privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !

கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !

-

பணத்தோடும் பந்தலோடும் வரவேற்கிறது காஞ்சிமடத்தின் முகப்பு.

வேதம் விதித்த தர்ம வழியில் நடப்பவன் புண்ணியத்தைத் அடைகிறான். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்பவன் பாவத்திற்கு ஆளாகிறான்”- இது இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியாரின் சிந்தனை. “கற்புக்கரசிகளை மனைவியாகக் கொண்டிருப்போருக்குத்தான் கடவுள் தெரிவார்” – இது வைகைப்புயல் வடிவேலாரின் சிந்தனை. முன்னதின் தராரதரத்தை பின்னவர் ‘புரிய’ வைக்கிறார் என்பதற்கு காஞ்சி சங்கரமடத்தில் பார்த்ததும் கேட்டதுமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு நண்பரைப் பார்ப்பதற்கு காஞ்சிபுரம் சென்றிருந்தேன். ஊர் சுற்றி பார்க்கும் வைபவத்தில் காஞ்சி மடமும் உண்டு என்பதால் அங்கும் சென்றோம். அன்று கூட்டம் அதிகமில்லை. இருப்பினும் வந்தவர்களில் பெரும்பான்மையினர் சுண்டிவிட்டால் சிவக்கக்கூடிய வெண்ணிற வேந்தர்கள்தான். எங்களையும் உள்ளிட்ட ‘கரிய’ அசுரர்கள் ஓரிருவர்தான். முதலில் சங்கராச்சாரி தரிசனம் தரும் கருவறை இதுதான் என்று கல்லாலான கால் பாதத்தைக் காண்பித்தார்கள். அந்த அறையில்தான் ஜயேந்திர சரஸ்வதி பொது மக்களுக்கு காட்சி அளிப்பாராம். இப்போதெல்லாம் அவர் அதிகம் பேசுவதில்லையாம். அதுவும் அதிஷ்டம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காட்சியும் கொஞ்சம் கற்கண்டும் கிட்டும் என்றார்கள். கருவறையின் அருகிலேயே மண்டையில முக்கால் பாக முடிய வழித்து விட்டு கால் பாக முடியோட புண்ணியத்தை அடையும் வழியான வேத பாடத்தைப் பதினைந்து வயது மதிக்கத்தக்க பார்ப்பன சிறுவர்கள் பரிதாபமான முறையில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து கண்ணாடி அறை ஒன்றில் மனுசனா சிலையா என்று இனங்காண முடியாத காஞ்சிப் பெரியவரின் மெழுகுச்சிலையொன்று இருந்தது. அதற்கு மிகவும்  சுத்தமான ஆடை, செருப்பு மற்றும் அதனை சுற்றி பணம் (பக்தர்கள் போடும் காணிக்கை) என எல்லாம் பளிச்சென்று இருந்தது. உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது.

அதுக்கு நேர்மாறாகக் கருவறைக்குப் பின்புறம் ஒரு இடத்தில் சிலையைப் போல் அமர வைக்கப்பட்டிருந்தார், ஒரு உயிர் உள்ள வயதான சாமியார். அவருக்கு சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கலாம். ஒரு குடித்தன வீட்டில் ஓரமாக இருக்கும் மாட்டுத் தொழுவம் போல இருந்தது அந்த இடம். நீளமான வரண்டாவின் ஓரம் இரண்டடி சிமண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் அவர். இரண்டு சொம்புத் தீர்த்த தண்ணீர், ஒரு சொம்பு குடிதண்ணீர், ஏதோ இரண்டு ஆன்மீகப் புத்தகங்கள், ஏதோ சாமி புகைப்படம், விபூதி, குங்கும கிண்ணம் எல்லாம் அந்த சாமியாரின் அருகில் அதே பெஞ்சில் இருந்தன. அவர் உடம்பு முழுவதும் விபூதி பட்டை, சந்தன குங்குமப் பொட்டு, கழுத்தில் மணி மாலை, வரித்து கட்டியக் கோவணம், தூக்கிக் கட்டிய கொண்டை தலைமுடி, ஒரு முழ நீளத்துக்குத் தாடி என வீற்றிருந்தவரைப் பார்க்கும் போது பக்தியை விட பரிதாபமே வரும்.

உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது. – பெரிய சங்கராச்சாரியாரின் மெழுகுச் சிலை.

அந்த இடம் பல நாள் சுத்தம் செய்யாத நிலையில் எலி நடமாட்டத்துக்கு சாட்சியாக எலிப் புழுக்கைகள் தெயவீக் மணத்தை தாண்டி மணம் வீசின. அங்கேதான் அவர் தங்கியும் இருக்கிறார். அவர் அமர்ந்திருந்த திண்ணைக்கு கீழேயே டாய்லெட் வடிவில் சிமெண்டால் கட்டியிருந்தார்கள். அதில் சிறுநீர் கழித்தால் அது சாக்கடையோடு சேர்ந்து விடும். அதுல வேதனை என்னன்னா அவசரத்துக்குக் கோவணத்த அவுத்துட்டு அவரால ஒன்னுக்குக் கூடப் போக முடியாது. தடியக் கூட ஊனி நேரா நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில இருக்கும் அவரால இருக்கி கட்டிய கோவணத்த (சன்னியாசி கோவணக்கட்டு) எப்படி அவிழ்க்க முடியும்?

மூன்று நாள் விடாது பெஞ்ச மழையில கூட அவர வெத்து உடம்போட  வச்சுருந்ததப் பாக்க மனசு தாங்கல. சாப்டிங்களா குளிருக்குப் போர்வ வேணுமான்னு ஒரு குழந்தையிடம் கேட்கச் சொன்ன போது, அது அவர் காதுக்கே கேட்டு உடனே திரும்பிப் பார்த்தார். அதில்   ஏக்கம் இருந்தது. அதே நேரம் அப்போது அங்கே வந்த ஒரு நடுத்தர மனிதர், “நல்லபடியா திருப்பதி போய்வர உங்க ஆசீர்வாதம் வேணுன்னுப் அந்தப் பெரியவரிடம் கேட்டதும் கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போல அவர் பார்வையில் அத்தனை எரிச்சலும், சலிப்பும் இருந்தது. “கடவுள் இல்லேன்னு சொல்றவன விட இருக்குன்னு சொல்றவனுக்குதான் கடவுள் இல்லைன்னு உறுதியா தெரியும்”னு சொன்ன பெரியாரின் உண்மையை நினைவுபடுத்தியது அந்த பார்வை.

ஒரு பச்சக் குழந்தை முகத்துக்கு முன்னாடி ஒரு கிலுகிலுப்பையை ஆட்டினா அது சிரிக்கும் உற்சாகமடையும். அதே குழந்தை வளர்ந்து முதிர்ந்து கட்டிலில் கிடக்கும் போது உற்சாகமூட்ட கிலுகிலுப்பையை ஆட்டுனா சிரிக்குமா.? சிரிக்காது. முடியாத முதுமையில் ஜீவனற்றப் பார்வையும் உணர்ச்சியற்ற முகமுமாகப் பார்ப்போரை பரிதாபப்பட வைக்கும் தோற்றத்தோடு இருந்தவரை ஒரு சாமியாராக் பிடித்து வைத்திருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் இருக்கும் தொன்மம் வாய்ந்த பொருள் போல அல்லது உயிரியல் பூங்காவில் இருக்கும் அபூர்வ விலங்கு போலவும், அதை பலர் அதியசமாக பார்ப்பதுமாய் இருந்தது அந்த சாமியாரின் நிலைமை. நல்ல உணவும் உறக்கமும் தேவைப்படும் தள்ளாத வயதில் இல்லாதக் கடவுளைக் காப்பாத்த இவரை சித்திரவதை செய்கிறார்கள்.

அடுத்து உயிரற்ற சிலையையும் உயிருள்ள மனிதனையும் காட்சிப் பொருளாக்கி ஆன்மீகத்தை நிலைநிறுத்தி ஆளுகின்ற காஞ்சி சங்கரமடத்தின் மற்றொரு பாவக்கணக்கைப் பார்ப்போம்.

சென்னை ராஜிவ்காந்தி மருந்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் நோயாளி அல்லாத காத்திருப்போர் தங்குமிடத்தில் தற்செயலாக கோகிலாம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்டு ஒரு பத்து நாள் இருக்கும்.

சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க – கோகிலாம்மா. இடம்: சென்னை அரசு மருத்துவமனை.

“சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க. அறிமுகம் இல்லாத மனுசாள் கூட என்னப் பாத்து பாவம் பண்ணின ஜென்மமுன்னு சொல்லும் போது பூமிக்கு பாரமாத்தான் நான் பொறந்தேன்னு நெனைக்காம இருக்க முடிலையே!. யாரைச் சொல்லியும் குத்தமில்ல. சக மனுசாகிட்ட எப்புடி நடந்துக்கனுமின்னு பணம்தான் சொல்றது. ராமா! ராமா! இதுக்கு மேலேயும் லோகத்துல நேக்கு இருக்க முடியலப்பா….” என்று திடிரெனக் கதறி அழுதார் கோகிலாம்மா.

ஐம்பது வயதைக் கடந்திருக்கும் அவர் 20 நாளுக்கு மேலாகக் கணவருடன் மருத்துவமனை வளாகத்தில் தான் தங்கியிருந்தார். மிகவும் பரிதாப நிலையில் தரையில் சுருண்டு அவர் கணவர் படுத்திருந்தார். வயிறு வலி, கிட்னியில் பிரச்சனை என்று இங்கு சேர்ந்த அவர்களைப் பாண்டிச்சேரி புற்றுநோய் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்து வரச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. வீடே இல்லாத அவர்கள் புதுவைக்குப் போக பஸ்சுக்குப் பணமில்லாது அங்கேயே தங்கியிருந்தனர்.

கோகிலாவின் கணவர் பாலசுப்பிரமணியன், புரோகிதத்தையே தொழிலாகக் கொண்டவர் . இவர்களுக்குப் பிறந்த குழந்தை மனவள பாதிப்போடு வளர்ந்து இன்றைக்கு அவனுக்கு பதினைந்து வயது இருக்கும் என்றார் கோகிலா. மகன் பிறந்ததும் சிறிது காலத்திலேயே புரோகிதத் தொழில் பிடிக்காமல் விசேசத்துக்குச் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளார். காலப்போக்கில் மனவளர்ச்சி பாதித்த மகனுக்கு மருத்துவம் செய்துகொண்டு சென்னையில் வாழ்வதற்கான வருமானம் கிடைக்காததால் சொந்த ஊர் சாதிசனத்தின் மேல் நம்பிக்கை வைத்து காஞ்சிபுரத்துக்குத் திரும்பியுள்ளார். ஐயர் என்ற தகுதியில் சங்கரமடத்தில் சமையல் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

“காஞ்சியில ஒரு சின்ன வாடகை வீட்டுல குடியிருந்துட்டு சங்கரமடத்துல 12 வருசமா சமையல் வேலை செஞ்சுட்டு இருந்தோம். சாப்பாடு மடத்துல முடிஞ்சுரும். வாங்கற சம்பளம் வாடகை, மருந்துக்கும் தான் சரியாருக்கும். ஆசப்பட்டு  ஒன்னு கூட வாங்கிச் சாப்பிட முடியாது.

எந்த நேரமும் அவர் அனல்லேயே நிப்பார். பாத்தரம் தேய்க்கறது, காய் கழுவறது, சுத்தம் செய்றதுன்னு தண்ணியிலேயே எம்பொழப்பு போகும். கால் கையெல்லாம் நரம்பு இழுத்துகிட்டு புண்ணாயிருச்சு. அவருக்கும் கிட்னியில கட்டி வந்தது. நாலு பேரு நல்லவங்க வர்ர எடம் உங்களப் பாத்து முகம் சுழிக்கக் கூடாது வேற வேலை பாத்துக்குங்கன்னு சங்கர மடத்துல சொல்லிட்டாங்க. பத்து வருசத்துக்கு மேல மடத்துல வேலபாத்தோம். திடீர்னு ஒரு நாள் எந்த உதவியும் செய்யாம வரவேணாம்னு சொன்னதும் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னே ஒண்ணும் தோணல”.

மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

மடத்தில் உள்ள சில மேல் மட்ட நிர்வாகிகளிடம் உதவி கிடைக்கவில்லை என்றதும் மடாதிபதி ஜெயேந்திர  சங்கராச்சாரியிடமே கோகிலா தம்பதியினர் தன் குறையைக் கொட்டியுள்ளார்கள்.

“அய்யா நாங்க 10 வருசத்துக்கு மேல மடத்துலதான் வேலை செய்றோம். உங்கள விட்டா எங்களுக்கு வேற போக்கிடம் கெடையாது. முடியாத பிள்ளைய வச்சுருக்கோம். நீங்க பாத்து உதவி செஞ்சாதான் உண்டுன்னு ஒரு தடவ இல்ல நாலு தடவ சங்கராச்சாரி கால்ல விழுந்துருக்கேன். மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

புளிச்ச ஏப்பக்காரனுக்கு பசியேப்பம் புரியாதுங்க. அதனாலதான் ‘அழுவாதப் பாப்பா இந்தா வாழப்பழம்னு’ கல்கண்டத் தூக்கி கையில கொடுக்குறாரு சங்கராச்சாரி. சாதி பாசமெல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கற வரைதான். முடியாதவங்கள யாரு வேலைக்கி வச்சுக்குவா? நல்லவா கெட்டவா யாருன்னு தெரியாம உலகம் புரியாம இருந்துட்டோம். எங்க ஆளுங்களுக்கு நீங்க எவ்வளவோ தேவலாம்”.

ஆயிரம் பேருக்கு அன்னதானமா இருந்தாலும் அற்புதமா சமைப்பாராம் கோகிலாவின் கணவர். அவர் சமைச்சதை வயிராற சாப்பிட்டு வாயார வாழ்த்தினவங்க எத்தனெப் பேர் இருப்பாங்க, ஒருத்தர் புண்ணியம் கூட அவங்களக் காப்பாத்தாம நடுத்தெருவுல விட்ட போது பார்ப்பனராவே இருந்தாலும் கடவுள் மேல கோபம் வரத்தேனே செய்யும்?

பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு.

“வாடகை கொடுக்க முடியாம வீட்ட காலி செஞ்சுட்டு கோயில்ல அன்னதானம், தெரிஞ்ச வீட்டு திண்ணையிலப் படுக்கையின்னு ஆறு வருசமா இப்படிதான் வாழ்க்கைய ஓட்டறோம். இந்த நெலமையில எம்பிள்ளைய எங்கூட எப்புடி வச்சுக்க முடியும். அவர் தங்கச்சிதான் பாத்துக்குது. அவங்களும் வசதியானவங்க கிடையாது. ஏதோ எங்க கையில கெடைக்கிற காச எப்பையாவது கொடுப்போம்.

மடத்துக்கு வந்துபோன மாமா ஒருத்தர் நாலு வருசமா மாசம் 500 ரூபா உதவி செஞ்சாரு. அவருக்கும் பெரிய சம்பாத்தியம் இல்ல, பிள்ளைகள வச்சுட்டு சிரமப்படுறவருதான் இருந்தாலும் எங்க மேல எறக்கப்பட்டு குடுத்துட்டு இருந்தாரு.  பிறகு அவரும் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சம்பாத்தியம் போதல மண்ணிச்சுருங்கோ, மாமின்னு கைய விரிச்சுட்டார்.”

 

இதுதான் கோகிலாம்மாவின் கதை. அரசு மருத்துவமனையில் இருக்கும் இல்லாமை எனும் வறுமையை கொண்டிருக்கும் மக்கள் கோகிலாம்மாவுக்கு முடிந்த அளவு உதவுகிறார்கள். அம்பானி, டாடா, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்கள் வந்து போகும் பணம் பிதுங்கும் சங்கர மடம் உதவ முடியாதென்று கைவிரித்து விட்டது. பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு என்பதை கோகிலாம்மாவும் அந்த தொண்டுக் கிழ சாமியாரும் உணர்த்துகிறார்கள்.

காஞ்சிப் பெரியவரின் அருளுரையின் படி பார்த்தால் காஞ்சிமடத்தில் இருந்த பெரியவர், வேதம் விதித்த தர்ம வழியைப் பின்பற்றிப் புண்ணியத்தை அடைந்தவர். கோகிலா தம்பதியோ ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்து பாவத்துக்கு ஆளானவர் என்பதுதான்.

மனு தர்மத்தை ஒழிக்காமல் சங்கரராமன்களுக்கும், கோகிலாம்மாக்களுக்கும் நீதி கிடைப்பதில்லை, சங்கராச்சாரிகளுக்கும் தண்டனை கிடைப்பதில்லை!

– சரசம்மா