சுரங்க தொழிலாளர்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு – 2017
கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலுக்கு பலியிடப்படும்
நிலக்கரி உள்ளிட்ட சுரங்கத் தொழில்கள்
அணிதிரண்டு போராடுவோம்! தடுத்து நிறுத்துவோம் !
வடலூர் கருத்தரங்கம்.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கப் பணிகளில் அயலாக்கம் மற்றும் ஆட்குறைப்பு மட்டுமின்றி அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த இத்துறையில் நிலக்கரி வர்த்தகம் மற்றும் முன்னுரிமை சார்ந்த பயன்பாட்டு நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பெருமளவில் சுரங்கத் தொழிலை கைப்பற்றி வருகின்றது.
கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் சுரங்கத் தொழிலில் பெருமளவில் நுழைந்திருப்பதோடு மாபெரும் கனிம வளமிக்க நிலப்பரப்புகள் அவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அதன் விளைவாக நாட்டின் கனிம வளங்கள் முற்றிலுமாக சுரண்டப்படுவதோடு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர். முதலாளிகளின் லாப வெறிக்காக தொழிலாளர்களின் உழைப்பு கடுமையாக சுரண்டப்படுகிறது.
சுரண்டலுக்கு எதிராக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பு சார்பாக 11 .12 .2016 ஞாயிறு அன்று மாலை 4 .௦௦ மணிக்கு வடலூரில் பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலர் தோழர் பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில், NLC தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் துயர சம்பவங்களை விளக்கியும், முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் அதற்கு எதிராக போராட வேண்டிய தொழிலாளிகள் அமைதியாக இருக்கின்றனர். அதற்கு காரணம் தொழிலாளிகளின் ஒற்றுமையின்மையே. இந்த நிலையை முதலாளிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை எதிர்த்து முறியடிக்க பாட்டாளி வர்க்கமாக ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என கூறி நிறைவு செய்தார்.
அடுத்ததாக பேசிய SME ஆப்பரேட்டர் அசோசியேசன் NLC, தோழர் சிவசண்முகநாதன் அவர்கள் பேசுகையில், சுரங்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஐந்தாயிரம் டன் வெட்டினோம். பிறகு 1990-களில் 23000 நிரந்தர தொழிலாளிகள் வேலை செய்த காலத்தில் 65 லட்சம் டன் உற்பத்தி செய்தோம். தற்போது மூன்று சுரங்கம் உள்ளது. வெறும் 12000 தொழிலாளிகள் தான் வேலை செய்கிறோம். ஆனால் 300 லட்சம் டன் உற்பத்தி செய்கிறோம். அந்தளவிற்கு தொழிலாளிகள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
அவரை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் அவர்கள் பேசுகையில், 1990 உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு தான் தனியார் முதலாளிகள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் சட்டப்பூர்வமாகவே நடந்து வருகிறது. கர்நாடகாவில் ஜனார்த்தனன் ரெட்டி என்றால் தமிழகத்தில் சேகர் ரெட்டி, வைகுண்டராஜன் போன்றவர்கள் கனிம வளங்களை சூறையாடுகிறார்கள். அதிகாரி முதல் நீதிபதி வரை இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இந்த தொழிலில் ஏகபோக லாபம் வருகிறது. அதனால் தான் கேள்விக்கிடமற்ற முறையில் கொள்ளையடிக்கின்றனர். இந்த அரசும் இதனை அனுமதிக்கிறது. இந்த கூட்டுக்கொள்ளைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் திரண்டெழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
அடுத்ததாக தெலுங்கானாவில் , காண்டிராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் , சிங்கர் நிலக்கரி சுரங்கம் தோழர் வெங்கண்ணா அவர்கள் பேசுகையில், தெலுங்கானாவில் உள்ள சுரங்கங்களில் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். முதலாளிகள் சுகபோகமாக வாழ்கிறார்கள். காரணம், அங்கு சுரங்கங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தினார்.
அவரை தொடர்ந்து மஸ்தூர்சிங் சமிதியின் பொதுச் செயலர், தோழர் பச்சாஸ் சிங் அவர்கள் பேசுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மலைகள் அனைத்தும் தனியார் முதலாளிகளால் சூறையாடப்படுகிறது. முதலாளிகளின் இந்த வெறிக்கு அப்பாவி தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப்போல் நடத்தப்படுகின்றனர். அதிக நேரம் வேலை, சம்பளம் குறைவு. குடும்பமோ தெருவில் நிற்கக்கூடிய அவலநிலை தான் உள்ளது. கடுமையாக உழைப்பது நாம். ஆனால், அதன் பலனை அனுபவிப்பது மாஃபியா கும்பல். இந்த கொள்ளை கும்பலுக்கு எதிராக நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார். மொழி வேறாக இருப்பினும் “தொழிலாளி” என்ற பாட்டாளி வர்க்க உணர்வூட்டினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய IFTU பொதுச் செயலாளர் தோழர் பிரதீப் அவர்கள், 2013 ல் நடந்த பெரு மாநாட்டில் இந்தியாவில் இருந்து IFTU தொழிற்சங்கம் மட்டும் தான் கலந்து கொண்டது. இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், கலந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் 22 பில்லியன் தொழிலாளர்கள் சுரங்க தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில பன்னாட்டு முதலாளிகளே இந்த சுரங்கங்களை நடத்துகின்றனர். இவர்களுடைய லாபவெறிக்கு பலியிடப்பட்ட சுரங்க தொழிலாளர்கள் ஏராளம். தொழிலாளர்கள் கொடும்சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் தான் எடுக்கிறார்கள்.
கடந்த இருப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுரங்க தொழிலாளர்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டங்கள் தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளி வர்க்கம் எழுச்சியுற வேண்டும். அப்பொழுது தான் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் விடுதலை பெற முடியும். அந்த வகையில் சுரங்க தொழிலாளர்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு -2017 பிப்ரவரி 2 முதல் 5 ம் தேதி வரை தெலுங்கானாவில் உள்ள கோதாவரி காணியில் நடைபெற உள்ளது. தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்க உணர்வுடன் அணிதிரள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
(தோழர். பிரதீப் ஆங்கில உரையை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர். விஜயகுமார் மொழி பெயர்ப்புரையாற்றினார்.)
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் NLC உறுப்பினர் தோழர்.சங்கர் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது.
– வினவு செய்தியாளர்.