privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்

மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்

-

நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பிற்கு பின் மக்கள் நிம்மதியாக தூங்குவதாகவும், கருப்பு பண முதலைகளின் தூக்கம் தான் கெட்டுவிட்டதாகவும் மோடி சொன்னார். ஆனால் உழைக்குமக்கள் ( நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள்) தினசரி செலவுகளுக்கே தவித்துக் கொண்டிருக்கிறது. தினசரி வேலை செய்தால் தான் சோறு என்ற நிலையில் இருக்கும் உழைக்கு மக்கள் வேலை கிடைக்குமா என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி சொன்னபடி மக்கள் தூங்கவில்லை. கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே போல மோடி சொன்னதற்கு மாறாக அவரது நண்பர்களான கருப்புப் பண முதலைகளும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆதாரம் வேண்டுவோரை பெங்களூருவில் நடக்கும் ரெட்டி சகோதரர்களது குடும்ப திருமண உலகிற்கு அழைத்துச் செல்கிறோம்.

janardhana reddy wedding set

கர்நாடகம் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் பிரபலமானவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகளுக்கு நாளை (16-11-2016) திருமணம் நடக்கவிருக்கிறது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள்.  பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் நன்றாகவே பொருந்துகின்றனர்.

இந்த திருமணத்தின் அழைப்பிதழே சமூக வலைதளங்களில் அதிர்ச்சியுடன் பேசப்பட்டது. எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000. கிட்டத்தட்ட ஒரு டி.வியையே அளித்திருக்கிறார்கள். அதில் ரெட்டி சகோதரர்களது மாளிகை, கோவில், மணமக்களது அறிமுக சீன் என்று கிட்டத்தட்ட ஒரு முழு சினிமாக்குரிய பட்ஜெட்டையே செலவழித்திருப்பது நிச்சயம்.

janardhan_redding wedding 2
பெல்லாரியில் உள்ள ரெட்டியின் வீடும் வீட்டிற்கு பின்புறம் உள்ள மலை ஒன்றையும் சேர்த்து அலங்காரம் செய்துள்ளார்கள்.

மணமகன் மற்று மணமகளுக்கு பங்களா செட்டுகள் மட்டும் 36 ஏக்கரில் போடப்பட்டது. உணவருந்துவதற்கு பெல்லாரி கிராமங்களை போன்ற செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் 15 வரை இரவுகளில் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்களின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நட்சத்திரங்கள்தான் மோடியின் கருப்பு பண நடவடிக்கைகளை மனதார பாராட்டினர். என்ன இருந்தாலும் பாம்பின் கால் பாம்புதான் அறியுமில்லையா?

முக்கிய விருந்தினர்களை அழைத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகள் போன்ற சொகுசு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரூவின் முதல்தர ஐந்து நட்சத்திர ஒட்டல்களில் மட்டும் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. திருமண மைதானத்தில் 15 ஹெலிபேடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 1000 மேலாளர்கள், 2500 மேற்பார்வையாளார்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்திருமணத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறார்கள். இதற்கென மீடியா சென்டரை திருமண மைதானத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க-வின் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீராமுலு நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீராமுலு சுமார் 50,000 பேர் நிகழ்வுக்கு வருவார்கள் என தெரிவித்தார். நாட்டு மக்கள் பணமில்லாமல் அதற்கு தீர்வும் தெரியாமல் அலையும் போது பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய தேசபக்தி வேலைகளை செய்து தமது பெயரை நிலைநாட்டுகிறார்கள்.

janardhan reddy wedding 6திருமண நிகழ்வை பதிவு செய்ய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு குளிர்சாதன பேருந்துகளும், நட்சத்திர ஓட்டல்களில்  தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நமது கவர் ஜனர்லிஸ்டுகளுக்கு இங்கே ஒரு சுரங்கமே கிடைக்கும் என்பது நிச்சயம்.

12-11-2016 அன்று மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிருஷ்ண தேவராயரின் அரண்மனை போன்ற செட்டில் நிகழ்வு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் பா.ஜ.க எம்.பி ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன் ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி, பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்துள்ளார், தேவகவுடா திருமணத்திற்கு முந்தைய நாள் வருவார் என்று தெரிவித்துள்ளார். மணமகளின் பெயர் அதாவது ரெட்டியின் மகளது பெயர் என்ன தெரியுமா? பிராமணி!

தற்போது பா.ஜ.க தலைமை தனது கட்சிக்காரகளை  இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரகசியமாக ஆலோசனை கூறியிருக்கிறது. ஏற்கனவே இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளாலும் மோடி காறி உமிழப்பட்டு கொண்டிருக்கும் போது ரெட்டியின் மீதான தங்கள் பாசத்தை வெளிப்படையாக காட்டினால் மக்கள் கோபம் அதிகாமாகும் என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் இதையும் தாண்டி பலர் செல்வது உறுதி என்பதை மேனேஜர் மற்றும் எம்.பியான ஸ்ரீராமுலு மூலமே அறியலாம். என்ன காவிக் கட்சியினர் முக்காடு போட்டு வரவேண்டியிருக்கும்.

ரெட்டி சகோதர்கள் யார் என்று தெரியாதவர்களுக்காக சில குறிப்புகள்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.

அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.

Reddy brothers” பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.

இதற்கு நன்றிக் கடனாக கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.”

முதலாளிகளின் கருப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி இந்த செல்லாத நோட்டு நாடகத்தை நடத்துகிறார் என்பதற்கு ரெட்டி சகோதர்களே சாட்சி! அவர்களது திருமணமே காட்சி! மோடி நேரடியாக வர இயலாமல் போனாலும் வீட்டில் எல்.சி.டி திரையில் நேரலையில் பார்த்து வாழ்த்து தெரிவிப்பார்.

நாம் காறித்துப்புவதோடு இக்கூட்டத்தை துரத்துவதற்கான வேலைகளை பார்ப்போம்.

– அமலன்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

janardhan reddy wedding family

janardhan wedding 3

janardhan reddy daughter wedding

brahmani-reddy

brahmani

எல்.சி.டி – திரையில் தோன்றி வரவேற்க்கும் ஜனார்தன் ரெட்டி குடும்பத்தினர்  வீடியோ :

 

மேலும் தகவலுக்கு :