Sunday, June 13, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !

தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !

-

தூத்துக்குடி விவசாயிகளின் துயரம: ராம்கோ சிமெண்ட், ஸ்டெர்லைட், பவர் பிளாண்ட்கள் உருவாக்கும் பேரழிவு !

Thoothukudi-report1
விவசாயிகளின் தற்கொலை என்பது இந்த அரசே நடத்தும் படுகொலை என்பதை புரியவைக்கும் விதமாக 500 சுவரொட்டியையும் போட்டு கையோடு கொண்டு சென்றோம்

மிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் நெஞ்சு வலி என்று உயிரை விடுவதும் நடக்கத் தொடங்கியது. தொகுத்துப் பார்க்கையில் தமிழகத்தில் நூறைத் தாண்டி விவசாயிகளின் உயிரிழப்பு நடப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே வட இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ள புள்ளிவிவரம் நம்மை அச்சுறுத்தியது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கிராமங்களை ஆய்வுக்குட்படுத்தி உண்மை நிலைமைகளை அறிந்துவர ஒரு குழுவாக விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் சார்பாக புறப்பட்டோம். ஏற்கனவே கிடைத்த விவரங்களிலிருந்து விவசாயிகளின் தற்கொலை என்பது இந்த அரசே நடத்தும் படுகொலை என்பதை புரியவைக்கும் விதமாக 500 சுவரொட்டியையும் போட்டு கையோடு கொண்டு சென்றோம். மாவட்டம் முழுக்க பரவலாக ஒட்டியுள்ளோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பகுதியில் தாமிரபரணி ஓடுகிறது. வடக்கில் வைப்பாறு ஓடுகிறது. இந்த வைப்பாறை சுற்றியுள்ள விளாத்திக்குளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றோம். முதலில் தி.மு.க  முன்னாள் கவுன்சிலரும் சுமார் 100 ஏக்கர் விவசாயம் செய்து வந்தவருமான, பூச்சிமருந்தடித்து தற்கொலை செய்துகொண்ட  விவசாயி பவுன்ராஜின் ஊரான கம்பத்துப்பட்டி சென்றோம். செல்லும் வழியிலேயே ராம்கோ சிமெண்ட்டின் சுண்ணாம்பு சுரங்கங்கள் குவித்துள்ள கழிவுமண் மலைகளாக உயர்ந்து நின்ற பகுதிகளினூடாகவே சென்றோம். அக்கிராமத்தில் பெருவிவசாயி பவுன்ராஜின் வீடுகள் சுமார் ஆறடி உயரத்தில் தரைத்தளம் கொண்டு ஒரு சிறு அரண்மனையைப் போல கருங்கற்களால் இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. நெருங்கிப் பார்க்கையில் அதன் ஒரு பகுதியில் மட்டுமே பவுன்ராஜின் குடும்பத்தினர் வசித்து வருவதைப் பார்த்தோம். மிகப்பெரிய கூடம் அதை ஒட்டிய பகுதிகள் பூட்டியே போடப்பட்டிருக்கிறது. பராமரிப்பின்றி உள்ள அதில் வவ்வால்கள் அடைந்துள்ளன. கம்பத்துப்பட்டி கோயில் பூசாரி அவ்வீட்டைப் பற்றி வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார். “இந்த வூட்டுல ஒரு காலத்துல எப்பவும் அண்டா நிறைய கம்மங்கஞ்சி, கேப்பை கரைச்சு வெச்சிருப்பாங்க, எப்படியும் ஒரு வேளைக்கு 20, 30 பேராவது அவங்க வீட்டுக்கு வந்துட்டு, போயிட்டு இருப்பாங்க, யாரும் பசியோட திரும்பினது கிடையாது. ஆனா இன்னைக்கு விவசாயிகள் பிரச்சினைக்காக நீங்க ஒரு பத்து பேரு வந்துருக்கிறீங்க, உங்களுக்கு ஒரு வேள சோறு கூட போட முடியாத நிலம வந்துருச்சு, ஒரு வேளைக்கு அளவா ஒரு டம்ளர், ரெண்டு டம்ளர் அரிசிய போட்டு பொங்கித் திங்கிற நிலைமைக்கு வந்துட்டோம்’’ என்றார்.

Thoothukudi-report2
கோயில் திருவிழாவுக்கு ஒற்றுமையா சேர முடியறப்போ விவசாயத்தை காக்க ஒண்ணு சேரமுடியாதா

இறந்து போன பவுன்ராஜின் உறவினர் அறிமுகமானார். அதன் மூலம் அருகிலுள்ள நடுக்காட்டூருக்கு அடுத்ததாய் சென்றோம். ஊருக்குள் நுழையும்போதே ஒலிப்பெருக்கியின் ஓசை வரவேற்றது. கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. சிறுவர்கள் மட்டுமே தெருவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், பெரியவர்களோ, பெண்களோ முகத்தில் எவ்வித சந்தோசமுமின்றி ஒதுங்கியே வீட்டு வாசலில் நின்றிருந்தனர். ஒலிப்பெருக்கியின் ஓசை கேட்காத தொலைவு தள்ளிச் சென்று சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஒருவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் விவசாயம் செய்வதில் கடன் சுமை ஏறியுள்ளது. வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்துகிறார். இவர் ஏற்கனவே சென்னை எம்.எப்.எல் மற்றும் வளைகுடா நாடுகள் என்று பிழைப்புக்காக ஒரு சுற்று சுற்றியவர். இன்று வேறு வழியில்லை, நம் ஊரில் குடும்பத்தோடு இருப்போம் என்று விவசாயத்தை நம்பி வந்துள்ளார். ஆனால், கடந்த பெருமழையும் இப்போதைய வறட்சியும் அவரது நம்பிக்கையை கருக்கி விட்டுள்ளது. எதனால் உங்களுக்கு கடன் சுமை ஏறியது என்று கேட்டபோது மழை பெய்யாததையே காரணமாக முன்வைத்தார்.

ஏன் மழை பெய்யவி்ல்லை என்ற கேள்விக்கு பெரும்பாலான விவசாயிகளிடம் எந்த பதிலும் இல்லை. நாம் இயற்கையை, சுற்றுச் சூழலை சூறையாடிய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அதற்கு துணை போன அரசு அதிகாரிகளின்  துரோகத்தைப் பற்றி சுவரொட்டியை ஒட்டி விட்டு விளக்கியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், இந்த கடனில் இருந்து மீண்டு வர அவர்கள் பெரிதும் நம்பி எதிர்பார்த்திருப்பது அரசைத்தான்.  இந்த அரசுதான் கொலைக் குற்றவாளி எனும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றனர். விவசாயிகளுக்காக எந்த ஒரு ஓட்டுக் கட்சியோ அல்லது சங்கங்களோ இப்பிரச்சினையில் நிவாரண உதவியைத் தாண்டி வேறு எதையும் முன்வைக்கவே இல்லை. நாம் கார்ப்பரேட்டுகள் மற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு இழப்பீடாக பங்கிட வேண்டும் என்பதை விளக்கியபோது, இது எப்படி நடக்கும் என்ற அவநம்பிக்கையே வெளிப்பட்டது. ”கோயில் திருவிழாவுக்கு ஒற்றுமையா சேர முடியறப்போ விவசாயத்தை காக்க ஒண்ணு சேரமுடியாதா ” என்று கேள்வி எழுப்பினோம்.

பொதுவாக விவசாயிகள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடியும் முன் வேலையைத் தொடங்கி விடுகின்றனர். மாலை பொழுது சாய்ந்ததற்குப் பிறகே வீடு திரும்புகின்றனர். இவர்களுக்கு நாட்டில் நடப்பது குறித்து எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் உள்ளனர். அவசியமில்லாமல் கிராமத்தை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு கிராமத்தில் தினந்தோறும் தினசரி படிப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். பிரச்சாரத்திற்கு சென்ற எங்களைக் கூட ஏதோ அதிகாரிகள்தான் நிவாரணம் தருவதற்காக கணக்கெடுக்க வந்துள்ளனர் என்று கருதிக் கொண்டு நெருங்கி வந்தனர். நாம் ஒற்றுமையாக போராடினால்தான் சுற்றுச் சூழலை, இயற்கையை பாதுகாக்க முடியும்.  விவசாயிகளை பாதுகாக்கவும் முடியும் என்று வலியுறுத்தும்போது அது சாத்தியமற்றதாக அவர்களுக்கு தெரிகிறது. “யாரு போராட்டத்துக்கெல்லாம் வருவாங்க, சம்சாரிங்கெள்லாம் சேர்ந்து கலெக்டர, ராம்கோ கம்பெனிக்காரன எதிர்க்குறதெல்லாம் நடக்காது, புடுச்சு உள்ளார வெச்சுருவானுங்க! அப்புறம் புள்ள குட்டிக்கு யாரு கஞ்சி ஊத்துவா’’ என்றனர். ”மருந்தகுடுச்சுக்கிட்டு செத்துப்போனா அப்ப மட்டும் புள்ள குட்டிய யார் காப்பாத்துவா! அதுக்கு குடும்பத்தோட போராடிப்பாத்துறலாமே”  என்று நம்பிக்கையூட்டினோம்.

Thoothukudi-report3
சம்சாரிங்கெள்லாம் சேர்ந்து கலெக்டர, ராம்கோ கம்பெனிக்காரன எதிர்க்குறதெல்லாம் நடக்காது, புடுச்சு உள்ளார வெச்சுருவானுங்க! அப்புறம் புள்ள குட்டிக்கு யாரு கஞ்சி ஊத்துவா

கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து சிலர் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளதாக கூறினர். பெரும்பாலானோர்  வெளியேதான் 5 பைசா வட்டிக்கு வாங்கியுள்ளானர். மண்டிக்காரனிடம் கடன் வாங்கியவர்களும் உண்டு. அதற்கு வட்டி இல்லை. ஆனால் விளைச்சலை அவர்களிடம்தான் விற்க வேண்டும்! அவர்கள் சொல்வதுதான் விலை! அதாவது ஒப்பந்த விவசாயம் என்று கார்ப்பரேட்டுகள் செய்துவரும்  அதே வேலைதான்.

”கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவிரும்! அதுனாலதான்  வெறுத்துப் போய் மருந்தடிக்கிறாங்க!”  என்று மானத்தை, சொன்ன சொல்லை காப்பதை பெரிதாக நினைக்கும் உழவர்களின் உயர்வை புரிந்துகொண்டோம். அதே நேரம் வாங்கிய கடனை கட்டாத மல்லையாவுக்கு ஆயிரம்கோடி தள்ளுபடி செய்யும் அரசை நினைத்து ஆத்திரம் பொங்கியது.

”பக்கத்து ஊருல மழை பேஞ்சா கூட அங்க கூலி வேலைக்கு போய் பொழப்பை ஓட்டலாம்! மொத்தமா காஞ்சுருச்சே சோத்துக்கு என்ன செய்ய” என்று சிறு விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இவர்களுக்கு ”அடுத்த போக விதைப்பை செய்யும் வரை 6 மாதத்துக்கு பிழைக்க வழி இல்லை. அப்போதும் விதைக்க எத்தனை பேரால் பணம் புரட்ட முடியும்; தெரியாது! மண்டிக்காரன்  இப்பொழுதே நெருக்கறான்! வட்டிக்காரன் பணம் என்னாச்சு என்று வளைக்கிறான்” என்று விளக்கினார், கே. துரைசாமிபுரம் விவசாயி.

ஆடுமாடு மேய்ப்பவர்களின் நிலையும் கொடுமையாகத்தான் உள்ளது. சுண்ணாம்பு சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் காலில் பட்டால் பொத்துவிடுகிறது. ஆடு மாடு குடிக்கவும் உதவாது. 200 அடிக்கு கீழ் உள்ள நீரை ராம்கோ சிமெண்ட் முதலாளி ஊரைச்சுற்றி நிலத்தில் விடுகிறான். நிலத்தடி நீர் மேலும் குடிக்க லாயக்கற்றதாகிறது. மழை நீர் குறைவாகவே குளத்தில் தேங்கியுள்ளது. “இது ஒரு மாதத்திற்கு கூட ஆடு மாடுகளுக்கு காணாது. அதுக்கப்புறம் தண்ணி இருக்குற ஊரப் பாத்து இதுகள ஓட்டிட்டுப் போனாதான் காப்பாத்தவே முடியும்’’ என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

போராட்டத்துக்கு தகவல் சொல்லுங்க, கண்டிப்பா வர்றோம்
போராட்டத்துக்கு தகவல் சொல்லுங்க, கண்டிப்பா வர்றோம்

பெண்களைப் பொறுத்தவரை கம்மாவெட்டு (நூறு நாள் வேலை) தான் கை கொடுக்கிறது. சுமார் 200 பெண்கள் ஒரு குளத்தை தூர்வாரும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நமது பெண் தோழர்கள் அவர்களை ஒன்றாகத் திரட்டி ”ஏன் உங்களுக்கு விவசாய வேலைகள் இல்லாமல் போனது, உங்கள் கணவர்கள் ஏன் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். உங்கள் ஊருக்கு மழை வர என்ன செய்ய வேண்டியுள்ளது, ” என்று கேட்டனர். பெண்கள் அமைதி காக்கவே சுமார் அரை மணி நேரம் பொறுமையாக விளக்கினர். இயற்கையை சீரழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளைப் பற்றி விளக்கி ஒற்றுமையாகப் போராடினால் உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கையூட்டினர். அப்பெண்களில் பலரும் நமது பிரசுரத்தை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டு “போராட்டத்துக்கு தகவல் சொல்லுங்க, கண்டிப்பா வர்றோம்’’ என்றனர்.

குருவார்பட்டியில் சுமார் 50 ஏக்கர் சொந்த நிலத்திலும் மேலும் 50 ஏக்கர் கட்டுக் குத்தகைக்கும் விவசாயம் செய்யும் தர்மராஜை சந்தித்தோம். குறைவான நிலமுள்ளவர்களுக்கு குறைவான இழப்பு. அதிக நிலத்தில் சாகுபடி செய்தவர்களுக்கு அதற்கேற்ப பேரிழப்பு. ஆனாலும், இரண்டு முறை தி.மு.க பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ள விவசாயி தர்மராஜ் தமது பேரிழப்பை, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்ட தொனியில் வெளிப்படுத்தினார். அவருக்கும் கூட இயற்கையை சீரழித்த கயவர்களை எதிர்க்க வேண்டுமென்றோ, பகற்கொள்ளைக்கு உதவிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென்றோ சிந்திக்க தெரியவில்லை. ஆனாலும், நிவாரணம் கேட்டு, இரண்டு முறை விவசாயிகளைத் திரட்டிச் சென்று போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். காமராஜரால் கொண்டுவரப்பட்ட சீமை கருவேல மரம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறுஞ்சுவதை அவர் உட்பட பலரும் குறிப்பிட்டனர்.

விவசாயிகள் அமர்ந்துள்ள இடங்களில் பேனரைப் பிடித்து மெகா போனைப் பயன்படுத்தி தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தோம்.
விவசாயிகள் அமர்ந்துள்ள இடங்களில் பேனரைப் பிடித்து மெகா போனைப் பயன்படுத்தி தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தோம்.

நாம் நமது அரசியலைமுன்வைத்து பேசியபோது, அவர் முகத்தில் புது வெளிச்சம் பிரகாசிப்பது போல் பேசத் தொடங்கினார். ”நாம் உடனே விவசாயிகளைத் திரட்டலாம், வாங்க ஊருக்குள்ள இருக்குறவங்கள பாத்து பேசலாம்” என்று அழைத்துச் சென்று இளைஞர்களை அறிமுகப்படுத்தினார். இவர் போல் ஐந்து ஊருக்கு ஒரு விவசாயி துடிப்புடன் உடன் வருவதை அனுபவமாகப் பெற்றோம்.  மாலை நேரங்களில் தேநீர் கடை, கோயில் முன்பு கூட்டமாக விவசாயிகள் அமர்ந்துள்ள இடங்களில் பேனரைப் பிடித்து மெகா போனைப் பயன்படுத்தி தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தோம்.

”ஸ்டெர்லைட்டை எதிர்த்து 15 வருசத்துக்கு முன்னாடியே தூத்துக்குடிக்கு வந்து போராட்டத்துல கலந்துக்கிட்டேன்.  எதையும் தடுக்க முடியல . இப்ப மேஸ்திரி வேலைய மட்டும் பாக்கிறேன். இப்பல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்சிக்கு போறதில்லை” என்று விரக்தியுடன்  சொன்னார், CPM தோழர் ஒருவர். நாம் பேசப்பேச ஆர்வமானார். சபரிமலைக்கு செல்ல புறப்பட்டுவிட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுனரும் நமக்கு தேநீர் வாங்கித்தந்து  ஆர்வமுடன் பேசினார். இவர் முதலில் தி.மு.க.வில் இருந்துவிட்டு பிறகு CPM க்கு வந்தவர். ”மலைக்கு போயிட்டு வந்து உங்களோட வர்றேன்” என்று விடை பெற்றார்.  நமது பிரச்சாரம் இருளில் இருந்த விவசாயிகளின் மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைத்துள்ளது.

(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க