Tuesday, January 19, 2021
முகப்பு வாழ்க்கை குழந்தைகள் இந்தியாவின் குப்பைக் கிடங்கில் மக்கள் வாழ்க்கை

இந்தியாவின் குப்பைக் கிடங்கில் மக்கள் வாழ்க்கை

-

பிப்ரவரி 21 2017 அன்று மும்பை மாநகராட்சிக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி மும்பையின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றி ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்ட கட்டுரைத் தொடர்களின் சுருக்கப்பட்ட வடிவம். இது மும்பை கிழக்கு வார்டில் உள்ள தியோனர் குப்பைக் கிடங்கின் நிலைக் குறித்தக் கட்டுரை. வளர்ச்சி என்றால் அது அனைத்து மக்களுக்கென்றும், அதன் பொருட்டு சிலரோ சில மாநிலங்களோ தியாகம் செய்ய வேண்டும் என்றும் உளறும் பாஜக கும்பல்கள் ஒருபுறம். மறுபுறம் வளர்ச்சியை அறிவியலின் சாதனை என்றும் அதை எதிர்ப்போரை பழமை வாதிகள் என்றும் சித்தரிக்கும் அறிவுவீங்கிய கும்பல்கள். இன்னும் ஏழ்மையை மறைத்து விட்டு சூழலியல், இயற்கை நேசம், ஆர்கானிக் என்று சுத்தபத்தமாக பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் மறைக்கும் உண்மை என்ன? இந்தியாவில் வசதிபடைத்தோர் வாழ்வதற்காக ஏழைகளே அனைத்து அவலங்களையும் ஏற்குமாறு விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மீத்தேன் திட்டமோ, குண்டலினி யோகமோ, ஷாப்பிங் மால்களோ, அதி உயர் சாப்பாட்டுக் கடைகளோ, மல்டி பிளக்ஸ் திரையரங்கோ, சாட்டிலைட்டு சாதனைகளோ எதுவாகவும் இருக்கலாம். இதற்கான கழிவுகளை ஏழைகளும்- விவசாயிகளும், இதில் கிடைக்கும் செல்வங்களை பணக்காரர்களும், ஓரவளவு நடுத்தர வர்க்கமும் பகிர்ந்து கொள்கின்றனர். மறுப்பவர் கொஞ்சம் மூக்கை அடைத்துக் கொண்டு மும்பை தியோனர் கிடங்கில் குதியுங்கள்! – வினவு

தியோனர் குப்பைக் கிடங்கு

ன்பது வயது அஷ்ரபும் பதினோரு வயது ஷாருக்கும் நண்பர்கள். அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற சிறுவர்களைப் போல இவர்களும் நினைவு தெரிந்த நாள் முதல் வேலை செய்து வருகின்றனர். அது கிழக்கு மும்பை புறநகரான தியோனர். அந்தப் பகுதிச் சிறுவர்கள் சில நேரம் தங்களுடைய தந்தை, தாய் அல்லது வேறு உறவினர்களுடன் வேலைகளுக்குச் செல்வார்கள் – சில நேரம் தனியாகச் செல்வார்கள். வேலை இல்லாத ஒருசில நாட்கள் பள்ளிக்கூடத்திற்கும் செல்வதுண்டு.

பள்ளிக் கட்டிடம் சிதிலமடைந்து நொறுங்கி விழும் நிலையிலிருப்பதால், வேலைக்குச் செல்வதே உயிருக்கு பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். அவர்களது வேலையிடம் தியோனரில் அமைந்துள்ள பழமையான திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு. அது தான் அவர்களுக்கு வீடு -. ஏன் அவர்களின் உலகமே அது தான். தியோனரின் குப்பைக் கிடங்கு எப்போதும் பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.

தங்களுடைய சின்னக் கைகளால் அஷ்ரபும், ஷாருக்கும் அந்தக் குப்பைக் கிடங்கைக் கிளறுகின்றனர். சில நேரம் அந்த மாபெரும் குப்பைக் கடலின் மையப்பகுதி வரைக்கும் சென்றும் விடுகின்றனர்.

“மொத்த மும்பையின் கழிவுகளும் இங்கே வந்து எனது கைகளைக் கடந்து தான் செல்கின்றன” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் ஷாருக். அவனுக்கு தன்னுடைய பெயரோடு இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

”எனது கையைப் பாருங்கள்.. எப்படி நாற்றமடிக்கிறது. அவரெல்லாம் எனது கைகளைப் பிடித்துக் குலுக்குவாரா?” ஒரு பழிப்புச் சிரிப்புடன் குறிப்பிடுகிறான்.

இங்கே உள்ள மற்ற பையன்களைப் போல அஷ்ரபும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் விலையுயர்ந்த செண்டுகள், அழுகுக் களிம்புகளின் பெயர்களை உதிர்க்கிறான்… “ஆனால் அவையெல்லாம் வேலை செய்யாது… நாங்கள் நாறிக் கொண்டு தான் இருப்போம்” அவனது குரலில் ஒரு உறைந்த தன்மைக் காணப்பட்டது.

அந்தப் பகுதியே கடுமையாக நாறுகின்றது. குடலைப் பிடுங்கும் நாற்றத்திற்குக் காரணமான அந்தக் குப்பைக் கிடங்கு ரஃபீக் நகர் சேரி மற்றும் நல்லா (nallaah) பகுதிகளுக்கு இடையில் அமைந்திருக்கின்றது. நாற்றம் தான் அந்தச் சேரிகளின் அடையாளம். அங்கே செல்லும் எவராலும் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைக் கழிவுகளைக் காணாமல் இருக்க முடியாது. இங்கே தான் மும்பை மாநகரம் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யும் 9,600 மெட்ரிக் டன் குப்பையில் சரிபாதி கொட்டப்படுகின்றது.

தினோனர் திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு 1927-ல் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் முலுந்த் மற்றும் கோராய் பகுதிகளில் வேறு இரண்டு குப்பைக் கிடங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தியோனர் குப்பைக் கிடங்கு சுமார் 111 ஹெக்டேர்களில் அமைந்துள்ளது. சுமார் எட்டு மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இங்கே கொட்டப்பட்டுள்ள அழுகிய மற்றும் காய்ந்த வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் என மொத்தக் கழிவுகளின் அளவு சுமார் 160 கோடி டன்கள் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ரபீக் நகர் சேரியிலிருந்து தியோனர் குப்பைக் கிடங்கிற்கு செல்லும் வழி

தியோனர் குப்பைக் கிடங்கில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள் மொத்த மும்பையையும் அடர்த்தியான புகையால் மூடிவிடும். கழிவுகளுக்கு இடையே கலந்திருக்கும் இரசாயனப் பொருட்கள் மற்றும் அதிலிருந்து உற்பத்தியாகும் மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் நெருப்புப் பிடித்துக் கொள்ளும் போது அவற்றை அனைப்பதற்கு பலநாட்கள் ஆவதுடன், ஒட்டுமொத்த மும்பையின் நுரையீரலுக்கும் கான்சரைப் பரிசளித்துச் செல்கின்றன. மேலும் தற்போது கழிவுகளின் காரணமாக நிலத்தடி நீரும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ரஃபீக் நகர் வாழத்தகுதியற்ற இடமாக இருப்பினும், மும்பைக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளிகள் வேறு எங்கும் தங்குமிடம் கிடைக்காத நிலையில் கிழக்கு மும்பைச் சேரிகளான இந்தப் பகுதிகளில் ஒதுங்குகின்றனர். அதே போல் கிழக்கு மும்பை சேரிகளில் சில ஆண்டுகளாக வசிப்பவர்கள் பின்னர் வேறு பகுதிகளில் இடங்களில் வீடு தேடினாலும் ”கச்ராவாலாக்கள்” (குப்பை பொறுக்குபவர்) எனச் சொல்லி வீடுமறுக்கப்படுவதாகச் சொல்கிறார் 45 வயதான சவுக்கத் சயீத்

கிழக்கு ‘மும்பை’ எனச் சொல்லப்பட்டாலும் மும்பையின் ’அடையாளங்களென’ சொல்லிக் கொள்ளப்படும் பளபளப்பான ஷாப்பிங் மால்களோ, வழுக்கும் சாலைகளோ, நீச்சல் குளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளோ இந்தப் பகுதியில் இல்லை. தாராவியைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் இந்தப் பகுதியை ஏழ்மையான தாராவி எனப் புரிந்து கொள்ளலாம். மும்பை கிழக்கு வார்டின் 78 விழுக்காடு மக்கள் தொகை சேரிகளில் தான் வசிக்கின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமெனப் பீற்றிக் கொள்ளப்படும் மும்பையில் தான் 28 பில்லியனர்களும், 45,000 மில்லியனர்களும் வசிப்பதாகவும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 820 பில்லியன் டாலர்கள் (53.30 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்படுகின்றது (New World Wealth Report – 2016). இந்தப் பணக்கார மும்பையின் ஆசன வாயாகவே மும்பையின் சேரிகளை அரசு நிர்வாகம் மதிக்கின்றது.

இது வெறும் குப்பைக் கிடங்கு பற்றிய பிரச்சினை அல்ல. கடுமையான வறுமை, கீழ்த்தரமான வாழும் சூழல், சிவில் நிர்வாகப் பணிகள் புறக்கணிப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு, கல்வி நிலையங்களோ மருத்துவ வசதிகளோ இல்லாத நிலை, ரியல் எஸ்டேட்டிலிருந்து குடிநீர் சப்ளை வரை கட்டுப்படுத்தும் மாபியா கும்பல்கள், அந்த மாபியா கும்பல்களின் போதை வியாபார வலைப்பின்னல் என மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மும்பையின் சேரிகளைப் பராமரிக்கிறது அரசு நிர்வாகம்.

மோசமானவற்றில் முதலாவதாக நிற்கின்றன மும்பைக் கிழக்கு வார்டில் அமைந்துள்ள சேரிகள். குறிப்பாக தியோனர் குப்பைக் கிடங்கின் இருபுறமும் அமைந்துள்ள சேரிப் பகுதிகளின் நிலை விவரிக்கவொண்ணாததாக உள்ளது. 90 ஆண்டுகளுக்கு முன் தியோனர் பகுதியைக் குப்பைக் கிடங்கு அமைப்பதற்காக உருவாக்கிய போது, அங்கே இருந்த குடியிருப்புப் பகுதிகள் இவ்வளவு அடர்த்தியானதாக இல்லை என்பதோடு அந்தக் காலகட்டத்தில் மும்பை உற்பத்தி செய்த கழிவுகளும் குறைவாகவே இருந்துள்ளது.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் நகரங்களை மட்டுமே – குறிப்பாக அதில் உள்ள பணக்காரர்களின் பகுதியை மட்டும் – குறிவைத்து வளர்த்தெடுத்த அதே சமயம், ஆகப் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், கிராமப்புற நெசவு உள்ளிட்ட தொழில்களை அழித்தொழித்தது. ஊரகப் பகுதிகளில் பிழைப்பை இழந்த மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். நாடெங்கும் பிழைப்புத் தேடி அலைந்தவர்களை மும்பை ஈர்த்ததில் எந்த வியப்புமில்லை. அவ்வாறு வந்து குவிந்த உழைக்கும் மக்களைக் கொண்டு பணக்காரர்களின் உலகத்தை அழகுபடுத்துவதும், அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொள்வதும் நடந்தது. அதே சமயம், இவ்வாறு வந்து குவிந்த மக்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புறக்கணித்தது – மக்கள் தியோனர் போன்ற சேரிகளில் வந்து விழுந்தனர்.

ஒரே ராக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்டிலைட்டுகளை அனுப்பியதாக இந்தியா பெருமை பீற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் தியோனர் குப்பைக் கிடங்கில் சிறுவர்கள் வெறும் கைகளால் கழிவுகளுக்கு இடையே ஏதாவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கழிவுகளைக் கையாள்வது, அவற்றை மட்கும் / மட்காத குப்பைகள் எனத் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது என அனைத்தும் இயந்திரமயமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் “வல்லரசு” இந்தியாவின் எதிர்கால மன்னர்களோ குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

– முகில்

மேலும் படிக்க:

‘Shah Rukh won’t shake my hands, see how they smell’: The stench of despair from Mumbai’s underbelly

  1. சுகாதார ஏற்றத்தாழ்வுகள் பணம் படைத்தோர் மற்றும் ஏழைகளை பொருத்து வேறுபடுகின்றது என்பதனை அறிய எதற்காக மும்பை வரையில் போகவேண்டும்.. சென்னை மாநகராச்சிக்கு உட்பட்ட மேற்கு மாம்பலம் மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள மிகப்பெரிய சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நாம் ஆராய்ந்தாலே போதுமானது….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க