Sunday, January 24, 2021
முகப்பு சமூகம் வாழ்க்கை சீர்காழி விவசாயத்தை சிதைத்த அரசு - நேரடி ரிப்போர்ட்

சீர்காழி விவசாயத்தை சிதைத்த அரசு – நேரடி ரிப்போர்ட்

-

நாகை மாவட்டம் காவிரி டெல்டாவின் ஒரு பகுதி. காவிரி ஆற்றில்  கட்டப்பட்டுள்ளது கல்லணை. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்டகாவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்புவில்  உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.

கல்லணைக் காவிரி பின்னர் காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என 4 ஆகப் பிரிகிறது.  பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புதுஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

அதாவது வெள்ளக் காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடதுபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில்  திருப்பிவிடப்படுகிறது. காவரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம் என்ற பெயர்க்காரணமும் சொல்லப்படுவதுண்டு. கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் கனஅடி  நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரைத் தேக்கிப் பாசனத்துக்கு திருப்பி விட்டால் இந்த ஆண்டு சம்பா நடவுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும்.  வாடி- பணங்காட்டான்குடி அருகே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த அரசு அலட்சியப்படுத்தியதால் தண்ணீர் முழுவதும் வீணாகக் கடலில் கலக்கிறது.

வாடி- பணங்காட்டான்குடியில் தடுப்பணைக் கட்டுவதன் மூலம் சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம் உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் முப்போகமும் விவசாயம் செய்ய முடியும். ஆனால் அரசு திட்டமிட்டே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறது.

சீர்காழி ஒன்றியத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் இருபத்து ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயம் முற்றிலும் பாழாகியுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க சென்றோம். நாங்கள் செல்லும் வழியெல்லாம் பாதி நிலங்கள் கரம்பாகவும், மீதி நிலங்கள் கதிர் வரும் நிலையில் பயிர்கள் காய்ந்தும் அவற்றில் கால்நடைகள் மேய்ந்து கொண்டும் இருந்தன.

ஒரு காலத்தில் இப்பகுதியில் கணிசமான அளவு வாழை, மல்லிப்பூ உள்ளிட்டவை எல்லாம் செழிப்பான முறையில் விவசாயம் செய்து வந்தனர்.  ஆனால் தற்பொழுது காடும் காய்ந்து, வீடும் வாழ்விழந்து தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

விவசாயி இமயவரம்பன்

இமயவரம்பன்  65 வயது விவசாயி. பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இன்றும் பல போராட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர். அவர் கூறுகையில் இருபது வருசத்துக்கு முன்னாடி விவசாயம் செய்யும் போது ஏர் உழுவ வேண்டும்’ன்னா வீட்ல இருக்கற எல்லோரும் கழனிக்கு சென்று விடுவோம். இயற்கையான விவசாயம்.

ஏர் உழுவதற்கு முன்னாடி எருவு அடிப்போம், தழை வெட்டிப் போடுவோம்,  அறுவடை முடிஞ்சதும் மாட்டை எல்லாம் கழனில கட்டிடுவோம். அது அங்கேயே சாணியப் போடும். அது தான் கழனிக்கு ஊட்டச்சத்து மாதிரி. மாட்டை விக்கவே மாட்டோம். சூடு அடிக்கனும்’ன்னா மாட்டை கட்டி தான் அடிப்போம்.

நாலு மடையிலும் தண்ணி வரும். அந்தத் தண்ணிய பாக்கும் போதே அள்ளி மொண்டு குடிக்கணும் போல இருக்கும். தண்ணி வர வேகத்துல மீன்கள் எல்லாம் துள்ளி குதிக்கும். மூணு போகமும் சுகபோகமாகத்தான் இருக்கும். விவசாயத்தை அவ்ளோ ஆர்வமா செய்வோம். இப்ப விவாசாயம் செய்யவே மனசு இல்லை.

இப்ப ஏன் விவசாயம் செய்வதில்லை?

தண்ணி இல்ல தம்பி, காவிரித் தண்ணியும் வரல. நிலத்தைடி நீரை நம்பியும் பயிர் வைக்க முடியல. நீர் மட்டம் சுத்தமா  கொறஞ்சிடுச்சி. பத்து அடிக்கு மேல போர் போட்டா, உப்பு தண்ணி தான் வருது. இந்த நெலமையில எப்படி விவசாயம் பண்றது?

பல வருசமா கல்லணையில இருந்து தண்ணியத் தொறக்க சொல்லி போராடுறோம். அதிகாரிங்க காதுலையே போட்டுக்க மாட்றாங்க. ஒவ்வொரு வருசமும் கொள்ளிடத்துல தண்ணி வீணாப் போய் தான் கடல்ல கலக்குது. பணங்காட்டாங்குடில தடுப்பணைக் கட்டச் சொல்லி எத்தனை மனு, எத்தனை போராட்டம். இந்த அரசு கண்டுக்கவே இல்லை என்றார்.

விவசாயி காந்தி

அருகாமை கிராமத்தில் உள்ள காந்தி என்பரைச் சந்தித்தோம்.

அவர் கூறுகையில், எழுநூத்து ஐம்பது கோடியில ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்  திட்டத்துக்கு ஒதுக்குறாங்க. நாங்க காமராஜர் ஆட்சில இருந்தப்பவே வடரங்கத்தில் ஒரு பெட்டேம்  கட்ட சொல்லி மனு கொடுத்தோம்.  இது வரைக்கும் இந்த அரசாங்கம் கண்டுக்கவே இல்ல. திமுக ஆட்சில இருக்கும் போது வந்து அளந்துட்டு போனதோட சரி.. அந்தம்மா இருந்தப்ப 400 கோடி ஒதுக்குனதா சொன்னங்க. சொல்லி ரெண்டு வருஷம் ஆகுது ஒரு கால் கூட நடவே இல்லை.

இப்ப தண்ணி இல்லாம பயிர் எல்லாம் காயுது. குடிக்க தண்ணி இல்லாம நாங்க படாத அவதிப்படுறோம். 25 வருசமா இந்த கொள்ளிடத்துல ஆத்து மணலை ராவும் பகலுமா கொள்ளையடிச்சி  தண்ணியப் பூரா உறிஞ்சிட்டானுங்க. அப்புறம் எங்கத் தண்ணி இருக்கும்.  நாங்க போர் போட்டு தண்ணி எப்படி எடுக்க முடியும்.? மீறி போட்டா எல்லாம் உப்பு தண்ணியா தான் வருது. இந்த உப்பு தண்ணி உள்ள வர்றதைக் கூட இந்த அரசால தடுக்க முடியல. அப்புறம் நாங்க எங்கிருந்து விவசாயம் செய்யறது, என்ற ஆவேசமான பேச்சில் தென்பட்டது. அவர் அகிம்சைவாதி காந்தியல்ல.

விவசாயி சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம் 85 வயது. கொள்ளிடம் பாசன சங்கக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தோம். விவசாயிகளின் நலனுக்காக இந்தத் தள்ளாத வயதிலும் தளராமல் போராடி வருகிறார். மேட்டூர்ல இந்த வருஷம் 85 அடி தண்ணீர் இருந்தது. ஞாயமாக எங்களுக்கு 10 சதவீதம் தண்ணிய திறந்து விடனும். ஆனால் இந்தத் தண்ணிய  திறந்து விடாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது அரசு.

திருச்சியில் உள்ள செயற்பொறியாளரைத் தொடர்பு கொண்டு பல முறைப் பேசியும் தண்ணீரை திறந்து விடவில்லை. அப்படியே திறந்து விட்டாலும் ஆச்சாலபுரம் வரைக்கும் போய் சேராது. எந்தக் கிளை வாய்க்காலும் தூர் வாராமல் மேடும் பள்ளமாவும் இருக்கு. எப்படி தண்ணீ போய் சேரும். தூர் வாரச் சொல்லி எத்தனையோ போராட்டம் நடத்தியாச்சு. இதையும் கூட இந்த அதிகாரிங்களால செய்ய முடியல.

விவசாயத்துக்கு மானியம் கொடுக்கிறோம்னு சொல்றாங்க. ஆனா எந்த மானியமும் எங்களுக்கு வரதே இல்லை. சென்ற ஆண்டு இன்சூரன்ஸ் கட்டினோம். இதுவரைக்கும் அந்தத் தொகை வரவில்லை. முதலைமேடு கூட்டுறவு சங்கம் இங்கு இருக்க கூடிய விவசாயிகளை எல்லாம் ஏமாற்றுகிறது. மொத்தமாக இந்த அதிமுக அரசே எங்களுக்கு எதிரியா தான் இருக்கு. இந்த அரசை நம்பி எங்க வாழ்க்கை எல்லாம் வீணானது தான் மிச்சம் என்றார்.

பல ஆண்டுகாலமாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அணை கட்டுவதற்கும், நீரை திறந்து விடுவதற்கும் ஏன் இந்த அரசு தயங்குகிறது.  விவசாயத்தை திட்டமிட்டே ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தான் இவர்கள் நோக்கம். குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் நடந்து வரும் மணற்கொள்ளை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் விவசாயிகளின் கோரிக்கை இத்தனை ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.அது மட்டுமில்லாமல், இறால் பண்ணை முதலாளிகளின்  நலனும் அடங்கியுள்ளது.

கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் திட்டமிட்டு  நிராகரித்துள்ளார்கள். அளக்குடி முகத்துவாரம்  வழியாக  கொள்ளிடம் ஆற்றில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர்  தூரத்திற்கு கடல் நீர் மேலேரியுள்ளது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு அதனைச் சுற்றயுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது.  நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்துள்ளதால் குடிதண்ணீருக்கு கூட இப்பகுதி மக்கள் கடுமையாக திண்டாடி வருகிறார்கள்.  சுமார் 10 ஆயிரம் ஏக்கர் உவர்நிலமாக மாறி விவசாய நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது.  அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்தியுள்ளார்கள்.

நல்லூர் உப்பனாறு வழியாக கடல் நீர் வருதல்

நல்லூர், முதலைமேடு அதனைச் சுற்றியுள்ள  கிராமத்தில் விவசாய நிலத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இறால் பண்ணை  அமைத்துள்ளார்கள். இந்த பண்ணைகளுக்குத் தேவையான கடல் நீரை நல்லூர் உப்பனாறு வாய்க்கால் வழியாகக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த மோசடித் தனத்தை எதிர்த்து அப்பகுதி மக்களைத் திரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணியினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக இறால் பண்ணைகள் அகற்றப்பட்டு, அங்கு கடல் நீர் உட்புகுவதை தடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் விளைவாக தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமில்லாமல் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் வழியாக சுமார் சீர்காழி நகரம் வரை கடல் நீர் உட்புகுந்துள்ளது. இந்த ஆற்றினை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணைகளுக்கு தேவையான நீர் இந்த ஆற்றில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. எடமணல், திருணகிரி இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில்  கடல் நீர் ஏறியதன் விளைவு சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்வதற்கான தகுதியை இழந்துள்ளது. ஆழ்குழாய் மூலம் நீரை எடுத்து வயலுக்கு பாய்ச்சுவதால் நீரில் உள்ள நச்சுத்தன்மை  மண்ணை மாசாக்குகிறது. இதே பகுதியில் ONGC நிறுவனம் இரண்டு பிளாண்ட்களை நிறுவியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வட்டப்பாதையில் சீர்காழி முழுவதும் திட்டமிட்டே சிதைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. முதலாளிகளின் கொள்ளை சூரையாடளுக்காக சீர்காழி நகர மக்களின்  வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

தற்பொழுது நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த பெரும் அபாயத்தை முறியடிக்க  அரசிடம் மனு கொடுப்பதோ, அல்ல பன்னீரையோ, சசிகலாவையோ  முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலமோ இந்த அயோக்கியத்தனங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனென்றால், கொள்ளிடத்தை கொள்ளையடித்தது பன்னீர்  தான். இது மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு தெரிந்து தான் நடந்தது. இவர்களால் இதை தடுக்க முடியாது. நம் வாழ்வை சூறையாடியது இந்த அரசும், ஓட்டுக்கட்சிகளும் தான். யாரைத் தேர்ந்தெடுப்பது என யோசிக்காமல் நாமே நம் அதிகாரத்தை கையில் எடுப்பது மட்டும் தான் தீர்வு. விவசாயிகள் ஒருங்கிணைந்து போராடினால் தான் இதனை வீழ்த்த முடியும். போராடுங்கள்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க