privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?

சிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ?

-

  • ஒரு ஏக்கருக்கு  3,40,000 ரூபாய்! பழுதில்லாமல் லாபம்தரும்   பப்பாளி!!
  • உழவில்லை! உரமில்லை! பராமரிப்பு இல்லை! 100  தென்னை மரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்!!
  • 60 சென்ட், 70நாள், 90,000ரூபாய்!
    சின்ன வெங்காயம்…பெரிய லாபம்!!
  • அரை ஏக்கர்.. 160 நாள்.. 1,20,000 ரூபாய்! நல்ல வருமானம் தரும் நாட்டு வெண்டை!!
  • ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்! வேர்கடலை!!
  • தினமும் 20 லிட்டர் பால்! மாதம் 60,000 ரூபாய் வருமானம்!!
  • 5 ஏக்கர்நிலம்! ஆண்டுக்கு  6 லட்சம் வருமானம்!

இவையெல்லாம் “வை ராஜா வை…5 வச்சா 10, 10 வச்சா 20” என்ற மூணு சீட்டுகாரன் பேச்சு என நினைத்துவிடக் கூடாது! ‘பாரம்பரியமிக்க’ விகடன் குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் ‘பசுமை விகடன்’ பத்திரிக்கையின் அட்டைப்பட வாசகங்கள். நல்லவேளையாக அம்பானி அதானிகளின் சேவகரான மோடியின் கண்களில் பசுமை விகடன் சிக்காமல் போனதால் தமிழக விவசாயிகள் தப்பித்தார்கள்! இல்லாவிட்டால் இந்நேரம் வருமானவரி நோட்டீசாவது அனுப்பியிருப்பார்கள்.

ஆகா,…விவசாயத்துல இவ்வளவு லாபம் இருக்கா? “ஒரு ஏக்கர் நிலத்தை மூணு லட்சம் ரூபாய்க்கு வாங்கினால்கூட, பப்பாளி பயிரிட்டால் ஒரே வருசத்துல அசலை எடுத்துவிடலாம். அடுத்தடுத்து வருவது எல்லாமே லாபம்தான்” என்று கணக்குப் போட்டு யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் மேற்கண்ட தலைப்புகள்தான் விகடன் குழுமத்தின் மூலதனம்!

 விகடனுக்கு இயற்கை ஆர்வம் பிறந்தது ஏன்?

இன்றைய வேளாண்மை, நவீன வேளாண்மை, அக்ரி பிசினஸ் போன்ற பிற விவசாயப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் ரசாயன உரம் சார்ந்த நவீன விவசாயத்தை ஆதரிப்பவை. விதைப்பு முதல் அறுவடை- விற்பனை வரை விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நவீன தொழில்நுட்ப விவரங்களை எழுதுவார்கள். பசுமைக்குடில், நிழல்வலை, மண்ணில்லா விவசாயம் (hydrophonic cuture), திசுவளர்ப்பு முறை போன்ற உயர் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வார்கள். இதற்காகவே வேளாண் பட்டதாரிகளையும், ஒய்வு பெற்ற பேராசிரியர்களையும் ஆசிரியர் குழுவில் வைத்திருப்பார்கள். வீரியரக விதை, உரம், மருந்து, விவசாயக் கருவிகள் தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர வருவாய்தான் இவர்களின் வருவாய் ஆதாரம்!

ஒரு நாள் விவசாயிகள்
நடுத்தர வர்க்கமே விகடனின் சந்தை

ஏற்கனவே சந்தையிலுள்ள சரக்கையே விற்பதற்குப் பதில் புது சரக்கை சந்தையில் இறக்கினால் நாலு காசு பார்க்கலாமே என்று யோசித்த விகடன் குழுமத்தின் முதலாளித்துவ மூளையில் சிக்கிய சரக்குதான் இயற்கை விவசாயம். இதுவும் விகடனின் சொந்த சரக்கல்ல, திரு.நம்மாழ்வார் அவர்களின் தீவிர முன்முயற்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு விவசாயிகளின் சுய விருப்பத்தினாலும், சில தன்னார்வக் குழுக்களாலும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுதான் இயற்கைவிவசாயம். இப்படி அடுத்தவர் உழைப்பில் உருவான சரக்கையே பளபளப்பான விகடன் கவரில் அடைத்து விற்கும் திருட்டுச் சரக்குதான் பசுமை விகடன்.

ஒருவழியாக சரக்கு தயாராகிவிட்டது. இதை விற்று காசாக்க வேண்டுமானால் வாடிக்கையாளர்களை, அதாவது வாசகர்களைப் பிடித்தாக வேண்டும். விவசாயத்தை புத்தகத்தில் படித்து, மனப்பாடம் செய்து, குறிப்பு எடுத்துக் கொண்டு தொழில்செய்யும் விவசாயிகள் எந்தக் கிராமத்திலும் இல்லை. எனவே பட்டிக்காட்டு விவசாயி நமக்கு ஒத்துவரமாட்டான் என்பது விகடன் வகையறாவுக்கு நன்றாகத் தெரியும். அடுத்துள்ள ஒரே தேர்வு படித்தவர்களைப் பிடிப்பதுதான்! அதுவும் சுற்றுச்சூழல் மற்றும் ரசாயன உரம்-மருந்துகளின் அபாயம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்தால், ‘இயற்கை விவசாயத்தை’ எளிதாக விற்று விடலாம். இந்தப் பிரிவினரிடம் ஏற்கனவே நம்மாழ்வார் பிரபலமாகி இருப்பதால் விளம்பரச் செலவில்லாமலே சந்தை வாய்ப்பும் தயாராக இருக்கிறது. இப்போது சரக்கும் ரெடி. சந்தையும் ரெடி. இனி ‘படித்தவர்கள் மீது பாரத்தைப் போட்டு விட்டு’ துணிந்து களத்தில் இறங்கிவிடலாம் என்றாலும் விகடனின் ‘தொழில்வளர்ச்சிக்கு’ இன்னமும் சில சவால்கள் இருக்கத்தான் செய்கிறது.

 உள்ளங்கையில் விவசாயம்! விகடனின் சாதனை!

விழிப்புணர்வு பெற்ற படிப்பாளிகள் நகரத்தில் இருப்பார்கள். நகரத்திலோ விவசாய நிலம் இல்லை. இவர்களிடம் விவசாய ஆர்வத்தை உருவாக்குவது எப்படி? என்பது முதல் சவால். ஆன்ட்ராய்டு மொபைலை கையில் பிடித்திருக்கும் நடுத்தர வர்க்கத்தின் கைகள், ஆடுமாடுகளைப் பிடிக்குமா? நகரத்து வீதிகளில் கிளம்பும் தூசிக்கே முகத்தை மூடிக்கொள்ளும் இவர்கள் புழுதிக்காட்டில் கால்பதிப்பார்களா? இவர்களை நமது வலையில் வீழ்த்தி தக்கவைப்பது எப்படி? என்பது இரண்டாவது சவால். ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்துவருபவர்களிடம்  “நம்மாழ்வாரின் ஒரே அவதாரம் நமது பசுமை விகடன்தான்” என்று நம்பவைக்க வேண்டும். அப்போதுதான் சந்தையை நிரந்தரமாக தக்கவைக்கமுடியும் என்பது மூன்றாவது சவால். சவால்களை எப்படி முறியடிப்பது?மாடித் தோட்டம்

இலவசத்திற்கு ஆசைப்படுவது நடுத்தர வர்க்கத்தின் பலவீனம். அவள் விகடனில் டவ் ஷாம்பு பாக்கட்டை இலவசமாக கொடுக்கலாம். பசுமை விகடனில் நாட்டு மாட்டையும், ஏர் கலப்பையையும் இலவச இணைப்பாக கொடுக்க முடியுமா? முடியாது. வேறு என்ன செய்யலாம்? கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்.

என்னதான் ஐ.டி. ஊழியராக நவநாகரீக மேக்கப்புகளுடன் நகரத்து வீதிகளில் வலம் வந்தாலும் இவர்களின் ஆணிவேர் கிராமம்தான். செக்குமாட்டைப்போல ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வதால் மனம் சலிப்படைந்து வெறுமையை உணரும்போது  கிராமத்து நினைவுகள் மின்மினி பூச்சிகளாக வந்துமோதுவதை தவிர்க்கமுடியாது. கம்மாக்கரை, பச்சைப்பசேல் வயல்வெளி, ஆலமரத்து விழுது, வேப்பமரத்தின் குளுமை, ஆடு-மாடு மேயும் புல்வெளி, என்று இழந்துவிட்ட தனது கிராமத்து அடையாளங்களிடம் ஆறுதல்தேட மனம் குறுகுறுக்கும். ஆனால், நகரத்து ஆடம்பர வசதிகளை இழப்பதற்கும் மனம் இடம்தராது.

செல்பி விவசாயிகள்.
செல்பி விவசாயிகள்

சமீபகாலத்தில் கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறி புதுப்பணக்காரர்களாக வளர்ந்து வரும் நடுத்தரவர்க்கத்தின் இந்த ஊசலாட்ட உளவியலுக்கு தீர்வு என்ன? உலகத்தையே ஆன்ட்ராய்டில் அடக்கிப் பார்த்துப் பழகியவர்களுக்கு விவசாயத்தையும் அதே அளவுக்கு குறுக்கிக் காட்டமுடியுமா? இதற்கு விகடன் தேர்ந்தெடுத்த வழிதான் “வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம்” இதுவும் ஏற்கனவே உள்ள விசயம்தான். அதில், நாட்டுரகவிதை, மண்புழுஉரம், பஞ்சகாவியா, அமுதக் கரைசல் என்பதைப் புகுத்தி இயற்கைவிவசாயம் என்ற ‘கெட்டப்பை’ உருவாக்கியதுதான் விகடனின் தொழில்நுட்பம். “எங்கள் வீட்டுமாடியில் முதல் கத்திரிக்காய்” “இயற்கைமுறையில் விளைந்த விஷமற்ற வெண்டிக்காய்” என்று முகநூலில் செல்பி போட்டு நடுத்தரவர்க்கமும் பெருமைப்பட்டுக் கொள்ளும்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள்!

வீட்டுத்தோட்டம் என்று ஒருமுறை இறங்கிவிட்டால், மண்கூடை, நாட்டுரக விதைகள், பஞ்சகாவியா, பூச்சிவிரட்டி, மருந்து அடிக்கும் கருவி, நிழல்வலை என பலவற்றையும் தேடி வருவார்கள். பாக்கட் பாலில் நாட்டுமாட்டின் பாலை பிரித்தறிய முடியாமல் ரெடிமேட் பஞ்சகாவியா, ரெடிமேட் அமிர்தக் கரைசலையும் தேடியாக வேண்டும். இப்போது புதிய சந்தை கிடைத்துவிட்டது. இதையெல்லாம் தயாரிக்கும் இயற்கை விவசாயிகளுக்கு புதிய வாடிக்கையாளர்களை கிடைத்து விட்டார்கள்.

வேளான் கண்காட்சி
வாங்குறவனும், விற்பவனும் அவர்களாக சந்தித்துக் கொண்டால் அது சாதாரண சந்தை. அதையே விகடன் ஏற்பாடுசெய்து நடத்தினால் அது வேளாண் கண்காட்சி

விகடனுக்கு விளம்பர வருமானமும் கிடைத்துவிட்டது. ஆனால், “இந்த கொடுக்கல்- வாங்கலில் நமக்கு புரோக்கர் கமிசன்கூட நமக்கு இல்லையே!” என்று விகடன் மூளையை சொரிந்தபோது கிடைத்த ஐடியாதான் வேளாண் கண்காட்சி. அதாவது வாங்குறவனும், விற்பவனும் அவர்களாக சந்தித்துக் கொண்டால் அது சாதாரண சந்தை. அதையே விகடன் ஏற்பாடுசெய்து நடத்தினால் அது வேளாண் கண்காட்சி.

ஒரு 10-க்கு 10 ஸ்டாலுக்கு 50,000 ரூபாயை கட்டணமாக அள்ளலாம்! ஒரு மண்டபத்தைப் பிடித்தால் மூன்றுநாளில் பல லட்சத்தைப் பார்க்கலாம்.  இப்படி வருசத்திற்கு நான்கைந்து இடங்களில் நடத்தினால் செலவுபோக கோடியை நெருங்கலாம். “ஆடு மேய்ச்சது மாதிரியும் இருக்கணும். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும்.” என்பதைப் போல, இதையெல்லாம் நாசூக்காக செய்வதுதான் விகடனின் ‘தொழில்’ திறமை. ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்பவர்களின் பொருளை சந்தைப்படுத்த வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.

சீரகச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, செக்கில் ஆட்டிய எண்ணைகளைக் காட்டி மாடித்தோட்ட ஆசாமிகளை அதிசயிக்க வைத்த மாதிரியும் இருக்கும். தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்த மாதிரியும் இருக்கும். ஆனால் இறுதியில், எல்லாப்புகழும் கல்லாவும் விகடனுக்கே.

பசுமை அங்காடிகளில் விற்பதெல்லாம் இயற்கையானதா?

ரசாயண உரம் மருந்துகளுக்கு மாற்றாக, இலைதழைகளையும், பசுமாட்டு சாணம், மூத்திரம், பால் பொருள்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதையே பசுமை விகடன் வகையறாக்கள் இயற்கை விவசாயம் என்று சொல்கின்றனர். இதில் பசுமாடு கலப்பற்ற நாட்டுரகமாக இருந்தாலும் அதன் தீவனம் ரசாயனக் கலப்பற்றதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மாடுவளர்க்கும் பெரும்பாலான சிறு விவசாயிகள் அருகிலுள்ள ரசாயன உரம் பயன்படுத்தும் வயல்வெளியிலும், தோட்டக்காடுகளிலும் இருந்துதான் தீவனம் கொண்டுவருகின்றனர். இதிலிருந்து தயாரிக்கும் பஞ்சகாவியாவும், அமிர்தகரைசலும் எப்படி இயற்கையானதாக இருக்காது என்று பரிசுத்தம் பேசுகிறார்கள்!

ஆர்கானிக்
பசுமை அங்காடிகளில் விற்பதெல்லாம் இயற்கையானதா?

500 அடிக்கு கீழுள்ள நிலத்தடி நீரில்கூட டி.என்.டி விஷம் பரவியுள்ளதாக இயற்கை ஆர்வலர்களின் ஆய்வுகளே கூறும்போது, பூச்சிவிரட்டிக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு, மிளகாய், வயல்வரப்பில் இருக்கும் நொச்சி, வேம்பு எல்லாமே ரசாயன பாதிப்பில்லாமல் இருக்க முடியுமா? முழுமையான இயற்கைவிவசாயம் செய்யும் நிலத்தில்கூட, அருகிலுள்ள நிலத்தில் பயன்படுத்தும் ரசாயன உரம் மருந்துகளின் பாதிப்பு இருக்கும் என்பதுதான் உண்மை. இதைத் தடுப்பதற்கு, இன்று இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்கள்? நிலத்தில் மட்டுமல்ல, பாசன நீரிலுமுள்ள ரசாயன விசத்தையும் அகற்றுவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அபெடாவின்(APEDA) “ஆர்க்கானிக் சான்றிதழ்” பெற்ற இயற்கை விசாயிகளின் பட்டியலை பசுமைவிகடனிடம் கேட்டுப்பாருங்கள் சென்னை, திருச்சியின் இயற்கை அங்காடிகளில் விற்கும் சரக்குகள் எல்லாம் அந்தப்பட்டியலில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததா? அல்லது கோயம்பேடு சரக்கா? என்று பரிசீலியுங்கள். விகடனின் தொழில் தர்மம் என்னவென்று அப்போது புரியும்.

விகடன் தயாரிக்கும் விவசாய ‘சூப்பர் ஸ்டார்கள்’!

“மண்ணின் வளமே மக்களின் வளம்” என்ற முத்திரையுடன் வரும் பசுமை விகடன், இயற்கை விவசாயம்தான் விவசாயிகளின் விடிவுக்கு ஒரே வழிகாட்டி என்று கூறுகிறது. அதை நிரூபிப்பதற்காக இயற்கை விவசாயம் செய்பவர்களின் வெற்றிக்கதைகளை ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வாசகர்களை புல்லரிக்க வைக்கிறது.

“உழவில்லை! உரமில்லை! பராமரிப்பில்லை! 100 தென்னைமரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம்!”

இது நடப்பு இதழில்(10-01-2017 ) வெளியான ராஜபாளையம் அய்யம்பெருமாள் என்ற வெற்றியாளரின் கதை. பிஎஸ்சி கணிதம் படித்த இவர், பி.எஸ்.என்.எல். ஊழியராக இருந்து கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் தனது பேட்டியில், “36 நாளுக்கு ஒருமுறை வீதம் வருடத்திற்கு 11 முறை தேங்காய் வெட்டுகிறேன், ஒருமரத்திற்கு இரண்டு பாளைகளில் தேங்காய் வெட்டுவதாகவும், 100 மரங்களிலிருந்து ஒரு வெட்டுக்கு 4000 காய்கள் வெட்டுகிறேன்” என்றும் “மூடாக்கு முறையில் சாகுபடி பண்றப்போ தென்னை மூன்றரை வருசத்திலேயே காய்ப்புக்கு வந்துடுது. ரசாயணஉரம் போட்டா நாலஞ்சு வருசமாகும்” என்றும் கூறுகிறார்.05

நாட்டுரக தென்னை பற்றி இவர் கூறும் விவரங்களை பாமர விவசாயிகூட நம்பமாட்டன். நாட்டுரக தென்னை காய்ப்புக்கு வந்து தேங்காய் வெட்டுவதற்கு 7 வருடமாகும். வீரியரக தென்னைகள் மட்டுமே மூன்றரை வருசத்துல காய்ப்புக்கு வரும். பொதுவாக தேங்காய் பருப்பு விளைந்து முற்றுவதற்கு குறைந்தது 45 நாட்கள் ஆகும். வருடத்திற்கு 7 அல்லது 8 முறைதான் வெட்டமுடியும். இதிலும் 5 வெட்டுக்குத்தான் முழுப்பலன் கிடைக்கும், மீதி 2 வெட்டுக்கு குறைந்தளவு காய்கள்தான் கிடைக்கும். இதுதான் தென்னையின் இயல்பான பண்பு.

விவசாயி சொல்வது உண்மையா, மிகைப்படுத்தப்பட்டதா என்று புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட பசுமை விகடனுக்கு விவசாய அறிவில்லை என்பதற்கு இதுவொரு சான்று. மிகையான புள்ளிவிவரங்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும், தேங்காய் வெட்டுவதால் மட்டும் அய்யம்பெருமாள் 4 லட்சம் சம்பாதிக்கவில்லை. அதைக் கொப்பரையாக்கி பின்பு மரச்செக்கில் ஆட்டி எண்ணையாக்கி அதனை சென்னை, பெங்களுரூ நகரங்களின் இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பி விற்றுத்தான் சம்பாதிக்கிறார் என்று கட்டுரையின் உள்விவரம் கூறுகிறது. இது சராசரி தென்னை விவசாயிகளுக்கு சாத்தியமாகுமா? அல்லது விவசாயிகள் எல்லோரும் விருப்ப ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியராக இருக்க முடியுமா? என்பது விகடனுக்கே வெளிச்சம்.

கொடைக்கானல் மலையில் 40 ஏக்கர் காபித் தோட்டம் வைத்திருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளர் செந்தில்,(10-12-2016இதழ்),  பாகப் பிரிவினையாகவே 30 ஏக்கர் நிலம் பெற்ற நெய்யமலை(சேலம்) அப்போலோ என்ற செவ்விளநீர் விவசாயி, தமிழ்நாடு மீன்வளர்ப்புத் துறையில் 27 வருடம் ஆய்வாளராக வேலைசெய்து ஓய்வு பெற்ற விழுதியூர்(தஞ்சை) ரெங்கநாதன்(25-11-2016இதழ்), 130 கலப்பினமாடும், 20 பசுமாடும் வளர்க்கும் விளாத்திக்குளம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்(25-09-2016) போன்ற புதுப்பணக்கார மேட்டுக்குடியினரைத்தான் பசுமை விகடன் வெற்றி விவசாயிகளாகக் காட்டி பசுமை விரும்பிகளை ஏய்த்து வருகிறது.

இவர்கள் யாரும் விவசாயத்தை முக்கிய  வாழ்வாதாரமாகக் கொண்டவர்களல்ல. பிற தொழில்களில் கிடைத்த லாபத்தை முதலீடு செய்வதற்கு பயன்படும் ஒரு துணைத்தொழிலாக விவசாயத்தைப் பார்ப்பவர்கள்.

ஆனால் விவசாயத்தை மட்டுமே தங்களின் ஒரே வாழ்வாதாரமாகக் கொண்ட கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வும், கரும்பு, வாழை விவசாயத்தால் வாழ்விழந்த பல லட்சம் சிறு, நடுத்தர விவசாயிகளின் வரலாறும் பசுமைவிகடன் கண்ணிற்கு என்றுமே தெரியாது. ஏனென்றால் பசுமைவிகடனின் விற்பனைக்கு இவர்கள் பயன்படுவதில்லை. ஆனாலும் ஆக்சன் படத்தில் அழுகை சீனுக்கு மட்டும் பயன்படும் நடிகை சரண்யாவைப் போல “தஞ்சை விவசாயிகள் தற்கொலை”, “வேளாண் அதிகாரிகளின் கொள்ளை” என்று ‘மரத்தடி மாநாடு’ தலைப்பில் நாலுவரியில் நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் இந்த விவசாயிகள் மீது விகடன் காட்டும் அக்கறை.

சுயசார்புக்கு பயன்படுகிறதா இயற்கை விவசாயம்?

இயற்கை விவசாயம் என்பது, பன்னாட்டுக் விதை, உரம், மருந்துக்கம்பெனிகளின் பிடியிலிருந்து விலகி விவசாயிகள் சுயசார்பாக நிற்பதற்கான அடையாளமாகவே அதன் ஆரம்பகாலங்களில் நம்மாழ்வார் போன்றவர்களால் முன்னிறுத்தப்பட்டது. ரசாயன உரம் மருந்துகளை அதிகவிலை கொடுத்து வாங்கினாலும் புழு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற சொந்த அனுபவத்திலிருந்து, சிக்கனமான   இயற்கைவிவசாய முறைக்கு விவசாயிகள் மாறினார்கள்.

08-nammalvar-2
வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார்

ஆனால், உலகம் முழுக்க பரவிவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினால் பன்னாட்டுக்கம்பெனிகளே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டதோடு, ‘உலகத்தரச் சான்று பெற்ற’ இயற்கை உரம்-மருந்துகளை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டன. பசுமைவிகடனிலேயே KTC பயோடெக், ஜெர்மனியின் STIHL போன்ற இத்தகைய நிறுவனங்களின் விளம்பரமும் வருகிறது. பன்னாட்டுக் கம்பெனிகளால் சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வரும் இயற்கைவேளாண் சந்தையின் எதிரொலியாகவே, இந்திய நகரங்களிலும் பசுமை அங்காடிகள் முளைத்து வருகின்றன.

இந்திய வேளாண்மைத் துறையும் தற்போது இயற்கை விவசாயத்தை பதிவுசெய்து ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்குப் பொருத்தமாகவே இயற்கைவிவசாயம் என்பது “லாபகரமான விவசாயம்” என்ற கண்ணோட்டத்தில் பசுமைவிகடன் இங்கு செய்துவரும் பிரச்சாரமும் பயன்படுகிறது.

ஒரு பரிசோதனை முயற்சியாக இயற்கைவிவசாயம் செய்துவரும் விவசாயிகளை இந்த விசச்சுழலை நோக்கித்தான் இழுத்துச் செல்கிறது பசுமைவிகடன். இந்த உண்மை புரியாத புதுப்பணக்கார இளைஞர்கள், தாங்கள் சுற்றுலாபோகும் ஊர்களிலெல்லாம் “இங்க ஏக்கர் என்னவிலை சார்?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுமாடு, சாணி, பால்,தயிர், என்பதோடு மட்டும் இயற்கைவிவசாயம் நிற்கவில்லை. பாரம்பரிய உணவுத்திருவிழா, விறகு அடுப்புச் சோறு, மண்பானை பிரியாணி, தினைமாவு அதிரசம், மரச்செக்கு எண்ணை, மூலிகைத்தேநீர், என்று பல பரிமாணங்களில் சென்று கொண்டிருக்கிறது.  பாட்டன் முப்பாட்டன் மரபுகளை மீட்கபோவதாகக் கூறும் மரபுப் போராளிகளும் இதில் தற்போது இணைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து “எல்லாருமா சேர்ந்து நம்மள கற்காலத்துக்கு கூட்டிட்டுப் போயிருவாங்களோ” என்று தனது வாடிக்கையாளர்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பம் அறிய எண் ஒன்றை அழுத்தவும்” “கால்நடை வளர்ப்பு அறிய எண் மூன்றை அழுத்தவும்” மற்றும் “பசுமைசந்தை” போன்ற மொபைல்வழி சேவைகளையையும் நடத்தி வருகிறது பசுமை விகடன்.

seeraga samba
நாட்டுமாடு, சாணி, என்று மட்டுமல்ல விறகு அடுப்புச் சோறு, மண்பானை பிரியாணி, தினைமாவு அதிரசம் என நீள்கிறது விகடனின் இயற்கை விவசாயப் பட்டியல்

இதற்கும் மசியாத தனது வாடிக்கையாளர்களை, “ஒருநாள் விவசாயி” என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட்டோடு சேற்றில் இறக்கிவிட்டு விவசாயம் கற்றுக்கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் விகடன் குழுமம் இயற்கைவிவசாயக் கல்லூரி தொடங்கினால் இந்த “ஒருநாள் விவசாயப் பட்டதாரி”களுக்கு பேராசிரியர் வேலை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சென்னை சரவணா ஸ்டோரைப் போல விகடன் குழுமம் ஒரு மாபெரும் பல்பொரு அங்காடி. ஆன்மீகத்திற்கு சக்திவிகடன், பெண்களுக்கு அவள் விகடன், மருத்துவத்திற்கு டாக்டர்விகடன், பங்குச்சந்தை சூதாட்டத்திற்கு நாணயம் விகடன், ஆடம்பரத்திற்கு மோட்டார் விகடன், கிளுகிளுப்புக்கு டைம்பாஸ்…என்ற பல சரக்குகளைப் போல விவசாயமும் விகடனுக்கு ஒரு விற்பனை சரக்குதான். இயற்கை விவசாயம் என்பது அதற்கு பயன்படும் ஒரு கவர்ச்சிப்பட அட்டை. சரவணா ஸ்டோர் ஊழியர்களைப் போல விகடன் குழமத்தின் நிருபர்களும் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். தனது பணியாளர்களின் உழைப்பை  மதிக்கத்தெரியாத விகடனிடம், விவசாயிகள் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை…ஏமாற்றம் ஒன்றைத்தவிர.

– மாறன்
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.