வேலூர் மாவட்ட நிர்வாகமே ! மாநாகராட்சியே !! தரைக்கடை வியாபாரிகளுக்கு கட்டிய கடைகளை மாநகராட்சியே ஏற்று நடத்து என்று 13.03.2017 அன்று திங்கள் மாலை வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு.-வின் கிளை சங்கமான வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், அடுக்கம்பாறை பகுதி தரைக்கடை வியாபாரிகள் மற்றும் ம.க.இ.க. தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட இணை செயலாளர் மற்றும் இச்சங்கத்தின் செயலாளர் தோழர் சரவணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். வேலூர் லாங் பஜாரில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி அப்புறப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். பின்னர் வேறு இடத்தில் கடைக்கட்டி தந்து அதை தனியாரிடம் ஒப்பந்தம் என்ற பேரில் டெண்டர் விட்டு தனியார் பகல் கொள்ளைக்கு மாநகராட்சியே துணை நின்றது இதை அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்தாக இரு பகுதி சங்க செயலாளர்கள் மாநகராட்சி மற்றும் போலீசு ஆகியோர் முன்பு எவ்வாறு நடத்தினர் என்றும் இச்சங்கத்தில் இணைந்த பிறகு எவ்வாறு சுயமரியாதையுடன் தொழில் செய்து வருகிறோம் என்றும் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் இவ்வார்ப்பாட்டம் கடந்த மாதம் நடத்தப்படிருக்க வேண்டியது, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று சொல்லி போலீசு மறுத்துவிட்டதை அம்பலப்படுத்தினார்.
சாதாரண உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும்போது சட்டம் ஒழுங்கை காட்டும் போலீசு இன்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் இந்நாட்டை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல்களுக்கு பாதுகாப்பு தருகிறது. சாதாரண வியாபாரிகளுக்கு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன் சாலைகளை மறித்து நிற்கும் வாகனங்களை தடுக்காமல் அவற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இது எந்த வர்க்கத்திற்கான அரசு இதில் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நடைமுறை ஆதாரமாக விளக்கினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் இவ்வியாபாரிகள் தினந்தோறும் வட்டிக்கு கடன் பெற்று பிழைப்பு நடத்துவதையும், இத்தொழில் என்பது சதவீத சாதாரண உழைக்கும் வர்க்கத்துக்கு எந்தளவு இன்றுள்ள விலைவாசியில் பயனுள்ளதாக உள்ளது என்பதையும் விளக்கிப்பேசினார். இதை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர்களில் இவர்களின் வாழ்வுரிமையை பறித்து கொள்ளை கும்பலிடம் தாரை வார்க்கிறது என்பதையும் விளக்கிக்கூறினார். இன்று அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள், போராட்டம் தான் நம் அனைவருக்குமான தீர்வு என்று கூறினார்.
இறுதியாக தோழர் சுப்பிரமணி நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஒரு நாள் தனது வியாபாரத்தை இழந்தாலும் அவர்களுடைய தொழிலே போய்விடும் என்ற நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்)
வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841