privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !

மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !

-

மதுரை வழக்கறிஞர் முருகனை விடுதலை செய் !

murugan arrest 2ழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வழக்கறிஞர்களின் நீண்ட மவுனத்தை உடைக்கும் வகையில் விண்ணதிரும் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நெடுஞ்செழியன், ஏ.கே.ராமசாமி,வழக்கறிஞர்கள் பானுமதி,பகத்சிங்,அகவன்,பழனியாண்டி,முத்து அமுதநாதன்,ஆதி நாராயணமூர்த்தி, அய்யப்பன், ராஜா, சிவக்குமார், வழக்கறிஞர் முருகன் மனைவி வழக்கறிஞர் தேவி, வழக்கறிஞர் கனகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

உரைகளின் தொகுப்பு:

வழக்கறிஞர் முருகன் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தவர்.தனது வழக்கறிஞர் தொழிலையும் மக்கள் நலனை முன்னிறுத்தியே செய்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி கரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசு முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு சட்ட உதவிகள் செய்தார் என்பது. தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வது வழக்கறிஞர்களின் அரசியல் சட்ட அடிப்படை உரிமை. முருகன் அல்ல எந்த வழக்கறிஞரிடம் மாவோயிஸ்ட் வழக்குகள் வந்தாலும் நடத்துவோம்.

இப்பிரச்சனையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இரண்டு வழக்குகளை முருகன் நடத்தி வருகிறார். அதில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகும் சூழல் உள்ளது. அதைத் தடுக்கவே முருகனைக் கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் அறிவுத்துறையினர் மீது அரசு பாசிசம் பாய்கிறது.முருகன் மீது பாய்ந்த கொடூர ஊபா சட்டம் ஓர் கருப்புச் சட்டம். இதன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும்.இதை நாம் எதிர்க்க வேண்டும். தமிழக கியூ பிரிவு போலீசு நீதித்துறை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.இது வழக்கறிஞர் சமூகத்திற்கு விடப்பட்ட சவால்.இதை நாம் எதிர்கொள்வோம்.

இந்தியா முழுவதும் கண்ணபிரான்,ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் மாவோயிஸ்டுகள், இசுலாமிய அமைப்பினர் உள்ளிட்ட பலருக்கு ஆஜராகியிருக்கிறார்கள். அவர்களையும் சிறையில் அடைத்து விடலாமா? மூத்த வழக்கறிஞர் கண்ணபிரானிடம் நீதிபதிகள் மாவோயிஸ்டுகளுக்கு சட்டத்தில் நம்பிக்கை இல்லையே, நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீதிமன்றத்திற்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது, எனவே காவல்துறையை சட்டப்படி நடக்கச் சொல்லி உங்களிடம் வந்துள்ளோம்” என்றார்.

முருகன் என்ன குற்றம் செய்தார் என்பதைப் போலீசு இன்றுவரை சொல்ல மறுக்கிறது. எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.காவல்துறை தொடர்ந்து எல்லை மீறுகிறது.முருகனை மாவோயிஸ்ட் அமைப்பினர் வழக்கிலிருந்து விலகச் சொல்லி தொடர்ந்து மிரட்டி வந்த போலீசு இப்போது பொய் வழக்குப் போட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து போலீசு அடக்குமுறையை ஏவிவருகிறது. இது தமிழகம் தழுவிய வழக்கறிஞர் போராட்டத்தால் முறியடிக்கப்படும். முருகன் தனிநபரல்ல. அவருக்குப் பின் 80,000 தமிழக வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். பொங்கலுக்குப் பின் தொடர் போராட்டம் நடத்துவோம்.

ஆர்ப்பாட்டத்தில் மதுரை வழக்கறிஞர்களின் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.murugan arrest 1

 பத்திரிக்கை செய்தி

துரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 13 வருடங்களாக  வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் முருகன். இவரை கடந்த 08/01/2017 அன்று கரூர் மாவட்ட கியூ பிரிவு காவல்துறை கு.எண் 01/2016 வழக்கில் 18-A , 18-B , 20 , 38 OF UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT 1967  மற்றும் 120-B IPC பிரிவுகளில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளது. பத்திரிக்கை செய்திகளின்படி வழக்கறிஞர் முருகன் மீதான குற்றச்சாட்டு மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு சட்ட உதவிகள் செய்தார் என்பதே. கைது குறிப்பாணையில் மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினர்களுக்கு உதவி செய்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முருகன் தேனி மாவட்டம் பெரியகுளம் ASST SESSIONS COURT- ல்  S.C.136/2011 என்ற வழக்கில் மாவோயிஸ்ட் அமைப்பினராக இருந்து போராடியதாக குற்றம் சாட்டப்பட்ட சுந்தரமூர்த்தி, ரஞ்சித், விவேக் ஆகியோருக்கும், பெரியகுளம் ADDL. DISTRICT COURT -ல் நடைபெறும் S.C 93/2014 வழக்கில் பாலமுருகன், முருகானந்தம், லெனின், மகாலிங்கம் உள்ளிட்டோருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், என்.செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து வழக்கு நடத்தி வருகிறார். மேற்படி வழக்குகள் தற்போது முடிவுரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆக வாய்ப்புள்ளது.

இவ்வாறான சூழலில் வழக்கறிஞர் முருகனை கடந்த ஒரு மாதமாக  மேற்காணும் வழக்குகளில் இருந்து விலகச் சொல்லி கியூ பிரிவு போலிசார் மிரட்டி வந்துள்ளனர். விலகாவிட்டால் பொய்யாக வழக்கில் சேர்ப்போம் என்றும் சொல்லியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே கைது நடந்துள்ளது

இந்திய அரசியல் சட்டத்தில் தொழில் உரிமை அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் வரும் கட்சிக்காரருக்கு அவர் என்ன குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்காக வழக்கு நடத்த வேண்டியது வழக்கறிஞரின் சட்டப்படியான கடமை என்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்படியான உரிமையும் கூட. மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்புக்கு நீதிமன்றமே அரசு செலவில் வழக்கறிஞர் அமர்த்தி கொடுத்தது. எனவே வழக்கறிஞர் முருகன் தன்னிடம் வந்த கட்சிக்காரர்களுக்கு சட்டப்படியான உரிமைகளின் கீழ் வழக்கு நடத்தி வந்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் முருகன் தனது கட்சிக்காரர்கள் தொடர்பான ரகசியங்களை பாதுகாக்க இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 126-ன் கீழ் கடமைப்பட்டவர். இதை மீறினால் அவர் மீது அவரிடம் வழக்கு கொடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வழக்கறிஞர் மீதான கருர் கியூ பிரிவு போலிசின் நடவடிக்கை சட்டவிரோதமானது ,மட்டுமல்லாமல் மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் அரசியல் சட்ட அடிப்படை உரிமை மீதான தாக்குதல். மேலும் சுதந்திரமாக இயங்க வேண்டிய, நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களை அச்சுறுத்துவது நீதித்துறையின் மீதான காவல்துறையின் மேலாதிக்க முயற்சியாகும்.

வழக்கறிஞர் முருகனை UAPA –  சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது மிகவும் கொடூரமானது. இச்சட்டம் தடா, பொடா சட்டங்கள் போன்ற கருப்புச் சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு விசாரணையே இன்றி சிறை வைக்க முடியும்.  குற்றவாளி அல்ல என்பதை சம்மந்தபட்டவர்தான் நிருபிக்க வேண்டும். சென்ற ஆண்டு , கேரள வழக்கறிஞர்கள் மீது இதே சட்டம் பாய்ந்துள்ளது.

எனவே வழக்கறிஞர் முருகன் மீதான நடவடிக்கை வழக்கறிஞர் தொழிலுக்கும், அரசியல் சட்டத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும். இனிவரும் நாட்களில் காவல்துறை விரும்பாத வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களை கைது செய்யும் போக்கு உருவாகும். இது சட்டத்தின் ஆட்சி என்பதை மாற்றி போலீசின் ஆட்சி என்பதை உருவாக்கும்.

ஆகவே வழக்கறிஞர் முருகன் கைதை மதுரை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக வழக்கறிஞர்கள் இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்வதோடு நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களின் தொழில் உரிமையை காக்க சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கருர் மாவட்ட கியூ பிரிவு போலிசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.murugan arrest 3

  • வழக்கறிஞர்கள், மதுரை.