privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?

பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?

-

சனவரி 11- திருவாரூரில் அணிதிரள்வோம்!

மாணவர்கள் , இளைஞர்கள் தொழிலாளிகளோடு இங்கே டெல்டாவிற்கு வந்திருக்கிறோம். கடந்த 3 நாட்களில் 28 கிராமங்களைக் கடந்து இருக்கிறார்கள். கிராமச் சுற்றுலாவிற்காக வரவில்லை. உலகிற்கு சோறு போட்ட விவசாயி கொத்து கொத்தாக செத்துப்போவதை கேள்விப்பட்டு பதைபதைத்து ஓடிவந்த ”மக்கள் அதிகாரம்” அமைப்போடு வந்தவர்கள். வந்தவர்களில் பலருக்கும் டெல்டா என்பதை வார்த்தையில் கேள்விபட்டவர்களாகவே இருந்திருக்கிறோம். விவசாயம் என்பதை ஒரு பெயராக மட்டுமே  பார்த்து வந்தவர்கள்தான் பலர்.

posterவிவசாயிகளின் மரணத்திற்கு காரணமான காவிரியை தடுத்த மோடியை, ஆற்றுமணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலை கண்டித்தும், இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசயிகளுக்கு நிவாரணமும் நீதியும் வழங்க கோரியும் நாளை 11.01.2017 அன்று நாள் முழுவதும் திருவாரூரில் நடக்கவிருக்கிற ”தர்ணா போராட்டத்திற்கு” அழைப்புவிடுத்து டெல்டா மாவட்டங்களில் குவிந்து விவசாயிகளை சந்தித்து வருகிறோம்.

விவசாயி ஒருவரை பார்த்து “விவசாயம் செய்யறதுல இவ்வளவுப் பிரச்சினை இருக்கு விட்டுட்டு போகவேண்டியதுதானே” என்று நாங்கள் கேட்டபோது “புள்ளைய பெத்து வளர்க்குறீங்க, திடீர்னு ஊனமாயிட்டுனா உட்டுட்டு போவ முடியுமா” என்று அந்த விவசாயி எங்களை கேட்டபோதுதான் தெரிந்தது விவசாயம் பெயர் அல்ல அது உயிர் என்று.

திரும்பிய பக்கமெல்லாம் கருகிய வயல்களும் காய்ந்து போன கரும்புகளும்தான் வரவேற்கின்றன. பசுமை பசுமை எங்கு காணினும் பசுமை என்று படத்தில் கிராமங்களை வைத்து கல்லாக்கட்டிய இயக்குனர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடையத் தட்டி, மீசைய முறுக்கி பாரம்பரியம் – பண்பாடு என முழங்கும் தமிழர்க’ள் விவசாயிகள் படுகொலைக்காக பேசுவதில்லை.

tiruvarur-farmers-suicide-propagandaதிருவாரூரில் ஒரு கிராமத்துக்கு ஒரு பம்ப் செட் இருப்பதே பெரிய விசயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 மணிநேரம்தான் தண்ணீர் வருகிறது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை யாராவது விவசாயிகளின் சாவைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக கிராமத்தில் காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள் தான் மக்களைப் பார்க்கமுடியும். அதன் பிறகு வேலைக்குச் சென்று விடுவார்கள். தற்போதோ வேலை இல்லாததால் வீட்டில்தான் எப்போதும் முடங்கிக் கிடக்கிறார்கள். விவசாயம் இல்லாத போதும் மாடு வாங்கியதற்காக நோட்டீசு அனுப்புகின்றன வங்கிகள். டெல்டாவிலேயே திருவாரூரின் நிலைமை கொஞ்சம் தேவலாம் என்கிறார்கள். .

நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டியை நோக்கிச் செல்லச் செல்ல குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை இருக்கிறது . நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். திருவாரூர் – திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற கிராமங்கள் எங்கும் விவசாயம் இல்லை.சிறு விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தான் அதிக பாதிப்பில் இருக்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் நினைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. குடிக்கத்தண்ணீர் கேட்டால்கூட இல்லையென்று பலர் சொல்லுகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு 3 நாட்களுக்கு 10 குடம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதில்தான் குடிப்பது, குளிப்பது, சமையல் செய்வது என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை. அதனால் தேங்கிய குட்டையில் துணி துவைக்கிறார்கள். துணி துவைத்த பின்னர் அந்தத் தண்ணீரிலே குளிக்கிறார்கள். இதெல்லாம் தெரியுமா தமிழினத்தலைவர்களுக்கு.

ஒரு நாள் பிரச்சாரம் முடித்த பின்னர் இரவு ஒரு ஊரில் தங்கினோம். வண்டியில் கட்டப்பட்டு இருந்த பேனர்களைப் பார்த்துவிட்டு அவ்வூரைச்சேர்ந்த அதிமுக-காரர் ஒருவர் குடித்து விட்டு சண்டையிட ஆரம்பித்தார். ”எப்புடி விவசாயிகள் வறட்சியில சாவுறாங்கன்னு சொல்லலாம்? எங்க ஊர்ல விவசாயி செத்துப்போனாரு. நான்தான் வறட்சியால செத்துப்போனாருன்னு சொல்லி நிவாரணம் வாங்கிக்கொடுத்தேன். என்கட்சியை எப்படி தப்பாப் பேசலாம்”.  சரி போதையில் பேசுகிறாரே என்று விலகிச்சென்றோம். அவரோ நாங்கள் இருந்த இடத்திற்கு எதிரே இருந்த  ஒருகடையில் நின்று கத்திக்கொண்டு இருந்தார். அப்போது கடைக்காரர் அவங்க சொல்லறது என்னய்யா தப்பு? நாம ரெண்டாயிரம் ரூபாய்க்கு அலையுறோம். அவன்கிட்ட மட்டும் எப்படி கட்டுகட்டா பணம் வந்துச்சு? அவங்க சொத்தை பறிமுதல் செஞ்சா என்ன தப்பு? என்று அவருக்கு பதிலளித்தார்.

tiruvarur-farmers-suicide-propaganda6நாங்கள் பிரச்சாரம் செய்த பல இடங்களிலும் நிவாரணம் வேண்டும் என்று பேசியவர்கள் கூட நமது வாழ்க்கை இந்த அளவு மோசமானதற்கு காரணமானவர்களின் கொள்ளையடித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பேசியிருப்பதை பார்க்க முடிகிறது. நமது பிரச்சாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுவிவசாயிகள், நடுத்தர விவசாயிகள் என பலரும் நாம் வைக்கும் கோரிக்கை சரிதான் என்பதை பதிவு செய்கிறார்கள். அதிமுக, திமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட வெளிப்படையாக அக்கட்சியை திட்டுகிறார்கள். ”இவனுங்க எல்லாம் திருட்டுபசங்க, தின்றானுங்க, விவசாயிகள் எல்லாம் சாவுறோம். ஒருத்தன் கூட வந்து  எட்டிப்பார்க்கல, நாகப்பட்டினத்துலதான் ஜவுளித்துறை அமைச்சர் இருக்கான். அவனுக்கு நாங்க செத்துப்போனது தெரியாதா? எங்க பிரச்சினை எல்லாம் தெரியாதா?

நாங்க செத்துக்கிட்டு இருக்கிறோம் ஆனா ஜல்லிக்கட்டு நடத்தணும்னு சொல்லுறாங்க. எங்களுக்கு சோத்துக்கே வழியில்லாம அல்லோலபடுறோம். ஜல்லிக்கட்டு நடத்தறது முக்கியமா? நாங்க பொங்கலே கொண்டாட முடியாது. எங்க பானையிலேயே அரிசியில்லை”.

இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பறையடித்து அனைவரையும் ஒரு இடத்தில் வரவழைத்து பிரச்சாரம்  செய்வோம். அதை முடித்துவிட்டு “உங்களிடம் பணம் ஏதுவும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கொடுக்கும் நிதியில் இருந்துதான் நாங்கள் பிரச்சாரம் செய்ய முடியும். உங்களை சார்ந்துதான் வந்திருக்கிறோம்” என்று சொன்னவுடன் தங்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டில் இருக்கும் 5 ரூபாயோ பத்து ரூபாயோ எடுத்து வருகிறார்கள். எத்தனையோ பேர்கள் காசுகொடுக்க முடியவில்லையே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

பிரச்சாரத்திற்கு வந்த தோழர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டில் இருந்தாவது சோறு, குழம்பு போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார்கள். நமக்காக போராட வந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். எந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லை. விவசாய சங்கங்கள் உட்பட. ரொம்ப நாளா போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள். அரசை நிர்பந்திக்கக்கூடிய போராட்டங்கள்தான் தேவை என்பதை உணர முடிகின்றது.

tiruvarur-farmers-suicide-propaganda3உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை.  அதனால் ஒன்றும் ஆகாது என்று கூறுகிறார்கள். விவசாயம் செய்வதற்கு பயமாக இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சிலரோ தண்ணீர் வந்தால் கூட விவசாயம் செய்வதற்கு பயமாக உள்ளது. ஏற்கனவே கடன் மேல் கடனாக இருக்கிறது. மறுமடியும் விவசாயம் செய்து கடனில் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் பிரச்சாரம் செய்தோம். பெண்கள், இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோருடன்  இரவு பேசினோம். பிரச்சாரப் பாடல்களைப் பாடினோம். அவர்கள் நாட்டுப்புறப் பாடலை பாடினார்கள். பெண்களும் இளைஞர்களும் போராட்டத்திற்கு வருவதாகக் கூறுகிறார்கள்.

இன்று அடுத்து ஊருக்கு கிளம்புகிறோம். விவசாயிகளைக் கொன்ற அரசை தண்டிக்காமல் பயணம் ஒருபோதும் நிறைவு பெறப்போவதில்லை.

காவிரியை விட, வயல்வெளியைவிட வறண்டு போய்விட்டான் விவசாயி வான்மழை பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்பார்கள்.  இப்போது வான் மட்டுமல்ல இந்த அரசும்தான் பொய்த்துப்போயிருக்கிறது. ஆனால் மாற்றத்தை விதைக்க முடியும் என்ற நம்பிக்கை பொய்க்காது. இதுதான் விவசாயிகளின் நிலை, தமிழனின் நிலை. சூடு சொரணை இருப்போர் இதைக்கேட்ட பின்னரும் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் விவசாயிகளோடு அவர்கள் துக்கத்தை எங்களது சொந்தமாக்கி இருக்கிறோம்.  இதைப்பற்றிப் பேசாமல் ஜல்லிக்கட்டு, பொங்கல், உழவர் திருநாள் என்று பேசுவோரை என்ன செய்வது?

தகவல்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு 9962366321

***

விவசாயிகள் தற்கொலையை தடுக்க வக்கற்ற அரசு கட்டமைப்பை தூக்கியெறிவோம்
விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கண்டன ஆர்ப்பாட்டம்.

தினம்தினம் விவசாயிகள் தற்கொலை, மாரடைத்து சாவது என்ற தமிழ்நாட்டின் சொல்லொன்னா துயரம் தொடர்ந்துக்கொண்டே வருகிறது. இதுவரை 150-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர். நேற்று தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் ஒருவிவசாயி தற்கொலை செய்துக்கொண்டார். இப்படி டெல்டா மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்கொலை தொடங்கியுள்ளது. இதனை தடுத்து விவசாயிகளை பாதுகாக்கும் அரசே கொலைகாரனாக இருக்கும் போது விவசாயிகள் இனி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று அறைகூவி அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது விவிமு, புமாஇமு அமைப்புகள்.

பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில்  நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவிமு வட்டார செயலர் தோழர் கோபிநாத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் உலகில் பெரிய டெல்டா என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்று கொத்துகொத்தாக விவசாயிகள் இறப்பது என்பது தொடர்கதையாக மாறியுள்ளது. மாடுகட்டி போர் அடித்தால் மாலாது என்று யானை கட்டி போர் அடித்த சோழ நாடு. இன்று தண்ணீர் இன்றியும், கடன் வாங்கி பயிரிட்டும் விவசாயம் பொய்த்து போனாதாலும் மனம் உடைந்து நெஞ்சு வெடித்து இறக்கிறான் விவசாயி. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற இடங்களில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, தற்போது புற்றுநோயாக தமிழ்நாடு விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது. இந்த நிலைக்கு காரணம் காங்கிரசு, பிஜேபி கட்சிகள் ஓட்டுபொருக்க மாறி மாறி கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் கொடுப்பதை மறுத்ததுதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். மறுப்பக்கத்தில் டெல்டாவை பாலைவனமாக்கி மீதேன் எடுக்க முதலாளிக்கு சேவை செய்ய காத்திருக்கிறார் மோடி. சேகர் ரெட்டி, ராவ், ஓபிஎஸ் அதிமுக தான் ஆற்று மணல் கொள்ளையடிப்பது, கழிவு நீரை ஆறு குளம் ஏரிகளை அழிப்பது என்ற வேலையை செய்த இந்த திருட்டு கும்பலிடம் நீதி கேட்க முடியுமா? அம்பானி, மல்லையா முதலாளிக்கு கடன் தள்ளுபடி  செய்யும் அரசு, சோறுபோட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நாம் கறுக்கறுவாலை கையிலெடுத்து வீதிக்கு வரவேண்டும் என்று அறைகூவி அழைத்தார்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தரும்புரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க