Monday, December 6, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் ஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் !

ஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் !

-

தூத்துக்குடியில் மக்களின் எதிரியான காவல்துறைக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து விழா எடுத்த மார்க்சிஸ்ட்  ‘புரட்சி’யாளர்கள் !

இந்த வெற்றிவிழா யாருக்கு?
இந்த வெற்றிவிழா யாருக்கு?

ல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், 2017 பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. சிபிஐ மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.

பிரம்மாண்டமான மேடை, மைதானத்தில் பெரிய பரப்பளவில் உட்காருவதற்கான ஏற்பாடு, பேனர், சுவரொட்டி, அழைப்பிதழ், பொழுது போக்குவதற்கான ஏற்பாடுகள் என இந்த வெற்றிவிழாவுக்கான செலவுகள் எப்படியும் சில லட்சங்களைத் தாண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

சரி, இந்த வெற்றிவிழா யாருக்கு? அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததை கூறுகிறோம். போராடிய மாணவர்கள், பொதுமக்களுக்கு என்று தொடங்கும் வாக்கியம் அதன்பின் மாணவர்களுக்கு நல்லமுறையில் பாதுகாப்பளித்த  தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி என்று முடிகிறது. விழா சுவரொட்டிகள் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழுவின் பெயரில் கடைத்தெருக்களில் வசூலும் நடந்தது.

நாம் மக்களின் எதிரியான அரசுக்கும், அதன் நகங்களான போலீசுக்கும் நன்றி தெரிவிக்கும் SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்.

SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்
SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்

அரசே இயக்கும், போலீசே வழிநடத்தும் விழாவுக்கு பள்ளி மாணவர்கள் சிலரை வரவழைத்திருந்தனர். சிறுவர்களை மேடையேற்றி சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடவிட்டனர். பகல் முழுவதும் இப்படி  பாட்டு, விளையாட்டு என்று ஒப்பேற்றினர்.

மாலை 7.00 மணியளவில் மேடையில் SFI யின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் தலைமை உரையாற்றினார். “நாங்க கோவில்பட்டியில் காவல்துறையினருக்கு லட்டு தந்தோம். அதிகாரிகளிலிருந்து ஊர்க்காவல் படையினர் வரை 200க்கு மேற்பட்டோருக்கு லட்டு தந்தபோது அடைந்த சந்தோசத்தை என்ன வென்பது! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களுக்கு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” என்று இருகரம் விரித்து மனமுருகி  சிலாகித்தார்.

இப்படி அவர் பேசி முடித்து  அடுத்ததாக வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பிரதிநிதி மைக்கை பிடித்தார்.  அவர் பேச தொடங்கியவுடன் இளைஞர்கள் கூட்டம் ஒன்று மேடையை முற்றுகையிட்டது.  “ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? வெற்றிவிழா நடத்த உங்களுக்கு என்ன உரிமை? போராடியது நாங்கள்! வசூல் வேட்டையில் நீங்களா?” என்று உலுக்கி எடுத்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் மைக்கை வைத்துக்கொண்டு பேச்சாளர் தவிக்க, காவல்துறை ஓடோடி வந்தது.

வாங்க ஒரமா போய் பேசிக்கலாம் என்று ஆய்வாளர் இழுத்துச் சென்றார். அங்கு கூடிய இளைஞர்களிடமிருந்து பேசுபவர்களை மட்டும் தனிமைப்படுத்த காவலர்களுக்கு உத்தரவிட்டார்.  எனினும் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் சூழ்ந்து வந்து கேள்விகளால் ஆய்வாளரை திணறடித்தனர். “ஒரு நிமிசம் மட்டும் மைக்கை வாங்கி குடுங்க! இங்கு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் இப்ப விழா நடத்துற SFI க்கும் எந்த தொடர்பும் கிடையாதுங்கறத மட்டும் அறிவித்துவிட்டு வெளியேறி விடுகிறோம்” என்றனர்.

பேச அனுமதி மறுத்த காவல்துறை, விழாவை முடித்துக்கொள்ள வலியுறுத்தியது.  உடனே போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசளிப்பு தொடங்கியது. வணிகர் சங்கத்தை சேர்ந்த வெள்ளையன் உள்ளிட்டோர் பேசாமலே விழா முடிந்தது.

இந்த விழாவிற்கு என்ன தேவை வந்தது?

தமிழக காவல்துறையின் அராஜகம்  நாடு முழுவதும் அம்பலப்பட்டு நாறியுள்ளது. காக்கிகள் யாருக்கானவர்கள் என்று சென்னை மேடவாக்கத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான  DYFI தோழர்கள் பட்ட காயம்கூட ஆறவில்லை; அதற்க்குள் அடித்தவனுக்கு பாராட்டு விழா!

கால்தான் எட்டி உதைத்தது ! நாங்கள் கைக்குதான் முத்தம் தருகிறோம் !! என்பதாக நடந்துகொள்கிறது SFI.  ஒருவேளை இவர்கள் தமிழக காவல்துறைக்கு விழா எடுக்க வில்லை ! தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்குதான் நன்றி  கூறுவதாக விளக்கம் அளிக்கலாம்.

சரி தூத்துக்குடி காவல்துறையின் யோக்கியதை என்ன?

ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் நடத்தும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சிக்கு வரவேற்று, வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி போடும் DYFI
ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு போட்டியாக  சிவாலய ஓட்டம் நிகழ்ச்சிக்கு வரவேற்று சுவரொட்டி போடும் DYFI

அன்று நடைபயணம் புறப்பட்ட DYFI யினரை இதே போலீசார்தான் தெற்கு காவல்நிலையம் முன்பு அடித்து துவைத்தது.  ஜனவரியில் தேவாலயத்திற்க்கு அசன விருந்து சாப்பிட வந்த இளைஞனை எதிர்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து அடித்தே கொன்றதும் இதே போலீசுதான். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் இந்த கொட்டடி படுகொலையை கண்டித்து, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது. ஆனால் மார்க்சிஸ்டு கட்சியோ பாதிக்கப்பட்டவரிடம் “அரசு வேலை வாங்கித் தருகிறோம்;  இழப்பீடு வாங்கித் தருகிறோம்” என்று பேசி உடலை வாங்க வைத்து, காவல்துறைக்கு “உடுக்கை இழந்தவன் கையாக” நின்றது !

மாவட்ட செயலர் சுரேஷ் பாண்டியிடம் லட்டு வாங்கிய காவலர்களுக்கு தனிப்பட்ட முறையில் பழக்கம் உண்டு ! இவரை நள்ளிரவில் இழுத்துச்சென்று அடித்து துவைத்து அச்சில் ஏற்றமுடியாத வக்கிர தாக்குதல்களை நடத்தியதும் இதே காவல்துறைதான் ! இவர்களை கண்டிக்க, எதிர்க்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை; இப்படியா  மானங்கெட்டு சரணடைவது !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசின் அராஜகம் வெளிவந்து தமிழகமே கொதித்திருந்த சூழலில் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மக்கள் அதிகாரம் சார்பாக “போலீசு ராஜ்ஜியம்; எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்” என்ற பிரசுரத்தை வ.உ.சி. கல்லூரி வாயிலில் தந்தபோது SFI-யினர் பணமதிப்பு நீக்கத்தை கண்டித்து மனித சங்கிலிக்கு வரும்படி பிரசுரம் தந்தனர். பணமதிப்பு நீக்கம் குறித்து போராடுவது சரியென்றாலும் இப்போது தமிழகமே கொந்தளிக்கற பிரச்சினையை விட்டுட்டு இது  தேவையா? என்று கேட்டோம். “நாங்க ஜனநாயக அமைப்பு தோழர். உங்கள மாதிரி தீவிரமா சொல்ல முடியாது ! இந்த முறைக்குள்ள இப்படித்தான் இருக்கணும்” என்று இதே சுரேஷ் பாண்டி மழுப்பினார். அதாவது நாம் தீவிரவாத அமைப்பு போலவும் இவர்கள் ஜனநாகயமாக செயல்படுவதாகவும் கூட இதை புரிந்து கொள்ளலாம். ஜனநாயக ரீதியாக போராடிய மாணவர்களை தாக்கிய போலீசைக் கண்டிப்பது தீவிரவாதம்; தாக்கிய போலீசை பாராட்டுவது ஜனநாயகம் என்றால் இந்த புதிய புரட்சி தத்துவ விளக்கத்தை யாரிடம் சொல்லி அழ?

போலீசுடன் மட்டுமல்ல பா.ஜ.க-வுடனும் ஒத்துப்போகிறார்கள். குமரி மாவட்டத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களுக்கு இரவில் ஓடி வழிபடும் வழக்கம் உண்டு. இந்த சிவாலய ஓட்டத்தை இந்துமதவெறியர்கள் பயன்படுத்தி சுவரொட்டி ஒட்டுவர். தற்போது இவர்களுக்கு போட்டியாக சி.பி.எம் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் வரவேற்பு சுவரொட்டியை ஒட்டுகின்றனர். .   “யாராக இருந்தாலும் நம் விவேகானந்தரை, இந்துத்துவாவை ஏற்றே தீரவேண்டும். இதோ CPM காரர்கள் அப்படி நமக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்” என்று  நாகர்கோவிலில் எள்ளி நகையாடியுள்ளது  பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான ABVP.

இதற்க்கு மேலும் இவர்களிடம் இருக்கலாமா செங்கொடி !

தகவல், படங்கள்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

துத்துக்குடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க