சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் உள்ள நடுக்குப்பம் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் 23.01.2017 திங்கட்கிழமை அன்று போலீசு நடத்திய கொடூரத் தாக்குதல். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களை திங்களன்று அதிகாலை அடித்து விரட்டுகிறது போலீசு. அடிபட்ட மாணவர்கள் நடுக்குப்பத்திற்கு வந்து மக்களிடம் சொல்லி கதறுகிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அவர்களையும் அடித்து துரத்தும் போலீசு இறுதியில் இக்குப்பத்திற்கு வந்து சூறையாடுகிறது.
380 மீன் விற்கும் சிறு கடைகளை தீக்கிறையாக்கியது போலீசு. அந்த பகுதி மக்களை நீ தானே போராடியவர்களுக்கு சோறு கொடுத்தாய் எனச் சொல்லி ஒவ்வொருவரையும் வீடு வீடாகச் சென்று தாக்கியது மட்டுமல்ல, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களைத் திருடித் தின்றுள்ளது தமிழக காவல் துறை.
மேலும் காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் சமூக ஊடகங்களில் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக உள்ளனர் இந்த மக்கள். தற்போது போலீஸ் இந்த பகுதிகளில் உள்ள ஆண்களைக் கைது செய்ய அடிக்கடி வருகிறது. இதற்கு பயந்து பகுதியில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். வாழ்வாதாரம் இழந்த பெண்கள் கதறுகின்றனர். வினவு செய்தியாளர்கள் நேரடியாக எடுத்த வீடியோ நேர்காணல். பாருங்கள் – பகிருங்கள்.