Sunday, January 24, 2021
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது !

அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது !

-

“பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து!” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.  கடந்தவாரம் சில உரைகளை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி வருமாறு..

“நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என சுட்டுக்கொல்கிறார்கள்”

– வழக்கறிஞர் பார்வேந்தன்

பார்வேந்தன்
வழக்கறிஞர் பார்வேந்தன்

“ஆளும் பா.ஜனதாவும், இதற்கு முன்பு ஆண்ட காங்கிரசு கட்சியும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நக்கி தின்பதையே கொள்கையாக கோட்பாடாக வைத்திருக்கிறார்கள். ஆற்று நீரையும், மணலையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். சுட்டுக்கொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வன்னமையாக கண்டிக்கிறது. அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் போராடக்கூடிய இயக்கமாக இருக்கிறீர்கள். உங்களோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக நிற்போம்”

– வழக்கறிஞர் பார்வேந்தன்,
வழக்கறிஞர் அணி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

“வரலாறு நெடுகிலும் போலி மோதல் படுகொலைகள்! ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் யாரும் ஆண்டதேயில்லை”

– தோழர் தியாகு.

“1930-களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த ஒரு விவாதத்தின் பொழுது, சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை சட்டமான ரெளலட் சட்டம் போல ஒரு சட்டம் தேவையா? என்ற விவாதம் எழுந்தது. ”அப்படி ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு நாளும் பிரதமராக ஆளமாட்டேன்” என்றார் நேரு. ஆனால், ’சுதந்திர’ இந்தியாவில் ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் இருந்ததேயில்லை.

தியாகு
தோழர் தியாகு

ஆட்சி செய்த காங்கிரசு, திமுக, சிபிஐ, இப்பொழுது ஆட்சி செய்கிற பா.ஜனதா, சிபிஐ (எம்) அதிமுக என ஆட்சியில் இருந்தவர்கள் அனைவருமே வரலாறு முழுவதும் போலி மோதல் கொலைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். சாரு மஜூம்தார், வர்கீஸ், பாலன் என எண்ணற்ற நக்சலைட்டுகள் மட்டுமல்ல, சீவலப்பேரி பாண்டி, வீரப்பன் என பலரையும் சுட்டு கொன்றுகொண்டேயிருக்கிறார்கள்.

”உன்னுடைய சட்டத்தின் படி கைது செய்! சிறையில் அடை! வழக்கு நடத்து! சொத்துக்களை பறிமுதல் செய்! தூக்கு தண்டனை கூட கொடு! ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கட்டிவைத்து ஏன் கோழைத்தனமாக சுட்டுக்கொல்கிறாய்? போலீசில் யாரெல்லாம் கேடிகள், பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் என தெரிய வேண்டுமா? ஆண்டுதோறும் அண்ணா விருது வாங்குகிறவர்கள் தான் அவர்கள்.

நாம் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சனை. போலி மோதல் கொலையைப் பற்றிய மக்களிடம் உள்ள கருத்து தான்! மக்கள் மத்தியில் நாம் தொடர்ந்து எடுத்து சொல்வோம். அதில் போலி மோதல் கொலைகள், கொலைகாரர்கள் எல்லாம் பொசுங்கிபோவார்கள்”

– தோழர் தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்

“மக்கள் விரோத அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது! கேட்டால் சுடுவோம் என்பது தான் பதிலாக இருக்கிறது”

– தோழர் வெங்கடேசன்

வெங்கடேசன்
தோழர் வெங்கடேசன்

“இந்தியாவில் மூன்று இடங்களில் போலி மோதல் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். போராடுகிற மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்கவேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு கிடையாது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களிலும், சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டங்களிலும் மக்களை கையாண்ட விதத்தை நாடே பார்த்தது. இந்த அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது. கேட்டால் சுடுவோம் என்கிறது. போராடும் மக்களோடு அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடுவதன் மூலம் தான் அடக்குமுறையை முறியடிக்கமுடியும்! நமது உரிமைகளையும் பெறமுடியும்!”

– தோழர் வெங்கடேசன்,
மாநில பொருளாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

“எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்களை இந்துத்துவ அடிப்படைவாதிகள் கொல்கிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை எதிர்ப்பவர்களை அரசு சுட்டுக்கொல்கிறது”

– தோழர் குமார்.

kumar
தோழர் A.S. குமார்

“இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் என பலரும் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை தடுப்பவர்களை போலி மோதல் படுகொலைகள் மூலம் மத்திய மாநில அரசுகள் சுட்டுக்கொல்கின்றன. பா.ஜனதா ஆட்சி தனது வியாபம் ஊழலை மறைக்க தான் மத்திய பிரதேச போபாலில் 8 சிமி அமைப்பைச் சேர்ந்தவர்களை சுட்டுக்கொன்றார்கள். ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறீர்கள். இணைந்து போராடுவோம்! இறுதி வெற்றி நமதே!”

– தோழர் A.S. குமார்,
மாநில குழு உறுப்பினர்,
சிபிஐ மா.லெ. விடுதலை.

“மோதல் கொலைகளை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி IPC 302ன்படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்”

-மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

1970 காலகட்டத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்பாரி தோழர்கள் தேவாரத்தின் தலைமையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கில் “மோதல் கொலைகளின் பொழுது, போலீசு மீது IPC 302 – படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்” என உத்தரவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் இதை வலியுறுத்துகிறது. அதை இன்றைக்கு வரைக்கும் தமிழக அரசு மதிக்கவேயில்லை.

sankara subbu
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

தோழர்கள் குப்புராஜூம், அஜிதாவும், உடல்நலமின்றி இருந்தவர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுடைய உறவினர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு கூட உடல்களை தரமறுக்கிறது அரசு. எப்பொழுதுமே நீண்ட நெடிய போராட்டத்தில் தான் உடல்களை பெறவேண்டியிருக்கிறது. இப்படி தான் மனித உரிமைகளின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கொலை செய்தவர்கள் மீது 302 சட்ட பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய நாம் போராடவேண்டும்”

– மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,
சென்னை உயர்நீதிமன்றம்.

“சட்டங்களை குப்பைக்கூடையில் போட்டு, அதில் கால்வைத்துதான் ஆட்சியே செய்கிறார்கள். உரிமைகளுக்காக போராடும் மக்கள் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகி விடுகிறோம்”

– தோழர் இராஜூ

“எதற்காக இந்த மோதல் படுகொலைகள்? மாவோயிஸ்டுகளை மட்டுமல்ல! ஆந்திராவில், 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். போபாலில் சிமி அமைப்பைச் சார்ந்தவர் 8 பேரை சுட்டுக்கொன்றார்கள். பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும் கூட படுகொலை செய்கிறார்கள். அரசியல் காரணம் என்ன? மக்களின் வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பேன் என்று உறுதியேற்ற அரசு, அதற்கு எதிராக செயல்படும் பொழுது, வருகிற எதிர்ப்பு குரல்களை சுட்டுக்கொல்வதன் மூலம் எதிர்கொள்கிறது.

தடா, பொடா, உபா என ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை சட்டங்களை உருவாக்கி, தண்டர்போல்டு, அதிரடிப்படை என பல்வேறு பெயர்களில், வானாளவிய அதிகாரத்தோடு அதிகார திமிரோடு வலம் வருகிறார்கள். ஆங்கில ஆட்சியை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள். கட்டபொம்மன், மருது வீரர்களை தூக்கில் ஏற்றித்தான் கொன்றான். இவர்களோ கட்டி வைத்து கோழைத்தனமாக சுட்டுகொல்கிறார்கள். தோழர்கள் குப்புராஜ், அஜிதா அவர்களின் கொள்கைகள் தான் அவர்களை அச்சமூட்டுகிறது. அதனால், இறந்த உடல்களை பார்த்தால் கூட பெரிய இராணுவத்தை பார்த்தது போல அலறுகிறது.

raju
தோழர் இராஜு

சட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது? சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள். அப்படித்தான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரை சுட்டுக்கொன்றார்கள். சட்டங்களை எல்லாம் குப்பைக் கூடையில் போட்டு, அதற்கு மேல் கால்வைத்துதான் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களாகிய நமக்கு தான் சட்டம், சகல வரிகளும்! இவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்து என எப்படி போராடமுடியும்?

இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொள்ளாத மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொண்டவர்கள் மீது கொலைவழக்கு போடுகிறார்கள். பலதலைமுறைகளை பாழாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது அரசின் மீது போர்தொடுத்ததாய் தேசத்துரோக வழக்கு உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டிருக்கிறார்கள். இதற்காக தூக்குத்தண்டனை கூட அரசால் வாங்கித்தர முடியும்.

லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் பாடகர் கோவன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கு. டாஸ்மாக்கை எதிர்த்து பேசிய எங்கள் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி நடப்பது நீதிமன்றத்திற்கு தெரியாதா? நீதிபதிகள் நம் தயவில் தான் இருக்கிறார்கள். மூலதனத்திற்கு பாதுகாப்பாக தான் நாம் இயங்குகிறோம். யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று முடிவு செய்துதான் சுடுகிறார்கள். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக பதவி உயர்வு பெறுகிறார்கள். கெளரவிக்கப்படுகிறார்கள்.

மக்களை ஆளத்தகுதி இழந்துவிட்டது இந்த அரசு. தான் எதற்காக இந்த ஆட்சியில் இருக்கிறோம் என அரசியல் அமைப்பு சட்டத்தின்படி உறுதி ஏற்றதோ அதை செய்ய தவறியது மட்டுமல்ல! அதற்கு எதிராகவும் பச்சையாக நடந்துகொள்கிறது. சட்டபுறம்பானவை அனைத்தையும் சட்டபூர்வமாக்கிவிட்டது. நியாயத்திற்காக, உரிமைகளுக்காக போராடுகிற அனைவரும் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகிவிடுகிறோம்.

கொத்து கொத்தாய் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளுக்காக மட்டும் நின்று போராடி பெற்றுவிடமுடியுமா? முடியாது. வரம்புகளை தாண்டி போராடி, அனைத்து மக்களுக்குமான கோரிக்கைகளுக்காக இணைந்து போராடும் பொழுது அந்தந்த பிரிவினர் கூட‌ தமது உரிமைகளை பெறமுடியும். இப்படி போராடினால், மாற்று அரசியலான மக்கள் அதிகாரம் வெகுதொலைவில் இல்லை!

தோழர் இராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
சென்னை.

  1. தோழர் அஜீதாவை கொன்றது போலிஸ் அல்ல….. ஊழல் ஜனநாயக தேர்தலில் பங்கு பெரும் திரிபுவாத போலி கம்யுனிஸ்டுககளின் அடியாள் நாய்களான கொடுர தண்டர்போல்டு மிருகங்கள்….

    அதே போலி கம்யுனிஸ்டுகளின் ஒரு பிரிவான DYFI தமிழ் நாட்டில் தாக்கபட்ட போது அந்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கும் கடமை நமக்கு இருந்தாலும் அத்தகைய தருணங்களில் அந்த போலிகளின் ஜனநாயக உரிமை மீறல்களை(அஜீதாவை கொன்றது) அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டிஇருக்க வேண்டும் அல்லவா வினவு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க