Thursday, January 28, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து

பத்து தொழிலாளிகள் பலி : லால்மடியா நிலக்கரி சுரங்க விபத்து

-

ஜார்கண்ட் கோடா மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சரிந்த மண்ணுக்குள் சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.

mine-jharkhand1லால்மடியா திறந்தவெளி கனிமச் சுரங்கத்தில் கடந்த வியாழன் அன்று, ஒரு பகுதி நிலம் சரிந்து விழுந்தது 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், கனரக வாகனங்களையும் மண்ணில் புதைத்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு-பகலாக அவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

“இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே மேலும் இரண்டு அல்லது மூன்று உடல்கள் இருக்கலாம் என்று சுரங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்று ஜார்கண்ட் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.கே. மல்லிக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

தொழிலாளிகளில் சிலர் சரிவுக்கு முன் விபத்து பகுதியிலிருந்து தப்பிவிட்டனர். சுமார் 50 பேர் உள்ளே சிக்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் மல்லிக் கூறியுள்ளார்.

போலீசும் மீட்பு குழுவினரும் சிக்கியுள்ளோரைக் கண்டறிய மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சரிந்துள்ள பெரும் பாறைகளை, சிதைந்தும் கவிழ்ந்துமுள்ள லாரிகளை நீக்க மண் அள்ளும் இயந்திரங்களையும், வெறும் கைகளையும் பயன்படுத்துகின்றனர்.

மோசமான வானிலை மற்றும் மூடுபனியின் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் வெள்ளி காலை வரை தாமதமாகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கூறியுள்ளார்.

இந்தச் சுரங்கம் அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமான ’கிழக்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்திற்கு’ (Eastern Coalfields Limited) சொந்தமானது. வியாழன் அன்று இரவு 7:30 மணியளவில் தொழிலாளர்கள் வெளியேறத் தலைப்பட்ட போது சுமார் 250 மீட்டருக்கும் அதிகமான பகுதி சரிந்து விழுந்ததாக நிறுவனத்தின் மேலதிகாரி நிலாத்ரி ராய் தெரிவிக்கிறார். டஜன் கணக்கான வாகனங்களும் இயந்திரங்களும் இடிபாடுகளின், குவியல்களின் கீழ் சிக்கி மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

mine-jharkhand2ECL நிறுவனத்தின் சார்பாக மஹாலட்சுமி பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனம் சுரங்க அகழ்வில் ஈடுபட்டு வந்தது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 4 மணியளவில் முதல் சரிவு ஏற்பட்டது. பின்னர் 6 மணியளவில் இரண்டாவது முறை சரிவு ஏற்பட்டது. இரண்டு முறையும் எச்சரிக்கை மணியை யாரும் பொருட்படுத்தவில்லை. மூன்றாம் முறை 7:30 மணியளவில் பெருமளவில் சரிவு ஏற்பட்ட போது யாருக்குமே வினையாற்ற கூட நேரம் கிடைக்கவில்லை என்கிறார் ஓட்டுநரான முகமது ராப். இவர் இரவு 9:00 மணி ஷிப்டுக்கு காத்திருந்ததால் விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

ஏற்கனவே தோண்டியெடுக்கப்பட்ட உறுதியற்ற மண் குவியலில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே சிறு சிறு நிலச்சரிவுகள் அங்கு நடந்து வந்ததாகவும் அதிகாரிகள் மெத்தனமாக அவற்றை கண்டுகொள்ளவில்லை என்றும் ஓட்டுநராக வேலை செய்யும் ராஜன் குற்றம் சுமத்துகிறார். சுரங்கத்தில் அந்தப் பழைய மண் குவியலின் அடியில் நிலக்கரியை எடுத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளனர். 250 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகளின் மீது மொத்த 250 மீட்டர் உயர மண் குவியலும் விழுந்துள்ளது.

ECL மற்றும் மஹாலட்சுமி நிறுவனங்களின் அதிகாரிகள் இது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சரிவுக்கு காரணமாக இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. முன்கண்டிராத இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலங்களின் ஒன்றான ஜார்க்கண்டில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இந்தியாவின் கனிம வளமிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் ஜார்கண்ட்  உள்ளது. நாட்டின் நிலக்கரி வளத்தில் சுமார் 29 சதவீதத்தை இம்மாநிலம் கொண்டுள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் 570 இந்திய சுரங்கங்களில் 38 பேர் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை தொழிலாளிகள் கொல்லப்பட்டும் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்வதில்லை. அப்படி செய்திருக்கிறார்களா என்று தனியார் நிறுவனங்களையும் சோதிப்பதில்லை. வளர்ச்சி என்ற பெயரில் உப்பவைக்கப்படும் நகரங்களுக்கு, உருவாக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்சாரம் அதிகம் வேண்டும் என்பதால் நிலக்கரி உற்பத்தி மேலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளிலோ, ஜார்க்கண்டின் நிலக்கரி சுரங்ககளிலோ கொல்லப்படும் தொழிலாளிகளுக்கு அந்த வளர்ச்சியின் வாய்ப்புக்கள் இல்லை என்பதோடு அவர்களே அதன் பலிகடாக்களாவும் இருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்:
Jharkhand mine collapse: Warning ignored, caved in 4 hrs later
At least 10 dead in Jharkhand coal mine collapse

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க