Tuesday, June 28, 2022
முகப்பு செய்தி ஸ்டேட் வங்கி தலைமையகம் முற்றுகை - பு.மா.இ.மு போராட்டம்

ஸ்டேட் வங்கி தலைமையகம் முற்றுகை – பு.மா.இ.மு போராட்டம்

-

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 21.11.16 காலை 11:30 மணிக்கு முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டம் அறிவித்த உடனே காவல் துறை நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியைச் சுற்றி அரண் அமைத்து போராட்டத்தை தடுக்க முயன்றது. ஆனால் இவற்றை மீறி தோழர்கள் சாலையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் . கணேசன் கூறியது :

Poster Mail“சமீபத்தில் மல்லையா உள்ளிட்ட 63 கருப்புப் பண முதலாளிகளின் 7016 கோடி ரூபாய் கடனை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது. ஆனால் சில ஆயிரங்களையும், ஒரு சில லட்சங்களையும் கடனாகப் பெற்ற மாணவர்களை குற்றவாளிகள் போல சித்தரிக்கிறது அரசு.

மேலும் தற்போது கடனை வசூலிக்கும் வேலையை ரிலையன்சு கந்துவட்டி கும்பலிடம் தந்துள்ளது. இதனால் மதுரையில் மாணவர் லெனின் என்பவர் தூக்கிட்டு மாண்டு போயுள்ளார். பல லட்சம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆகவே மாணவர்கள் அனைவரின் கல்விக் கடனையும் உடனே ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாணவர்களே கல்விக்கடனை செலுத்த மறுப்போம்! மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரையும் இணைத்து இப் போராட்டத்தை எடுத்துச் செல்வோம் எனக் கூறினார்.”

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றியது. இதனால் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. இப்போராட்டத்தை வங்கிக்கு வந்த பொதுமக்களும், வாகனங்களில் சென்றவர்களும் கூர்ந்து கவனித்தனர்.

முழக்கம் :

கருப்புப் பண முதலைகளுக்கு 7000 கோடி தள்ளுபடியாம் !
கல்விகடன் கட்டமுடியாத மாணவர்கள் எல்லாம் குற்றவாளியாம் !
வெட்கக் கேடு! மானக் கேடு!

ரத்து செய்! ரத்து செய்! கல்விக்கடன்
அனைத்தையும் உடனடியாக ரத்து செய்!

சாராய முதலாளி மல்லையாவுக்கு பல்லாயிரம் கோடியைத்
தூக்கிக் கொடுத்து வழியனுப்புது SBI!

மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் சில ஆயிரத்தை வசூலிக்க
அம்பானியின் அடியாள் படையை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுது!

வரி ஏய்ப்பு – வாராக்கடன் பலலட்சம் கோடியை ஏப்பம் விட்ட
ரிலையன்சை கொழுக்க வைக்க மாணவர்களை பலி கொடுக்குது!

கார்பரேட் முதலாளிகளின் பல லட்சம் கோடி வாராக் கடனை,
கருப்புப் பணமாக பதுக்கியுள்ள முதலீடுகளை, சொத்துகளை
பறிமுதல் செய்யத் துப்பில்லாத வங்கிகளுக்கு
கல்விக்கடனை நாம் ஏன் கட்டனும்!

இலவசமாக கல்வி கொடுக்க வக்கில்லாத மோடி
அரசுதான் மாணவர்களை கடன்காரர்களாக்குது!

கல்விக் கடனை கட்ட மறுப்போம்!
ரிலையன்சு கும்பலை விரட்டியடிப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்.

 1. வினவுக்கு,

  செய்தி தவறு. கடன் ரத்து செய்யப்படவில்லை, write off செய்யப்பட்டுள்ளது. இது கடன் தள்ளுபடி(Waiver) அல்ல. write off செய்தால் கடன் மாயமாக மறைவது எல்லாம் இல்லை. அதன் பிறகும் எல்லா சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், அந்த வங்கி கடன் தொகையை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கலாம், எடுக்கும். ரெண்டுக்கும் வித்யாசம் ஒரு ஆடிடர் கிட்ட கேட்டு இருக்கலாம் அல்லது இணையத்தில் கொஞ்சம் பார்த்து எழுதி இருக்கலாம்:

  http://www.rednewswire.com/?p=37310

  இன்னொரு கொசுறு செய்தி. ஒருவரின் கடன் write off செய்ய பட்டால், அவர் வழக்கமாக வேறு எங்கும், எந்த வங்கியிலும் கடன் வாங்க முடியாது. வெளிய அநியாய வட்டி போடறவன் கிட்ட வாங்கணும். நீங்க கேக்கற மாதிரி கல்வி, விவசாய கடன் write off பண்ணா இந்த நிலைமை தான். நீங்க கேக்க வேண்டியது waiver, இந்த மாதிரி write off இல்ல.

  • சிந்தனை செய்,

   இங்கே முரண்பாடு Write off – Waive off இவற்ற்குக்கு இடையில் இல்லை.

   கடன் வாங்கியவன் கொடுக்கமாட்டான் என்று எழுதுவது Write off. கொடுக்க வேண்டாம் என்று எழுதுவது Waive off. Write off, Waive off – இரண்டிற்குமான வேறுபாடு அதற்கு பின்னான நடைமுறையில் தான் இருக்கிறது. அதாவது, கடன் வாங்கியவன் கொடுக்கமாட்டான் என்று எழுதிவைத்து விட்டு கடன் தொகையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கொடுக்க வேண்டாம் என்று எழுதுவதற்கு சமம்.

   ஏதாவது ஒரு வங்கி, யாரேனும் ஒரு முதலாளி வாங்கிய கடனை Write off – செய்துவிட்டு பின்னர் அந்த கடன் தொகையை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதா? வேறு எங்கும், எந்த வங்கியிலும் கடன் வாங்க முடியாதவாறு செய்துள்ளதா? இதுவரை அப்படி எதுவும் நடந்ததாக (அரிதான விதிவிலக்குகள் தவிர) வரலாறு இல்லை, இனிமேலும் அப்படி நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. சாத்தியம் இருப்பதாக நீங்கள் நம்பினால், கருதினால் அதற்கு ஆதாரம் கொடுங்கள். (இதற்கு எந்த ஆடிட்டரிடம் கேட்பது?)

   ஆனால், வங்கியில் கடன் வாங்கி திரும்பி செலுத்தாத முதலாளிகளுக்கு, கடன் மறுசீரமைப்பும், வட்டி, கடன் தள்ளுபடி நடவடிக்கைகளும் தான் நடக்கின்றன.

   வங்கியில் கடன் வாங்கி திரும்பி செலுத்தாவிட்டால் அது Non Performing Asset(NPA) என வகைப்படுத்தப்படும். அப்படி வகைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு அந்த வங்கியிலிருந்து பெரும்பாண்மை மக்கள் வாங்கிய கடனை வசூலிக்கும் உரிமையையும், அதில் கமிசனும் அந்த வங்கி கொடுக்கிறதென்றால் அது என்ன வகையான நடவடிக்கை ?

   மாறாக, சாதாரண மக்கள் வாங்கிய கல்விக் கடனுக்கும், விவசாயக் கடனுக்கும் அம்மக்களை குண்டர்களை வைத்தும் போலீசை வைத்தும் தாக்கி அச்சுறுத்துவதும், கடனாளி என பட்டியல் வெளியிட்டு அவமானப்படுத்துவதும், கல்விக் கடன் வாங்கியவர்கள் வங்கி வேலைக்கான போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க தடை செய்வதும் தான் நடக்கிறது.

   சுருக்கமாக, முதலாளிகள் வாங்கிய கடனென்றால் முதலில் Write off செய்யலாம், பின்னர் Waive off கூட செய்யலாம். அதே மக்களின் கடனென்றால் அவர்களை தற்கொலைக்குத் தள்ளலாம்.

   இந்த நடைமுறை முரண்பாடு உங்களுக்கு பிரச்சனையாகத் தெரியவில்லை போலும். அதனால் தான் Write off, Waive off – இரண்டிற்குமான வேறுபாடு மட்டுமே Technical நுணுக்கங்கள் மட்டுமே உங்களுக்கு பிரச்சனையாகத் தெரிகிறது.

   கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள போராட்டம் நீங்கள் கருதிக்கொள்வது போல Technical நுணுக்கங்கள் தெரியாததால், Write off, Waive off – வேறுபாடு குறித்த தவறான புரிதலால் நடந்ததல்ல. மாறாக, மக்களுக்கும் – முதலாளிகள், அவர்களுக்காக செயல்படும் அரசு வங்கிகளுக்கும் இடையிலான முரண்பாட்டை மிசச் சரியாகப் புரிந்து கொண்டதால் நடந்த ஒன்றாகும்.

   • திரு ராம்சங்கர்,

    //ஏதாவது ஒரு வங்கி, யாரேனும் ஒரு முதலாளி வாங்கிய கடனை Write off – செய்துவிட்டு பின்னர் அந்த கடன் தொகையை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதா? வேறு எங்கும், எந்த வங்கியிலும் கடன் வாங்க முடியாதவாறு செய்துள்ளதா? இதுவரை அப்படி எதுவும் நடந்ததாக (அரிதான விதிவிலக்குகள் தவிர) வரலாறு இல்லை//

    விதிவிலக்கின்றி நடப்பது இது தான் என்று கூறி விட்டு, அரிதான விதிவிலக்கு என நீங்களே உங்கள் பாயிண்ட் தவறு என காட்டி விட்டீர்கள். வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை.

    //மாறாக, சாதாரண மக்கள் வாங்கிய கல்விக் கடனுக்கும், விவசாயக் கடனுக்கும் அம்மக்களை குண்டர்களை வைத்தும் போலீசை வைத்தும் தாக்கி அச்சுறுத்துவதும், கடனாளி என பட்டியல் வெளியிட்டு அவமானப்படுத்துவதும், கல்விக் கடன் வாங்கியவர்கள் வங்கி வேலைக்கான போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க தடை செய்வதும் தான் நடக்கிறது.//

    ஆமாம் சார். சாதாரண மக்கள் மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குது. பெரு முதலாளிகளில் எவன் கடன் வாங்குனான்னு தெரியாது பாருங்க. அவன் மேல வழக்கு நடக்கல, அவன் சொத்த ஏலத்துக்கு விடல, பத்திரிகைல அவன் பேர் கிழிச்சு தொங்க விடல. அவன் மேல எந்த நடவடிக்கையுமே எடுக்கல.போலிசு கேசு எதுவும் இல்ல, அவன் பேர் எல்லா பத்திரிகையிலும் வந்து நாரால பாருங்க. எல்லாம் சாதரான மக்கள் மீது மட்டும் தான்.

    உங்களுக்கு பிரச்சனை மல்லையா போன்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததா அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்காததா? இந்த கேள்விக்கு கொஞ்சம் நீங்களே உங்களிடம் பதில் கேட்டுக்கொள்ளுங்கள். ரெண்டு பேர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை என்றால் விவசாயிகள், சாமானியர் பேரும் எல்லா பத்திரிகைலயும் வெளியிடலாமா? வழக்கு பதிந்து வயலை ஏலம் விடலாமா?

    நீங்கள் இந்த பிரச்னையில் இருவரையும் கையாண்ட விதம் தவறு என்று கூறுவதால் உங்களிடம் கேட்கிறேன். விவசாயி கடன் வாங்கி கட்டமுடியவில்லை, ஒரு சிறு தொழில் செய்பவர் கடன் கட்ட முடியவில்லை, அதே போல ஒரு பெரு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் (ஏர் இந்தியா, BHEL என வைத்துக்கொள்ளுங்கள்) கடன் கட்ட முடியவில்லை, என மூன்று சூழ்நிலை நம் வாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். இந்த மூன்றையும் கடன் வசூலிப்பது, கடன் write off செய்வது, வாரகடனை எப்படி வசூல் செய்வது, எந்த நிலைமையில் எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்போது பறிமுதல் செய்யவேண்டும், எப்போது போலீஸ் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற செயல்கள் எப்போது, எப்படி செய்யவேண்டும் என்ற ரூல்ஸ் கொஞ்சம் சமநிலைமை கொண்டு நீங்கள் சொல்லுங்கள். கேட்டு கொள்கிறேன்.

    • ஐயா சிந்தனை செய்,

     /// விதிவிலக்கின்றி நடப்பது இது தான் என்று கூறி விட்டு, அரிதான விதிவிலக்கு என நீங்களே உங்கள் பாயிண்ட் தவறு என காட்டி விட்டீர்கள். வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை.///

     ”விதிவிலக்கின்றி” – என்று நான் சொல்லவே இல்லையே ஐயா! ஒரு சில விதிவிலக்குகள் தவிர பொதுவாக முதலாளிகளுக்கு சாதகமாக தான் நடைமுறைகள் இருக்கின்றன என்றேன். நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி அதையே என்னுடைய சுய முரண்பாடாகக் காட்டுவது தகுமா ஐயா?

     பொதுவான நடைமுறைக்கு சில உதாரணங்கள் கீழே,

     முதலாளிகளின் கடன்கள்:
     1999-ல் அடிக்கட்டுமானத் துறைக்குப் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் வெறும் 724 கோடி ரூபாய்தான். இது 2012-13-ல் 78,605 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

     அரசியல் செல்வாக்குமிக்க கிங்ஃபிஷர் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தியிருக்கிறது. 36 தனியார் அனல் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட 2,09,000 கோடி ரூபாய் கடன் வசூலிக்க இயலாத சிக்கலில் இருப்பதாக கிரெடிட் சூயிஸ் என்ற ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

     2008-ல் வெடித்த பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய ஐந்தாண்டுகளில் வாராக் கடன் பட்டியலுக்குள் கொண்டு வராமல் தந்திரமாக மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை ஐந்து இலட்சம் கோடி ரூபாயாகும் என சி.பி.ஐ. குற்றஞ்சுமத்தியிருக்கிறது. அந்த ஐந்தாண்டுகளில் அரசுடமை வங்கிகளின் இலாபத்திலிருந்து 1.41 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, வங்கி ஊழியர் சங்கம்.

     முதலாளிகளுக்கு வரி விலக்குகள்:
     2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

     பெருநிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என்ற வகையில் ரூ. 5,51,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எப்போதும் போல பணக்காரர்களுக்கு பலனளிக்கும் முதல் மரியாதை இது. கடந்த ஆண்டு விட்டுக் கொடுத்த தொகையான ரூ. 5,00,823 கோடியை விட இது அதிகம்.

     பின் குறிப்பு: மேலே உள்ள தகவல்கள் வினவு, புதிய ஜனநாயகம் கட்டுரைகளில் இருந்து எடுத்தவை.

     // நீங்கள் இந்த பிரச்னையில் இருவரையும் கையாண்ட விதம் தவறு என்று கூறுவதால் உங்களிடம் கேட்கிறேன்.//
     // சமநிலைமை கொண்டு நீங்கள் சொல்லுங்கள். கேட்டு கொள்கிறேன்.//

     நீங்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிடும் நடுநிலைவாதி, ரூல்ஸ் பேசும் சமநிலைவாதி என்பதால் உங்களிடம் கேட்கிறேன், சில ஒப்பீடுகளுக்கு பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.

     முதலாளின் மொத்தக் கடன் எவ்வளவு? சாதாரண மக்களின் மொத்தக் கடன் எவ்வளவு?

     முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த வராக்கடன் எத்தனை இலட்சம் கோடி? சாதாரண மக்களின் கடனை தள்ளுபடி செய்தது எத்தனை கோடி?

     Wite off செய்த வராக்கடனுக்கு எத்தனை முதலாளிகனின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை இலட்சம் கோடி?

     // ஆமாம் சார். சாதாரண மக்கள் மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குது. பெரு முதலாளிகளில் எவன் கடன் வாங்குனான்னு தெரியாது பாருங்க.//

     ஆமாம் ஐயா, வங்கிகள் எடுத்த நடவடிக்கைகளுக்காக பல முதலாளிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர் என்பதை நானும் நம்பிவிட்டேன் ஐயா!

     write off செய்த பிறகும் சட்டப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கலாம், அந்த வங்கி கடன் தொகையை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கலாம், எடுக்கும் – என்று நீங்கள் சொன்னீர்கள்.

     இல்லை. அப்படி சில விதிவிலக்குகள் தவிர்த்து பொதுவாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று நான் கூறியதுடன்,
     ”அதற்கு வங்கியில் கடன் வாங்கி திரும்பி செலுத்தாவிட்டால் அது Non Performing Asset(NPA) என வகைப்படுத்தப்படும். அப்படி வகைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு அந்த வங்கியிலிருந்து பெரும்பாண்மை மக்கள் வாங்கிய கடனை வசூலிக்கும் உரிமையையும், அதில் கமிசனும் அந்த வங்கி கொடுக்கிறதென்றால் அது என்ன வகையான நடவடிக்கை ?”
     – என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதிலளிக்க வில்லை.

     //ஏர் இந்தியா, BHEL என வைத்துக்கொள்ளுங்கள்//

     கடன் செலுத்தாத நிறுவனங்களுக்கு உதாரணமாகக் காட்டுவதற்கு ஏர் இந்தியா, BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தான் உங்கள் நினைவுக்கு வருகின்றன.
     அம்பலப்பட்ட சாராய மல்லையாவையோ, சஹாரா சுப்ரதா ராயையோ அல்லது அம்பலப்படாத அனில் அம்பானி, ஜெய்பீ, ஜி.எம்.ஆர், லான்கோ இன்ன பிறரையோ கடன் செலுத்தாத நிறுவனங்களுக்கு உதாரணமாகக் காட்டுவதற்குக் கூட உங்களுக்கு தோன்றவில்லை பாருங்கள்.

     ”ரெண்டு பேர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை என்றால் விவசாயிகள், சாமானியர் பேரும் எல்லா பத்திரிகைலயும் வெளியிடலாமா? வழக்கு பதிந்து வயலை ஏலம் விடலாமா?” – என்று கேட்கிறீர்கள்.

     ரெண்டு பேர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை என்றவுடன் முதலாளிகளின் கடனை வசூலிக்கும் உரிமையை மக்களுக்கு கொடுக்கலாமா? முதலாளிகளின் கடனை வசூலிக்கும் உரிமையை மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாமா? – என்று உங்களுக்கு கேட்க தோன்றவில்லை பாருங்கள்.

     உங்களுக்குத் தோன்றாத இவை தான் இந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ள போராட்டத்திற்கும் உங்கள் நடுநிலை–சமநிலைகளுக்கும் இடையிலான வேறுபாடு ஐயா!

     • திரு ராம்சங்கர்,

      நிறுவனங்களுக்கு கடன், விவசாய கடன் disparity பற்றி நான் பேசவில்லை. என்னுடைய கேள்வி எல்லாம் இரண்டு தான். ஒருவன் கடன் கட்டவில்லை என்பதால் அனைவரும் கடன் கட்ட வேண்டாம் என்பது சரியான வாதமா? இரண்டாவது, ஒரு பெரு முதலாளி 7000 கோடி கட்டவில்லை என்று இவ்வளவு பேசும் போது, இது ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் ஒரு ஆண்டு நஷ்டம் என்ற விசயத்தை பற்றி மூச்சு கூட விடவில்லை. கடன் பற்றி தெளிவாக உரையாடும் நீங்கள், அதே நிலையை பொது துறை நிறுவங்களிடம் ஏன் எடுக்கவில்லை? ஏன் இந்த பாரபட்சம்? உங்களுக்கு பிரச்சனை 7000 கோடி கடன் தான் என்றால் ஏன் அந்த கோவம் BSNL போன்ற பொது துறை நிறுவனம் ஆண்டுக்கு அந்த பணத்தை இழக்கும் போது வரவில்லை? இல்லை ஒரு தனியார் முதலாளி என்பதால் இந்த பிரச்சனை என்றால் அப்போது அதே முதலாளி ஒழுங்காக கடன் கட்டி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லையா? இல்லை தனியார் முதலாளி என்றாலே உங்கள்குக்கு பிரச்சனையா? கடைசி தான் என்றால், பேசுவதில் அர்த்தம் இல்லை. அது அப்பட்டமான ஒரு நிலைப்பாடு.

      //அரசியல் செல்வாக்குமிக்க கிங்ஃபிஷர் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த ஆண்டு அம்பலப்படுத்தியிருக்கிறது. //

      இப்படி தெளிவாக கூறும் தாங்கள், கிங்பிஷர் நிறுவனத்துக்கு தள்ளுபடி செய்ய பட்ட 7000 கோடி பெரிதாக தெரிகிறது. ஆனால் இதே 7000 கோடி ஏர் இந்தியாவின் ஒரு ஆண்டு நஷ்டம் என்ற விஷயம் ஏனோ பேச்சில் வருவதே இல்லை. ஏர் இந்தியா என்ற ஒற்றை நிறுவனம் மட்டும் டிசம்பர் 2015 வரை 50000 கோடி நஷ்டம். இந்த ஆண்டு லாபமும் ஏதோ எரிபொருள் விலை அதல பாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்ததால். விலை பழைய நிலைக்கு வந்தால் மீண்டும் தலையில் துண்டு. BSNL சென்ற ஆண்டு 8200 கோடி, அதற்க்கு முந்தைய ஆண்டு 7000 கோடி. விவசாய நாடு என மார்தட்டும் இந்தியாவில் மிக அதிக நஷ்டத்தில் இருக்கும் முதல் இரண்டு அரசாங்க நிறுவனம், உர தயாரிப்பு நிறுவனங்கள்.

      பெரு முதலாளிகள் சலுகைகள் என நீங்கள் கூறுவதில் நான் எதையும் மறுக்கவில்லையே? மல்லையா தள்ளுபடி, தள்ளுபடி என கூறும்போது Enforcement Directorate 8000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது ஏன் எங்குமே இல்லை? வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றன. சிபிஐ புதிய வழக்கு பதிந்து உள்ளது. நீதிமன்றம் உத்தரவு கொடுத்த உடன் இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு வங்கிகளின் வாரா கடன் தொகைக்கு செலுத்தப்படும். இதெல்லாம் எங்குமே இல்லை. கடன் ஏமாற்றி விட்டான் என புலம்பும் எல்லாரும், ஏன் இந்த விசயத்தை எங்குமே பதியவில்லை? It almost feels as if a narrative is being constructed deliberately to push some specific agenda.

      உங்கள் மற்றும் வினவின் rhetoric விசயத்தில் எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் சார். மல்லையா கடன் திரும்ப செலுத்தவில்லை, அதனால் நாங்களும் செலுத்த மாட்டோம். இது தான் முன்வைக்க படும் வாதம். சரிதானே? இது ஒரு தவறை வைத்து, இன்னொரு தவறை நியாயம் என்று பேசும் பேச்சு என்பது ஒருபுறம் இருக்கட்டும். மல்லையா கடன் கட்டாததால், நாங்கள் கடன் கட்ட மாட்டோம் என்று கூறினால், மல்லையா மீது எடுக்கும் நடவடிக்கை, இவர்கள் மீதும் எடுக்க எந்த பிரச்சனையும் இல்லைதானே? இதில் அடுத்தகட்டமாக நஷ்டத்தில் ஓடும் பொதுத்துறை நிறுவங்களின் மீதும் இதே நடவடிக்கை எடுகாலாமா? எந்த ஆட்சேபனையும் இல்லை தானே? நீங்கள் பணம் கட்ட தவறிய முதலாளிகளிடம் இருந்து பணம் வசூலிக்கும் உரிமையை மக்களுக்கு தாராளமாக கொடுங்கள். ஆனால் அவர்களிடம் இருந்து எவ்வாறு வசூலிக்க படுகிறதோ அதே போல தான் கடன் கட்ட தவறும் அனைவரிடம் இருந்தும் வசூலிக்கப்பட வேண்டும். அது ஒரு ஆசாமியாக இருந்தாலும் சரி, பொது துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் முதலாளியாக இருந்தாலும் சரி.

      பணம் கட்ட தவறிய முதலாளிகளிடம் இருந்து இருந்து பணம் வசூல் செய்து, கடன் ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு வராத அளவுக்கு விவசாயத்தை முனேற்ற வேண்டும் என்று கேட்டு இருக்கலாம். அல்லது அந்த ஒரு முதலாளி தன் வாழ்நாளில் கட்ட தவறிய தொகையை ஒரு ஆண்டில் காலி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒழுங்காக நடத்தப்பட வேண்டும் என கேட்டு இருக்கலாம். ஆனால் கேட்பது என்ன? அவன் கட்டவில்லை அதனால் நாங்களும் கட்ட வேண்டாம், ரத்து செய்யவும். என்ன மாதிரி வாதம் இது?

      Sources:

      1. http://www.business-standard.com/article/companies/bsnl-reports-rs-8-234-crore-net-loss-in-fy15-115111800027_1.html

      2. http://www.newindianexpress.com/nation/2016/sep/03/ED-attaches-Mallyas-assets-worth-Rs-6630-crore-including-his-farmhouse-flats-1515797.html

      3. http://www.firstpost.com/business/air-india-posts-profit-first-time-in-decade-but-still-not-out-of-woods-2764394.html

      4. http://qz.com/639590/9-years-and-rs30000-crore-later-air-india-is-finally-set-to-make-some-money/

      5. http://dpe.nic.in/e_documents/archives/newsite/sur0607/survey01/pesurvey2/top10_loss

      • ஐயா சிந்தனை செய்,

       //ஆனால் அவர்களிடம் இருந்து எவ்வாறு வசூலிக்க படுகிறதோ அதே போல தான் கடன் கட்ட தவறும் அனைவரிடம் இருந்தும் வசூலிக்கப்பட வேண்டும். அது ஒரு ஆசாமியாக இருந்தாலும் சரி, பொது துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் முதலாளியாக இருந்தாலும் சரி. //

       திரும்பவும் மூன்றாவது முறையாக கேட்பதற்கு மன்னித்து அருளி பதிலளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

       “அதற்கு வங்கியில் கடன் வாங்கி திரும்பி செலுத்தாவிட்டால் அது Non Performing Asset(NPA) என வகைப்படுத்தப்படும். அப்படி வகைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு அந்த வங்கியிலிருந்து பெரும்பாண்மை மக்கள் வாங்கிய கடனை வசூலிக்கும் உரிமையையும், அதில் கமிசனும் அந்த வங்கி கொடுக்கிறதென்றால் அது என்ன வகையான நடவடிக்கை ?”

       “முதலாளிகளின் கடனை வசூலிக்கும் உரிமையை மக்களுக்கு கொடுக்கலாமா? முதலாளிகளின் கடனை வசூலிக்கும் உரிமையை மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாமா?”

       உங்களின் பதிலுக்கு என்னால் இப்போது மறுப்பு எழுதமுடியவில்லை, சிறிது வேலைப்பளு…
       மற்ற கருத்துகளுக்கு பின்னர் பதிலளிக்கிறேன், நன்றி.

       • உங்கள் இரண்டாம் கேள்விக்கு பதில் ஏற்கனவே அளித்தாகி விட்டது. நீங்கள் யார் கையில் வேண்டுமாலும் கொடுங்கள். ஆனால் அங்கு எப்படி வசூலிக்க படுகிறதோ அப்படி தான் அனைவரிடமும் வசூலிக்க பட வேண்டும். கடன் கட்ட தவறும் அனைவரும் முதலாளி, பொதுத்துறை நிறுவனம், சிறுதொழில் முனைவோர் என என்ன பிசினஸ் செய்பவராக இருந்தாலும் கடன் வசூலிக்க ஒரே முறைதான்.

        உங்கள் முதல் கேள்விக்கு, என்னை பொறுத்தவரை தனியாரிடம் ஒப்படைக்க எனக்கு ஒப்பமில்லை. ஒரு வேலை, ஒரு சில சமயங்களில் அது போல செய்யலாம். உதாரணமாக, ஒருவர் கடன் வாங்கி தொழில் செய்ய முனைந்து அது நட்டமாகி விட்டால், அவர் சொத்தை பறிமுதல் செய்யாமல் இவ்வாறு கடன் திரும்ப வசூலிக்கும் உரிமையை அவருக்கு தரலாம். அந்த கமிஷன் கொண்டு அவர் கடன் தொகையை கொஞ்சம் கட்டலாம். இதையே upscale செய்து நிறுவனத்துக்கு பேசினால், எனக்கு உடன்பாடு இல்லை. அதில் இன்னும் பல லேயர், ரூல்ஸ் தேவை. மிக சிக்கலான நிலைமை அது.

      • திரு சிந்தனை செய்,

       வேறொரு கோணத்தில் தொகுப்பாக சொல்வதை பரிசீலிக்குமாறு கோருகிறேன்.

       “நிறுவனங்களுக்கு கடன், விவசாய கடன் Disparity பற்றி நான் பேசவில்லை” என்கிறீர்கள். நிறுவனங்களுக்கு கடன், விவசாய கடன் Disparity பற்றியும், அதோடு கடன் கட்டாதவர்கள் மீதான நடவடிக்கைகளில் உள்ள Disparity பற்றியும் தான் நாங்கள், மக்கள் பேசுகிறோம். அதைப் பற்றி உங்கள் சிந்தைக்கே வரவிடாமல் செய்வது எது என்பதை உங்கள் பரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன் ஐயா.

       Write off , Waive off இடையில் Disparity உள்ளது என்றீர்கள். அவற்றின் நடவடிக்கைகளில் Disparity இல்லை என மறுத்தேன். உங்களிடம் பதில் இல்லை.

       சாதாரண மக்கள் மீதான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கும், முதலாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கும் Disparity இல்லை என்று வாதாடினீர்கள். கடன் மீட்பு நடவடிக்கைகளில் மிகபெரிய அளவில் Disparity இருக்கிறது என்று மறுத்தேன். பதில் இல்லை.

       பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்துடன், முதலாளிகள் கட்டாத கடனைகளை ஒப்பிட்டு Disparity இருக்கிறது பாருங்கள் என்கிறீர்கள்.

       இதுவரை மொத்தமாக Waive off செய்யப்பட்ட வராக்கடன், Write off செய்யப்பட்ட வராக்கடன், NPA என்று வகைப் படுத்தப்பட்ட வராக்கடன், கடன் மறுசீரமைப்பு வட்டி தள்ளுபடி என்பது எவ்வளவு? அதனுடன் கடன்கட்டாத முதலாளிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் கையகப்படுத்தப்பட்ட தொகை எவ்வளவு என்பதை ஒப்பிட்டு சொல்லுங்கள். கடன் மீட்பு நடவடிக்கைகளில் Disparity இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

       உங்கள் கருத்துப்படி கடன் மீட்பு நடவடிக்கைகளில் Disparity இல்லை என்பது உண்மையானால், வங்கிகள் நஷ்டமடைவதற்கும் நெருக்கடியில் சிக்கியதற்கும் வாங்கிய கடனை கட்டாத மக்கள் தான் காரணம் என்றாகிறது. ஆனால், புள்ளிவிவரங்களோ வாங்கிய கடனை கட்டாத முதலாளிகள் தான் வங்கிகள் நெருக்கடியில் சிக்கியதற்கு காரணம் என்கிறது. இதிலும் ஒரு Disparity பாருங்கள் ஐயா!

       மக்கள் வாக்குகளின் மூலம் அவர்களை ஆளும் நியாய உரிமையைப் பெற்றுக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தில் தனது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, அந்த அரசின் மூலதனத்திலும் மக்களின் சேமிப்பு பணத்திலும் உயிர்வாழும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இதர பிற நிறுவனங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன என்கிறோம். இந்த Disparity-யும் உங்கள் சிந்தைக்கு வந்ததாகத் தெரியவில்லை.
       பொதுத்துறை இருக்கக் காரணம் என்ன என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விசயம். அவை நஷ்டத்தில் இயங்க காரணம் முதலாளிகளும், அவர்கள் சார்பான அரசும் தான் என்பதற்கு பல கட்டுரைகள் வினவில் இருக்கின்றன. நல்ல இலாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்கள் கூட எப்படி திட்டமிட்டு நஷ்டமடைய வைக்கப்பட்டன என்பதற்கும் இலாபத்தில் இயங்கிய நிறுவனங்கள் எப்படி முதலாளிகளுக்கு விற்கப்பட்டன என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

       விவசாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. விவசாய நிலங்களை பறித்து முதலாளிகளுக்கு கொடுப்பது பற்றியும் விவசாயப் பிரச்சனைகளுக்கான காரணங்களும் நடந்த பல போராட்டங்களும் வினவில் கட்டுரையாக உள்ளன.

       முதலாளிகள், அவர்களுடைய நிறுவனங்கள் பெரும்பானமை மக்களின் எதிரிகள் என்கிறோம், நீங்கள் அதைப்பற்றி பேசாமல் ‘எனில் பொதுத் துறை மட்டும் மக்கள் எதிரிகள் இல்லையா’ என கேட்கிறீர்கள்.

       பொதுத் துறையின் மீது நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது? அப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் முன் நிபந்தனையாக முதலாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம் நாங்கள்.

       முன்னர், முதலாளிகளுக்கு நிகரான தட்டில் விவசாயிகளை வைத்து அவர்கள் நிலங்களை பறிமுதல் செய்யலாமா என்று கேட்டீர்கள். இப்போது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து அப்படி வசூலிக்க வேண்டும் என்கிறீர்கள். பாரபட்சமாக நடந்துகொள்வது நீங்கள் தான் ஐயா.
       அதாவது, முதலாளிகளிடம் இருந்து வசூலிப்பதற்கு முன் நிபந்தனையாக சாதாரண மக்களிடம் இருந்தும், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும் வசூலிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றாகிறது. சரி தானா?

       push some specific agenda – யார் இல்லை என்றது? முதலாளிகளின் சர்வாதிகாரத்தை ஒழித்து மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் agenda தான் அதற்கென்ன இப்போது? உங்களுடைய அஜெண்டா என்ன என்பதை தான் நான் கேள்விக்குட்படுத்தி வருகிறேன்.

       ‘கடன் கட்ட வேண்டாம்’, ‘ரத்து செய்’ போன்றவை கடன் கட்டாதவர்கள் மீதான நடவடிக்கைகளில் உள்ள Disparity பற்றி அம்பலப்படுத்தும் நடைமுறை எனக் கருதுகிறேன்.

       இந்தப் போராட்டம் Disparity-யை தவறாகப் புரிந்துகொண்டு, தவறான சமத்துவத்தைக் கொண்டுவரும் நடவடிக்கை என நீங்கள் பிழையாக கருதிக்கொண்டு பதிலளிக்கிறீர்கள்.

       புரிதலில் பிழை இருப்பது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள போராட்டத்திற்கா அல்லது உங்களுக்கா என்ற Disparity-யை உங்களுக்கு புரியவைக்க முயற்சித்து வருகிறேன்.
       (இது இப்படி நீண்டு விட்டதற்காக மன்னிக்கவும்..)

       கடைசியாக, நாங்கள் – மக்கள். அவர்கள் – முதலாளிகள், வங்கிகள் மற்றும் அரசு.
       நீங்கள் யார் சிந்தனை செய் அவர்களே?

       • //Write off , Waive off இடையில் Disparity உள்ளது என்றீர்கள். அவற்றின் நடவடிக்கைகளில் Disparity இல்லை என மறுத்தேன். உங்களிடம் பதில் இல்லை.//

        நான் எழுதியதை, மற்றும் இந்த விசயத்தில் சம்பந்தமான எதாவது ஸ்டாடிஸ்டிக்ஸ் பார்த்தீர்களா? Write off செய்யப்பட்ட மல்லையாவின் சொத்து 8000 கோடி Enforcement Directorate பறிமுதல் செய்து உள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் SBI 520+ (சரியான எண்ணிக்கை நினைவில் இல்லை. 530 கோடி பக்கம் என்று நினைவு) கோடி கடனை மீட்டுள்ளது. இது போன்ற கடன்களை திரும்ப வசூலிக்க 6.5 – 10 ஆண்டுகள் ஆகும் (இந்த exact data வங்கிகள் வெளியிடுவதில்லை. இது உலக வங்கியின் கணிப்பு படி). எனவே write off, waiver இடையில் disparity இல்லை என்னும் உங்கள் கருத்து தவறு. waiver செய்தால் மொத்தமாக காலி. write off அப்படி இல்லை. சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் வசூல் செய்யப்படும்.

        //பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்துடன், முதலாளிகள் கட்டாத கடனைகளை ஒப்பிட்டு Disparity இருக்கிறது பாருங்கள் என்கிறீர்கள்.//

        இல்லை. நான் அதை சுட்டி காட்டியது அரசாங்கமே கூட எல்லா நிறுவனத்தையும் லாபகரமாக நடத்த முடியாது என்பதை காட்டவே. தொழில்கள் நஷ்டமடைவது வியாபாரத்தில் நடப்பது தான். அந்த நஷ்டம் தனியார் என்றால் ஒரு appraoch, பொதுத்துறை என்றால் ஒரு appraoch என்று இருப்பதால். ஒரு தனி மனிதன் கடன் கட்ட தவறினாலும், நிறுவனம் தவறினாலும் ஒரே செயல்பாடு தான். செய்தித்தாளில் விளம்பரம் அறிவிப்பு கொடுத்தும் ஆள்/கடன் வராவிட்டால், வழக்கு பதியப்படும். பின்னர் வழக்கு பதிந்து, நோட்டீஸ் அனுப்பி பதில் இல்லாவிட்டால், சொத்து பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கும். பறிமுதல் செய்யப்பட்ட சொத்து இருப்பின் நீதிமன்ற அனுமதியுடன் அது பறிமுதல் செய்யப்பட்டு, ஏலத்துக்கு விடப்பட்டு தொகை மீட்கப்படும். நகை கடனில் இருந்து corporate கடன் வரை, இது தான் approach. செய்தித்தாளை எடுத்து பாருங்கள். கடன் பற்றி வங்கிகள் அறிவிப்புகள் கொடுத்த வண்ணம் தான் உள்ளன.

        தனியார் வரி சலுகை அல்லது கடன் தள்ளுபடிக்கு வருவோம். உதாரணதுக்கு விமானம், Renewable energy, மென்பொருள், photofilm, ரப்பர், டையர், உரம் போன்ற பல துறைகளில் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. இதே துறைகளில் தனியார் நிறுவனங்கள் எங்கோ போய்விட்டன. எனவே அந்த நிறுவனத்தை மூடி அல்லது தனியாரிடம் விற்று விட்டு, உனக்கு வரி சலுகை. இதே போல ஒரு தொழிற்சாலையை அல்லது இந்த தொழிற்சாலையை லபகராமாக நடத்து என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மழை பெய்தால் BSNL இன்டர்நெட் வேலை செய்யாது என்று கிண்டல் அடிக்கும் நிலைமையில் இருக்கிறது அதன் இணைய சேவை. BSNL விட Airtel அற்புதமாக fiber optic கேபிள் போடமுடியும் என்று மீண்டும், மீண்டும் நிரூபித்து இருப்பதால் அந்த வேலை Airtelஇடம் கொடுப்பதில் என்ன தவறு? உனக்கு இவ்வளவு வரி சலுகை தருகிறேன், பதிலுக்கு இந்த இடங்களில் உள்ள கேபிள் infrastructure மேம்படுத்து அல்லது புதிதாக உருவாக்கு என்று அவன் expertise உபயோகிப்பதில் என்ன பிரச்சனை? பணம் கொடுத்து செய்ய சொல்வதுக்கு பதிலாக வரி சலுகை தரப்படுகிறது. அவ்வளவு தானே? expertise இல்லா விட்டாலும் அரசாங்க நிறுவனங்கள் தான் செய்ய வேண்டும் என்பது எவ்வகையில் சரியான வாதம்? expertise எங்கு இருக்கிறதோ அதை உபயோகித்து கொள்ள வேண்டும். அதுவே சரியான செயல்முறை. expertise இல்லாமல் செய்தால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரி சலுகையை விட அதிகமாக செலவாகும் என்றாலும் அப்படி தான் செய்ய வேண்டுமா?

        //பொதுத் துறையின் மீது நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது? அப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் முன் நிபந்தனையாக முதலாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம் நாங்கள்.//

        மல்லையாவின் சொத்து 8000 கோடி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. இப்போது ஏர் இந்தியாவின் சொத்து பறிமுதல் ஆரம்பிக்கலாமா? இல்லை எல்லா தனியார் கடனையும் முழுதாக வசூல் செய்த பிறகே இங்கு வர வேண்டுமா? இல்லை தனியார் எவ்வளவு கடன் காட்டுகிறதோ அவ்வளவு தான் இங்கும் வசூலிக்க வேண்டுமா?

        //நல்ல இலாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்கள் கூட எப்படி திட்டமிட்டு நஷ்டமடைய வைக்கப்பட்டன என்பதற்கும் இலாபத்தில் இயங்கிய நிறுவனங்கள் எப்படி முதலாளிகளுக்கு விற்கப்பட்டன என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன//

        ஆமாம் சார். வேற எவனுமே இல்லை என்ற நிலைமையில் இருந்ததால் லாபம் எல்லாம் இல்லை பாருங்கள். சீன boiler தயாரிப்பவன் உள்ளே வந்ததும் BHEL படுத்து விட்டது. சீனா காரன் குறைந்த செலவில் boiler தயாரிப்பது நம்ம பொதுத்துறை நிறுவனத்தை ஒழிக்கும் இந்திய அரசாங்க சதி. இல்லை புவி வெப்பமயமாதல் காரணமாக அனல் மின் பக்கம் அதிகம் யாரும் வராமல் இருப்பதும் திட்டமிட்ட சதி பாருங்க. பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கார்பன் லிமிட், கார்பன் டாக்ஸ் போட்டதும் bhelஐ ஒழிக்கவே. ஊழல் காரணமாக நிலக்கரி விலை ஏறியதும் bhel நிறுவனத்தை விற்க நடந்த சதி மட்டுமே. இல்லை bhel போன்ற நிறுவனத்துடன் டை-அப் இருந்த நிறுவனங்கள் அந்த expertise கொண்டு தாங்களே சொந்தமாக தயாரிக்க தொடங்கியதும், உலகத்தில் எங்குமே நடக்காமல், bhel நிறுவனத்தை ஒழிக்க மட்டுமே நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. மிக அதிக R&D முதலீடு இருந்தும் அதற்க்கு நிகரான தயாரிப்புகள்/முன்னேற்றங்கள் இல்லாமல் இருப்பதும் BHELஇன் தவறு அல்ல. மற்ற தனியார் நிறுவனங்கள் போல் பல்வேறு தொகுப்புகள் இல்லாதது, நீண்ட கால ஆர்டர்கள் பெற குறைந்த கால நஷ்டம், ரிஸ்க் எடுக்காமல் இருப்பது போன்றவை எல்லாமே BHELஐ ஒழிக்க செய்யப்பட்ட சதி மட்டுமே. இதில் BHELஇன் தவறு, இல்லை கைக்கு மீறிய நிலைமை எல்லாம் கடுகளவும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட சதி.

        தொழில்நுட்ப frontier தவிர அனைத்து இடங்களிலும் தனியார் சில காலத்தில் அரசாங்க நிறுவனத்தை விட முன்னேறி விடும். பல நூற்றாண்டாக நடந்து வருவது தான் இது. இதற்க்கு எந்த சதியும் தேவை இல்லை.

        A government should and operates best in the frontiers of science and technology. It can create opportunities for new industries and start for advancements. It need not be continuously maintaining or providing goods and services. Private enterprises can do a far better job in that. அரசாங்கம் இணையம் என்னும் தொழில்நுட்பத்தை கொண்டு வர முடியும். ஆனால் அதில் blogging, Youtube, விக்கிபீடியா, Social media, அதற்க்கு தேவையான மென்பொருள், தேடல் அல்காரிதம், வீடு பாதுகாப்பு, இணைய வர்த்தகம், Networking, புதிய வகையான மீடியா சேவைகள், Telemedicine, இணைய பண பரிமாற்றம் போன்ற பல புதிய சேவைகள், புதிய முயற்சிகள் செய்ய தனியாரே சிறந்தது. தனியாரே இல்லாவிட்டால் உலகம் சிறப்பாக இருக்கும் என்பது எல்லாம் சும்மா.

        உங்களுடய criticism பல இடங்களில் சரி. நானும் ஒத்து கொள்வது தான் அது. ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா? உங்கள் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி. தனியார் என்றாலே அவன் என்னமோ உலகத்தின் முதல் எதிரி மாதிரி பேசுவது, செய்வது எல்லாம் தான் மிக தவறு. தனியாருக்கு சில இடங்களில் அதிக சலுகைகள் அளிக்க படுகிறதா? ஆமாம். அது தவறு தான். மாற்றுக்கருத்து கடுகளவும் இல்லை. ஆனால் தனியார் என்றாலே கெட்டவன், மக்கள் எதிரி. தனியார் ஒழிந்தால் தான் மக்கள் வாழ முடியும் என்பது எல்லாம் (மன்னிக்கவும்) வடிகட்டிய முட்டாள்தனம்.

        உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். நான் ஒரு ஏற்றுமதி தொழில் வைத்து இருக்கிறேன் என வைத்து கொள்வோம். வாழை வாங்கி, பாக் செய்து மொத்தமாக ஏற்றுமதி செய்கிறேன். இதற்க்கு ஒரு கோடான் கட்ட கடன் வாங்கி கட்டுகிறேன். தொழில் நன்றாக நடக்கிறது. திடீர் என்று வாழை விலை படு வீழ்ச்சி அல்லது ஒரு இயற்கை சீற்றத்தால் அல்லது விபத்தால் என் கோடான் நாசமாகி விட்டது என வைத்து கொள்வோம். இப்போது விவசாயி வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வரும். ஆனால் அதை வாங்கி விற்ற என் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஏதேனும் பிரச்சனை உங்களுக்கு உண்டா? இல்லை நான் வாழை ஏற்றுமதி நன்றாக செய்வதால் அந்த தொழிலை இன்னும் பெரிதாக்க அல்லது மாம்பழம் ஏற்றுமதியும் ஆரம்பிக்க அரசாங்கம் எனக்கு வரி விலக்கு அளித்தால் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனை உண்டா? ஆமாம் என்றால் அது என்ன, ஏன்? இதே ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு இதே சலுகைகள் அளிக்க பட்டால் அதே பிரச்சனைகள் உங்களுக்கு உண்டா? இல்லை என்றால் ஏன்? பதில் அளிக்கவும்.

        P.S: வேலை காரணமாக சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே சில நாட்கள்/வாரங்கள் இங்கு வருவது கடினம். ஒரு வேலை வர முடியாவிட்டால் மனிக்கவும். பின்னில் சந்திப்போம்.

    • //உங்களுக்கு பிரச்சனை மல்லையா போன்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததா அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்காததா?//

     மக்கள் வாக்குகளின் மூலம் அவர்களை ஆளும் நியாய உரிமையைப் பெற்ற அரசு, மக்களின் வரிப்பணத்தில் தனது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, அந்த அரசின் மூலதனத்திலும் மக்களின் சேமிப்பிலும் உயிர்வாழும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இதர பிற – அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன, தீர்க்க முடியாத முட்டுச்சந்தில் நிற்கின்றன என்பது தான் பிரச்சனை.

     நீங்கள் Write off, Waive off – குறித்த தவறான புரிதல் என்றும் ரெண்டு பேர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை என்றும் இன்ன பிறவாறும் பிரச்சனையை தவறாக மதிப்பிடுவதும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கேள்விக்குள் நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொள்வதும் தான் சிக்கல்.

     அதாவது சுருங்கக் கூறின் பார்வை நிலை, கண்ணோட்டம் தான் இவ்விவாதத்தில் உள்ள சிக்கல், பேசுபொருள் எல்லாமே…

  • சிந்தனை செய்,

   கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள போராட்டம் நீங்கள் கருதிக்கொள்வது போல Technical நுணுக்கங்கள் தெரியாததால், Write off, Waive off – வேறுபாடு குறித்த தவறான புரிதலால் நடந்ததல்ல. மாறாக, சாதாரண மக்களுக்கும் – முதலாளிகள், அவர்களுக்காக செயல்படும் அரசு மற்றும் வங்கிகளுக்கும் இடையிலான முரண்பாட்டை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதால் நடந்த ஒன்றாகும்.

 2. வினவின் நோக்கம் ‘இந்தியாவின் நன்மையா’ (அல்லது) பார்ப்பன எதிர்ப்பா என்று தெரியவில்லை

  உண்மையில் ‘இடது சாரி’ சிந்தனையாளர்கள் செய்ய வேண்டியதெல்லாம் மக்களின் நம்பிகையை பெற்று, தேர்தலில் வென்று மக்களுக்கு அவர்கள் செய்ய நினைக்கும் நல்லவைகளை செய்யலாம். குறை கூறுவது எளிது. அதை செயல்படுத்துவது தான் கடினம்

  இவ்வளவு எழுதும் வினவு ‘முல்லை பெரியாறு’ பிரச்சனையை பற்றி ஏன் எழுத மாட்டேன் என்கிறது. ‘இடது சாரிகள் மீது பற்றா?’. ‘முல்லை பெரியாறு’ பிரச்சனையால் மக்களுக்கு பாதிப்பு இல்லையா (அல்லது) இழப்புகள் இல்லையா?

  • திரு சதீஷ் அவர்களே கட்டுரைக்கு சம்மந்தம் இல்லாமல் பின்னூட்டமிட்டுள்ளீர்கள், ஆனாலும் பரவாயில்லை. வினவில் முல்லை பெரியாறு பிரச்சினை பற்றி பல கட்டுரைகள் வந்துள்ளது. அவற்றை தேடிப் படிக்கவும்.

  • இந்தியாவின் நன்மையையும் பார்ப்பன எதிர்ப்பும் ஒன்று தானே. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

   பாவம் வினவு பாட்டிற்கு மோடி ஒரு முகமூடி, அதானி,அம்பானி, ஏழை, பணக்காரன், தாழ்த்தப்பட்டவர்கள், பார்ப்பனர்கள் என்று எழுதட்டுமே. உங்களுக்கு அதில் தவறு இருந்தால் சரியான முறையில் அதை விமர்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இலவச அறிவுரைகள் அள்ளி வீசுகிறீர்களே.

   இடதுசாரி சிந்தனையாளர்கள் எல்லாம் தேர்தலில் பங்கேற்று மக்களுக்கு நன்மை செய்யலாம் என்று ஏன் உத்தரவிடுகிரீர்கள் அய்யா?

   இடதுசாரி சிந்தனையெல்லாம் சிறிது நேரம் ஓரங்கட்டி விடுங்கள்.

   1)பி.எப் பணத்தில் முதலாளிகள் விளையாட இருந்ததை தடுத்தது யார் காங்கிரசா? பி.ஜே.பியா? மோடியா? அம்னிபாயா? இல்லை அரசியல் அதிகாரம் எதுவும் இல்லாத ஏழை எளிய மக்களா?

   2)கூடங்குளம் அணுஉலை வேண்டாம் என்றும் மக்கள் தலையில் திணித்தது எது? ஏழை எளிய மக்களா இல்லை காங்கிரசு,பி.ஜே.பி கூட்டு களவாணிகளா?

   3) பணத்தை செல்லாக்காசாக்கியது யார்? மக்களா இல்லை மோடியா? யாரிடம் கேட்டு அதை செய்தார்கள்? மக்களிடமா? இல்லை முதலாளிகளிடமா?

   4) காவிரியில் தண்ணீரை விடாமல் தடுப்பது யார் ? மக்களா? பி.ஜே.பி,காங்கிரசு கட்சி குண்டர்களா?

   5) தாமிரபரணியில் தண்ணீரை களவாடுவது யார்? மக்களா? கோக்,பெப்சி நிறுவனங்களா? அதற்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மாநில மத்திய அரசுகளா?

   ———
   சார் முல்லைப் பெரியாறு பிரச்சினைப் பற்றி ஏன் வினவு எழுத வேண்டும் என்று நினைகிறீர்கள்?

   ஏற்கனவே வினவில் அதைப் பற்றிக் கட்டுரைகள் இருக்கின்றன. தேடித் படித்து பயன் பெறவும்.

  • @Satish

   //வினவின் நோக்கம் ‘இந்தியாவின் நன்மையா’ (அல்லது) பார்ப்பன எதிர்ப்பா என்று தெரியவில்லை……….//

   இரண்டுமே தான். மேலும்,உங்கள் புரிதலில் ஒரு சிறு பிழை உள்ளது. முதலில் வினவு முன்னெடுப்பது பார்ப்பன எதிர்ப்பல்ல, பார்ப்பன ஒழிப்பு. இரண்டிற்கும் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் நன்மை என்பது பார்ப்பனியத்தை சுவடில்லாமல் முற்றாக ஒழிப்பதில் தான் இருக்கிறது. நன்றி

   • சரி சரி வினவிற்கு இந்திய எதிர்ப்பு இல்லை என்ற உங்களின் பொய்யை நாங்கள் நம்பிட்டோம்

 3. 3 நபர்கள் எனக்கு விடை அளித்துளீர்கள். அதற்க்கு நன்றிகள்

  முல்லை பெரியாறு என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தான். இடது சாரிகள் குளறுபடிகள், மக்கள் பிரச்சனைகள் என்று எவ்வளவோ எழுதி கொண்டே போகலாம். அது முக்கியம் இல்லை

  நடைமுறையில் எது சாத்தியம். ஒருவன் ஒரு தொகுதிக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் அதிகாரம் வேண்டும். அதற்க்கு தான் அரசியல். அரசியல் என்பது மக்கள் பணியாற்றவே. இடது சாரிகளும் ஆண்டவர்கள் தான்.

  நான் மோடிக்கோ, பார்பணீத்ததையோ ஆதரித்து பேசவில்லை. எந்த ஊர் (அல்லது) எந்த நாட்டை எடுத்து கொண்டாலும் அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.

  எந்த கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் நிறைகளை விட குறைகளே அதிகம் இருக்கும். விதிவிலக்குகள் இருக்கலாம் அது வேறு.

  ஆனால் மீண்டும் சொல்கிறேன். குறை கூறுவது எளிது. அதை செயல்படுத்துவது தான் கடினம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க