Tuesday, August 16, 2022
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை புள்ளைங்க ஏங்கக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன்

புள்ளைங்க ஏங்கக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன்

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 4

அன்புச்செல்வம், வயது 47, பூக்கடை

20 வருசமா கடை வச்சிருக்கேன். மத்தியானம் 2 மணிக்கு வந்தா 7 – 8 மணிக்கு மேல ஆயிடும். பூ கோயம்பேடு மார்க்கெட்டுல இருந்து வாங்கியாருவேன். 12 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினா வாங்கிட்டு இங்க வந்து சேர ரெண்டு ரெண்டரை ஆயிடும்.

ஏன்க்கா காலையில போயி வாங்குறதில்லை?

மத்தியானந்தான் லோடு வரும். காலையில 100ரூவா பூவ 150 ரூவா சொல்லுவாங்க.

நீங்க மட்டும் பூ வுக்கு அதிக வெல வெக்காமலா இருப்பீங்க?

ஆமா நா பூ வித்து காச சேப்டி பண்ணி வச்சிருக்கேன். நீ வேற! மோடி 500, 1000 செல்லாதுன்னு சொன்னப்பவே என்கிட்ட ரெண்டு 500 ரூபா நோட்டு தான்பா இருந்துச்சு.

ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு பூ வாங்கியாருவேன். 200-ல இருந்து 300 ரூவா லாபம் வரும். மார்கட்டுல என்ன வெல வித்தாலும் மொழம் 40 ரூபாய்க்கு மேல யாரும் நம்மகிட்ட வாங்க மாட்டாங்க. ஒரு சீசன்ல பூ கிராக்கியா இருந்துச்சுன்னா அப்ப பூ வாங்காம வந்துருவோம். வியாபாரம் பண்ற வெலைன்னா தான் வாங்கியாருவோம். ஒரு பூ வெல அதிகமா இருந்துச்சுன்னா, அத கொஞ்சமும், வெல கம்மியான பூ கூடுதலாவும் வாங்கி அன்னிக்கு சமாளிப்போம். எந்த பொருளுக்கும் விக்குற வெலை தான வெக்க முடியும்? இதுல ஒரு மொழத்துக்கு இவ்வளவு வெல சொல்றியேன்னு நம்மள திட்டிட்டு வேற போவாங்க.

சரி இப்படி பூ கட்டி வித்து எவ்வளவு சம்பாதிச்சிருப்பிங்க?

நீ வேற, வாயிக்கும் வயித்துக்குமே சரியா இருக்கு. வீட்டுக்காரர் கூலி வேல தான் செய்யுறாரு. குடிக்கவும் செய்வாரு. குடுத்தா உண்டு, குடுக்கலைன்னா கேட்க முடியாது. இதுல குடும்பத்த எப்படி நடத்துறது? வீட்டு வாடகை ரூ.5000, கரண்டு ரூ.700-ல இருந்து 1000 – 1500. அப்புறம் தண்ணிக்கு. இதுலயே ஏழு-எட்டாயிரம் போயிடுது.

கரண்ட்டுக்கு ரூ.700 ஆ?

ஆமா, ஒரு யூனிட்டுக்கு 7 ரூபா. 100 யூனிட்டுன்னாக்கூட எவ்வளவு வரும் நீயே சொல்லு?

கவர்மெண்டு 100 யூனிட் வரைக்கு ஃபிரின்னு சொல்லிருக்குல்ல?

அத வீட்டுக்காரங்க எடுத்துப்பாங்க.. நமக்கு ஏன் கொடுக்குறாங்க?

சரி, லோன் போட்டு பொக்கே கடை மாதிரி பெருசா வைக்கலாம் இல்லையா?

கலாய்க்குறீயா? வீட்டுச் செலவுக்கு கடன் வாங்குனாலே கட்ட முடியலை. இதுல லோன் வேறயா? யார் லோன் குடுப்பா? ஆயிரத்தெட்டு சூரிட்டி கேட்பான், அதுக்கு நான் எங்க போவேன்?

ஒரு நாள் பூ மீந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க? மறுநாள் அதயே வச்சு வித்துடுவீங்க தான?

மீந்துச்சுன்னா மறுநாள் யூஸ் பண்ண முடியாது வேஸ்ட்தான். ஃபிரிட்ஜுல வச்சாக்கூட வேஸ்ட் தான். அன்னிக்கு நஷ்டம் தான் என்ன பண்றது.. மீந்ததை நான் எங்க வீட்டாண்ட இருக்குற மாதாக் கோயில்லயும், அம்மன் கோயில்லயும் சாமிக்கு போட்டுடுவேன்.

நீங்க என்னக்கா உக்காந்தே சம்பாதிக்குறீங்க, உங்களுக்கு என்ன பெருசா கஷ்ட்டம் இருக்கப்போவுது ?

ஏன்பா நீயும் உக்காந்து பூ..வ கட்டிப் பாரு அப்பதெரியும் தோள்பட்ட, கழுத்து, இடுப்பு அதெல்லாம் வலி பின்னி எடுக்கும். அப்பவும் வேலய செஞ்சுகிட்டு தான் இருப்பேன். ரொம்ப முடியலனா டாக்டர்கிட்ட போவேன். அவரும் இந்த வேலையாலதா பிரச்சின அதிகமா வலி மாத்திர சாப்புடக்கூடாது. தைலம் வேணும்னா தேச்சு பழகிக்கங்னு சொல்லி ஆயில்மெண்ட் எழுதி குடுப்பாரு.

சரிப்..பா வேற என்ன? 10 நிமிசம்ன்னு சொல்லிட்டு ரெம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க.. கிளம்புங்க.


செல்வி, வயது 50, வீட்டு வேலை.

20 வருசமா சேட்டு வீட்டுல சமையல் வேலை செஞ்சேன். மாசம் 9 ரூபா சம்பளத்துல இருந்து 320 ரூபா வரைக்கும் ஒரு வீட்டுல வேல பாத்தேன். அப்புறம் ஒரு வருசம் ஒன்ரை வருசம் ஒடம்பு சரியில்லைன்னு வேலைக்கு போவல. இப்ப வேலை பாக்குறது ஒரு முஸ்லீம் வீடு. 5000 ரூ. சம்பளம்.

சேட்டு வீட்டுலயா? அவங்க வெஜ் ஆச்சே?

நான் வேலை பாத்தது சிந்தி சேட்டு. அவங்க கறி, மீன்…ல்லாம் சாப்பிடுவாங்க. நாங்க எஸ்.சி தான் ஆனாலும் அவங்க சாதி பாக்க மாட்டாங்க. பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி…பா வேலை பாக்குறது?

பி.எஃப். இ.எஸ்.ஐ எல்லாம் இருக்கா?

அதெல்லாம் இல்லைப்பா… அந்த அய்யா வக்கீலு, அவருகிட்ட நான் கேட்டேன். வயசானப்புறமா எங்களுக்கு எதாவது வர்ராமாதிரி செய்யக்கூடாதான்னு.. அதெல்லாம் கம்பெனியில வேலை பாக்குறவங்களுக்கு தான். உங்களுக்கு கிடையாதுன்ன்னு அந்த அய்யா சொல்லிட்டாரு. நீங்க தான் சேத்துவச்சிக்கணும்னு சொல்லிட்டாரு.

உங்க வீட்டுக்காரர்  என்ன பன்னுறார் ?

1983-ல கல்யாணமாச்சு அடுத்த வருசம் பையன் பொறந்தான், 85-ல் பொண்ணு. 86-ல் வீட்டுக்காரர் விட்டுட்டு போயிட்டார். இங்க இருக்குறவங்க எல்லாம் சொந்தக்காரங்க தான் யாரும் உதவி பண்ணல. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க தான் தைரியம் சொல்வாங்க. உனக்கு மணியாட்டம் புள்ளைங்க இருக்கு அதுங்கள நல்லா பாத்துக்கோன்னு ஆறுதல் சொல்லுவாங்க.

நீங்க என்ன தான் கஷ்ட்டப்பட்டலும் வீட்டுக்காரர் இல்லாததது உங்களுக்கு சங்கடமா இல்லையா?

எல்லாரு வீடு மாதிரியும் நம்ம வீட்டுல இல்லையேன்னு எப்படி தோணாம இருக்கும்? தீபாவளி, பொங்கல்னா மத்த புள்ளைகளை பாத்து நம்ப புள்ளைங்க ஏங்கிடக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன். அத வச்சு கூட வேணுமுன்னா கடன வாங்கி நல்லா வாங்கித் தருவேன்.. காலையிலயும், மதியமும் வீட்டுவேலை முடிச்சிட்டு வந்த ஏன் சும்மா உட்காரனுமின்னு அரிசிய வறுத்து வெல்லம் போட்டு கொண்டு போயி அப்பல்லாம் பொரி உருண்ட விப்பேன், அதுல ஒரு 10-20 கிடைக்கும்.

செல்வியின் பாதுகாப்பில் விடப்பட்டிருக்கும் அண்டை வீட்டுக் குழந்தை.

வீட்டு வேலைக்கு போகும் போது கொழந்தைங்களை யாரு பாத்துகிட்டாங்க?

அதுக்கு நம்ம என்ன ஆளா வச்சிக்கமுடியும்? வீட்டு வேலைக்கு போகும் போது குழந்தைகளை பக்கத்து வீட்டுல பாத்துக்க சொல்லிட்டு போவேன். இதோ அவனுக்கு 2 வயசு ஆகுது. இந்த பையனோட அம்மாவும் வீடு வேலைக்குதான் போவுது. காலையில அங்கன்வாடியில விட்டுட்டு போயிருச்சு. நான் மத்தியானம் வரும் போது கூட்டியாந்தேன். இன்னும் (நாம் பேசும் போது மணி மாலை 6) அவ வரலை. நாங்க தான் பாத்துக்கறோம்.

 

வீட்டு வேலைக்கு போற எடத்துல பொருளெல்லாம் எடுத்துட்டு வந்துடுவாங்கன்னு ‘சிலர்’ சொல்லுறாங்களே?

ஒரு குண்டூசிய கூட எடுக்க மாட்டோம். என் வீட்டப் பாரு எடுத்துகிட்டு வந்தா நான் ஏன் இப்புடி இருக்கேன். திருட்டு புத்தி இருந்தா 20 வருசம் ஒரே வீட்டுல வேலை பாத்திருக்க முடியுமா?

சரி வீட்டு வேலைக்கு வெளிநாட்டுல கூட நெறையா வாய்ப்பு இருக்கே நீங்க அப்புடி எங்கயாவது போய் சம்பாதிச்சு இருக்கலாமே?

அட போ..ப்பா செத்தா இங்க தூக்கிப் போடவாவது ஆள் இருக்கு அங்க போனா? இப்ப இல்ல புள்ளைங்க சின்னதா இருக்கும் போது என்ன நான் வேல பாத்த வீட்டம்மா கூப்பிட்டுச்சி. ஆனா நான் புள்ளைங்கள வுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டேன்.

பெண்கள் வீட்டுலயும் வேல பாக்குறாங்க, வெளியவும் வேலைக்கு போறாங்க. ஆனா ஆம்பளைங்க வீட்டுக்கு வந்தா ஒரு வேலையும் செய்ய மாட்டேங்குறாங்களே ஏன்?

இந்த கேள்விய பொம்பளைங்ககிட்ட கேக்கக்கூடாது. ஆம்பளைங்க நீங்கதான சொல்லனும்..

சரி உங்களுக்கு மகளிர் தினம்னா தெரியுமா?

அட எனக்கு அப்புடி ஒரு நாள் இருக்குன்னு தெரியும். எங்க வீட்டாண்ட தெருவுல சின்னதா பசங்க மீட்டிங் மாதிரி போடுவாங்க அத போய் பாப்பேன். அவ்ளதான்.

சரி நீங்க பெண்களுக்கு எதாவது சொல்லனும்னா என்ன சொல்ல நினைகிறீங்களா?

உங்களோட சொந்த உழப்ப நம்புங்க… ஆம்பளைங்கள நம்பாதீங்க.


சசிகலா, வயது 47

ன்னக்கா  உங்க பேரக்கேட்டாலே பெரிய ஆளா இருப்பிங்க போல ?

சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

இங்க தான் பீஃப் பிரியாணி கடை வச்சிருக்கேன். பொறந்து வளந்தது எல்லாம் சென்னை தான் அப்பா போஸ்ட் ஆபிஸ்ல வேலை செஞ்சாரு நான் ஒன்பதாவது படிக்கும் போது அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாததால படிப்ப நிப்பாட்டிட்டு வீட்ட பாத்துக்க ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் வேல பாத்துக்கிட்டு இருக்கே..ன். ஆரம்பத்துல வீட்டு பக்கத்திலேயே சமையல் வேலைதான். அப்புறம் எங்க அக்கா வீட்டுக்காரு இந்த கடய வச்சிருக்காரு, இதுல வேல பாக்குறேன். கல்லாவ நான் தான் பாத்துகிறேன்.

உங்க வீட்டுக்காரு, பசங்க எல்லாம் என்னக்கா பன்னுறாங்க?

நான் கல்யாணமே பண்ணிக்கல..பா. எனக்கு எங்க சொந்தகாரங்க அக்கம் பக்கத்துல கல்யாணம் பண்ணி பொம்பளைங்க படற கஷ்ட்டத்த பாத்து அதுலயே வெறுத்து போச்சி. அப்படியே தள்ளிப்போட்டு கல்யாணமே செஞ்சுக்காம இருந்துட்டேன்.

நீங்களே சமைப்பீங்களா இல்ல ஆள் வச்சி செய்றீங்களா?

முன்னாடி நான் செஞ்சிட்டு இருந்தேன் இப்ப முடியல. அதனால ஒரு மாஸ்டர், கூட ஒரு ஆளு கட பாத்துக்க இருக்காங்க. நான் காலைல 11 மணியில இருந்து சாயந்தரம் 4 வரைக்கும் இருந்துட்டு போயிடுவேன்..பா.

சரி முடியலன்னா வேல எதுவும் செய்யாம இருக்கலாமே?

வீட்டுல இருந்தா தம்பி பசங்க, அக்கா புள்ளைங்களுக்கு விசேசம்னா செய்யனும். அப்ப போய் யாருகிட்ட நிக்க முடியும். நம்ம உழச்சி நாளு காசு வச்சிருந்தாதானே அடுத்தவங்களுக்கு செய்ய முடியும்.

மகளிர் தினம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

அதப்பத்திலாம் ஒன்னும் தெரியாது.

– வினவு செய்தியாளர்கள்

  1. அருமையான பதிவு..
    இது போன்ற உழைக்கும் மகளிரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது..
    வே.பாண்டி / தூத்துக்குடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க