கடந்த நவம்பர் 15 –ம் தேதி கிரீஸ் தலைநகர் ஏதன்ஸிலும் மேலும் பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையைக் கண்டித்து பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். அதிபர் ஒபாமா தங்கியிருந்த இடத்தை சுற்றி சுமார் 5000 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர், தடையை மீறி ஒபாமாவின் இருப்பிடத்தை நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றனர், அவர்களைக் கலைக்க போலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளும், கையெறி குண்டுகளைக் (stun grenades) கொண்டும் போராட்டக்காரர்களை கலைத்துள்ளது போலீசு. போராட்டக்காரர்களும் தலைக் கவசங்களுடனும், கண்ணீர் புகையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகமூடிகள் அணிந்து கொண்டும் வீரமிகு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கிரீஸில் தற்போதைய பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ்-ம் அவரது சிரிசா (Syriza) கட்சியும் ஒபாமவை கிரீஸின் மீட்பராகவும், பாதுகாவலராகவும் புகழ்ந்து வருகிறது. சீர்குலைந்து போன தனது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப் படுத்த மேலும் கடன், மேலும் கடன் என்ற நச்சு சுழலில் சிக்கியுள்ளது கிரீஸ். இந்நிலையில் தான் மீண்டும் ஐ.எம்.எஃப் – பிடம்(IMF) கடன் கேட்டதற்கு அது தர மருத்ததால் சமீபத்தில் அந்நாட்டு மக்களின் ஓய்வூதியத்தை வெட்டியது. அதே போல மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை சிக்கன நடவடிக்கை எனும் பேரில் குறைத்துக் கொண்டு வருகிறது. இவற்றைக் காட்டி மீண்டும் கடன் பெற முயற்சிக்கிறது கிரீஸ் இவற்றைக் கண்டித்தும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றது.
இவ்வருகையின் போது பொருளாதார ரீதியில் நாம் வெறும் சிக்கன நடவடிக்கைகளால் மட்டும் வளத்தைக் கொண்டுவரமுடியாது, மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு கடன் தள்ளுபடி அவசியம் எனப் பேசியுள்ளார் ஒபாமா. அமெரிக்கா நேட்டோ (NATO) நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கும், வரும் காலத்திலும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏதும் இருக்காது, தற்போது ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைகளை அடைத்துள்ளதால் அகதிகளாக சுமார் 60,000 –பேர் கிரீஸில் சிக்கியுள்ளனர். இது போல மிகப் பெரும் சிக்கலில் வேறு எந்த நாடும் இல்லை ஆனால் கிரீஸ் இப்படியான இக்கட்டில் உள்ளது, என பச்சாதபத்துடன் பேசியுள்ளார் ஒபாமா.
நேட்டோ நாடுகளுடன் தோளோடு தோள் நிற்போம் எனச் சொல்வது தனது ஏகதிபத்திய நலனுக்காகவும், மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கும் நடைபெரும் போர்களுக்கு அடியாள் படையாக, எப்போதும் கிரீஸ் தனது மக்களைத் தொடர்ந்து அனுப்பவேண்டும் என்பது தான் அவர் பேசியுள்ளதன் நோக்கம். உலகம் முழுக்க தனது ஏகாதிபத்திய நலனுக்காக நடத்தும் போரினாலும், திட்டமிட்ட ஆயுதக் குழுக்களை வளர்த்துவிடுவதாலும் அமெரிக்கா தான் பல லட்சம் மக்கள் அகதிகளாக்குகிறது. இவ்வாறு உலகையே போர் வெறியால் துவம்சம் செய்து கொண்டு அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சமாதானம் பேசும் அயோக்கியத் தனத்தை செய்யும் அமெரிக்காவை எப்படி மீட்பராக கருதமுடியும் ?
- எங்களுக்கு பாதுகாவலன் தேவையில்லை
- எங்கள் நாடு இனி ஏகாதிபத்திய நலனுக்கான திட்டங்களிலும், போர்களிலும் கலந்து கொள்ளக் கூடாது.
- அமெரிக்க மற்றும் நேட்டோ – வின் படைத்தளங்கள் மூடப்பட வேண்டும்.
- கிரீஸ் படைகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ ஆகியவை மேற்கொண்டிருக்கும் போர்களில் இருந்து வெளியேர வேண்டும்.
- நேட்டோ – வின் கடற்பரப்பில் இருந்தும் வெளியேர வேண்டும்.
- அகதிகள் – புலம்பெயர்ந்தோருடன் ஐக்கியம்.
ஆகிய முழக்கங்களை வைத்து அமெரிக்க ஏகதிபத்தியத்தின் செவிட்டில் அறைந்துள்ளது கிரீஸின் மக்கள் போராட்டம்.
ஆனால் மேற்கத்திய ஊடகங்களோ ஒபாமாவை கண்டித்த மக்களின் போராட்டத்தை சில நூறு பேர் கொண்ட கும்பல் நடத்திய கலவரமாக மட்டும் சித்தரித்துக் காட்டி வருகின்றன. தான் பதவியேற்ற கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறைகூட கிரீஸுக்கு வந்திராத ஒபாமா தற்போது தனது பதவிக்காலம் முடிய இரண்டு மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் கிரீஸுக்கு வருகை புரிந்துள்ள காரணம் என்ன? தற்போது புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தொடர்ந்து தனது பிரச்சாரங்களில் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா தான் அதிகம் செலவு செய்து வருகிறது, நான் அதிபரானால் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா செய்யும் தண்டச் செலவுகளைக் குறைப்பேன் எனக் கூறியுள்ளார், தற்போது அவர் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டார்.
அமெரிக்க சிரியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிளும் நேரடியாக தனது ராணுவத்துக்குப் பதிலாக நேட்டோவைத்தான் போரில் ஈடுபடுத்தி வருகிறது. தற்போது நேட்டோ படைகளின் மீதான எதிர்ப்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகரித்து வருகிறது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், ஐரோப்பிய முதலாளிகளுக்கும் பிரச்சினைக்குரிய விசயமாக இருப்பதால் தான் ஒபாம ஐரோப்பாவிற்கும், அதே போல லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் சுற்றுப் பணம் சென்றுள்ளார். சாவு வீட்டில் சிரிக்க முடியாது என்பதால் தான் கிரீஸ் சென்ற ஒபாமா அங்கு கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.
ஆனால் கிரீஸ் மக்கள் ஒபாமாவுக்கு மட்டுமல்ல, ஒபாமாவின் உள்ளூர் அடியாட்களுக்கு பாடம் புகட்டும் அளவுக்கு தமது போராட்டத்தை விரிவு படுத்துகின்றனர்.
மேலும் படிக்க:
- Violent anti-Obama protests break out in Athens
- Police and Protesters Clash as President Obama Visits Greece
- Thousands of demonstrators denounced the imperialist plans of the USA-NATO-EU and the stance of the “left” government of SYRIZA
- Greek police clash with demonstrators protesting Obama’s visit to Athens
பேரணி நடத்தியது கிரீஸில் உள்ள இடது சாரிகள். எல்லா மக்களும் அல்ல