

“நான் தெய்வப் பெண் அல்ல, சாதாரணப் பெண்” என்று அவர் கூறிக்கொண்ட போதிலும், தன்னுடைய தியாகத்தின் காரணமாக மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தனக்கிருப்பதாக அவர் கருதிக் கொண்டு விட்டார். பட்டினி கிடந்தது அவராக இருக்கலாம். அவர் எதற்காகப் பட்டினி கிடந்தாரோ அந்தக் கோரிக்கை மணிப்பூர் மக்களுடையது.

“யாரும் சொல்லி நான் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. நானாகத் தொடங்கினேன்; நானே முடிக்கிறேன்” என்று தனது விமரிசகர்களுக்கு சர்மிளா கூறியிருக்கும் பதில் அவரது உளப்பாங்கை காட்டுகிறது. “நான் தொடங்கினேன், நான் மூடுகிறேன்” என்பதற்கு இது அவருக்குச் சொந்தமான பெட்டிக்கடை அல்ல, மக்களின் கோரிக்கை.”தொடங்கியவர்களுக்கு முடிக்கும் உரிமை உண்டு” என்று சர்மிளாவின் சார்பில் வாதிடுபவர்கள், “ஆதரித்த மக்களுக்கு எதிர்க்கும் உரிமை உண்டு” என்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.

“பதினாறு ஆண்டுக்காலம் நாவில் தண்ணீர் கூடப் படாமல் உறுதிமிக்கதொரு போராட்டத்தை நடத்திய ஒரு பெண்ணுக்கு தனது போராட்டத்தை முடித்துக்கொள்ளும் உரிமை கிடையாதா?” என்று யாரேனும் கேள்வி எழுப்பினால், “ஆம், உரிமை கிடையாது” என்று பதில் கூறும் தார்மீக பலம் மணிப்பூர் மக்களுக்கு இல்லை. அதே நேரத்தில், “என் போராட்டத்தை என் விருப்பப்படி நான் முடிக்கிறேன்” என்கிற சர்மிளாவின் ‘ஆணவத்தை’ ஏற்றுக்கொள்ளும் சுயமரியாதையற்ற நிலையிலும் அவர்கள் இல்லை.

மணிப்பூரின் புதல்வியா, சர்மிளாவின் மணிப்பூரா?

தனது போராட்டம் ஊடகங்களில் பிரபலமாகி, “மணிப்பூரின் புதல்வி சர்மிளா” என்பதற்கு பதிலாக “சர்மிளாவின் ஊர் மணிப்பூர்” என்று உலகத்தார் பேசும் நிலை வந்துவிட்டதன் காரணமாக, போராட்டத்தை முடித்துக் கொள்வது பற்றிக் கருத்து கூறும் தகுதி மற்றவர்களுக்கு இல்லை என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

“தங்களது லட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர், தங்களால் இயலாததைச் சாதிப்பவர், தங்களைக் காட்டிலும் நேர்மையானவர்” என்பன போன்ற பல மதிப்பீடுகளின் அடிப்படையில் தலைவர்களுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரம்தான் – புகழ். அது ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். எந்தக் கணத்திலும் ரத்து செய்யப்படும் நிபந்தனையை முதல் சரத்தாக கொண்ட ஒப்பந்தம். “தங்களை விட மேலானவர் தலைவர்” என்று மக்கள் கொண்டிருக்கும் இந்தக் கருத்தை, “தன்னைக் காட்டிலும் கீழானவர்கள் மக்கள்” என்று ஒரு தலைவர் மொழிபெயர்த்துக் கொள்வாரானால், அந்த ஒப்பந்தம் மக்களால் ரத்து செய்யப்பட்டு விடும். ரத்து செய்யப்பட்ட பிறகுதான் தலைவர்கள் அதை தெரிந்து கொள்ளவே முடியும்.

ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தனது போராட்டத்தை முடித்துக் கொண்ட இரோம் சர்மிளா, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். ஆனால் அவருக்கு குடியிருக்க வீடு கொடுப்பதற்கு யாரும் விரும்பவில்லை. “தலைமறைவு ஆயுதக் குழுக்களுக்கு அஞ்சித்தான் மக்கள் இடம் தரத் தயங்கினார்கள்; வெளிமாநிலத்தவர் ஒருவரை சர்மிளா திருமணம் செய்து கொள்வதை மணிப்பூர் மக்கள் ஏற்கவில்லை” என்றெல்லாம் சிலர் இதற்கு விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது என்ற சர்மிளாவின் அரசியல் முடிவு காரணமாக மணிப்பூர் மக்களிடையே அவர் மீது பரவிவிட்ட கசப்புணர்வுதான் இதற்குக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியவில்லை. தங்குவதற்கு வீடு கிடைக்காமல், 16 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே அவர் மீண்டும் திரும்ப நேர்ந்தது.

சாவியைத் தேடிய முல்லா!

“தேர்தலில் தனக்கு வாக்களித்து முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு மணிப்பூர் மக்களுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்” என்று கூறினார் சர்மிளா. “மாநில முதல்வர் என்ற பொம்மைப் பதவியில் அமர்ந்து கொண்டு இராணுவத்தின் நிழலைக்கூட தண்டிக்க இயலாது என்பது கூடவா சர்மிளாவுக்குத் தெரியவில்லை?”என்று அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொலைத்த இடம் இருட்டு என்பதால் அங்கே சாவியைத் தேடாமல், “விளக்கு கம்பத்தின் கீழே சாவியைத் தேடிய” முல்லாவின் நிலைக்கு வந்து விட்டார் சர்மிளா. மோசடியும் சுயமோசடியும் இரண்டறக் கலந்த நிலை இது.

பதினாறு ஆண்டுகளாகப் போராட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தின் காரணமாக, மற்றவர்களைக் காட்டிலும் தன்னுடைய புரிதல் மேம்பட்டதாக இருக்கும் என்றுகூட அவர் நினைத்திருக்கக் கூடும். “தாங்கள் நடைமுறையில் இருப்பவர்கள்” என்று அகம்பாவம் கொள்வோர் பலரையும் பீடிக்கும் நோயே இத்தகைய சிந்தனை.

கிணற்றுக்குள்ளேயே வாழ்வதனால் கிணறு பற்றிய தவளையின் ஞானம் மேம்பட்டதாகிவிடாது. அனுபவம் என்பது அறிவியலுக்கு மாற்றல்ல. “ஞானம்” கிணற்றுக்கு வெளியே இருக்கிறது.1991-இல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச விதிகளுக்கும் எதிராக இருப்பது பற்றி ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு கேள்வி எழுப்பியபோது, “வடகிழக்கிந்திய மாநிலங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று விடாமல் தடுப்பதற்கு இது அவசியம்” என்று விளக்கமளித்தார் இந்தியாவின் அட்டார்னி ஜெனரல்.

இந்தக் கருத்தை வழிமொழிபவர்தான் கேஜ்ரிவால். காஷ்மீர் மக்கள் முதல் வடகிழக்கிந்திய மக்கள் வரையிலான யாருடைய பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்காத கேஜ்ரிவாலை, தனது வழிகாட்டியாகத் தேடிக் கண்டடைந்திருக்கிறார் இரோம் சர்மிளா. கிணற்றுக்கு வெளியே வந்து அவர் தேடிக் கண்டடைந்திருக்கும் “ஞானம்” இது.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் இரோம் சர்மிளா தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டம் என்பது மைலோம் படுகொலையின் உணர்ச்சி பூர்வமான எதிர்வினை. அது “சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு” என்ற போதிலும், அந்த நடவடிக்கை இந்திய அரசமைப்பை வெளியிலிருந்து அம்பலப்படுத்தியது. தற்போது சர்மிளா “சிந்தித்து எடுத்திருக்கும் முடிவு”, மணிப்பூரை ஒடுக்குகின்ற இந்த அரசமைப்பின் அங்கமாக அவரை மாற்றுகிறது. இன்றைய ‘சிந்திக்கும்’ சர்மிளாவைக் காட்டிலும், அன்றைய ‘சிந்திக்காத’ சர்மிளாதான் ‘தெளிவாக சிந்தித்திருக்கிறார்’ என்று எண்ணுகிறார்கள் மணிப்பூர் மக்கள்.

“தன்னுடைய கதை, தன்னுடைய முடிவு” என்று கருதுகிறார் சர்மிளா.”கதை தங்களுடையது” என்று நினைக்கிறார்கள் மக்கள். மணிப்பூரில் ஒரு நம்பிக்கை இருக்கிறதாம். “யாராவது ஒரு கதையைச் சொல்லத் தொடங்கி, முறையாக அதனை முடிக்கத் தவறினால், மதம் பிடித்த யானையொன்று கனவிலும் அவரைத் துரத்தும்” என்பது அந்நம்பிக்கை. சர்மிளாவை யானை துரத்திக் கொண்டிருக்கிறது.

யானையால் துரத்தப்படும் அபாயம், முன்னோடிகள் – நாயகர்கள் எனப்படுவோர் அனைவருக்கும் உண்டு.

– மருதையன்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க