Sunday, November 1, 2020
முகப்பு செய்தி நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் !

நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் !

-

 தோழர் சீ.கோட்டை-க்கு சிவப்பஞ்சலி !

தேழர் கோட்டை க்கு சிவப்பஞ்சலி (5)

துரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில்  கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தோழர் கோட்டை 18.11.2016- அன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது-60.   இரண்டு வருடத்திற்கும் மேலாக ரத்தக்குழாய் அடைப்பு நோய் இருந்து தொடர்ச்சியாக மருத்துவமும், ஓய்வும் தேவைப்பட்ட  போதிலும் அமைப்பு வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர். இறப்பதற்கு இரண்டு நாளுக்கு முன் கூட  500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் மோசடிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வினியோகித்திருந்தார்.  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  மரணம் நேர்ந்திருக்கிறது.

தோழர் கோட்டை தான் சார்ந்த அமைப்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டவர். முல்லைப் பெறியாறு அணையில் தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி  கிராமங்கள் தோறும் அணைப்பாதுகாப்பு குழு கட்டுவதற்கு ஓர் இளைஞனைப் போல  செயல்பட்டவர்.  அமைப்பு  கூட்டங்களில்  தன் கருத்தை முன்வைப்பார் அது தவறு என்று தோழர்கள் சுட்டிக் காட்டினால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தானாக முன்வந்து சுயவிமர்சனம் செய்து கொள்வார்.

எளிய    உணவு, உடை, வீடு, அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான்  தோழர் கோட்டை. அவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், முண்டுவேலம்பட்டியின் செல்லப்பிள்ளை. அப்பகுதி  உழைக்கும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக பேராடியவர். அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர்.

விவசாயத்திற்கு  வைகை பாசனத்ணில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது மக்களைத் அணிதிரட்டி, அதிகாரிகளிடம்  போராடி தண்ணீரைப் பெற்றுக் கொடுப்பது,  நெல்கொள்முதல் நிலையத்தை கிராமத்தில் முறைப்படுத்துவது, அமைப்பது என்று செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், குடும்ப நண்பராகவும் திகழ்ந்தார். சாதி, மதம், ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தானாக முன்வருபவர்களை கொண்டு  கிராம கமிட்டி ஏற்படுத்தி அதில் செயலாளராக பணியாற்றினார். குறிப்பாக அனைத்து உழைக்கும் மக்களுக்கும் நம்பிக்கைக்குறியவராக இருந்தார். இவருடைய இறப்பு பகுதி தோழர்களிடமும், மக்களிடமும் பெருந்துயரையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அவருக்கு  அமைப்பு   தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள், உள்ளூர் மக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும்  தோழரது பண்புகளையும், செயல்பாட்டையும் நினைவு கூர்ந்து பேசினர்.

குறிப்பாக அவருடைய உறவினர் ஒருவர் பேசும்போது. “காசு பணம் சம்பாதிப்பதில் தான் கௌரவம் இருக்கு என்ற ஆணவத்தில் இருந்தேன், பிழைக்க தெரியாதவர் கோட்டை என்று நினைத்து கர்வமாக இருந்தேன். ஆனால் அவர் இறந்த பின்பு தான் தெரியுது நேர்மையாக இருப்பதும் மனுச மக்களை சம்பாதிப்பதும் தான் கௌரவம் என்று உணர்ந்தேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

தோழர்களும், பல்வேறு கட்சியினரும், உள்ளூர் மக்களும் திரண்டு செல்ல இறுதி ஊர்வலம் மயானத்தை அடைந்தது  தோழர் கோட்டை விடைபெற்று  பூமிக்குள் சென்றார். அவரது நற்பண்புகளையும், போராட்ட வாழ்க்கையின் தருணங்களையும் நினைவில் இருத்துவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க