கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !

16
16

black money 1நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்த உடனே யார் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று. கூடவே மோடியின் இந்த நாடகத்தில் பாதிக்கப்பட்டோரும், பலனடைந்தோரும் யார் எனப் பார்க்கலாம்.

செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றுவதற்கு சென்னையில் உள்ள பல்வேறு நகைக்கடைகள் நவம்பர் 8 நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்தனவாம். இது குறித்து தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. செல்லாத ரூபாய்களை டிசம்பர் மாத இறுதி வரை வங்கியிலும், மார்ச் மாத வரையில் அடையாளச் சான்றுடனும் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் நகைக் கடை முதலாளிகள் கிடைத்த வரை சுருட்டியிருக்கின்றனர்.

மற்ற கடைகள் போல விற்பனைப் பொருட்கள் சில்லறை விலையில் இங்கே இல்லை என்பதால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்களில் புழங்கும் பல்வேறு முட்டாள் புதுப் பணக்காரர்களும், மேட்டுக்குடியினரும் தி.நகருக்கு படையெடுத்தனர். வந்தவர்கள் அனைவரும் கார்களில் வந்தனராம். நள்ளிரவில் பேருந்து சேவையும் இல்லை, இருந்திருந்தாலும் தமது பணத்தை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு இங்கே வரவேண்டிய தேவையில்லை.

நான்கு இலட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் வந்த மேட்டுக்குடியினர் தங்களது கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள் பெயரில் ரசீது வாங்கிக் கொண்டு நகைகளை வாங்கியிருக்கின்றனர். சிலர் பிடித்த நகைகளையும், பலர் கிடைத்த நகைகளையும் வாங்கிக் கொண்டனர். சிலர் தங்க நாணயம், மற்றும் தங்க கட்டிகளை வாங்கிச் சென்றனர். சாலைகளில் கார்கள் அணிவகுத்து நிற்க, போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நகைகள் அமோகமாக விற்றிருக்கின்றன.

black money 2நேற்று நள்ளிரவில் மட்டும் பல கோடிகளுக்கு நகை விற்பனை இருந்திருக்கும் என ஒரு நகை வியாபாரி தெரிவித்ததாக தினகரன் செய்தி கூறுகிறது.

இவர்களெல்லாம் தகவல் கிடைத்த உடன் பணத்தை புத்திசாலித்தனமாக தங்கமாக மாற்றிக் கொள்வதாக நினைத்து அப்படி அலை பாய்ந்திருக்கின்றனர். 500, 1000 ரூபாய்களை ஒன்றரை மாதத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவோ, நேரமோ இவர்களுக்கு இல்லை. மேலும் வங்கியில் மாற்றினால் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் என்றும் நினைத்திருக்கலாம். கூடவே அன்றாட வாழ்க்கையில் லஞ்சம், ஊழல், கழிவு மூலம் பணம் சுருட்டும் புதுப் பணக்காரர்களாகவும் இவர்கள் இருக்கலாம். அதில் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும் இருக்கலாம். இவர்களில் பலர் ஓசியில் தொந்தி வளர்க்கும் கூட்டத்தினராக இருக்க வேண்டும். ஒரு வேளை முறைகேடு இன்றி பணம் சம்பாதித்திருந்தாலும், தங்கம் வாங்கினால் தப்பிப்பாய் என்று அவசரப்படும் அப்பாவிகளும் கூட இதில் இருக்கலாம்.

பாரம்பரிய பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளது கருப்புப் பணம் வரியில்லா சொர்க்கங்கள் என அழைக்கப்படும் வெளிநாட்டு தீவுகளில் பத்திரமாக இருப்பதால் அவர்கள் இப்படி ‘அற்பத்தனமாக’ நடக்க வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்த வரை கருப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தேவைப்பட்டால் இந்தியாவில் தொழில் தொடங்கவோ சொத்துக்களை வாங்கவோ மொரிஷியஸ் போன்ற அன்னிய முதலீடுகளுக்காகவே ஆண்டு முழுவதும் சேவை செய்யும் நாடுகள் மூலம் சட்டப்பூர்வமாகவே அந்த பணத்தை கொண்டு வர முடியும்.

மோடிக்கு மட்டுமல்ல அவரது கூட்டாளிகளான அதானி, அம்பானி போன்ற கேடிகளுக்கும் இந்த கேடிகளுக்காக இந்திய பொருளாதாரத்தை இயக்கும் ரிசர்வ் வங்கி அறிஞர்களுக்கும் இது தெரியும். இருப்பினும் நாட்டு மக்களிடம் ஏதாவது செய்து காட்ட வேண்டிய தேவை மோடிக்கு இருக்கிறது. உத்தரகாண்ட் பேரழிவின் போது தானே விமானத்தில் சென்று, இனோவா கார் மூலம் 15,000 குஜராத் மக்களை காப்பாற்றியவர் என்பதால் இந்த நள்ளிரவு தடை மூலம் இந்தியாவின் கருப்புப்பணத்தை நொடியில் கைப்பற்றிவிட்டார் என்று விரைவில் பாலிவுட்டில் படமும், பாராட்டு விழாவும் நடக்கலாம். தொடர்ந்து ஏதாவது செய்தால்தான் தனது வெத்துவேட்டு இமேஜை தக்கவைக்க முடியும் என்பது பாசிஸ்டுகளின் பாலபாடம்.

black money 4
கருப்புப் பண மோசடி பாபா ராம் தேவுடன் கை தூக்குகிறார் கருப்புப் பண மீட்பு போராளி மோடி!

வோடோபோன், நோக்கியா போன்ற நிறுவனங்கள இங்கே வரிஏய்ப்பில் கொண்டு சென்ற பணம் எத்தனை ஆயிரம் கோடி? மோடி அரசும் சரி, அதற்கு முந்தைய மன்மோகன்சிங் அரசும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த வராக்கடன் எத்தனை இலட்சம் கோடி? சமீபத்திய பனாமா லீக்சில் இந்திய முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலீடு செய்திருப்பது எத்தனை இலட்சம் கோடி?

இவற்றையெல்லாம் யாரும் கொண்டு வரவோ மீட்கவோ முடியாது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு அருகில் இருக்கும் நாளில் மோடி இதை அறிவித்திருக்கிறார். பகவான் அமெரிக்காவின் உற்சவர் மாற்றத்தில் அடிமை இந்தியாவின் வாழ்த்தாகவும் இதை சொல்லலாம்.

ஏனெனில் அனைவருக்கும் ஆதார், அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம், மானியங்கள் வங்கிக் கணக்கில் அளிக்கப்படும், வணிக நடவடிக்கைகளில் ரொக்க புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகமாக்குதல், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பாதுகாப்பு துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி, பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை விரைவு படுத்துதல், ரிலையன்சின் ஜியோ அனைத்தும் இந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு அறிவிப்போடு தொடர்புடையது.

சில மேதாவிகள் மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம், பதுக்கல் பணம், அரசியல்வாதிகள் நோட்டுக்கு வாக்கு பெறுவது அனைத்தும் ஒழிக்கப்படும் என்று மடத்து ஆண்டிகள் மாளிகை கட்டும் கனவுத் திட்டம் போல பிதற்றுகிறார்கள். இத்தகைய முட்டாள்களே மோடியின் பிரச்சாரத்தின் காலாட்படையாக கதறுகிறார்கள் அதாவது உளறுகிறார்கள்.

ரொக்கப் புழக்கம் சுற்றும் லஞ்சம் எல்லாம் கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை, இதர அரசு அலுவலகங்களில்தான். ஊழல் எனப்படும் உயர் மட்ட கொள்ளைகளில் இந்த ரொக்க புழக்கம் தேவையே இல்லை. அது பினாமி சொத்துக்களாகவும், வரியில்லா நாடுகளில் வங்கிக் கணக்காகவும், வரியில்லா தீவுகளில் பினாமி தொழில் நிறுவன பங்குகளாகவும் இன்னும் எண்ணற்ற வழிகளில் செயற்படுகின்றன. இனி வரும் தேர்தல் காலங்களில் மோடியின் நடவடிக்கை ஒரு வெங்காயத்தையும் ஒழித்து விடாது. ஏற்கனவே ஒரு வாக்குக்குக்கு 500, ஒரு குடும்பத்திற்கு 2000 என்று இருப்பதை இனி கூப்பன்களாகவோ, சேவைகளாகவோ கொடுத்து விட்டால் போதும். இவற்றை கொடுக்கல் வாங்கல் இல்லாமலே கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியும். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனே தமிழகத்தின் தேர்தலில் சில ஆயிரம் கோடி புழங்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதை இங்கே நினைவு கூர்க.

black money 3இதைத்தாண்டி ஜெயா கும்பல் பகிரங்கமாக கொடுக்கும் பணத்தை என்ன செய்ய முடியும்? திருப்பூர் கன்டெயினர் விவாகரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய மலை முழுங்கி கொள்ளை நடக்கும் நாட்டில் இந்த செல்லாத 500 ரூபாய் நோட்டு நாடகம் யாரை தண்டிக்கும்? இனி இந்தியாவில் லஞ்சம், ஊழல், மற்றும் அரசியல்வாதிகளின் பணத்தேவைகளை சட்டப்பூர்வமான பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து சேவை செய்யும் உள்நாட்டு ஹவாலா நிறுவனங்கள் வரும்.

மோடியின் அறிவிப்பால் நேற்றிரவு இரவு உணவு இல்லாமல் அதாவது 500 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் பட்டினி கிடந்தோர் பலர். அன்றாடக் கூலி வேலைகளுக்கு மாலையில் கொடுக்க சில்லறை இல்லை என்பதால் பல நூறு கட்டிடத் தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர். சில்லறை பிரச்சினைகளுக்காக சிறு வியாபாரிகளும், அன்றாடம் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் சாதாரண மக்களும் சொல்லணாத் துயரங்களை அடைந்திருக்கின்றனர்.

கருப்புப் பணத்தின் ஊற்று மூலமான முதலாளிளுக்கும், அவர்களின் எலும்புத் துண்டை கவ்வித் தின்னும் அதிகார வர்க்கத்திற்கும் இந்த அறிவிப்பால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களுக்கு  இந்த உண்மை தெரியவில்லை. மோடியின் அறிவிப்பால் நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் அளவே அவர்கள் இதை பேசுகிறார்கள். கருப்புப் பணத்தை ஏதோ அந்தக் கால நம்பியாரின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியாகவே அவர்கள் கருதுகிறார்கள். மோடி அதை எப்படியாவது எடுக்க முயல்கிறார் என்று கொஞ்சம் நம்புகிறார்கள். இதுதான் மோடியின் நோக்கம். இதை அர்னாப் கோஸ்வாமி முதல் ரங்கராஜ் பாண்டே முதல் மாபெரும் வெற்றி என கூவுவார்கள்.

இத்தகைய ஊடகங்களுக்கு விளம்பரங்களையும், பிரதமர்களுக்கு புரவலர்களையும் அளிக்கின்ற முதலாளித்துவ உலகம் இந்த அறிவிப்பால் தனது இலாபத்தை கச்சிதமாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கும்.

சந்தா