Wednesday, January 20, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் நுண்கடன் நிறுவனங்கள் : தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !

நுண்கடன் நிறுவனங்கள் : தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !

-

நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !

நாகை மாவட்டம் கீழ்வேளுர் வடக்குவெளி கிராமம். சுமார் 200 தலித் குடும்பங்கள் மட்டும் வாழும் இக்கிராமத்தினர் அனைவரும், இங்குள்ள கோயில் நிலங்களை நீண்டகாலமாகக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2015-டிசம்பரில் பெய்த பெருமழையில் பகுதியளவு மகசூலைப் பறிகொடுத்த இப்பகுதி விவசாயிகள், நடப்பு வறட்சியில் முழு விவசாயத்தையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நிற்கிறார்கள்.

“ஒவ்வொரு வருசமும் புதுநெல் அரிசியில்தான் பொங்கல் வைப்போம். அடுத்தநாள் கறிசோறு ஆக்குவோம். இந்த வருஷம் புது அரிசியும் இல்ல. பொங்கலும் இல்ல. கறியும் இல்ல. சாம்பார் சோத்துக்கே வழியில்லைங்க” என்று கண் கலங்குகிறார் 63 வயதான மணி என்ற விவசாயி.

“போன அறுவடையில் கிடைத்த நெல்லை வைத்து இந்த மாதத்தை வேண்டுமானால் சமாளிப்பாங்க. அதற்குப் பிறகு ரேசன் அரிசியிலதான் உயிர்வாழ முடியும். வேற வழியில்ல” என்கிறார் பக்கத்து கிராமத்தின்  விவசாயி  ஜீவானந்தம். நாகை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சியை கீழ்வேளூர் ஒன்றியம் பிரதிபலிக்கிறது.

“அடுத்த விவசாயம் செய்வதற்கு வரவிருக்கும் பருவமழைக்காக பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரையில் இந்த வறட்சியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பெண்களிடமிருந்து வரும் ஒரே பதில் “தெரியலைங்க” என்பது மட்டும்தான். “எங்களுக்கு தெரிஞ்சது விவசாய வேலை மட்டும்தான். வேற வேலைக்குப் போகணும்னா இனிமேல் அதை பழகிட்டுத்தான் போகணும்” என்கிறார்கள் ஊர் மக்கள்.  தங்கள் வாழ்க்கையின் ஒரே ஆதாரமான விவசாயம் பொய்த்துப் போனதால், இன்று தெருவில் வீசியெறியப்பட்ட குப்பையாகச் சீரழிந்து கிடக்கிறது இவர்களின் வாழ்க்கை.

நுண்கடன் நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கான தவணையை வாராவாரம் கட்டுவதற்குத் திணறித் திண்டாடி நிற்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த வள்ளி.

சராசரியாக, ஒரு ஏக்கரில் நெல் பயிரிட 25,000 ரூபாய் செலவாகிறது. இதில் நேரடி விதைப்பிற்கு 2,000 ரூபாய், எந்திர நடவுக்கு 1,000 ரூபாய், களைக்கொல்லிக்கு 600 ரூபாய் – என அரசு தரும் மானியங்களைக் கழித்தாலும், ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கு மேல் விவசாயிகள் கையிலிருந்து செலவழித்தாக வேண்டும். “1,000 ரூபாய் செலவழித்து பட்டா, சிட்டா, அடங்கல் வாங்கிட்டு பயிர்க் கடன் கேட்டுக் கூட்டுறவு வங்கிக்கு ஓடினால், நாலுநாள் அலையவிட்டு அஞ்சாவது நாளில் 10 பேருக்கு மட்டும் கொடுத்துட்டுப் பணமில்லைன்னு கடையை மூடிருவான். அதன் பிறகு ஸ்டேட் பேங்க் மேனேஜரிடம் கெஞ்சினால், ஏக்கருக்கு 8,000 ரூபாய்தான் தருவாரு. மீதிப் பணத்தை மாத வட்டிக்கோ, மைக்ரோ பைனான்சிலோ வாங்கிச் சமாளிப்போம்” என்று விவசாயம் செய்வதற்கு தாங்கள் படும்பாட்டை விவரிக்கிறார் வள்ளி என்ற பெண் விவசாயி!

பயிர்க் கடனாக ஏக்கருக்கு 25,000 ரூபாய்வரை கடன் தரலாம் என்பது பொதுவிதியாக இருந்தாலும், நெல் விவசாயம் லாப உத்திரவாதம் இல்லாதது என்பதால் 10.000 ரூபாய்க்கு மேல் எந்த வங்கியும் பயிர்க் கடன் தருவதில்லை. சிறு, குறு விவசாயிகளுக்கு வெறுங்கையை விரிக்கும் கூட்டுறவு வங்கிகள், பணக்கார விவசாயிகளுக்கும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கும் பல இலட்சங்ககளை பயிர்க் கடனாக வாரிக் கொடுக்கத் தவறுவதில்லை. இதன் மூலம் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளைக் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ் கும்பலிடம் திட்டமிட்டே தள்ளிவிடுகிறது அரசு.

ஈக்விடாஷ் என்ற நுண்கடன் நிறுவனத்தில் 30,000 ரூபாய் கடன் வாங்கிய ஈஸ்வரி குடும்பம், தங்களது 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருக்கிறது. “வாங்குன பணத்தையெல்லாம் நிலத்துலத்தான் போட்டோம். வர்ற வருமானத்துல கடனை அடைச்சுரலாம்னு மூக்குத்தி, தோடுகளை வித்து 21 தவணை அடைச்சுட்டோம். போனவாரத் தவணை கட்ட கையில காசில்ல. 420 ரூபா தவணையைக் கட்டினாத்தான் போவேன்னு எங்களை கூட்டி உக்கார வச்சுட்டான். என்ன மாதிரி நாலுபேரு காசில்லாம அழுவுறதப் பாத்துட்டு அக்கம் பக்கத்துக்காரங்க கொடுத்து உதவுனாங்க. அடுத்த தவணைக்கு என்ன ஆகுமோ தெரியல” என்கிறார் கண்களில் பீதியுடன்!

கடன் தவணையைக் கட்டுவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை அடகு வைக்கிறோம் எனக் கூறும் திருவாரூர் மாவட்டம், கரப்பூர் கிராம விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

குடவாசல் அருகிலுள்ள பரத்தியூர் கிராமத்தின் வீ.கீதா, விவசாய செலவுகளுக்காக தனது நிலத்தை முத்தூட் பைனான்சில் ஈடுவைத்து 25,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு மாதவட்டி கட்டமுடியாத நிலையில், கிராம விடியல் என்ற நுண்கடன் நிறுவனத்தில் 15,000 ரூபாய் கடன்பெற்று முத்தூட் கடனுக்கு வட்டி கட்டியுள்ளார். “இப்போ வைத்த விவசாயம் கருகிப்போனாலும், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியும், தவணையுமா மாதம் 2,500 ரூபாய் நாங்க கட்டியாவனும். அதுக்கு இந்த பைனான்ஸ்காரங்களையும், மாத வட்டிக்காரங்களையும் விட்டா வேற வழியில்ல எங்களுக்கு” என்று தனது எதார்த்த வாழ்க்கையின் அவலத்தை விளக்குகிறார் கீதா.

திருவாரூர் மாவட்டம் கரப்பூர் கிராமத்தின் 50 வயதான முத்துலட்சுமியோ, தான் “சுய உதவிக்குழுவில் வாங்கிய கடன் தவணைக்காக, திருமணச் சீராகத் தனது பெற்றோர் போட்டுவிட்ட மூக்குத்தியை 7,000 ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், இனி வீட்டிலுள்ள சில்வர், பித்தளை பாத்திரங்களை உள்ளூர் அடகுக்கடையில் விற்றால்தான் அடுத்தடுத்த தவணையைக் கட்டமுடியும்” என்று கூறுகிறார்.

கீழ்வேளூர் ஒன்றியத்தில் மட்டும் இதுபோல 160 குழுப் பெண்கள் ஈக்விடாஷ் நிறுவனத்தின் கடன் வலையில் சிக்கியுள்ளனர். ஈக்விடாஷ்,  கிராம விடியல், ஹெச்.எஃப்.சி.,  போன்ற நிறுவனங்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் 5,000 குழுக்கள் மூலம் ஒரு லட்சம் பெண்களைத் தங்களது கடன்வலையில் சிக்க வைத்துள்ளன. இந்த நுண்கடன் நிறுவனங்களைத் தனியார் சிறு வங்கிகளாக (SMALL BANKS)  ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது. சிறுவிவசாயிகளுக்கு 8,000 ரூபாய்க்குமேல் பயிர்க்கடன் தரமறுக்கும் பொதுத்துறை, தனியார் வங்கிகள், இந்தத் தனியார் நிறுவனங்களில் பலநூறு கோடிகளை முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, தனியார் பயிர்க் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., ஈக்விடாஷ் நிறுவனத்தில் ரூ.105 கோடியை சமீபத்தில் முதலீடு செய்துள்ளது. நேரடியாக விவசாயிகளுக்கு கடன்கொடுத்துக் கிடைப்பதைவிட, அதிக வட்டியும், அசல் உத்தரவாதமும் இருப்பதுதான் இந்த முதலீடுக்குக் காரணம்.

நுண்கடன் வலைக்குள் சிக்கியிருக்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த பெண்கள்.

இவை தவிர, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களையும் இயக்கி வருகிறார்கள். கிராமத்துப் பெண்களை விவசாய வேலைகள் தவிர்த்து தையல், சிறுவியாபாரம் போன்ற  சுயவேலையில் ஈடுபடுத்தும் நோக்கில் அமலாகிவரும் இத்திட்டத்தில், குழுப் பெண்களுக்கு வங்கிகளில் கடன்வசதி செய்து தருகிறார்கள். இவ்வாறு, நாகை மாவட்டத்தில் மட்டும் 15,000 சுயஉதவிக் குழுக்களில்  2,33,400 பெண்கள் இணைந்துள்ளதாக மாவட்டப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகக் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்குவது ரூ.4,000 கோடி என்று கூறுகிறது தமிழக அரசு.  ஆனால், மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கியதோ 7,600 கோடிரூபாய்.

நேரடியாக விவசாயத்திற்கு வழங்கும் கடனை விட,  விவசாயமற்ற வேறுவகையினங்களுக்குக் கடன் வழங்குவதிலேயே அரசு தீவிர அக்கறை காட்டிவருகிறது. இதன் விளைவாகவே, விவாயிகள் தங்கள் சராசரி வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மைக்ரோ பைனான்ஸ், சுயஉதவிக் குழு, கந்துவட்டி கும்பலின் கடன்வலையில் சிக்கிவிடுகின்றனர்.இந்தக் கடன் நெருக்கடிதான் டெல்டா விவசாயிகளின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

டெல்டா மாவட்ட வறட்சி மற்றும் விவசாய மரணங்கள் குறித்து ஆய்வு செய்த உண்மை கண்டறியும் குழுவொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டுபோன ஒவ்வொரு விவசாயியும் நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து 120% வட்டிக்குக் கடன் வாங்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

டெல்டாவில் எழவு விழுந்த பிறகு, பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதுபோல, கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றுவதாக அறிவித்த தமிழக அரசு, நுண்கடன் நிறுவனங்கள் உள்ளிட்டுத் தனியாரிடம் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் குறித்துக் கண்டுகொள்ளாமல் நழுவிக் கொண்டுவிட்டது. விவசாயிகள் செத்தாலும், தனியாரின் முதலீடுக்கும் இலாபத்திற்கும் பங்கம் வந்துவிடக் கூடாது எனக் கருதும் இந்த அரசுதான் மக்கள் நல அரசாம்!

  • மாறன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க