privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மக்களை விடுதலை செய் - போலீசைக் கைது செய் ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி...

மக்களை விடுதலை செய் – போலீசைக் கைது செய் ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !

-

PP Logo

பத்திரிகைச் செய்தி

31-01-2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம் :
ஓரவஞ்சனையை எதிர்க்கும்-உரிமைகளை மீட்கும் குறியீடு !
மக்களை சாதி, மதமாக பிளவுபடுத்தும் சதிகள் முறியடிப்பு!

அன்புடையீர் வணக்கம்!

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. ஜனவரி 23 தொடங்கிய போலீசாரின் வன்முறை வெறியாட்டம் இன்று வரை தொடர்கிறது. சென்னை, மதுரை, கோவையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டு அடித்து சித்ரவதைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசின் தாக்குதலுக்காளான நூற்றுக்கணக்கானோர் தலைமறைவாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வீட்டிற்கு வராமல் அச்சத்தில் வெளியில் இருக்கின்றனர்.

மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்தரவு, போலீசை கண்டித்து போஸ்டர் ஒட்டத்தடை, போலீசை கண்டித்து பேச தடை, பிரச்சாரம் செய்தால் பொய் வழக்கில் சிறை, என காவல் துறையின் அடக்குமுறை இன்று வரை தொடர்கிறது. ஏன் இந்த வன்மம்?.

தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுவதற்கு எதிராக குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஜல்லிக்கட்டில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மெரினாவில் அலைகடலென திரண்டனர். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, கோவை, என தமிழகம் முழுவதும் மக்கள் பல வடிவங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வேறுவழியின்றி ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

jp

“மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் தோற்று விட்டீர்கள். யாருடைய வக்குறுதிகளையும் நம்ப மாட்டோம். நாங்களே பார்த்து கொள்கிறோம், அரசியல் கட்சிகள் வேண்டாம், எந்த தலைவரும் வேண்டாம் என” மாணவர்களும், இளைஞர்களும், உறுதியாக போராடினர். ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதோ, அலைக்கழிப்பதோ, ஏமாற்றுவதோ மத்திய மாநில அரசுகளுக்கு இனி சாத்தியமில்லை என்ற நிலையால் ஐந்தாண்டுகளாக இழுத்தடித்த பிரச்சினை 5 நாட்களில் முடிந்தது.

காவிரி நீர் மறுப்பு, மீத்தேன், அணு உலை, கெயில் குழாய் பதிப்பு. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு, தமிழக மீனவர் பிரச்சினை , விவசாயிகள் சாவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், என அனைத்திலும் டெல்லி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் பங்கேற்ற வரலாற்றுப் போராட்டமாக மாறியது. போலீசு தலையீடின்றி மெரினாவில் பெரும் மக்கள் திரள் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தி கொண்டு  ஏழுநாட்கள் போராடியது, உலகமே உற்றுப்பார்க்க முன்னேறியது. தமிழகத்தின் ஒட்டு மொத்த சமூகமும் அணிவகுத்தது. இதுதான் மக்கள் அதிகாரம்.

இந்த அரசு அமைப்புகளை நம்பி, பின் தொடர்ந்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தான் வகுத்த சட்டங்களை, கொள்கைகளை தானே ஏற்று அமுல்படுத்த முடியாமல் நெருக்கடியில் சிக்கியதுடன்  ஆளும் அருகதையை இழந்து விட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக தமிழக வணிகர் சங்கங்கள் மார்ச் மாதம் முதல் கோக், பெப்சி விற்க மாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் புறக்கணிப்பால் பல பள்ளி, கல்லூரிகளில் கோக் பெப்சி விற்பது நின்று போயுள்ளது.

தலையாரி முதல் தலைமைச்செயலாளர் வரை கிரிமினல்மயமாக, ஊழல்மயமாக மக்கள் விரோதமாக மாறியதை நாள்தோறும் வெளிவரும் செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டே இருக்கின்றன. கல்வித்துறை முதல் கலால் துறை வரை பல துறைச் செயலாளர்கள் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவால் நியமிக்கப் பட்டவர்கள். துறைவாரியாக மொத்தமாக வசூல் செய்து போயசுக்கு கொடுத்தவர்கள். இந்த அரசே சட்ட விரோதமானது. ஷீலா பால கிருஷ்ணன், ராமாநுஜம் போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளால் சட்டப்புறம்பாக வெளி அதிகார மையத்தால் நடத்தபட்டு வருகிறது.

எங்கே போய் சொல்வது? யாரிடம் சொல்வது? என மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் வரிசையாக தீர்க்கப்படாமல் முற்றிய நிலையில் நிற்கின்றன. அதன் குறியீடாகவே  ஜல்லிகட்டு போராட்டம் வெடித்தது. சாதி மத பேதங்கள் கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்படுத்திய போராட்டத்தின் அழகை, ஆசிட் ஊற்றி சிதைத்துவிட்டது தமிழக காவல் துறை.

மெரினாவில் போலீசு தாக்குதலுக்கு காரணம் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் என சொல்லப்படுகிறது. அலங்காநல்லூரிலும், தமுக்கத்திலும், கோவையிலும் நடத்திய தாக்குதலுக்கு என்ன காரணம்? காளைக்கான இத்தகைய அமைதிப் போராட்டம், நாளை காவிரிக்கான போராட்டத்திலும் தொடரக்கூடாது என்பதுதான் அரசின் அச்சம், பீதி. ஜனவரி 23 அன்று போலீசார் நடத்திய வன்முறை தாக்குதலின் நோக்கம் முக்கியமானது.

போலீசின் தாக்குதல், ரப்பர் குண்டு, கல்வீச்சு, கண்ணீர் புகை, தீ வைப்பு, சித்ரவதை, சிறை, என்ற சுவடுகளும் மக்கள் மனதில் ஆறாத ரனமாக இருக்க வேண்டும். இத்தகைய அடக்கு முறைகளை உலகமே பார்க்க வேண்டும். அப்போதுதான் போலீசின் மீதான அச்சம் பொது மக்களுக்கு இருக்கும். போலீசு பார்க்காத விசாரணை கமிசனா?  “எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் போலீசு தயவில்லாமல் ஆள முடியாது.” என்று கடந்த காலங்களில் குற்றம் செய்த போலீசார் யாரும் எதற்கும் தண்டிக்கபட்டது இல்லை.

மோடி அரசின் நோக்கங்களை நிறைவேற்றவே, தமிழக காவல் துறை வன்முறையை நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தில் காக்கி உடையில் காவி புகுந்து விட்டது என்பதை காவல் துறை அதிகாரிகளின் பேச்சுக்களும் உறுதி செய்கின்றன. மாநில உரிமைகளுக்கான போராட்டமாக  ஜல்லிகட்டில் வெடித்தது. சாதி மத பாகுபாட்டை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி.யின் சதி தோல்வி அடைந்தது. தமிழர் பண்பாட்டை அழிக்க முயல்வது. இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டது, மாநிலம் முழுவதும் மோடியை கடுமையாக விமர்சிக்கபட்டது  என அனைத்திலும் டெல்லி மோடி அரசுக்கு எதிராக நடந்தது. இந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி ஊடுருவி ஒன்றும் செய்ய முடியவில்லை.  பழி தீர்க்கவே காவல் துறையை கூலிப்பைடையாக ஏவி தமிழக மக்களை தாக்கியுள்ளது.

அரசின் கொள்கை முடிவுகளில் அரசியல் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்க விடாமல், இந்த அமைப்பு முறை முற்றிலும் புறக்கணித்து வெறும் பார்வையாளர்களாக, வாக்காளர்களாக மட்டுமே வைத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக மட்டுமல்ல, தார்மீக ரீதியில்கூட மக்களை கட்டுப்படுத்தும் அருகதையை இழந்து விட்டன. அதிகார வர்க்கமும், போலீசும் மக்களுக்கு தேவையற்றதாக மாறியதுடன் எதிராகவும் மாறிவிட்டது என்பதை மீண்டும் மெரினா போரட்டத்தில் போலீசு நிருபித்து உள்ளது.

  1. ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக மாற்றியதற்கு அரசும், காவல் துறையும்தான் காரணம், பொறுப்பு. நீதிவிசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்த போலீசார் தண்டிக்கப்பட வேண்டும்.
  2. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் கைதானவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். காயம் பட்டவர்களுக்கும் உடமைகளை இழந்தவர்களுக்கும் உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.
  3. தமிழக முதல்வரும், காவல்துறையும் பெரும் திரளான மக்கள் அமைதியாக போராடியதை மதித்து போற்றி பாதுகாக்காமல் பின்லேடன் படம், தனித் தமிழ்நாடு என ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை காட்டி பொய் பிரச்சாரம் செய்வது, சமூக விரோதிகள் என பொதுவாக சொல்லி சில அமைப்புகள் பெயரை கசியவிட்டு பழிபோடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
  4. ஜனநாயக விரோதமாக சென்னையில் பல இடங்களில் போடப்பட்ட144 தடையுத்திரவை நீக்குவதோடு, காவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு, நிவாரணம் கேட்டு நடைபெறும் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொது கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க கூடாது.
  5. முதல்வர் அறிவித்துள்ள விசாரணை கமிசன் என்பது போதாது, குற்றம் செய்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். கலவரத்தில் சம்பத்தப்பட்ட உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  6. ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஆதரவளித்த மீனவர்கள் என பலரையும் பழி தீர்க்கும் போலீசின் அடக்கு முறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.

பங்கேற்பாளர்

  1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
  2. தோழர்.த.கணேசன்,மாநிலஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
  3. வழக்கறிஞர்.சரவணன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். சென்னை.
  4. தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
  5. திரு. வாசுதேவன், மாணவர். பச்சையப்பன் கல்லூரி.

தோழமையுடன்

வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு. 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க