Saturday, December 5, 2020
முகப்பு உலகம் ஐரோப்பா நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா - வீடியோ

நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ

-

நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா 1917 – 2017
மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!

1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. பஞ்சைப் பராரிகளின் ஆத்திரப் பெருமூச்சு. வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள் சவுக்குகளின் பிடி கைமாறிய நாள். நூற்றாண்டுகால அந்தகாரத்தினுள் கோடி நட்சத்திரங்கள் மலர்ந்த நாள். வீழ்த்தப்பட்டவர்கள் வர்க்கமாய் எழுந்த நாள். கையேந்திக் கேட்டவர்கள் கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை என நிரூபித்த நாள். முடியாதென அறிஞர்கள் நகையாடியதையெல்லாம் மக்கள் முடித்துக் காட்டிய நாள். அதிகாரத்தின் இறுமாப்பு தகர்த்தெறியப்பட்ட நாள். மேகங்களுக்கு மேல் வாழ்ந்து பழகிய மத பீடங்கள் தரையிறக்கப்பட்ட நாள்.

1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற பழைய சரித்திரம். மக்களே அரசாங்கம் எனத் திருத்தி எழுதப்பட்ட நாள். ஆலைகளில் சிறைப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தில் அமர்ந்த நாள்.விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். சம்மட்டி ஏந்திய கைகள் அரசியல் சட்டம் வரைந்த நாள். ஏர் கலப்பை ஏந்திய கைகள் பூமிப் பந்தின் ஆறில் ஒரு பங்கைத் தாங்கிய நாள். மனிதனின் பேராற்றல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். கூட்டுத்துவம் என்கிற ஓவியம் உயிர்பெற்று சட்டகத்தினுள்ளிருந்து எழுந்து வந்த நாள்.

1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதை உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு. நூற்றாண்டுகளாய் அறிவு மறுக்கப்பட்டவர்கள் மனித குலத்தின் மொத்த அறிவையும் சில நாட்களிலேயே சுவீகரித்துக் காட்டிய நிகழ்வு.மனித வாழ்க்கை வாயில் துவங்கி வயிற்றைக் கடந்து ஆசண வாயில் முடியும் ஒன்றல்ல என்பதை உணர்த்திய நிகழ்வு. கட்டளையிடும் படைத்தலைவன் மேல் களமாடும் வீரனுக்கு பதிலளிக்கும் கடமை உண்டென்பதை நிறுவிய நிகழ்வு.

வரும் திங்களன்று 7.11.2017 அன்று சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் சோவியத் யூனியன் குறித்த கட்டுரைகள், கதைகள், விவாதங்கள், வீடியோக்கள் அனைத்தும் வெளியிடுவோம். மேற்குலகிலேயே பொதுவுடமை வேண்டும் என்று இளைய தலைமுறை முழக்கமிடும் நாளில் இந்த நூற்றாண்டு விழா இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டி, உலக மக்களை விடுவிக்கும் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும்.

– வினவு

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள்
அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

வால்கா
புதிய மனித சமுதாயத்தின் முகத்தில்
தன்னை கழுவிக் கொண்டது.

பூமிப்பந்து முதன் முதலாய்
மனிதப் பண்பின் உச்சத்தில்
தன்னை தழுவிக் கொண்டது.

அன்றலர்ந்த மலர்களுக்கு
தன்னிலும் மென்மையான
இதயங்களைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது.

பரந்து விரிந்த வானம்
சோசலிசத்தின் உள்ளடக்கத்தில்
தன்னை உணர்ந்து கொண்டது.

அலைஓயா கடல்கள்
கம்யூனிச பொதுஉழைப்பின்
மனதாழம் பார்த்து வியந்தது!

சுரண்டலின் நகங்களால்New Red Army vinavu
அவமானக் கீறலோடு
அலைந்த காற்றுக்கு
வரலாற்றில் முதலாய்
மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது!

இயற்கையின் மகிழ்ச்சியாய்
விளைந்தது நவம்பர் புரட்சி!
எல்லோர்க்கும் தேவையாய்
எழுந்தது ரசியப்புரட்சி!

ரசியப்புரட்சி அறிந்தால்,
கம்யூனிசம் புரிந்தால்,
முதலில் இன்னொரு உலகம்
கண்ணுக்குத் தெரியும்,
நாம் இருக்கும் உலகத்தின்
இறுக்கம் புரியும்!

”எல்லோருக்குமான இயற்கை
எல்லோருக்குமான உலகம்
எல்லோருக்குமான இனிமை
எல்லோருக்குமான உரிமை” என
புரட்சியின் தொடர்ச்சிகள்
புது அழகாய் விரியும்.

”கம்யூனிசம் அபாயம்”…
”கம்யூனிசம் ஒத்துவராது”…
”கம்யூனிசம் பிடிக்காது”…
பலவாறாக பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு
தலைநிமிர்ந்து சமூகத்தை பொதுவாக்கிய
உழைக்கும் வர்க்கத்தின் பதில்தான் ரசியப்புரட்சி!

முதலாளித்துவம்
எவ்வளவு மோசமானது என்பதற்கு,
முன்னேறிய கம்யூனிசத்தை
நாமறியாமலே மறுக்கும்
முட்டாள்தனமே சாட்சி!

ஒண்ணுக்கு போவதிலும்
உன்னிடம் காசு பிடுங்கும்
முதலாளித்துவச் சுரண்டலின் மேல்
அப்படியென்ன கவர்ச்சி!

”கடவுளால் முடியாததை
கம்யூனிஸ்ட் செய்தான்,
பிச்சைக்காரனே இல்லாத நாடு
சோவியத் ரசியா”
பெருமை பொங்கினார் பெரியார்.

”திருட்டுத் தேவையே இல்லை
பூட்டுத் தயாரிக்காத நாடு ரசியா
இரும்புத்திரை இல்லை
இரும்புத் தொழிற்சாலையைத்தான்
நிறையப் பார்த்தேன்” – என
பூரித்துப் போனார் கலைவாணர்

வல்லரசாகப் போவதாய்
வக்கணை பேசும் முதலாளித்துவத்தில்
செருப்பை நிம்மதியாய்
வெளியில் விட யோக்கியதை உண்டா?

முதலாளித்துவம்
பலவும் கண்டுபிடித்த பெருமை இருக்கட்டும்
முதலில் நாம் மனிதன் என்பதை கண்டுபிடிக்க
சமூகம் உள்ளதா அதனிடம்!

இளரத்தம்
சுண்டக் காய்ச்சும் வேலை!
எந்தப் பணி பாதுகாப்புமின்றி
பணி நிரந்தரமில்லையென பயமுறுத்தியே
எந்திரத்தை உயிரூட்ட
இளம் தொழிலாளர் கொலை,

விழிப்பசை தீர களைத்து
குடல்பசை தடவி
குறுகலான தகரக் கொட்டகையில்
பாதி தகனம்!
மிச்சம் உயிர் மறு ஷிப்ட்டில்!

மடி வலிக்க கறந்தால்
மாடும் உதைக்கும்,
மடிக்கணிணியில் கறந்தால்
‘மைக்ரோசாப்ட்’ பெருமையா?
பார்க்கும் எருமைகள் பதைக்கும்!

தெருவோடு போகும் பெண்
கருவோடு திரும்புகிறாள்,
முனகவும் சக்தியில்லாத
மூதாட்டியின் மேல் பாலியல் வக்கிரம்,
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கோ
வீட்டிலுள்ளவர்களாலேயே விபரீதம்
முதலாளித்துவ நுகர்வு முற்றி
ரத்தமாய் வடிகிறது கள்ள உறவில்!

மனிதனை நுகரும்
மறுகாலனிய கொடூரம்
முதலாளித்துவம் இருக்கும் வரை
புழுவாய் நெளியும்.
ரசியப் புரட்சியின் சவுக்கை எடுத்தால்தான்
முதலாளித்துவக் கழிவுகள் ஒழியும்!

ரத்த ஞாயிறு முடிந்திடவில்லை…
ஈழத்தில்… காஷ்மீரில்… சத்திஸ்கரில்… வெவ்வேறு விதமாய்…
ஜாரின் நடுக்கம் ‘மாருதி’ வரைக்கும்
மேலாதிக்கவெறியோடு மோடியின் நாஜிப்படை…
நத்தம் காலனி விளைச்சலின் மீது
நவீன ‘குலாக்குகளின்’ தீ வெறி!
நவம்பர் புரட்சியும் முடிந்திடவில்லை…
தொடர்ச்சி கொடுங்கள் உழைக்கும் மக்களே
தருணம் நழுவாமல்
இயங்குவதற்குப் பெயர்தான் புரட்சி!

புரட்சி வேண்டுமா?
பொருந்துக அமைப்பில்!

துரை.சண்முகம்

 1. பாட்டாளி வர்க்க நல்வாழ்வுக்காக பாடுபட்டு உயிர் நீத்த சர்வதேச தியாகிகளுக்கு வீரவணக்கம்.
  புரட்சிக்கான போராட்ட களம் கான காத்திருக்கும் தோழர்களுக்கு நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்

 2. கணையத்தில் இருந்த புற்றால், வலியில் துடித்தபடி தன் இறுதி நாட்களில் சீனிவாசன் என்ன எண்ணியிருப்பார்?

  “இன்னும் சற்று விரைவாக வாருங்களேன் தோழர்களே, நாள் நெருங்குகிறது.

  மனித குலத்தின் ஆகச்சிறந்த கனவை நேரில் காண எனக்கும் தான் ஆசை.” என மனதிற்குள் புழுங்கி இருப்பாரோ ? இருக்கலாம்.

  நமக்கும் தான் ஆசை, யார் இல்லை என்றது?
  என்றாலும், சீனிவாசனின் அவஸ்தை என்னிடம் உள்ளதா ?

  மார்க்ஸ்

  உழைப்புச சுரண்டலை பற்றி எழுதியவரின் உழைப்புக்கு ஏற்ப கூலி கிடைக்கவில்லை.

  ஒரு துண்டு ரோட்டி கூட வீட்டில் இல்லாத போதும்,
  இறந்த குழந்தைகளைக் அடக்கம் செய்ய வக்கில்லாத போதும்,

  மார்க்சும் சளைககவில்லை.

  உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என முழக்கமிட்டார்.

  கனவை உருவாக்கியவருக்கு ஆசை இருக்காதா.

  சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

  சாக்லேட் கட்டி சாப்பிட்டுவிட்டு விடைகளை தேடி நாள் எல்லாம் நூலகத்தில் கிடந்த லெனின்.

  தேசிய இனங்களின் விடுதலை கம்யூனிஸ்ட் முலம் தான் என நிறுவிய ஹோ மாமா.

  சொல்லிக் கொண்டே போகலாம்.

  இறுதி நாள் தெரிந்தால், சீனிவாசன் போல தீயா வேலை செய்யலாமா?
  (அது தெரியாத போதும் கூட அவர் அப்படித்தான் வேலை செய்தார்.)
  இறுதி நாள் தெரியாததால், குசுவாய் வேலை செய்யும் என்னை என்ன சொல்ல ?

  திப்புவினதும், லுமூம்பாவினதும், பகத்சிங்கினதும், சீனிவாசனதும், நமதும் கனவுகள் ஒன்றே தான்.

  ஆனால்,

  அதற்கான நமது உழைப்பு ?
  நமது எத்தனிப்பு ?

  விடியலின் வழி கண்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

  இன்றும்
  கஞ்சித் தொட்டியில் நெசவாளி
  எலிக்கறி தின்னும் விவசாயி
  வேலைக்கு அலையும் தொழிலாளி……..
  ……..

  இறுதி நாள் தெரிந்தால் தான் ……..

  இந்தக் கேள்விகள் எனக்குள் மட்டும் தானா…….

  என்றால்…

 3. ஒரு வேண்டுகோள்..

  “கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள், துணிந்து நாங்கள் சொல்கின்றோம் மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்”

  இந்த பாடலை வெளியிடுங்கள் தோழர்களே..

  இந்த பாடல் ஒலி நாடா வந்துள்ளதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க