privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்தோழர் கோட்டை நினைவேந்தல் பொதுக்கூட்டம்

தோழர் கோட்டை நினைவேந்தல் பொதுக்கூட்டம்

-

தோழர்  கோட்டை நினைவேந்தல்  பொதுக்கூட்டம் ! கொடிக்கம்பம் – உருவபடம் திறப்புவிழா !

துரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், முண்டுவேலம்பட்டியில் 15.12.2016 அன்று மாலை 4:00 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பில், கடந்த 18.11.2016- அன்று மரணமடைந்த  தோழர் கோட்டை அவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம்   நடைபெற்றது.

tholar kottai (1)விவசாயிகள் விடுதலை முன்னணி  உசிலை வட்ட செயலாளர் தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க தோழர் துரைசண்முகம், மக்கள் அதிகாரம் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருமங்கலம் வி.வி.மு அமைப்பாளர் தோழர் வீரணன், செக்கானூரணி  வி.வி.மு தோழர் ஆசை,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர் வழக்கறிஞர் பா.நடராஜன், முண்டுவேலம்பட்டி கிராம நலக்கமிட்டி தலைவர் சோலை, சி.பி.எம். தோழர் முத்துப்பாண்டி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் தோழர் ஆர்.பாண்டி, மற்றும் 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் திரு.பெருமாள் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி நிறைவுரை நிகழ்த்தினார். தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.   இந்த நினைவேந்தல் பொதுக்கூட்டம் பொது வாழ்க்கையில் நமது கடமை என்ன என்பது குறித்து அந்தப் பகுதி மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தோழர் சந்திரபோஸ் தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் அமைப்பை உயர்த்திப் பிடித்து  செயல்பட்டு மறைந்த தோழர் கோட்டைக்கு சிவப்பஞ்சலி செலுத்தி, தனது தலைமை உரையை துவங்கினார். வி.வி.மு அமைப்பு  உசிலம்பட்டியில் நடத்திய  எழுச்சிமிகு போராட்டங்களின் வாயிலாக தி.மு.க அமைப்பில் இருந்த  தோழர் கோட்டை  வி.வி.மு அமைப்பில் சேர்ந்ததையும், அதன் பிறகு தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு  இன்றுவரை  விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி வாழ்ந்ததையும் நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த உறுதி ஏற்போமென பேசினார்.

tholar kottai (4)இரங்கல் உரை நிகழ்த்திய முண்டுவேலம்பட்டி கிராம நலக்கமிட்டி தலைவர் சோலை, தோழர் கோட்டை பொதுச்சொத்தை காப்பாற்றுவதிலும்   அதனை பராமரிப்பதிலும் மிகவும் திறமைவாய்ந்தவர். அவர் பசி அறியாதவர்  பொது  வேலைகளுக்குச்  செல்லும்போது அந்த வேலையை முடிக்காமல் உணவு அருந்தமாட்டார். அதிகாரிகளைச் சந்தித்து மக்களின் உரிமைகளை  பேசுவதில்   மிகவும் துணிச்சலானவர்  என்று அவருடன் இருந்து செயல்பட்ட நினைவுகளை பதிவு செய்தார்.

பார்வர்ட் பிளாக் ஆர்.பாண்டி தனது இரங்கல் உரையில் தோழர் கோட்டை இறப்பதற்கு முதல் நாள் மோடியின் கருப்பு பணம் மோசடி நாடகத்தை அம்பபலப்படுத்தி பிரசுரம் வீடுவீடாக வினியோகம் செய்தது மட்டுமல்லாமல்   பத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த ஒரு இடத்தில் அந்த பிரசுரத்தை சத்தமாக வாசிக்க ஆரம்பித்தார். ஏனென்று கேட்டதற்கு அவங்க நோட்டீசு வாங்க மாட்டங்க, வாங்கினாலும் படிக்க மாட்டாங்க அதனால்தான்  நானே வாசிக்க ஆரம்பித்தேன், இப்ப எல்லோரும் கேட்டுத்தான ஆகணும் என்று கூறினார். கோட்டை அமைப்பில் இணைவதற்கு முன் போதைக்கு அடிமையாகி இருந்தார், அமைப்பிற்கு வந்தபின் வி.வி.மு அவரை  நல்வழிப்படுத்தி ஒரு சிறந்த மனிதனாக மாற்றி விட்டது.

சி.பி.எம்.தோழர் முத்துப்பாண்டி தனது உரையில் நல்ல தோழரை, நல்ல நண்பரை, நல்ல உறவினரை இழந்து விட்டேன். கம்யூனிச கொள்கையை 100 சதவீதம் நிலை நாட்டியவர். முதலாளித்துவ சட்டத்தை உடைத்தெறிந்து  ஊர் பொது திருமணமண்டபம் கட்டுவதில் முழுமையாக ஈடுபட்டவர்.

வி.வி.மு தோழர்  வீரணன் தனது உரையில் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற  முண்டுவேலம்பட்டி மக்களே, தோழர் கோட்டை உங்கள் ஊரில் ஒரு பொதுக்கூட்டம் போடவேண்டும் என்று பலமுறை பேசினார். ஆனால் இந்த பொதுக்கூட்டம் அவருக்காகவே  இன்று நடைபெறுகிறது. பாட்டாளி வர்க்க அரசு அமைந்தால்தான் அனைத்து மக்களும் நலமாக வாழமுடியும் என்ற தோழர் கோட்டையின் நினைவுகளை நனவாக்க அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வி.வி.மு  அமைப்பில் இணைந்து செயல்பட வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

தோழர் . மோகன்
தோழர் . மோகன்

58 கால்வாய் செயலாளர்  ஐயா.  பெருமாள் தனது உரையில்  தோழர் கோட்டை சஞ்சீவி இலை போல் இந்தப் பகுணியில் செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அவரைப் போல் நாமும் விவசாயிகளின் நலனை உயர்த்திப் பிடிப்போம் சபதமேற்போம், என்றார்.

தோழர். மோகன் தனது உரையில் வாழும்போது  செத்துக் கிடக்கும் உள்ளங்கள் இருக்கும் மக்களிடையே,  தோழர். கோட்டை செத்தும்  எல்லோருடைய மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  நல்ல பண்புகளோடு வாழ்வது  உலகத்திலேயே பெருமையானது.  பொது வாழ்க்கையில் ஈடுபடுவதே  கோட்டையின் சிறப்பு. பொதுவுடமை சிந்தனை உள்ளவர்கள் எப்பொழுதுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்கள்.  தோழர் கோட்டையும் பொதுவுடமை சிந்தனைக்கும், தோழமைக்கும் உரித்தானவர். தோழர் கோட்டையை மண்னில் புதைத்துவிட்டோம் அவருடைய சிந்தனையை நம்முடைய அனைவரின் சிந்தனையில் புதைத்து  அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம் என்று பேசினார்.

தோழர் துரைசண்முகம் தனது உரையில் இந்த ஊரில் தோழர் கோட்டை மையப்புள்ளியாக இருந்து சமூக தொண்டு செய்து வர்க்க உணர்வோடு பண்பாட்டு உணர்வோடு கடைசிவரை வாழ்ந்து இறந்துள்ளார்.  ஓட்டுக்கட்சி அரசியலிலிருந்து வந்த தோழர் கோட்டையை வி.வி.மு அமைப்பு ஒழுக்கமுள்ள சமூக மனிதனாக மாற்றியுள்ளது.  தோழர் கோட்டை அன்றிலிருந்து சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்துள்ளார். கம்யூனிஸ்ட்கள்  சாவைக்கண்டு பயப்படுவதில்லை. தியாகம் அற்பணிப்போடு கொள்கையை உயர்த்திப்பிடித்து வாழும் கம்யூனிஸ்ட்டுகள்தான் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கு பாதுகாவலர்களாக இருக்க முடியும்.

தோழர் . துரை. சண்முகம்
தோழர் . துரை. சண்முகம்

நமது நாட்டில் மக்களுக்கு நல்ல அரிசிக்கு வழியில்லை, மோடி வல்லரசு கனவு காண்கிறார், இன்று படித்த இளைஞர்கள்   ஏதுமற்றவர்களாக  மாற்றப்பட்டுள்ளார்கள். வ.உ.சி மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் பிள்ளைகளை  பார்த்து உங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே என்று கவலைப்படவில்லை.  “இந்த அடிமை இந்தியாவில் உங்களை விட்டு விட்டு சாகப்போகிறேனே” என்றுதான்  கவலைப்பட்டார்.    இன்று இந்தியாவை காப்பாற்ற ஒரே வழி வர்க்க போராட்டம் தான், அது தான் நம் சக்தி, உழைப்பவனுக்கு அதிகாரம் வேண்டும், அதிகப்படியான மக்கள் மகிழ்சியை தேடி ஓடுகிறார்கள். போராட்டம் செய்வதில்தான் மகிழ்ச்சி என்றார் கார்ல் மார்க்ஸ். நல்லதை செய்தவனையே கெட்டவன் என்றும், கெட்டது செய்தவனை நல்லவனாக சித்தரிக்கும் இந்த சமூகத்தில் நமது தோழர் கோட்டை சமுதாயத்திற்கு நல்லது மட்டுமே செய்து நமது ரத்தத்திலும் சித்தத்திலும் கலந்து மறைந்துவிட்டார். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடருவோம், என்று  முடித்தார் தோழர் துரை சண்முகம்.

தோழர் குருசாமி தனது நிறைவுரையில் தோழர் கோட்டைக்கு நடக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் புகழுக்காக நடத்தப்படவில்லை. புகழுக்கு உரியவராக தன்னை மாற்றிக்கொண்ட  தோழர் கோட்டைகாக நடக்கிறது. நீ  விழித்துக்கொள் உரிமை பெறவில்லையென்றால் ஊரில் குடியிருக்க முடியாது. ஈவு  இறக்கமற்ற கொடியவர்கள்  நம்  தலை மீது ஈட்டியை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் பலம், பலவீனம் அற்பத்தனத்திற்கு ஆசைபடாமல் அற்பணிப்பு உள்ள தோழராக புரட்சிகர அமைப்பில் ஈடுபட்டு இந்த சமூக மாற்றத்தில் பங்கேற்போம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

கம்பம் பகுதி தோழர்கள்  சிறப்பானதொரு புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி.
உசிலம்பட்டி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க