privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைசுரங்கத்திலிருந்து ஒரு குரல்

சுரங்கத்திலிருந்து ஒரு குரல்

-

சந்திரனில்
உயிர் வாழ முடியுமா? – என
ஆராய்ச்சியின் உச்சத்தில்
திளைப்பவர்களே,
உங்கள் காலுக்கடியில்
சில உயிர்கள் தவிப்பதை
உணர முடிந்திருக்கிறதா
உங்களால் !

மூலதனத்தின் பெருங்குடல்
மனிதர்களை செரிக்கும்
லாபப் பசியெடுத்தவர்களின்
கரங்கள் ஆட்டுவிக்கும்
அந்த இடங்களுக்குப் பெயர்
சுரங்கங்கள்.

minerஅங்கே…
விழிகள்  எங்களுக்கானதாக
இல்லை,
நெற்றிக்கண் வெளிச்சத்தில்
முதலாளிகளுக்கான
தாதுக்களை குவிக்கும்
தசைச் சுரங்கங்களாக
அதுவும்
அவர்கள் கையில்.

உழைத்துக் கொடுப்பதற்காக
மட்டுமே
எங்கள் உடலில்
ரத்தம் ஓட அனுமதிக்கப்படுகிறது,
ஒரு மனிதனாக
உணரத் தலைப்பட்டால்
உயிர் தடை படுகிறது.

பிழியப்படும் உழைப்பில்
தாயின் மார்பிலும்
தாது வடிகிறது.
சுரங்க வாழ்வின் இருளோ
எம் பிள்ளைகளின்
தாய்ப்பால் வரை நீள்கிறது.

சிதைக்கப்படும்
பூமியின் அலறலை
எதிரொலிக்கிறார்கள்
எங்கள் குழந்தைகள்

அறுக்கப்படும்
இயற்கையின் மார்பை
வலியோடு சுமக்கிறார்கள்
எங்கள் பெண்கள்.

உலகின்
நிலக்கரி அனைத்தும்
எங்கள் கண்ணீர் பசையால்
இறுகியிருக்கின்றன…

உலகின்
தங்கங்கள்  எல்லாம்
எங்கள் ரத்தத்தால்
ஜொலிக்கின்றன.

நாங்கள்
வெளியே எடுத்துத்தரும்
பொருட்களுக்கு
உள்ள மதிப்பு கூட
உள்ளே இருக்கும்
எங்கள் இதயத்துக்கும்
நுரையீரலுக்கும் இல்லை
உணர்ச்சி
மறுக்கப்பட்ட வாழ்க்கையில்
உருமாறி
அவைகளும் கரியாகிவிட்டன.

வெட்டி முறிக்கும்
முதலாளிகளோ
உலகப் பணக்காரன் வரிசையில்
வெட்டி எடுக்கும்
உழைப்பாளிகளோ
உயிரினங்களிலேயே வறுமையில்.

வேண்டும் ஊதியம்
உழைப்பு நேரம்
உரிய பாதுகாப்பு, இழப்பீடு
உரிமைகள்
எதுவுமற்று
மக்கி மண்ணாகி
மீண்டும்
மூலதனம் வெட்டி எடுத்து
இலாபமீட்டும்
மனிதத் தாதாக
மடிகிறது  வாழ்க்கை.

பூமியின் புதையல்களை
கொள்ளையடிக்கிறார்கள்,
பூமியின் புதல்வர்களை
சாகடிக்கிறார்கள்…

வேறு யாருக்கோ
நடப்பதாய்
விலகி இருக்க முடியுமா
உங்களால் ?

செம்பு
அலுமினியம்
பாக்சைட்
தங்கம்
கரி…  இப்படி
நீங்கள் நேரடியாகவும்
மறைமுகமாகவும்
அனுபவிக்கும் பொருள்
ஒவ்வொன்றிலும்
கலந்திருக்கிறோம் நாங்கள் !

துரை. சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க