முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !

மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !

-

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து! ஆர்ப்பாட்டம்!

இடம் : வள்ளுவர் கோட்டம்  
நாள் : 22.12.2016                                                                                         நேரம் : காலை 11.30 மணி

prpc-dec-22-demo-banner-fb2

ன்பார்ந்த நண்பர்களே!

நவம்பர் 23 ஆம் தேதியன்று கேரளா – கர்நாடக – தமிழக எல்லைகளின் முச்சந்திப்பில் உள்ள நிலாம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டு மத்தியக் குழு உறுப்பினர் குப்பு தேவராஜ் (60), அஜிதா (45) என்ற இரண்டு மாவோயிஸ்டு தோழர்களை, “தண்டர் போல்ட்” என்ற கேரள போலீசின் கமாண்டோ படை சுட்டுக் கொலை செய்திருக்கிறது. கொல்லப்பட்ட இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் அஜிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். நோய்வாய்ப்பட்ட நிலையில், நிராயுதபாணிகளாக இருந்த அவ்விருவரும கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிக்கும் வகையிலான காயங்கள் உடல் முழுதும் உள்ளதாக உடலைப் பார்வையிட்ட மனித உரிமை அமைப்பினர் கூறுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் சுட்டதாகவும், பதிலுக்கு தாங்கள் சுட்டதில் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் போலீசு கூறும் பொய்க்கதையை மார்க்சிஸ்டு முதல்வர் பின்னாரயி விஜயன் வழிமொழிந்திருக்கிறார். இதனை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூ கட்சியே நிராகரித்திருக்கிறது, மார்க்சிஸ்டு அரசு நரேந்திர மோடியின் பாதையைப் பின்பற்றுவதாக விமரிசித்திருக்கிறது.

ஒரு மாதத்துக்கு முன்னர், அக்டோபர் 24 ஆம் தேதியன்று, ஆந்திரா ஒரிசா எல்லைப்புறத்தில் மல்கான்கிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில், மாவோயிஸ்டுகள் 32 பேரை ஆந்திர ஒரிசா போலீசு படையினர் சுட்டுக் கொன்று விட்டு மோதலில் கொல்லப்பட்டதாக கதையளந்தனர். மோதல் நடைபெற்றதாக போலீசால் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி சுமார் 300 அடி சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த எந்தவொரு தடயமும் இல்லை என்பதை மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்கள் கூறின.

மாவோயிஸ்டுகளுக்கு உணவு எடுத்து சென்றவர்கள் மூலம், அவர்களுடைய உணவில் நஞ்சு கலந்து, நஞ்சுண்டு மயங்கியபின் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று மாவோயிஸ்டு கட்சியின் ஊடகத் தொடர்பாளர் ஷியாம் குற்றம் சாட்டியிருந்தார். மாவோயிஸ்டுகளுடன் பழங்குடியினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, பலரைக் காணவும் இல்லை. இந்தப் போலி மோதல் கொலையை கண்ணால் கண்ட சாட்சியான ஒரு பழங்குடிப் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

அக் 31 ஆம் தேதியன்று இசுலாமிய மாணவர் இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள் என்று போலீசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக் கைதிகளாக போபால் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த 8 பேர், போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.. அடுத்த சில நாட்களில் அவர்களது வழக்கில் தீர்ப்பு வெளியாக இருந்தது என்றும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்ற நிலையில்தான் இந்த போலி மோதல் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும் அவர்களது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருக்கிறார். நிராயுதபாணிகளாக அவர்கள் நிற்பதும், பின்னர் சுட்டுக் கொல்லப்படுவதும் வீடியோ காட்சிகளாகவே வெளிவந்திருப்பதைக் காட்டி சர்வதேச பொதுமன்னிப்பு சபை அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது. “அவர்களைச் சுட்டுக் கொன்றது நல்லதுதான். இவர்களுக்கு சோறு போடும் செலவு அரசாங்கத்துக்கு மிச்சம்” என்று ஆணவமாக அந்தக் கொலையை நியாயப்படுத்தியிருக்கிறார் அம்மாநிலத்தின் பாஜக முதல்வர் சவுகான்.

இம்மூன்றும் போலி மோதல் கொலைகள்தான் என்பதை ஊடகங்களும் உண்மை அறியும் குழுக்களும் ஐயத்துக்கிடமின்றி நிறுவியிருக்கின்றன. “போலி மோதல் கொலை” என்ற குற்றச்சாட்டு எழுமாயின் உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவேண்டும் என்றும், முகாந்திரம் இருக்குமாயின் சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. “மாவோயிஸ்டு கட்சியில் ஒருவர் இருப்பதாலேயே அவரைக் கைது செய்யமுடியாது” என கேரள உயர்நீதிமன்றமும் சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. “தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே மற்றவர்களது உயிரை போலீசார் பறிக்க முடியும்” என்பதுதான் சட்டத்தின் நிலை.

இருப்பினும் சட்டம், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகிய அனைத்தையும் போலீசார் மீறுகிறார்கள் என்பது மட்டுமல்ல, இவை சட்ட விரோதக் கொலைகள் என்று அப்பட்டமாகத் தெரிந்தும் அவற்றை பாஜக முதல்வர் மட்டுமின்றி மார்க்சிஸ்டு முதல்வரும் நியாயப்படுத்துகிறார். தங்களுடைய தீர்ப்புகள் மீறப்படுவது கண் முன்னே தெரிந்தபோதும், நீதிமன்றங்கள் கண்ணை மூடிக் கொள்கின்றன. தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல ஊடகங்கள் இந்த சட்டவிரோதக் கொலைகளை ஆதரிக்கின்றன. மொத்தத்தில் துப்பாக்கியின் ஆட்சி நேரடியாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடுவதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குவதாகவும், ஆதனால்தான் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறி போலீசு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. உண்மை அதுவல்ல. மாவோயிஸ்டுகளின் அரசியல் கொள்கையை துப்பாக்கி குண்டுகளால் அரசு எதிர்கொள்கிறது. மத்திய இந்தியாவின் காடுகளிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி விட்டு, அங்கு புதைந்திருக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குவதற்காக, மாவோயிஸ்டு ஒழிப்பை ஒரு முகாந்திரமாகவும் பயன்படுத்திக் கொள்கிறது. அதனால்தான், துப்பாக்கி ஏந்தியிருக்கும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை மட்டுமல்ல, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும் மாவோயிஸ்டு முத்திரை குத்தி ஒடுக்குகிறது மோடி அரசு.

இத்தகைய கொலைகளை போலீசு படைகள் மட்டும் செய்யவில்லை. பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்து மதவெறி அமைப்புகளும் செய்கின்றன. அக்லக் என்ற முஸ்லிம் முதியவர் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலைக்குற்றவாளி நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன், அவனுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செய்து, லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்குகிறார் பாஜக வின் மத்திய அமைச்சர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய மூன்று பேரையும் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்களும் ஒரே மாதிரியானவை என்கிற அளவுக்கு புலனாய்வு முடிவுகள் வந்த பின்னரும் இதுவரை கொலையாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

கார்ப்பரேட் கொள்ளைக்கும், இந்து மதவெறிக்கும் அடிபணிய மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் துப்பாக்கித் தோட்டாவை எதிர்கொண்டாக வேண்டும் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது நாடு. ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே நின்று நிலவுவதாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. கொல்லப்படுவதற்கு முன்னால் அல்லது சிறையில் தள்ளப்படுவதற்கு முன்னால் நாம் விழித்துக் கொள்ளவேண்டும். இங்கே ஜனநாயகம் இல்லை என்பதைப் புரிந்து கொள்வதுதான், நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான முதல் படி. கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளுக்காகவும், இசுலாமிய இளைஞர்களுக்காகவும், கல்புர்கி முதலானோருக்காகவும் நாம் எழுப்பும் போராட்டக் குரல், அவர்களை நமக்கு உயிருடன் திருப்பித் தரப்போவதில்லை. ஆனால் நாம் எழுப்புகின்ற அந்தப் போராட்டக் குரல்தான், மக்களுக்காகப் போராடும் ஜனநாயகவாதிகளையும், மக்களின் வாழ்வுரிமைகளையும் மரணத்திலிருந்து காப்பாற்றும்.

கண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்தலைமை:
திரு.சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்

கண்டன உரைகள்:

திரு.த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை                      

தோழர்.தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்

பேராசிரியர் சிவக்குமார்

தோழர். சி.ராஜீ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

வழக்கறிஞர் கு.பாரதி
பொறுப்பாளர்,ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்

தோழர் வெங்கடேசன்,
மாநில பொருளாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்

வழக்கறிஞர் பாவேந்தன்,
தமிழக மக்கள் முன்னணி

தோழர்.A.S.குமார்
மாநிலக் குழு உறுப்பினர்,
சி.பி.ஐ (மா.லெ) விடுதலை

தோழர்.மா.சி.சுதேஷ் குமார்,
மாநில இணைச்செயலர்,
புதியஜனநாயகத்-தொழிலாளர்முன்னணி

திரு.இரா. சங்கரசுப்பு,
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் பார்வேந்தன்,
மாநிலசெயலாளர், வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகரமாணவர்-இளைஞர் முன்னணி

அனைவரும் வருக!

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஒருங்கிணைப்பு:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC),
சென்னை.
தொடர்புக்கு : 90946 66320

மக்கள் கலை இலக்கியக் கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.

  1. அது எண்ணாக சார் எதற்கு எடுத்தாலும் மாவோஸ்டுகள் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க கனிமவளங்களை பாதுகாக்க என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் ??? ஏன் கனிமவளங்களில் நாட்டின் மற்ற மக்களுக்கு எல்லாம் உரிமையில்லையா ? பழங்குடி மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் தானே அவர்கள் அனைத்து உரிமைகளும் பெரும் போது நாட்டிற்கு கனிமவளங்கள் மீது உரிமையில்லை என்று எந்த அர்த்தத்தில் மாவோ சொல்கிறார்கள் ? இதற்கு ஏன் தீவிரவாதம் வன்முறை செயல்கள் ?

    சரி மாவோ துப்பாக்கி ஏந்தி இருக்கிறார்கள் எனும் போதே அவர்கள் பாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர் கொள்வதற்கு தானே ?

    அப்படி மக்கள் மீது அக்கறையிருந்தால் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெற்று அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டியது தானே… யார் அவர்களை தடுத்தது ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க