Saturday, January 29, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?

மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?

-

 

ரியானா மாநிலம் குர்கானில் மாருதி தொழிற்சாலையில் நடந்த வன்முறையில் அந்நிறுவனத்தின் மனித வள அதிகாரி அவனிஷ்குமார், நிறுவனத்தின் குண்டபடையால் கொல்லப்பட்டார். இந்த கொலையை தொழிலாளிகள் தான் செய்தார்கள் என்று கூறி, அந்த மாநில அரசும் போலீசும் 148 தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது. தொழிலாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கபடாத போதும் அவர்களுக்கு பிணை வழங்க மறுத்தது நீதி மன்றம். இந்நிலையில் 118 பேரை விடுதலை செய்த நீதிமன்றம் 13  பேர் மீது கொலை வழக்கு, 18 தொழிலாளர்கள் மீது தீயிடல், சூறையாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து 18.03.2017 அன்று தீர்ப்பு வழங்க உள்ளது (தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள்  சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்). அவர்களை விடுதலை செய்யகோரி தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக 16.03.2017 அன்று  புதுச்சேரி-மதகடிப்பட்டு  பேருந்து நிறுத்தத்தில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் சரவணன் தலைமையுரையாற்றினார். இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மாருதி காரை உற்பத்தி செய்யும்  தொழிலாளியின் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் போராடினார்கள்.  திட்டமிட்டே வன்முறையை ஏவிவிட்டது மாருதி நிர்வாகம். அதில் ஒரு எச்ஆர் அதிகாரி இறந்துவிட்டார். அவரை கொலை செய்தது தொழிலாளிகள் தான் என்று, அன்று முதல் இன்று வரை தொழிலாளிகளுக்கு பிணை மறுத்தது  ஹரியானாவின் நீதித்துறை.

செய்யாத குற்றத்துக்காக தொழிலாளிகளுக்கு தண்டனை  என்றால், தினந்தோறும் முதலாளிகள்  செய்து வரும் குற்றத்திற்கு என்ன தண்டனை? தொழிலாளர் துறை என்பது முதலாளிகளின் கால்களை நக்கி பிழைக்கும் துறையாக மாறிவிட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அதற்கடுத்ததாக திருபுவனை வட்டார கிளை பொருளாளர் தோழர் சங்கர் அவர்கள் பேசுகையில், இங்கே திருபுவனையிலும், தொழிலாளர்களுக்கு இதே நிலைமை தான். குறிப்பாக மதர் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அடிமைகளை போன்றே நடத்தப்படுகிறார்கள். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகள் சார்பாக ரவுடிகள் தாக்குதல் நடத்தினார்கள்.  இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட  தொழிலாளிகளை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட  எட்டு தொழிலாளிகளை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தனர். காரணம் கேட்டால் சட்டப்படி நடந்து கொள்கிறோம் என்றனர். ஆனால், தொழிலாளிக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய எந்த உரிமையும் வழங்குவதில்லை. தொழிலாளர் துறையில் முறையிட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசையும், காவல்துறையும் அம்பலபடுத்தினார்.

அவரை தொடர்ந்து பேசிய திருபுவனை வட்டாரக் கிளை செயலாளர் தோழர் மகேந்திரன் பேசும்போது, இந்த ஆர்ப்பட்டத்திற்கு திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் அனுமதி கேட்ட போது நீங்கள் ஆர்பாட்டம் நடத்தினாலே பிரச்சனை தான் அனுமதிதர முடியாது என்றார். எங்கோ நடந்த பிரச்சனையை ஏன் இங்கு பேசுகிறீர்கள், ஏற்கனவே திருபுவனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் தானே அடி வாங்கினீர்கள், பிறகு ஏன் அங்கேயே கேட்கிறீர்கள், தேவையில்லாத பிரச்சனை வரும்  என்றார் காவற்துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி. நீண்ட விவாதத்திற்கு பிறகு மதகடிபட்டில் நடத்திகொள்ளுங்கள் என்றார்.

“நாங்கள் அடி  வாங்கினோம் என்றால் எங்கள் மீது ஏன் வழக்கு போடணும்?  ரவுடிகளுக்கும், முதலாளிகளுக்கும்  சாதகமானவர்கள் தான்  என்பதை தன் வாயால் ஒத்துக்கொள்கிறார் SP தெய்வசிகாமணி. இதே திருபுவனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள்  இருந்தது. அவை பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டது. காரணம் இங்கு இருக்க கூடிய ரவுடிகள், அரசியல்வாதிகள்  ஒப்பந்த தொழிலாளிகளை எனது காண்ட்ராக்டில் தான் விட வேண்டும், கமிசன் தர வேண்டும் என்று கம்பனிகளை மிரட்டுகிறார்கள்.

திருபுவனையில் 1988 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கம்பனியில் பெரும் ஊழல் நடந்தது. இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  நிர்வாகத்தை மூடிவிட்டார் அதன் முதலாளி. தொழிலாளிகள் மத்தியில் கட்டைப்பஞ்சாயத்து  பேசியது இந்த லோக்கல் ரவுடிகள் தான். 20,000 மாத வருமான வாங்கியவர்கள்  தற்பொழுது ஐந்தாயிரம் சம்பளத்திற்கு பல கம்பனிகளில் பணியாற்றுகிறார்கள் என்று தொழிற்சாலைகளின்  மோசடித்தனங்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ரவுடிகளையும் அவர்களுக்கு  துணையாக இருக்கும்  அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையை அம்பலபடுத்தி  பேசினார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய புதுவை மாநில இணைச் செயலர் தோழர் லோகநாதன் பேசுகையில், ஏரிப்பாக்கம் எல்லையில் அமைந்துள்ள புல்கிட் என்ற இரும்பு தொழிற்சாலையில் அடுத்தடுத்து இரண்டு தொழிலாளிகள் இறந்து போனார்கள். ஒருவர் நிரந்தர தொழிலாளி, மற்றொருவர் ஒப்பந்த தொழிலாளி. மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். தற்பொழுது கம்பனி இயங்குகிறது. இந்த படுகொலைக்கு யார் காரணம்?

மாருதி தொழிற்சாலையில் மனிதவள அதிகாரி அவனிஷ்குமார் இறந்து விட்டார் என்பதற்காக தொழிலாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இவர்கள் மீதான குற்றம் நிருபிக்கப்படவில்லை இருப்பினும் தண்டனை வழங்கினார்கள். ஆனால் கண்முன்னே நடந்த ஏரிபாக்கம் தொழிலாளிகள் கொலையில்  காவல்துறை அதன் முதலாளி மீது ஏன் வழக்கு போடவில்லை?

இதேபோல் ஹரியானாவில், ஹோண்டா நிறுவனத்தில் பணிபுரியும் அஜித்சிங் என்ற தொழிலாளி, ஐந்தாயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளிகளை திரட்டி முதலாளித்துவ  பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடினார். அவர் முதலாளிகளால்  அடித்தே கொல்லப்பட்டார். இதற்காக கொலைக்கு ஒரு வழக்கு கூட பதியவில்லை காவல்துறை.

தமிழகத்தில் கோவை பிரிக்காலில் மனித வள அதிகாரி கொல்லப்பட்டார் என்று தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்கள். ஆனால், ஸ்ரீபெரும்பத்தூர் தொழிற்பேட்டையில் முதலாளிகள் கோரத்தாண்டவம் ஆடுகிறார்கள். தினந்தோறும் தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுகிறார்கள், ஆனால் முதலாளிகள் மீது ஒரு வழக்கு கூட போடுவதில்லை.  இதை எல்லாம் எதிர்த்து தொழிலாளிக்கு நீதி கேட்டு போராடுகின்ற எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.

டெல்லிக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கிரேசியானோவில்  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொழிலாளிகளை அவமதிப்பாக பேசிய மனிதவள அதிகாரி மீது ஒரு தொழிலாளி  சம்மட்டியை எடுத்து வீசியதில் அதிகாரி இறந்துவிட்டார். அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஆஸ்கர் பெர்னாண்டர்ஸ் “தொழிலாளி வர்க்கத்தை கோபப்படுத்தினால் இப்படி தான் நடக்கும்” என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார். இதனை கேட்ட முதலாளிகள்  அனைவரும் உடனே பதறினார்கள். தொழிலாளர் சட்டத்தை திருத்துங்கள் என்று நாங்கள் பேசுகிறோம் நீங்கள் தொழிலாளிக்கு அதரவாக பேசுகிறீர்கள். நாங்கள் தொழிலை நடத்த முடியாது என்று கூவினார்கள்.

தொழிலாளி யாரையும்  கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. எங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுங்கள் என்று நியமான கோரிக்கைக்கு போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கையை கேட்க கூட தயங்குகிறது தொழிலாளர் துறையும், இந்த அரசும்.

முதலாளிகளின் எடுபிடியாக மாறிப்போன  இந்த அரசமைப்பில்  தொழிலாளி வர்க்கத்திற்கு நீதி கிடைக்காது என்பதற்கு தான் மேற்கூறிய சான்றுகள். இந்த உண்மையை புரிந்து கொண்டு  தொழிலாளி வர்க்கம் புரட்சிகர அமைப்பின் கீழ் ஒன்று திரளவேண்டும்.  விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிராகிப் போன, அழுகி நாறும்  இந்த அரசை  தகர்த்தெரிந்தால் தான் நாம் விடுதலை பெற முடியும் என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்ததுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திரளான தொழிலாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க