Wednesday, December 11, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு !

சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு !

-

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணியில் சக்தி சண்முகத்தின் நாகமல்லி ஃபயர் ஒர்க்ஸ் ஆலை 6 வருடமாக இயங்கி வருகிறது. சுமார் 40 பேர் வரை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடும் கட்டுமான வசதிகளை கொண்ட இதில் 150 பேர் வரை விதிகளை மீறி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 11.03.17 காலை 10 மணியளவில் தரைச்சக்கர பிரிவில் முனைமருந்து செலுத்தும் வேலையில் ஒட்டம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் ஈடுபட்டிருந்த பொழுது அந்த அறையே வெடித்து சிதறியிருக்கிறது. இதில் அறைக்கு வெளியில் அமர்ந்து (விதிமீறி) உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களும் பலியாகினர்.  5 பேர் உடல் சிதறி பலியாக, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற நாகமல்லி ஃபயர் ஒர்க்ஸ் ஆலை

விபத்து நடந்த மறுநாள் காலை (12.03.17) மக்கள் அதிகாரம் சார்பாக நேரில் சென்று ஆலையை பார்வையிட்டோம். ஊர் மக்களை சந்தித்து விபத்து குறித்தும் விசாரித்தோம். அதில் தெரிய வந்ததை தொகுத்து தருகிறோம்.

காலையில் சென்றபோது நாகமல்லி ஆலையின் வாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் வண்டியில் வந்த சத்தம் கேட்டு கருவமரத்தின் பின்னிருந்து இருவர் வந்து விசாரித்தனர்.

வெடி விபத்தால் தரைமட்டமாகிக் கிடக்கும் கட்டிடம்

“உள்ளே போனா உங்க உசுருக்கு நாங்க பொறுப்பில்லை. எப்ப எதுவேனா வெடிக்கலாம்” என்று பீதியூட்டினார் காவலாளி அருணாச்சலம். எட்ட நின்று பார்க்கிறோம் என்று கேட்டை திறக்க வைத்து உள்ளே நுழைந்தோம். தொலைவில் இருந்த கட்டிடங்கள் வெடித்து சிதறியிருந்தாலும் அருகிலுள்ளவை பாதுகாப்பாக இருந்தன. அங்கு இறந்து போன 5 தொழிலாளிகளின் சாப்பாட்டுக்கூடைகள் இருந்தன.

நம்மை எச்சரிக்கையுடன் அனுகும் காவலாளி. கீழே இறந்தவர்களின் சாப்பாட்டுக் கூடைகள்.

அந்த அறையின் வெளிப்புற சுவரில் தொழிற்சலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் என்று பொறுப்பு பெயர் மட்டும் பெயிண்டில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் இல்லை.

அந்த இடம் வரை நம்முடன் வந்தனர் காவலர்களில் 80 வயதான சின்னத்தம்பியின்ஒரு மகன் டிரைவராக இருக்க மற்ரொரு மகனும் அங்கு சட்டி காண்ட்ராக்டராக (பூச்சட்டி தயாரிப்பு) 10 பேரை வைத்து வேலை செய்துள்ளார். தரைச்சக்கரம் பிரிவு வெடித்தபோது சற்று தள்ளி இருந்ததால் உயிர் தப்பியுள்ளார். பெரியவர் சின்னத்தம்பி நான் மொதல்ல விவசாயக்கூலியா இருந்தேன். இப்ப எங்க விவசாயம் நடக்குது? என்னாலயும் முன்ன மாதறி உழைக்க தெம்பில்லை. அதான் இங்க கெடக்கேன்” என்றார்.

மற்றொரு காவலாளியான அருணாச்சலம் “நான் அப்பப்ப திடீர்னு ரவுண்ட்ஸ்க்கு வருவேன். முதலாளி சொன்னாலும் அப்படி வருவேன். ராத்திரி காவல் காக்குறவங்க எல்லாத்தையும் செக்பண்ணி பூட்டவைச்சுட்டு வெளியே கெடப்பாங்க. உள்ள ஒரு எலி கடிச்சா கூட வெடிச்சு செதறிடும்! இந்த கம்பெனில 4 பேர் நைட்டுல வாட்சுமேன், எதுக்கும் துணிஞ்சுதான் சுதாரிப்பா கெடப்பாங்க. பகல்ல இத விட ஆபத்து. வேலை நடக்கும்ல. எப்ப எதுவேனா நடக்கும்.”  என்றார்.

தொழிற்சலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் விவரமின்றி கிடக்கும் அறிவிப்பு பலகை.

30 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துவந்த சுப்புராஜை ஊருக்குள் பார்த்து பேசினோம். இப்பொழுது பட்டாசு வேலைக்கு செல்கிறார். “மழை இல்லை. தீவனம் இல்லை. 2 வருசத்தில காய்ந்து வீணான கூழத்தை, தட்டையை காசுக்கு வாங்கி தீவனமாக போட்டதில் 1.25 லட்சம் நஷ்டம் வந்தது. பசும்பாலில் 4க்கு 1 தண்ணி கலக்கலாம். ஆனால் எருமைப்பாலில் 4க்கு 4 தண்ணி கலக்கலாம். வெளியே டீக்கடைக்கு ஊத்தினால் 35 ரூபாய் கிடைக்கும். ஆனால் அதிகாரிகள் நான் ஏதோ சட்டவிரோதமாக தொழில் செய்வதுபோல பிடித்து லஞ்சம் வாங்குவார்கள். கலப்படம் செய்ததாக அபராதம் போடுவார்கள். இவர்கள் தொல்லை தாங்காமல்தான் கம்பெனிக்கு ஊத்தினேன். அவர்கள் 25 ரூபாய்தான் தருகின்றனர். பிறகு எப்படி பால்மாடு வைத்து லாபம் பார்க்க முடியும். 8 ஏக்கர் சோவேரிக்கு(குத்தகை) விவசயமும் பார்த்தேன். இன்று குளம் குட்டைகளில் எருமைக்கு தேவையான நீர் இல்லை. நான் வேறு வழி இல்லாமல் எல்லாத்தையும் வித்துட்டேன். இப்ப 5மாடுதான் இருக்கு. ஃபயர் ஆபீசுதான் சோத்துக்கு வழி” என்றார்.

விதிமீறல்களை விளக்கும் கன்னிராஜன் ஸ்டேண்டர்டு பட்டாசு ஆலையின் முன்னால் ஊழியர்.

இறந்துபோன பெண்ணின் தெருவில் வசிக்கும் கன்னிராஜ் முன்னர் ஸ்டேண்டர்டு கம்பெனியில் நிரந்தர வேலையில் இருந்தவர். இவர் தனது ஆதங்கத்தை கொட்டினார். “சட்டப்படி எவனும் கம்பெனி நடத்துறதில்ல. இங்க கூட கலவை கலக்குற எடத்துல மேஜை மேல, விரிப்பை விரிச்சுதான் நின்னுக்கிட்டு வேலை செய்யனுங்கறது ரூல்ஸ். ஆனா கீழே உக்கார வச்சு வேலை வாங்கிறது மட்டுமில்ல, ஒரெ இடத்துல ராக்கெட், சட்டி(பூச்சட்டி), சிட்டுபுட்டு (ஒரு வகை பேன்சி ரகம்) மூனையும் செஞ்சுருக்குறாங்க. ஆனா தனித்தனியா செய்யனும்கறது விதி” என்று விபத்தின் பின்னுள்ள விதி மீறலை விளக்கினார்.

அருகிலுள்ள மருத்துவனை  – தாயில்பட்டி என்று ஆலையில் எழுதிப்போடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு மருத்துவரோ, தீக்காயத்துக்கான சிகிச்சை வசிகளோ இல்லை. போனால் வலிக்கு ஊசிமட்டும் போட்டு சிவகாசிக்கு அனுப்புவார்கள் என்று அரசு மக்கள் மீது காட்டும் அக்கறையை கூறினர் தொழிலாளிகள்.

தொழிலாளியை இப்படி உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யத்தூண்டியது எது? அதாவது இந்த பேன்சி ரக மருந்து கலவை – குறிப்பாக இங்கு தரைச்சக்கரத்தின் முனையில் கட்டியாக உறைந்திருக்கும் முனை மருந்து – கலந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசில் அடைக்கப்பட்டுவிடவேண்டும். நேரம் தாண்டினால் அது நீர்க்க ஆரம்பிக்கும். அதன்பின் அதை தொட்டாலே வெடித்து சிதறிவிடும்.  அதேபோல் சல்பர் அளவு சில மில்லிகிராம் கூடினாலும் கலக்கும்போதே வெடிக்கவும் செய்யும். காண்ட்ராக்ட் முறையில் செய்த வேலைக்கேற்பவே கூலி என்பதால் மொத்தமாக அளவுக்கு அதிகமாக மருந்தை கலந்து வேகவேகமாக பட்டாசு தயாரிக்கிறார்கள். அதிகரிக்கும் அளவால் வெடிவிபத்து நடக்கிறது.

இத்தகைய ஆபத்து நிறைந்த தொழிலில் பெண்கள் ஏன் வேலை செய்கிறார்கள்? வேறுவழி இல்லை என்று பெண்கள் விளக்கினர். மகளிர் குழுவில் அனைவரும் பணம் வாங்கியுள்ளனர். வாரம்தோரும் வசூலிக்க வருவார்கள். பிள்ளையின் படிப்பு, குடும்ப செலவு என ஒவ்வொருவரும் நுண்கடன் நிறுவனங்களின் பிடியில்  சிக்கியுள்ளனர். அவர்கள் அட்டையை தந்துவிட்டு வசூல் வேட்டையை நடத்துகின்றனர். இதனால்தான் பெண்கள், வெடிக்கும் என்று தெரிந்தும் பட்டாசு வேலைக்கு செல்கின்றனர்.

நுண்கடன் வலையில் உழைக்கும் மக்கள்

கம்பெனியில எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி! வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியின் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் இந்த நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர். விபத்து (படுகொலை) நடந்துவிட்டால்  கட்டப்பஞ்சாயத்து பேசி முதலாளியிடம் பணத்தை வாங்கித்தந்து வாயை அடைப்பது மட்டுமே இவர்களின் பணி.

பணம் தந்துவிட்டால் படுகொலைகளை தொடரலாம் என்கிறது அரசு.  மக்களை பலிகடாவாக்கி, விவசாயத்தை, மாடு வளர்ப்பை அழியவிட்டு இந்த நிலைக்கு தள்ளிய அரசை கேள்வி கேட்டு போராட்டம் நடத்துவதை உணராத வரை மக்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை. அந்த சிந்தனையை விதைக்கும் முகமாக இப்பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவில்பட்டி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க