Saturday, April 17, 2021
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !

எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !

-

2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 1

  • ஊனா : “நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்

திவ்யேஷ் சோலன்கி : 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய தலித் இளைஞன். மாட்டுத் தோலை உரித்தத ‘குற்றத்திற்காக’ தாக்கப்பட்ட ஏழு தலித் இளைஞர்களின் ஊரான ஊனாவைச் சேர்ந்தவர் திவ்யேஷ். போலீசாக வேண்டுமென்பது இவரது ஆசை.

திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”
திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”. படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

“இன்றைக்கும் காசு இல்லை” என்கிறார் திவ்யேஷ் சோலன்கி. நாள் முழுக்க வெங்காயப் பயிர்களை அறுவடை செய்து விட்டு தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் திவ்யேஷ். 160 ரூபாய் தினக் கூலிக்கு அவர்கள் மூன்று நாட்களாக வேலை செய்கிறார்கள். இந்த நாட்களுக்கான கூலி இன்னும் வழங்கப்படவில்லை.

மறுநாளும் வருமாறு நில உரிமையாளரான விவசாயி தெரிவித்ததாகச் சொல்லும் திவ்யேஷ், பிழைப்பதற்கு வேறு வழியெதுவும் தெரியவில்லை என்கிறார். ஆனால் “என்ன செய்யக் கூடாதென” தனக்குத் தெரியும் என்கிறார். “சில மாதங்கள் முன்பு வரை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சாதியைச் சேர்ந்தவர்களும் பிழைப்புக்காக மாட்டுத் தோலை உரிக்கும் வேலை செய்து வந்தனர். நான் அந்த வேலையைக் கற்றுக் கொள்ளவில்லை. அப்படியே கற்றுக் கொண்டிருந்தாலும், எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்குப் பின் அதைக் கற்பனையில் கூட செய்ய மாட்டேன்” என்கிறார் திவ்யேஷ்.

கடந்த ஜூலை 11-ம் தேதி “பசுப் பாதுகாவலர்கள்” செத்த மாட்டின் தோலை உரித்த ஏழு தலித் இளைஞர்களை கம்புகளால் அடித்து விளாசினர். அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் எழுந்த தலித் எழுச்சியின் குவிமையமாக விளங்கிய மோடா சமாதியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் திவ்யேஷ். ”பசுப் பாதுகாவலர்கள்” தாக்கிய ஏழு தலித் இளைஞர்களில் வாஷ்ராம் மற்றும் ரமேஷ் சர்வைய்யா ஆகியோர் தனக்கு தூரத்து சொந்தக்காரர்கள் என்கிறார் திவ்யேஷ்.

திவ்யேஷின் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். அந்த ஐவரில் திவ்யேஷ் மூன்றாவதாகப் பிறந்தவர். தனது பெற்றோருக்கு உதவும் பொருட்டு 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டதாகச் சொல்கிறார். வயல் வேலையைத் தவிர மேல்சாதி விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இரவுக் காவலராக பணிபுரிவதாகவும், ஒரிரவுக்கு 300 ரூபாய் சம்பளம் என்றும் திவ்யேஷ் தெரித்தார்.

உனா தாக்குதலுக்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போராட்டம்!
உனா தாக்குதலுக்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போராட்டம்! படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

திவ்யேஷின் தந்தை அரசு ஒதுக்கீடு செய்த கால் ஏக்கர் நிலத்தில் கால்நடைத் தீவனங்களை வளர்க்கிறார். அதே கிராமத்தில் உள்ள தலித் காலனியில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் ஒரே அறை கொண்ட வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் பதினெட்டு வயதை எட்டும் திவ்யேஷ், ஜூலை 11-ம் தேதியன்று நடந்த சம்பவம் தனக்கும் மாறாத கசப்புணர்வைத் தோற்றுவித்ததாகச் சொல்கிறார். ”மற்றவர்களைப் போலவே நாங்களும் மாடுகளை மதிக்கிறோம். நாங்கள் எப்போதும் அவற்றைக் கொல்வதில்லை; இறந்த மாடுகளின் தோலை மட்டுமே உரித்தோம். ஆனாலும், எம்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. இதெல்லாம் மாறுமா எனத் தெரியவில்லை” என்கிறார் திவ்யேஷ்.

திவ்யேஷ் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ரசிகர். சாதி ஒடுக்குமுறையின் கீழேயே வாழ்வது குறித்த பேச்சு எழுந்த போது, ”நாங்கள் மற்றவர்களின் வயல்களில் வேலை செய்யும் போது கூட சாப்பிடவும், தேனீர் குடிக்கவும் எங்கள் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.

என்றைக்காவது போலீசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது திவ்யேஷின் ஆசை. ”அது எனக்கு மரியாதையையும் சம்பளத்தையும் பெற்றுத் தரும். ஆனால் அதற்கு நான் பத்தாம் வகுப்பு படிக்க வேண்டும். நான் பள்ளிக்குப் போகவில்லை என்றாலும், வெளியிலிருந்தே தேர்வெழுத விண்ணப்பித்துள்ளேன். இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வெழுதப் போகிறேன்” என்கிறார் திவ்யேஷ்.

ஜம்மு காஷ்மீர் : படிப்பது ஒன்று தான் வழி; ஆனால் என்னால் முடியுமா?

ஜூலை 8ம் தேதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் கிளர்ந்தெழுந்தது. அதைத் தொடர்ந்து சுமார் 10,000 மக்கள் பெல்லெட் குண்டுகளால் துளைக்கப்பட்டனர் என்கிறது மருத்துவமனைப் புள்ளிவிவரங்கள். ஆயிரத்துக்கும் அதிகமானோரின் கண்களில் பெல்லெட் குண்டுகள் பாய்ந்தன. அதில் குறைந்தது ஏழு பேருக்கு இரண்டு கண்ணிலும் பார்வை பறிபோனது.

tabish
தபீஷ் ரபீக் பட்: ”எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது” படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (MBA) படிக்க வேண்டுமென்று தனக்கு எப்போதுமே ஆசை என்கிறார் தபீஷ் ரபீக் பட். ஆனால், அவரது இடது கண்ணைத் துளைத்துச் சென்ற பெல்லட் குண்டுகள் அவரது கண்ணின் கருவிழியையும் கனவுகளையும் சிதைத்து விட்டன. இப்போதெல்லாம் கண்ணில் நீர் வழியாமல் எழுத்துக்களை வாசிக்கவே முடியவில்லை என்கிறார் தபீஷ்.

”எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது” என்கிறார் 17 வயதான தபீஷ். சென்ற நவம்பரில் தான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிய தபீஷ், தேர்வெழுத உதவியாளர் ஒருவரைக் கோரியதை போது பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாகத் தெரிவிக்கிறார். ”தேர்வு எழுதும் போது எனது இடது கண் பயங்கரமாக வலித்தது” என்றார் தபீஷ். அந்த வீடு ஒரு சிறிய அறை. அதன் மத்தியில் தடுப்பு வைத்துப் பிரித்துள்ளனர். அதில் ஒன்று சமயலறை; மற்றொன்று படுக்கையறை. தபீஷ் தனது படுக்கையில் இருந்தார்.

அந்தக் குடும்பம் தபீஷின் கண்ணில் செய்யப்படவுள்ள நான்காவது அறுவை சிகிச்சைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. “இன்னும் இரண்டு பெல்லெட் குண்டுகள் உள்ளேயே இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பெல்லெட்டுகளை மட்டுமே தங்களால் எடுக்க முடியுமென்றும், அதற்குப் பின் இடது கண்ணின் பார்வை போய்விடுமென்றும் அவர்கள் சொல்கிறார்கள்” என்கிறார் தபீஷ்.

பாம்போரில் உள்ள எண்ணைக் கிட்டங்கியில் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் தபீஷின் தந்தை ரபீக் அகமது பட். அவரது தாயார் ஷெஸாதா வீட்டு வேலைகளை மட்டும் கவனித்துக் கொள்கிறார். பாம்போரில் உள்ள “தில்லி பொதுப் பள்ளியில்” படிக்கும் மாணவரான தபீஷ், தனது மாலை நேர டியூஷனுக்குப் பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெல்லெட் துப்பாக்கிகளால் சுடப்பட்டுள்ளார்.

அது 2016 ஜூலை 9-ம் தேதி. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு மறுநாள். அன்றைக்கு காஷ்மீர் முழுவதும் போராட்டங்களால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

”நானும் எனது நண்பன் ஜிப்ரானும் வந்து கொண்டிருந்தோம். கற்களை எறிந்து கொண்டிருந்த போராட்டக்காரர்கள் எங்கள் வழியில் தான் கூட்டமாக இருந்தனர். திடீரென்று துணை ராணுவப் படையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி விரட்டி வந்தனர். சட்டென்று எனது உடலில் நெருப்பு பிடித்தாற் போல் உணர்ந்தேன். பின்னர் தான் நான் பெல்லெட் குண்டுகளால் தக்கப்பட்டதையே அறிந்து கொண்டேன். இடது கண்ணில் மட்டும் ஆறு குண்டுகள். ஜிப்ரான் அதிர்ஷ்டக்காரன் – அவனுக்கு இரண்டு குண்டுகள் தான் கிடைத்தன” என்கிறார் தபீஷ்.

அந்த சம்பவத்திற்குப் பின் சுமார் இரண்டரை மாதங்கள் சிறீநகரில் உள்ள ’சிறீநகர் மகாராஜா ஹரிசிங் அரசு’ மருத்துவமனையில் கழித்திருக்கிறார் தபீஷ். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு சீர்படுத்தவே முடியாதென மருத்துவர்கள் சொன்ன போதும் அந்த குடும்பம் நம்பிக்கையிழக்கவில்லை. தபீஷை அம்ரிஸ்தரில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவரது தந்தை. என்றாலும், அந்த அலைச்சல்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

”நாங்கள் நொறுங்கிப் போனோம்” என்கிறார் தபீஷின் தாயார் ஷெஸாதா. தனது கையில் தபீஷின் மருத்துவ அறிக்கைகளையும், நாளிதழ்களில் அவர் தாக்கப்பட்டதைப் பற்றி வந்த செய்தித் தாள்களையும் புரட்டிக் கொண்டிருந்தார் அவர்.

புர்ஹான் வானி கொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்!
புர்ஹான் வானி கொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்! படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொடர்ந்து தான் தாக்கப்பட்டதற்கு முந்தைய நாள் நண்பர்களோடு சிறீநகர் சென்று வந்ததை தபீஷ் விவரித்துக் கொண்டிருந்த போது கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி அங்கிருந்து அகன்றார் அவரது தாயார். ”அன்றைக்கு ஜூலை 8ம் தேதி… நானும் எனது நண்பர்களுமாக எட்டுப் பேர் சேர்ந்து சிறீநகருக்குப் போனோம். அங்கே உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். அன்றைக்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்று தபீஷ் சொல்லும் போதே அவரது முகத்தில் புன்னகை விரிந்தது. அந்தச் சிரிப்பு அவரது இடது கண்ணை ஒரு மெல்லிய கோடாகச் சுருக்கியது.

கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் தபீஷ். தாக்குதலுக்குப் பின் கடந்த நவம்பர் 14-ம் தேதி தேர்வெழுதச் சென்ற போது தான் தனது நண்பர்களை மீண்டும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

”தேர்வுகளை எழுதிவிடலாம் என்ற உறுதி இல்லை. சரியாக படிக்கவும் இல்லை. ஆனால், படிப்பு ஒன்று தான் முன்னேறுவதற்கு இருக்கும் ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்டேன்” எனத் தெரிவித்த தபீஷ், பத்தாம் வகுப்புத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் சொல்கிறார்.

தபீஷுக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இளைய தம்பி தலீபுக்கு 11 வயது; இன்னொருவனான தபீனுக்கு 12 வயது; தங்கை சௌலியாவுக்கு இரண்டரை வயது.

தன்னுடன் பிறந்தவர்களை நினைத்தால் கவலையாக இருப்பதாகச் சொல்கிறார் தபீஷ். ”இவர்கள் மீதும் பெல்லெட் குண்டுகள் பாயாது என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? மிருகங்களை வேட்டையாடத் தானே பெல்லெட் குண்டுகளைப் பயன்படுத்துவார்கள், எங்களுக்கு எதிராக ஏன் அதைப் பயன்படுத்தினர்?”

ஆம். ஒடுக்கப்பட்ட மக்களின் புத்தாண்டு விடியல் இப்படித்தான் இருளடைந்து கிடக்கிறது. புத்தாண்டை வாழ்த்துடனும், வேட்டுடனும் கொண்டாடிய உள்ளங்கள் சிந்திக்கட்டும்.

தமிழாக்கம்: முகில்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க