Friday, December 3, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?

கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?

-

கோவில்பட்டி அரசுக் கல்லூரி மாணவர்களின் உறுதியான போராட்டம்
– துணை நிற்கும் புரட்சிகர மாணவர் இளைஞர முன்னணி RSYF

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஒன்றுதான் கோவில்பட்டி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு அரசுக் கல்லூரி இதுதான். கோவில்பட்டி நகரப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர்.

 40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்லூரியின் நிலைமை அவலத்துக்குரியதாக உள்ளது. மொத்தம் ஐந்து பாடப்பிரிவுகளில் இளநிலைப் படிப்பு உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 8 பேராசிரியர் வீதம் 40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது  மொத்தமாக 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக பாடங்கள் முழுமையாக முடிக்கப்படுவதில்லை. நடத்தப்படாத பாடங்கள் Asignment என்ற பெயரில் மாணவர்களின் மீது சுமையாக திணிக்கப்படுகிறது. இந்த நிலைமை மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களும் ‘அரியர்’ வைக்கும் நிலைமை அதிகரித்துள்ளது. இதன் மூலம் தகுந்த மதிப்பெண் எடுக்க முடியாமல் மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், கல்லூரியில் மாணவர்கள் உட்கார இருக்கை வசதியும் குறைவாகவே உள்ளது. 300 மாணவர்கள் தரையில் உட்கார்ந்து படிக்கின்ற நிலைமை. முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்துதான் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் கிடையாது. விளையாட்டுக் கென்று உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. கலை விழாக்கள் கிடையாது. கேண்டீன் கிடையாது. இயற்பியல் செய்முறை சொல்லித் தருவதற்கும் ஆள் இல்லை. இதனால் இயற்பியல் தொடர்பான கருவிகளின் பெயர்கள் கூட மாணவர்களுக்கு தெரியாத நிலைமைதான் உள்ளது.

கல்லூரியில் வகுப்புகள் முழுமையாக நடப்பதில்லை. ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் (hours) நடத்தப்பட வேண்டும். ஆனால் 3 வகுப்புகள்(hours) மட்டுமே நடத்தப்படுகின்றன. அதிலும் ஒரு நாள் பேராசிரியர்கள் வேறு ஏதாவது வேலையாக சென்று விட்டால் அவர் சம்பந்தப்பட்ட துறைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இப்படி தான்தோன்றித்தனமாகவும், எந்த வித பொறுப்பும் இல்லாமல்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.
முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.

இதற்காக ஆறு மாதத்திற்கு முன்பே கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்தனர், மாணவர்கள். அதன் பிறகு உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ வை பேராசிரியர்கள் சந்தித்துப் பேசியபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.  அவரும் அலட்சியப் போக்குடனே செயல்படுகிறார். அதிகாரிகளும் என்ன ஏதென்று கண்டு கொள்ளவில்லை.

பிப்ரவரி இறுதியில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. அதில் பெரும்பாலான மாணவர்களுக்கு அரியர் விழுந்தது.

பேராசியர்கள் சம்பள உயர்வுக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், வெளியில் இருந்து தனியார் ஆட்கள் செமஸ்டர் பேப்பர் திருத்தியுள்ளனர்.  இதனாலும் அரியர் அதிகமாக விழுந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இது மாணவர்களிடையே கோபத்தை உருவாக்கியது. கோபம் போராட்டமாக மாறியது. பிப்.23 2017 வியாழக்கிழமை காலை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மாரிமுத்து தலைமையில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

வெல்லட்டும்! வெல்லட்டும்!
மாணவர் போராட்டம் வெல்லட்டும்!
ஓங்கட்டும்! ஓங்கட்டும்!
மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

அஞ்சு ரூபா ஒடச்ச கடல!
காலேஜில பெஞ்சு இல்ல!
பத்து ரூபா ஒடச்ச கடல!
பேராசிரியர் பத்த வில்ல!

மனு கொடுத்தோம்! மனு கொடுத்தோம்!
ஆறு மாசம் முன்னாடியே
மனு கொடுத்தோம்! மனு கொடுத்தோம்!

இப்போராட்டத்தை ஆதரித்து RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.
இப்போராட்டத்தை ஆதரித்து RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதிகாரியும் வரவில்ல!
அரசியல்வாதியும் வரவில்ல!
ரெண்டு பேரும் சேந்துகிட்டு
அடிக்கிறாங்க கொள்ள கொள்ள!

அவங்க வீட்டுப் பிள்ளைங்கெல்லாம்
தனியாருல படிக்குமாம்!
சொகுசாக படிக்குமாம்!
நாங்க என்ன இளிச்சவாயார்களா?

கல்வி கொடுக்க வக்கில்ல!
வேலை கொடுக்க துப்பில்ல!
டாஸ்மாக்குல சாராயத்த
ஊத்தி மட்டும் கொடுக்கிறான்!
தூ… மானங்கெட்ட கவர்மெண்டு!

பேராசிரியர் பணியிடத்துக்கு
லட்சக் கணக்கில் லஞ்சம்! லஞ்சம்!
மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை
ஏத்துறான்! ஏத்துறான்!

கொள்ளையடிக்காதே! கொள்ளையடிக்காதே!
MSU வே கொள்ளையடிக்காதே!

காணோம்! காணோம்!
MLA வ காணோம்!
காணோம்! காணோம்!
அதிகாரிய காணோம்!

வரச்சொல்! வரச்சொல்!
MLA வை வரச்சொல்!
அதிகாரிய வரச்சொல்!

ஓட்டுக் கேட்க வருவல்ல!
வேட்டு வெப்போம் வேட்டியில!

கல்வி என்பது அடிப்படை உரிமை!
நீங்க போடும் பிச்சையல்ல!
பயனில்ல! பயனில்ல!
அரசியல்வாதியும் அதிகாரியும்
நம்புவதால பயனில்ல!

ஒன்றிணைப்போம்! ஒன்றிணைப்போம்!
அனைத்துக் கல்லூரி மாணவர்களையும்
ஒன்றிணைப்போம்! ஒன்றிணைப்போம்!

கையிலெடுப்போம்! கையிலெடுப்போம்!
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!

உருவாக்குவோம்! உருவாக்குவோம்!
மெரினாவை உருவாக்குவோம்!

மண்ணை இழந்தால் மரமது இல்லை!
தன்மானத்தை இழந்தவன் மனிதனே இல்லை!

இம் முழக்கங்கள் மாணவர்களின் முழக்கங்களாக மாறின. உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர். முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.

கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?
கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?

போலீசு உடனே கல்லூரிக்கு வந்துவிட்டது. பயந்து கொண்டு சிறிது நேரத்தில் மாணவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தது போலீசு.  எப்படியாவது மாணவர்களை மிரட்டி கலைத்து விடலாம் என்று முயற்சி செய்து பார்த்தனர். பேராசிரியர்களிடம் சென்று பேசிப் பார்த்தனர். நமது தோழரைப் பற்றி, அமைப்பைப் பற்றி அவதூறு செய்து பார்த்தனர். எதுவும் வேலையாகவில்லை. கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?

பேராசிரியர்களை கூட்டி கல்லூரிக்குள்ளேயே போலீசு கூட்டம் போட்டு பேசியது. கல்லூரி முதல்வரின் அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கியது. பேராசிரியர்களுக்கு போலீசு உத்தரவிட்டுக் கொண்டிருந்தது. இதெல்லாம் எந்த சட்டத்தில் உள்ளது? உள்ளே வைத்து க்யூ பிரிவு போலிசு ஹரி என்பவர் எல்லோரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். உடனே மாணவர்கள் அனைவரும் போட்டோ எடுக்காதே என்று ஒரே குரலில் கூறியதால் போட்டோ எடுப்பதை நிறுத்திவிட்டார்.

கல்லூரிக்கு  அன்றே விடுமுறை அளித்து எல்லோரையும் அனுப்பியது நிர்வாகம். வகுப்புகளில் இருந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு விட்டது நிர்வாகம். ஆனாலும் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை.

போராடிய மாணவர்களின் உறுதியை குலைக்க முடியவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டத்தை நகர்த்தவும் மாணவர்கள் தயாராகவே இருந்தனர். மாணவர்களின் ஒற்றுமையைக் கண்டு பதறியது நிர்வாகம். அன்றே கல்லூரியின் துணை முதல்வர்  தூத்துக்குடி மாவட்ட கலெக்டரைச் சென்று சந்தித்து பேசினார். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார் என்பதை மாணவர்கள் மத்தியில் வந்து கூறினார்.

இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டத்தைத் தொடர்வோம் என்ற எச்சரிக்கையோடு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சடிகர மாணவர் இளைஞர் முன்னணி – RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

பிப்ரவரி 28 இரவு மூன்று லாரிகளில் இருக்கைகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டன. மாணவர்களின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி!

ஒரு கோரிக்கை நிறைவேறிவிட்டது. பேராசிரியர்களை நிரப்ப வேண்டும் என்ற மற்றொரு முக்கியமான கோரிக்கைக்கு என்ன தீர்வு?

தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய 93 அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. அடிப்படை வசதிகள் கிடையாது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக நீடிக்கிறது. இதைப் பற்றி அக்கறைப்பட வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ சொரணையற்றும், ஊழல் மலிந்தும் கிடக்கிறது. துணைவேந்தர்களோ மன்னார்குடி மாஃபியாவின் காலில் சென்று விழுகின்றனர். ஒட்டுமொத்த கல்வித்துறையே சீர்குலைந்து, நிர்வாணமாக நிற்கிறது. கல்வியோ தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கான களமாக மாறிவிட்டது. எந்த இடத்திலும் உரிமைகளுக்காக போராடுவதற்கு மாணவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். மாணவர்களோடு நின்று உரிமைக்காக குரல் கொடுக்க நினைக்கும் பேராசிரியர்களும் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

மீண்டும் மெரினாவை உருவாக்குவதைத் தவிர வேறு என்ன தீர்வு இருக்க முடியும்?

பத்திரிகை செய்திகள் :

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கோவில்ப்பட்டி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க