Monday, August 15, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !

பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !

-

Shanmuganathan”கடந்த பல ஆண்டுகளில் ஏழு சகோதரிகள் எனச் சொல்லப்படும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு வகையான சிந்தனைகளுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களிடம் தேசிய சிந்தனைகளைப் புகுத்துவதே ஆளுநராக எனது முக்கிய பணி” என்று 2015-ம் ஆண்டு மே மாதம் பத்திரிகை ஒன்றின் பேட்டியில் குறிப்பிட்டார் வி.சன்முகநாதன். மேகாலயா மாநில ஆளுநராக மத்திய பாரதிய ஜனதா அரசால் அப்போது அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை மேலிருந்து திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு கேந்திரமான புள்ளியாக சண்முகநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இதற்குப் பரிசாக அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின்  பொறுப்பு ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

மேற்படி சண்முகநாதன் மேகாலையா ஆளுநர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் பதவிகளை தற்போது ராஜினாமா செய்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களின் வாயில் புனல் வைத்து புகட்டிய தேசிய சிந்தனைகள் அஜீரணமாகியதன் விளைவாக ராஜினாமா செய்தாரா?

இல்லை. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையை அந்தப்புரமாக மாற்றியது அம்பலமாகி நாறியுள்ள நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சண்முகநாதன். அவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மேகாலய இளம்பெண் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேகாலய மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பதவிக்கு தாமே நேர்காணல் செய்வதாக கூறி தெரிவு செய்யப்பட்டவர்களை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்துள்ளார் சண்முகநாதன். கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி இரவு 7 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று இப்பெண்ணை அழைத்திருக்கிறார்கள்.  அங்கு சென்ற இப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறார் சண்முகநாதன்.

“அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். எனக்கு கவர்னர் மாளிகையில் ‘பகுதிநேரமாகவோ இல்லை முழுநேரமாகவோ’ வேலை தருவதாக கூறினார்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண். தனக்கு நேர்காணல் நடக்கும் போது யாரும் அருகில் இல்லை என்றும் ஆளுநர் மாளிகையில் ஆடம்பரமான ஒரு அறையில் நேர்காணல் நடந்தது என்று தெரிவித்துள்ளார் அப்பெண்.

ஆனால் இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளான டிசம்பர் 7-ம் தேதியே மேற்கண்ட பதவிக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. எமோர்தினி தங்ஹியூ என்ற பெண்ணிற்கு நேர்காணல் முடிந்து அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அப்பெண்ணிடம் தெரிவித்திருக்கிறது ஆளுநர் மாளிகை.

இது தொடர்பாக சண்முகநாதன் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேசிய அம்மாநில டி.ஜி.பி. சிங் இவ்விவாகரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், சட்டநிபுணர்களின் ஆலோசணையை நாடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வாரம் தங்களது ஆளுநரின் மைனர்தனங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆளுநரின் நடவடிக்கைகள் (பொம்பிள்ளைப் பொறுக்கித்தனம் என்று வாசிக்க) ராஜ்பவனின் மேன்மையைக் குலைப்பதாகவும், அவர் ராஜ்பவனை “இளம் பெண்களின் கிளப்பாக” மாற்றி ஊழியர்களுக்கு பெரும் அவமரியாதையைச் செய்து விட்டாரென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாகவே பழங்குடியினச் சமூக விழுமியங்களைப் போற்றக் கூடியவை. இந்தச் சமூகங்களின் கலாச்சாரங்கள் வரலாற்று ரீதியாகவே பெண்களுக்கான முக்கியத்துவத்துவத்தையும், மதிப்பையும் உத்திரவாதப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே தங்களது ஆளுநரின் மைனர்தனங்களால் கொதித்துப் போயிருந்த ஆளுநர் மாளிகை ஊழியர்களின் கவனத்தில் சண்முகநாதனின் பாலியல் அத்துமீறல் முயற்சி தெரிய வந்ததும் கொந்தளித்து எழுந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் சண்முகநாதன் வேலை கிடைக்காததால் இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள் என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதே போன்று 2009-ல் ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி திவாரி மீது பாலியல்  குற்றச்சாட்டு எழுந்தபோது முதலில் மறுத்து பின்னர் வேறு வழியில்லாமல் மன்னிப்புகேட்டு ராஜினாமா செய்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்பாலியல் குற்றவாளியை பா.ஜ.க தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கிடைத்த தகவலின்படி சண்முகநாதனும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாலியல் பேதமின்றி  போராட்டக்களங்களில் கூடியிருந்த நிலையில் பெண்களுக்கு எதிராக எந்தவிதமான அத்துமீறலோ, துன்புறுத்தலோ நிகழவில்லை. இதை ஒட்டுமொத்த வடநாட்டு ஊடகங்களும் வியந்து பார்த்துக் கொண்டிருந்த அதே நாட்களில் தான் ’காவித் தமிழர்’ சண்முகநாதனின் அயோக்கியத்தனங்களும் அம்பலமாகின.

இதை தொடர்ந்து நேற்று (26-01-2017) குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தந்தை போன்ற பதவி. அதில்  இருப்பவர் மீது இதுபோன்ற புகார் எழுந்திருப்பதால் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் ஆளுநரை பதவிநீக்க கோருவது தங்களுக்கும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.” மேலும் இதற்காக கையெழுத்து இயக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட யோக்கியர்களையும் சட்டமன்றத்தில் பலான படம் பார்க்கும் மகா யோக்கியர்களை கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ராதா ராஜனோ மெரினாவில் கூடிய தமிழ் மக்களை கட்டற்ற பாலுறவுக்காக கூடிய கூட்டமென்று கொச்சைபடுத்துகிறார். இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி கூட்டத்தின் பங்காளியான பா.ஜ எம்.பி சுப்பிரமணிய சாமி தமிழர்களை இன்றளவும் பொறுக்கிகள் என வசைபாடி வருகிறார்.

யார் இந்த சண்முகநாதன்?

டெல்டா மாவட்டமான நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் பிறந்த சண்முகநாதன் தஞ்சாவூரில் படித்தவர். பின்னர் திருச்சி நேஷனல் கல்லூரியில் உயர்கல்வி படித்துள்ளார். 1969-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்காக (திருமணம் செய்து கொள்ளாத முழுநேர ஊழியர்) சேரும் அவர், அறந்தாங்கி பகுதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராக செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்த சண்முகநாதன், 90-களின் துவக்கத்தில் மாநில அமைப்பாளராகவும் (பிராந்த பிரச்சாரக்), பின் தென்னிந்திய அமைப்பாளராகவும் (தக்‌ஷண ஷேத்திர பிரச்சாரக்) பதவி வகித்துள்ளார்.

சண்முகநாதன் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராக இருந்த போது இணை அமைப்பாளராக இருந்த இல.கணேசன் பின்னர் பாரதிய ஜனதாவுக்குச் சென்று அங்கே பதவிகளைப் பெற்று அரசியல் செல்வாக்கில் உயர்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்கான இல.கணேசனும் பாலியல் விவகாரங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தான். இந்நிலையில் தனக்கு கீழ் இருந்த இல.கணேசனின் திடீர் வளர்ச்சியைக் கண்டு தானும் பாரதிய ஜனதாவுக்குச் செல்கிறார் சண்முகநாதன்.

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்கத்தில் இவ்விருவருக்குமான கோஷ்டி அரசியலைக் கண்டு ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது. கோஷ்டி அரசியலில் இல.கணேசனின் கை ஓங்கவே, சில காலம் பாரதிய ஜனதாவில் ஒப்புக்குச் சப்பாணியாக இருந்தார் சண்முகநாதன். பின் ஆலய பாதுகாப்புக் கமிட்டி என்கிற சங்பரிவார் அமைப்பு ஒன்றின் மாநிலப் பொறுப்பில் சில ஆண்டுகள் குப்பை கொட்டினார்.

இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்தே இல.கணேசனின் செல்வாக்கு குறைந்து வந்த நிலையில் மத்தியில் தனக்கு ஆதரவான அதிகாரத் தரகர்களின் துணையுடன் செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறார் சண்முகநாதன். மேகாலயா ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற பாரதிய ஜனதாவின் கூடுதல் செயலாளராக செயல்பட்டு வந்தார். இறுதி வரை ஓட்டுப் பொறுக்கி அரசியலில் விலை போகாத மொக்கையாகவே காலம் தள்ளி வந்த சண்முகநாதன், கடைசியில் ஓட்டரசியல் சந்தையில் விலை போகாத சொத்தைக் கத்தரிக்காய்களின்  இறுதிப் புகலிடமான ஆளுநர் பதவியைப் பிடித்துள்ளார்.

தற்போது 68 வயதாகும் சன்முகநாதன், முன்பு ஆர்.எஸ்.எஸ் பொறுப்புகளில் இருந்த போதே பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என முணுமுணுக்கின்றன காக்கி டவுசர் வட்டாரங்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஒழுக்கத்துக்கும் எள் முனையளவுக்கும் தொடர்பில்லை என்பதை கர்நாடக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்ட சபையில் பிட்டுப் படம் பார்த்த சம்பவமே உலகுக்கு பறைசாற்றியது வரலாறு. சந்நியாசினி உமாபாரதி – பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா விவகாரங்கள் இந்தியாவே நாறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சஞ்சய் ஜோஷியின் களியாட்டங்கள் குறுந்தகடுகளாக அம்பலமாகி ஊரே இந்துத்துவ கும்பலைக் காறித் துப்பியது.

காங்கிரசு உள்ளிட்ட பிற கட்சிகள் அவ்வப் போது அணிந்து கொள்ளும் மக்கள் நல அரசியல் போன்ற முகமூடிகளெல்லாம் இந்துத்துவா முகரைகளுக்குப் பொருந்தாது என்பதால், அவர்களது அரசியலின் அச்சாணி தனிநபர் ‘ஒழுக்கம்’ தான். ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர்கள் கடைபிடிப்பதாகச் சொல்லப்படும் ’பிரமச்சரிய’ விரதம் என்கிற பம்மாத்து தான் இந்துத்துவ அரசியலின் உள்ளே உறைந்து கிடக்கும் பார்ப்பன பாசிச வெறிக்கும் அந்நிய கைக்கூலித்தனத்துக்குமான ஆணுறை.

பாசிச அரசியல் வழங்கும் திமிரும் அதிகாரம் கையிலிருப்பதால் எதையும் மூடி மறைத்து விடலா என்கிற இறுமாப்பும் தான் இந்துத்துவ கும்பலுக்கு தவறு செய்யும் தைரியத்தை வழங்குகின்றது. மலிவான உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை மத ரீதியில் பிளவு படுத்தி விடலாம் என்கிற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும் வரையில் இந்தக் கயவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியாது.

சனாதன தருமத்தின் ‘புனிதங்களை’ தூக்கி வரும் இவர்களைக் களத்தில் முறியடிப்பதுடன் ஓட ஓட விரட்டுவது ஒன்றே அப்பாவிப் பெண்களைக் காப்பாற்ற ஒரே வழி.

புதுப்பிக்கப்பட்ட நேரம் இரவு 8.50,
27.1.2017

மேலும் படிக்க :

  1. ஆட்டுக்கு தாடியும் மாநிலத்துக்கு கவர்னரும் எதற்கு? என்று அண்ணாதுரை கேட்டது மிகச்சரி.எந்த முக்கிய வேலை வெட்டியும் இல்லை!மத்திய அரசுக்காக மாநிலத்தை உளவு பார்ப்பதைத்தவிர!அப்போ மிச்சமுள்ள நேரத்தில் நல்லா தின்னுட்டு சும்மா இருக்க முடியுமா?அதான் மேட்டர் பண்ணுறானுங்க!ஏற்கெனவே திவாரின்னு ஒரு கிழ காம வெறியன் செய்த சேட்டைகளை உலகறியும்

  2. சரி அது ஒருபக்கம் இருக்கட்டும். இப்பம் தமிழ்நாட்டிலே நிர்மலாதேவி அவர்களுடைய பணியை அவர் யாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார் என்று யாருக்காவது தெரியுமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க