privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபுற்று நோயாளிகளைக் கொல்லும் இங்கிலாந்தின் மருந்து நிறுவனங்கள்

புற்று நோயாளிகளைக் கொல்லும் இங்கிலாந்தின் மருந்து நிறுவனங்கள்

-

இங்கிலாந்து நாட்டில் சில பென்னி நாணயங்களே தேவைப்படும் 14 சிகிச்சைகளுக்கான செலவு அல்லது மருந்துகளின் விலை 1000 விழுக்காடு வரை அதிகரித்திருக்கின்றன.

NHS – இங்கிலாந்து மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு பொதுச் சுகாதார நிறுவனமாகும். ஆண்டு ஒன்றிற்கு அரசால் 8 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இயங்கும் இந்த தேசிய சுகாதாரச் சேவை(NHS) இங்கிலாந்து மக்களின் நாடித்துடிப்பு என்றே சொல்லலாம். 2014 ஆம் ஆண்டு உலக வல்லுனர்கள் குழு ஒன்று, வளர்ந்த 11 நாடுகளின் மருத்துவத்துறைகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வினை வெளியிட்டது. நலம்புரி அரசுகளின் எச்சமாக இருக்கும் இங்கிலாந்தின் NHS-யை அவற்றில் மிகச்சிறந்ததாக தேர்வு செய்தனர். அதே நேரத்தில் மிகவும் மோசமானதாக அமெரிக்க சுகாதாரத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இது ஒன்றே NHS-க்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்த போதுமானதாக இருக்கிறது. இந்த நிலையில் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாறுமாறாக அதிகரித்துவிட்டதால் இங்கிலாந்து மக்களும் தவிக்கின்றனர்.

காப்புரிமை காலாவதியான புற்றுநோய் மருந்துகளின் விலையை ஏற்றுவதின் மூலம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இந்த விலை உயர்வால்ஏற்கனவே பணப்பற்றாக்குறையில் தவிக்கும் இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை நிறுவனம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை 100 விழுக்காட்டிலிருந்து 1000 விழுக்காடு வரை உயர்ந்து விட்டதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். விலையேற்றம் செய்யப்பட இந்தப் பொதுமருந்துகள் அனைத்தின் காப்புரிமைகளும் அங்கே காலாவதியாகிவிட்டன. அதாவது மூலப்பொருட்களின் விலையை விட சற்றேக் கூடுதலான விலையில் அம்மருந்துகளை இனி தயாரிக்க முடியும்.

ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஐரோப்பிய புற்றுநோய் கலந்தாய்வு கூட்டத்தில்(European Cancer Congress) ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த வல்லுனர்கள் பொதுமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அநியாய விலையேற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு அளிக்கப்படும் தாராபிரிம்(Daraprim) என்ற மருந்தின் காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த டூரிங் என்ற மருந்து நிறுவனம் 2015 ஆண்டு பெற்ற பின்னர் அதன் விலையை 904 ரூபாயிலிருந்து (13.5 டாலர்) இருந்து 50,228 ரூபாயாக (750 டாலர்) அதாவது 5,500 விழுக்காடு அநியாய விலையேற்றம் செய்தது. டூரிங் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியான மார்டின் ஸ்ரேலி (Martin Shkreli) அமெரிக்க மக்களின் மிகவும் வெறுக்கத்தக்க மனிதரானது மட்டுமல்லால் ஜனாதிபதி தேர்தலிலும் இது எதிரொலித்தது.

விலையேற்றத்தின் காரணமாக இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவைக்கான செலவீனம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்குமென்று லிவெர்பூல் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சிகிச்சைத்தீர்வியல் துறையைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹில் கூறினார். இதனால் சந்தைக்கு வரும் மிக அதிக விலை கொண்ட புதிய புற்றுநோய் மருந்துகளின் பயன்பாடு 20 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று NHS கூறியிருக்கிறது. “இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில் இருந்து 8,337 கோடி ரூபாய்(£1 பில்லியன்) கூட இருக்கும்” என்று அவர் கூறினார்.

நன்றி: தி கார்டியன், ஜனவரி 2015 ல் 10,500 க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன

இந்த நிதிவெட்டுக் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 30,000 மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் 50 வயதை கடந்தவர்களின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக பதிவாகி இருக்கின்றது.

NHS க்கு ஆகும் திட்ட வட்டமான செலவைக் கண்டறிய ஆண்ட்ரூ ஹில் மற்றும் இலண்டன் சுகாதார மற்றும் வெப்பமண்டல மருத்துவப்பள்ளியின் இணையாசிரியரான மெலிசா பார்பர் இருவரும் ஈடுபட்டனர். புற்றுநோய்க்கான மருந்துகளைக் குறித்துக் கொடுக்கும் மருத்துவமனைகளில் இருந்து தகவல்களைச் சேகரிக்க இயலாததால் NHS-ற்கு ஆகும் செலவினை இவர்களால் கணக்கிட இயலவில்லை. இந்த ஆய்விற்காக உலகச் சுகாதார நிறுவனமும்(WHO) திறந்தவெளி சமுதாய அறக்கட்டளையும்(Open Society Foundation) நிதியுதவி செய்திருந்தன.  அதேநேரத்தில் புற்றுநோய்க்கான மருந்து மட்டுமல்ல பொது மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் பரிந்துரைக்கும் அனைத்து பொதுமருந்துகளின் விலையும் கடுமையாக அங்கே உயர்ந்திருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. பொதுமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையை ஏற்றிவிட்டதால் 2015 ஆம் ஆண்டில் 3,160 கோடி ரூபாய் (380 மில்லியன் பவுண்டுகள்) அதிகமாக NHS செலவழித்துள்ளது. இது இங்கிலாந்து மக்கள் அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன் காணாத கடும் விலையேற்றம்.

விலையேற்றம் செய்யும் மருந்து நிறுவனங்களை கண்காணிக்கவோ அல்லது அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தவோ NHS முயலவில்லை என்கிறார் ஹில். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மருந்து நிறுவனங்கள் செய்யும் விலையேற்றம் கண்டுகொள்ளப்படவில்லை.

கருப்பைப் புற்றுநோய்க்கு வழங்கப்படும், காப்புரிமை காலாவதியான விலையேற்றப்பட்ட மருந்துகளில் ஒன்றான மெல்பாலான் என்ற மருந்தை இங்கிலாந்து நிறுவனமான கிளாக்சோஸ்மித்கிலைன் (GlaxoSmithKline) தயாரித்திருந்தது. அந்த மருந்துடன் காப்புரிமை காலாவதியான வேறுசில புற்றுநோய் சிகிச்சைகளுக்கான மருந்துகளும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆஸ்பென் மருந்து நிறுவனத்திடம் 2009 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆஸ்பென் நிறுவனத்தின் 16 விழுக்காடு பங்குகளை கிளாக்சோஸ்மித்கிலைன் வைத்திருந்தது.

2011 ஆம் ஆண்டு 2 மி.கி மெல்பாலான் மருந்தின் விலை 46 ரூபாயிலிருந்து(55 பென்னி) 2016 ஆம் ஆண்டு 151 ரூபாயாக (1.82 பவுண்டு) அதாவது 230 விழுக்காடு எகிறிவிட்டதாக ஹில் மற்றும் பார்பரது ஆய்வு கூறுகிறது. இதற்கெதிராக எந்த நடவடிக்கையும் NHS எடுக்கவில்லை. இத்தாலியில் 2014 ஆம் ஆண்டு இந்த மருந்தின் விலையை 1500 விழுக்காடு அதிகரிக்க ஆஸ்பென் முயற்சி மேற்கொண்டது. மறுத்தால் கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அனைவருக்கும் மருந்து வழங்குவதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இதற்க்கெதிராக இத்தாலியின் வர்த்தக சுதந்திரத்திற்கான ஆணையம் (Italian competitions authority) 36 கோடி ரூபாய் (5.5 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது. இத்தாலியின் மருந்து சந்தைக்கான நேரடி வழங்கலை(Direct Supply) கடுமையாக பாதிக்குமளவிற்கு இந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் இருந்ததாக அந்த ஆணையத்தின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

ஆஸ்பென் நிறுவனத்தின் மருந்து தட்டுப்பாட்டால் இங்கிலாந்து மட்டுமல்ல ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. மருந்துத் தட்டுப்பாட்டிற்கான காரணத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆஸ்பென் நிறுவனம் பதிலளிக்கவில்லை. மெல்பாலான் மருந்து கிடைக்காததால் மாற்றுமருந்து கொடுக்கப்பட்ட மூன்று பிரான்ஸ் பெண்கள் உயிரிழந்துள்ளனர். மெல்பாலான் சந்தைப்படுத்தபடுவதற்கு முன்னர் சைக்ளோஸ்பாமைடின் மருந்தே பரிந்துரைக்கப்பட்டு வந்ததால் இது கண்டிப்பாக பாதுகாப்பானதாக தான் இருக்க வேண்டும். இதைக்குறித்த ஆய்வு ஒருபுறம் நடந்து வருகிறது.

இங்கிலாந்தில் அதிக விலையேற்றம் செய்யப்பட்டது அதே ஆஸ்பென் நிறுவனம் தயாரித்த பசல்ஃபேன் என்ற மருந்து என அக்குழு கண்டறிந்தது. நாட்பட்ட இரத்த வெள்ளையணு புற்றுநோயான மைலாய்டு உலுக்கேமியாவிற்கு பயன்படும் மருந்தான பசல்ஃபேனின் விலை 2011 ஆம் ஆண்டு 2 மி.கி-ற்கு 17 ரூபாயாக (21 பென்னி) இருந்தது. ஆனால் 2016 ம் ஆண்டில் தடாலடியாக 217 ரூபாயாக (2.61 பவுண்டுகள்) அதாவது 1,143 விழுக்காடு அதிகரித்துவிட்டது.

ஆஸ்பென் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2010-லிருந்து 650 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனம் தனது ஆஸ்பென் நிறுவன பங்குகளை மூன்று பகுதிகளாக விற்றது. கடைசிப் பகுதியை விற்றதில் சுமார் 12,500 கோடி ரூபாய்(1.5 பில்லியன் பவுண்டுகள்) அதற்குக் கிடைத்தது.

ஃ`பைசர்(Pfizer) என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 2016 டிசம்பரில் 700 கோடி ரூபாய் (84 மில்லியன் பவுண்டு) அபராதம் விதிக்கப்பட்டது. பிளின் பார்மா(Flynn Pharma) என்ற மற்றொரு பொதுமருந்து நிறுவனத்துடன் சேர்ந்து காப்புரிமை காலாவதியான கை-கால் வலிப்பு எதிர்ப்பு மருந்து ஒன்றிற்கான விலையை 2,600 விழுக்காடு அதிகரித்து NHS-யிடம் வசூலித்ததாக குற்றஞ்சாட்டி இங்கிலாந்து போட்டி ஆணையம் இந்த அபராதத்தை விதித்து இருந்தது. NHS-ற்கு வேறு போக்கிடம் இல்லாததைப் பயன்படுத்தி அதனை அந்நிறுவனம் சுரண்டியிருக்கிறது. ஏனெனில் அந்த மருந்தை வேறெந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை. இதனால் முறையான காரணங்களின்றி செய்யப்படும் விலையேற்றத்தை விசாரிக்க இங்கிலாந்தின் சுகாதாரத்துறைக்கு அதிகாரத்தை அளிக்கக்கூடிய ஒரு மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற உள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் கவலையளித்திருப்பதாக டோரி கட்சி எம்.பி சாரா வோலஸ்டன் கூறுகிறார். “மருந்து நிறுவனங்கள் செயற்கையாக விலையேற்றம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதனால் ஏனைய இன்றியமையாத சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் நிதி தவிர்க்கவியலாமல் வெட்டப்படுகிறது.” என்று அவர் கூறினார்.

இந்த விலையுயர்வு வேறு எந்த மூர்க்கத்தனத்தை விடவும் மோசமானது என்று ஐரோப்பிய புற்றுநோய் கழகத்தின் நோயாளிகளுக்கான ஆலோசனைக்குழுவின் தலைவர் இயான் பேங்க்ஸ் கூறுகிறார். இந்த விலையேற்றத்தினால் ஒரு நோயாளியாவது அவரது உயிர்காக்கும் சிகிச்சை பெறமுடியாமல் இருக்கிறார் அல்லது அந்த பணத்தை வைத்து குறைந்தது அவரது வாழ்க்கைத்தரத்தையாவது உயர்த்திக் கொள்ளமுடியும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.

மார்பக புற்றுநோய்க்கான மருந்தான தமொக்சிபேன் உள்ளிட்ட பொதுமருந்துகளை விலையேற்றம் செய்வதற்காக மருந்து நிறுவனங்கள் கூறும் பரிந்துரைகள் குறித்தும் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இது ஏற்கனவே தடுமாற்றத்தில் இருக்கும் NHS-ற்கு மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும் என்று “நிகழ்கால மார்பக புற்றுநோய்’’ (Breast Cancer Now)” என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மியா ரோசன்பிளாட் கூறுகிறார்.

நன்றி: தி கார்டியன், 2015 இல் இறப்பு விகிதங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளை விட அதிகபட்ச உயர்வை எட்டியது

அதிக விலை கொண்ட மருந்துகளைத் தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் தங்களது முதலீடுகளைத் திரும்ப பெற குறுகிய காலமே இருப்பதாகவும் எதிர்காலத்தில் மருந்துகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்குமென்பது சுகாதாரக் கட்டுப்பாட்டுத் துறைகளின் புரிதலில் ஒன்றாக இருக்கிறது.

பொதுமருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருவதுதான் உண்மையான பிரச்சினையாகும். சுகாதார சேவை மருத்துவப் பொருட்களுக்கான மசோதா மூலம் இந்தப் பிரச்சினையை சரி செய்ய முயலும், அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ரோசன்பிளாட் மேலும் கூறுகிறார். ஆனால் இம்முயற்சிகளெல்லாம் நிறுவனங்களின் கொள்ளையை தடுத்து நிறுத்துவது கடினம்.

இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பான்மையான மருந்துகளுக்கு போட்டியான மாற்று மருந்துகள் எதுவும் கிடையாது. ஏனெனில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே ஏகபோக தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது என்று பிரிட்டிஷ் பொதுமருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு(The British Generic Manufacturers Association) கூறியிருக்கிறது. ஒட்டுமொத்தச் சந்தையின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் மருந்து தயாரிக்கவும் சோதிக்கவும் காப்புரிமை வாங்கவும் போடும் முதலீட்டை நிறுவனங்களால் திரும்பப் பெற முடியாது என்பதால் பொதுமருந்து நிறுவனங்கள் அதில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுவதில்லை என்று ஒரு அறிக்கையில் அது கூறியிருந்தது.

ஆனால் பொதுமருந்து ஒன்றைப் புதிதாக தயாரிக்க ஆகும் செலவு அதிகம் கிடையாது என்கிறார் ஹில். NHS-ற்கு மருந்து நிறுவனங்கள் தற்போது கொடுக்கும் மருந்தை விட மலிவு விலை மருந்துகளை இந்தியாவில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியும் என்று கூறுகிறார். உலகின் பல்வேறு வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் பொது மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதையும் முன்னர பன்னாட்டு நிறுவனங்கள் தடை செய்திருந்தன.

இன்று உலகின் பெரும்பாலான மருந்துகளின் காப்புரிமைகளைப் பெருநிறுவனங்களே வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் புதிய மருந்திற்கான ஆராய்ச்சிக்கு நிதியை ஒதுக்குவதை விட கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கவே அதிகம் செலவிடுகின்றன. மேலும் காப்புரிமை காலாவாதியான பின்னரும் மருந்துகளுக்கு காப்புரிமையை நீட்டித்துக் கொள்கின்றன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவர்டிஸ்(Novartis) புற்றுநோய்க்கான கிலீவச்(Gleevec) என்ற மருந்தைச் சிறுமாற்றம் செய்து காப்புரிமை நீட்டிப்பை பெற இந்தியாவில் முயன்றது குறிப்பிடத்தக்கது.

அரசின் அத்தனை உறுப்புகளையும் பணமும் அதிகாரமும் படைத்த பெரும்பணக்காரர்கள் தான் கட்டுபடுத்துகின்றனர். காப்புரிமைச் சட்டங்களையும் அவர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள். தனிநபர்கள் காப்புரிமை வாங்குமளவிற்கு பணபலம் மற்றும் அரசியல் பலமற்றவர்கள். இவர்களிடம் இருந்து காப்புரிமையைக் கைப்பற்றியப்  பின்னர் பெருநிறுவனங்கள் அதை ஏகபோகமாக்கிவிடுகின்றன.

காப்புரிமை இல்லையென்றால் புதிய மருந்துகள் கண்டுபிடிக்க யாரும் முயற்சிக்க மாட்டார்கள் அல்லது அவர்களுடைய உழைப்பை யாராவது ஏமாற்றி பறித்துக்கொள்வார்கள் என்பது முதலாளித்துவவாதிகள் கூறும் வழமையான காரணங்களில் ஒன்று. ஆனால் சூரியனுக்கு காப்புரிமை வாங்க முடியுமா என்று கேட்டார் போலியோவிற்கான மருந்தை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜோனஸ் ஸ்டால்க்.

தனிமனிதனே எதையும் உருவாக்கி விடுவதில்லை. புராதன இனக்குழு மக்கள் தாங்கள் கண்டறிந்த சக்கரத்திற்கும் நெருப்பிற்கும் காப்புரிமை வாங்கியிருந்தால் நவீன அறிவியலே கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு சில மனிதர்களுக்கோ அல்லது ஒருசில தனியார் நிறுவனங்களுக்கோ சொந்தமல்ல. நவீன இயற்பியலின் ஆகச்சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவத்திற்கு (E=mc2) பின்னால் மைக்கேல் ஃபாரடே, எமிலி டூ சாட்லே, லிசா மைட்னர் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பங்களிப்பு இருக்கிறது.

காப்புரிமைப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை உண்மையில் சாகடித்துவிடுகிறது. உருவாக்குவது, சோதித்தறிவது, சரி செய்வது என்று மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கானது உண்மையில் பரந்துபட்ட மக்களின் பங்களிப்பில் தான் சாத்தியமாகிறது. காப்புரிமையும் ஏகபோகமும் அறிவியலின் இந்தச் செயல்முறையைச் சில தனிப்பட்ட நபர்களின் கைகளில் சேர்ப்பதன் வாயிலாக மனிதச் சமூகத்தின் சிந்தனையைக் காயடிக்கின்றன.

இந்தியாவில் தற்போது மலிவு விலையில் போடப்படும் தடுப்பூசிகளின் நிலையை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போதே அரசு போடும் தடுப்பூசிகளை விட தனியார் மருத்துவமனைகள் அதிக ஊசிகளை மிக அதிக விலையில் போடுகின்றன. நாளைக்கே இத்தடுப்பூசிகளை போட்டே ஆக வேண்டும் என்ற நிலையை அனைவருக்கும் உருவாக்கி விலையையும் அதிகம் உயர்த்துவார்கள். ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் அப்படி உயர்த்தப்பட்டிருக்கின்றன.  இப்படித்தான் மருந்து துறை  செயல்படுகிறது. இறுதியில் காசு உள்ளவனுக்கு மருந்து இல்லாதவனுக்கு மரணம் என்பதே இவர்கள் வகுத்திருக்கும் நீதி! இந்தியாவானாலும் இங்கிலாந்தானாலும் முதலாளித்துவ சந்தை முறை நீடிக்கும் வரை இங்கே அறிவியலுக்கும், மருத்துவத்திற்கும், மக்களுக்கும் விடுதலை இல்லை!

– சுந்தரம்

மேலும் படிக்க,