அன்பே சிவம் திரைப்படத்தில் பிரளயனின் ‘வீதி நாடகக்குழு’ இருக்கிறது; தொழிலாளிகளின் சம்பள உயர்வு கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கின்றன; மொத்தத்தில் மார்க்சிஸ்டு கட்சியினர் மனக்கிளர்ச்சியடைந்து தியேட்டர் வாசலில் தோரணம் கட்டுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் படத்தில் இருக்கின்றன.
இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமா கொட்டகையில் 40, 50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு “கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்” என்ற குழப்பமும் இருக்கிறது.
மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்தப் படத்தைப் பாராட்டியிருப்பதிலோ, தீக்கதிர் உச்சி மோந்திருப்பதிலோ நமக்கு வியப்பில்லை. பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் இதைப் பாராட்டியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவையான செய்தி. செங்கொடியும், சி.ஐ.டி.யு. பலகையும் தெளிவாகக் காண்பிக்கப்பட்ட பிறகும் இல.கணேசன் பாராட்டுகிறாரென்றால், ஏமாந்தது யார் என்று நமக்குத் தெரிந்தாக வேண்டும்.
நல்லசிவம் (கமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு (மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல்போன் பிடித்த, ஜீன்ஸ் போட்ட இளைஞனை புவனேசுவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னுடைய தமிழ்ப்பெயரையே இழிவாகக் கருதி ஏ.அர்ஸ். என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் அளவு தீவிரமான அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தைத் தீவிரவாதி என சந்தேகித்து போலீசிடம் போட்டுக்கொடுத்து, இல்லையென்று நிரூபணமானதால் அவமானப்படுகிறான்; கொஞ்சம் ‘குற்றவுணர்வும்’ அடைகிறான்.
புவனேசுவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்த சின்னக் குற்றவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவம். கிரெடிட் கார்டும், வெளிநாட்டு ஷுவும், நுனி நாக்கு ஆங்கிலமும் செல்லுபடியாகாத உண்மையான இந்தியாவை அந்த அமெரிக்க குஞ்சுக்கு அறிமுகம் செய்கிறான். அந்த இளைஞனின் இதயத்திலும் பெயரிலும் ‘இயற்கையாகவே’ குடிகொண்டிருக்கும் ‘அன்பை’, அதாவது கடவுளை, சாமார்த்தியமாகத் துழாவி வெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும் விடுகிறான்.
புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஓவியனும், கணினி விற்பவனுமான நல்லசிவத்தைக் கண்டு – அதாவது அவனிடம் பொதிந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட ‘திறமை’யைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.
சிவத்தின்(நல்லசிவத்தின்) காதலி அன்புக்கு(அன்பரசுவுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்தத் தியாகத்தால் வாங்க முடியாத கூலி உயர்வை, தனது காதலைத் தியாகம் செய்து அவர்களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெரு நாயுடன் நடந்து மறைகிறான் நல்லசிவம்.
கதையின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் விழும் ஓட்டைகளை ஒதுக்கிவிட்டு மையக்கருத்துக்குச் செல்வோம்.
படம் உலகமயமாக்கத்துக்கெதிராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல் பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக்கூடும்.
சரி, உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப் படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கைகளினால் ஆதாயமடைகின்ற வர்க்கத்தின் பிரதிநிதியிடம் பேசுகிறது. கணினி வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும், சேவைத்துறையினராகவும், வேலை செய்கின்ற நுனிநாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவிற்கு ஓடுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெப்சி மாதவன்களிடம் பேசுகிறது.
“சோற்றுக்குப் போராடும் இந்த தேசத்தைப் பாருங்கள். மக்களைப் பாருங்கள். மனமிரங்குங்கள். அற உணர்வு கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் மன்றாடுகிறது. அவ்வப்போது நல்லசிவத்தின் சாமார்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.
பிறப்பால் இந்தியனாகவும் சிந்தனையால் அமெரிக்க அடிவருடியாகவும் வளர்ந்துள்ள “யுப்பி” என்றழைக்கப்படும் நவீன மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வர்க்கம் அறவுணர்வற்றுப் (Amoral) போனதற்கு காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.
உலகப் புகழ் பெற்ற பங்குச்சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோராஸ் எனும் கிழவனிடம் அவனுடைய ஒழுக்கம், அறவுணர்வு பற்றிய கேள்விகளை எழுப்பியபோது “சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவே எனக்கும் இல்லை” என்று பதிலளித்தானாம். அந்தக் கிழட்டுப் போக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை.
பன்னாட்டு நிறுவனங்கள் உலகச்சந்தையைக் கைப்பற்ற எத்தகைய ‘நெறிகளைக்’ கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிரதிபலிப்பைத்தான் நாம் இந்த யுப்பி வர்க்கத்திடம் காண முடியும். ஏனென்றால் இவர்கள் அதன் ஊழியர்கள், தரகர்கள், துதிபாடிகள் அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.
அவ்வாறிருக்க, நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, நிழலுக்கு முடிவெட்டி அழகுபடுத்த முனைகிறார் நல்லசிவம்.
அன்பரசுவின் (மாதவனின்) வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான் இறைவனின் பத்துக்கட்டளைகள். இந்த ஆட்டத்தில் வெல்லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக்கூர்மைக்கும் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இதில் தோற்று மடிபவர்களைக் குறித்து அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.
சூறாவளியில் பிடுங்கியெறியப்பட்ட தென்னை மரத்துக்காக இவர்கள் எப்படி கண்ணீர் விடமாட்டார்களோ, அவ்வாறே உலகமயமாக்கத்தால் பிடுங்கி எறியப்பட்டுச் செத்து மடிகின்ற விவசாயிகளுக்காகவும் இவர்கள் கண்ணீர் விடுவதில்லை.
“சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள்தான்” என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கான தார்மீகப் பொறுப்புண்ர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. “பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான்.
ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைபட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விட முடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் ‘கடவுளை’ நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார்.
எல்லோருக்கும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி (கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிபடி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.
மனச்சாட்சி என்பது என்ன? அது சமூக விதிமுறைகள் குறித்தும், தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் (அல்லது உருவாக்கிய வண்ணமிருக்கும்) ஒரு கையேடு. எந்த முதலாளியும் தன் மனச்சாட்சிக்கு விரோதமாகத் தொழிலாளியைச் சுரண்டுவதில்லை; மனச்சாட்சிப்படிதான் சுரண்டுகிறான். இந்திய மக்களின் வரிப்பணத்தில் I.I.T.யில் படித்துத் தேறிய யுப்பி வர்க்கம் “இந்த நாட்டில் என் திறமைக்கு மரியாதை இல்லை” என்று திட்டிவிட்டு விமானமேறும் போதும் அதுதன் மனச்சாட்சிப்படி தான் நடந்துகொள்கிறது.
சாதி இந்துக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதாகவும், குற்றவுணர்வை உசுப்புவதாகவும் கூறிவந்த காந்தியின் பசப்பல்களை இதனால்தான் அம்பேத்கர் ஏற்கவில்லை. அரியானா முதல் மேலவளவு வரை ‘சாதி இந்து மனச்சாட்சி’ அன்றாடம் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
தீண்டாமை அல்லது மறுகாலனியாக்கம் போன்ற சமூக, அரசியல் அநீதிகள் (சமூக) அறிவியலின் துணை கொண்டு ஆராயப்பட வேண்டியவை. இவற்றை அறம் சார்ந்த பிரச்சனையாகச் சுருக்குவதும், திசை திருப்புவதும் முதலாளித்துவக் கலைஞர்கள் வழக்கமாக நடத்திவரும் கழைக்கூத்து. பெப்சி மாதவன் வர்க்கத்திடம் “அறம் செய்ய விரும்பு” எனப் போதிக்கிறார் நல்லசிவம்.
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
விசாரித்துப் பாருங்கள்! உலகமயமாக்கம் குறித்து தனது கவலையை அவரும் வெளியிடுவார். “நமது கலாச்சாரம், தர்மங்கள், குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பலி கொடுத்து விடக் கூடாது” என்பதே உலகமயம் குறித்த அவரது கவலை. அறம் சார்ந்த கவலை!
மார்க்சிஸ்டு கட்சியின் தூண்களான வங்கி, காப்பீடு, பொதுத்துறை ஊழியர் சங்க முன்னோடிகளிடம் பேசிப் பாருங்கள். பையனுக்கு விசா கிடைக்காத கவலையை நெஞ்சில் தேக்கியபடியே மேற்படி அறம் சார்ந்த கவலையையும் வெளியிடுவார்கள். இதே வகைப்பட்ட அறம் சார்ந்த கவலைதான் சிலிகான் வேலி பையனுக்குச் சீரங்கத்தில் பெண் தேடுகிறது.
இவர்களது ஆன்மாவின் குரல் ஓவியர் மதனின் வசனமாகத் திரையில் சிந்துகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் ஆதாயங்களை அனுபவித்த மனிதனின் வர்க்கம், புதிய பொருளாதாரத்தால் தத்தெடுக்கப்பட்ட தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்துச் செல்லமாக கடிந்து கொள்கிறது. தங்கள் புத்திரர்களான யுப்பி வர்க்கம் கையில் தீவட்டியுடன் திரிந்தாலும் “அவர்கள் அடிப்படையில் நல்லவர்கள்தான்” என்று நம்மை நம்பச் சொல்கிறது.
“ரத்ததானம் கொடு, ஏழைகளுக்குச் சின்ன உதவி செய், இரண்டு சொட்டு கண்ணீர் விடு – முடிந்தது கதை. நீதான் கடவுள்” என்று மாதவனைத் தயார்படுத்துகிறார் கமலஹாசன். மஞ்சள், வேப்பங்கொட்டை, பாசுமதி, M.N.C., எலும்புத்துண்டு…. என்று தன் அறிவின் மேன்மையை மாதவன் மீது நிலைநாட்டுகிறார். பட்டணத்துக் கதாநாயகியைப் பட்டிக்காட்டு கதாநாயகன் சீண்டுவது போலக் கொஞ்சம் சீண்டுகிறார். இப்படியாக யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதியிடம் குற்றவுணர்வு தோற்றுவிக்கப்பட்டு விட்டது.
தமிழ் சினிமாவில் குற்றவுணர்வுக்கு ஆளாகின்ற பாத்திரம் அதை செண்டிமெண்டு மூலம் நிரூபிக்க வேண்டும் என்பது விதி; மாதவன் நிரூபிக்கிறார்; தோழர் நல்லசிவம் அண்ணன் நல்லசிவமாகிறார். யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ‘பிரதிநிதி’க்குமிடையிலான உறவு அண்ணன்-தம்பி உறவுதானென்று திரைக்கதையின்படியே நிரூபணமாகிறது.
நல்லசிவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு என்ன? “நல்லசிவம் நாடகம் போட்டால் தொழிலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள்; நல்லசிவத்தை முதலாளி ஆள் வைத்து அடித்தால் அதையும் வேடிக்கை பார்ப்பார்கள்; மற்றப்படி சம்பளம் 910ஐ, 920 ஆக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும், ‘முதலாளி நாசர்தான் எதிரி’ என்று தாடிவைத்து டான்ஸ் ஆடிக் காட்டினால் புரியும். தொழிலாளர் தலைவர் முதலாளி மகளை ஏன் காதலிக்கிறார் என்று கேட்கக்கூடத் தெரியாது. மற்றப்படி உலகமயமாக்கம், அமெரிக்க, ஜப்பான் இதெல்லாம் புரியாது. சொல்லவேண்டியது நம் கடமை என்பதால் நாலு வார்த்தை சொல்லி வைப்போம்”- இதுதான் தொழிலாளி வர்க்கத்தின்பால் நல்லசிவத்தின் அணுகுமுறை.
“ஏனென்றால் கதையில் அவர்கள் இல்லை” என்ற வழக்கமான கோடம்பாக்கம் பதில் நம் காதில் விழுகிறது. “எடுத்த கதையைப் பற்றிப் பேசு; எடுக்காத கதையைப் பற்றிப் பேசாதே” என்ற எச்சரிக்கைக் குரலும் கேட்கிறது.
இருந்தாலும் “உலகமயமாக்கத்துக்கு எதிரானது” என்று கூறிக் கொள்ளப்படும் திரைப்படத்தில், அதனால் பாதிக்கப்பட்ட வர்க்கம், அதை எதிர்த்துப் போரட வேண்டிய வர்க்கம் ஏன் செவிடாகவும் ஊமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கேட்காமலிருக்க முடியாது.
உலகமயமாக்கலின் விளைவாகப் பட்டினிச் சாவுக்கும், நோய்க்கும், வேலையின்மைக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்ற நாட்டின் 90 சதவீத மக்கள், தங்களுடைய தலைவிதி எங்கே, யாரால், எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று அறியாமல் இருக்கிறார்களே, அதுதான் இன்றைய அவலம். குடிநீருக்குத் தவமிருக்கும் பெண்கள் பெப்ஸி கடைகளை நொறுக்கத் தொடங்கினால், பட்டினியால் வாடும் விவசாயி மெக்டொனால்ட்ஸ் கடையை இனம் கண்டு சூறையாடினால், தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயி அமெரிக்க ஜீன்ஸ் கடைகளுக்குத் தீ வைத்தால்…. அப்போது யுப்பி வர்க்கம் ‘எனக்கென்ன’ என்று தோளைக் குலுக்காது. ஒவ்வொரு மாதவனாகத் தேடிப்பிடித்து அவர்களுடைய அறவுணர்வை உசுப்பி விடும் சிரமும் நல்லசிவத்துக்கு இருக்காது. இதயத்தில் ‘கடவுள்’ உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அந்த வர்க்கம்தானே இரண்டாகப் பிளந்து விடும்.
அல்லாமல் அந்த வர்க்கத்தின் அறவுணர்வை வேண்டி மன்றாடி நின்றால், கஞ்சித் தொட்டி, உண்டைக் கட்டி அல்லது பிச்சையிடுதல் மூலம்தான் அது தன் அறவுணர்வை வெளிப்படுத்தும். ஒரு வர்க்கம் என்ற முறையில் அதன் மனநிலையும் சிந்தனை முறையும் இதுதான். அந்த வர்க்கத்திலிருந்து நீங்கிய சிலர் இருக்கலாம். ஆனால் மாதவன் அவ்வாறு நீங்கியவர்களின் பிரதிநிதி அல்ல; அந்த வர்க்கத்தின் பிரதிநிதி.
உலகமயமாக்கத்தைச் சாடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு திரைப்படம், அதை உண்மையிலேயே எதிர்த்துப் போராடக் கூடிய உழைக்கும் வர்க்கத்தையோ அதன் பிரதிநிதியையோ மையமான பாத்திரமாகத் தெரிவு செய்யவில்லை. மாறாக உலகமயத்தால் ஆதாயமடைகிற, அதை ஆதரிக்கிற ஒரு விளம்பர சினிமாத் தயாரிப்பாளனை, அதாவது யுப்பி வர்க்க பிரதிநிதியை வம்படியாக இழுத்து வைத்துக் கொண்டு அவனிடம் மூச்சைக் கொடுக்கிறது; அவன் மீது தன் மேதாவிலாசத்தைப் பொழிகிறது.
தொழிலாளி வர்க்கத்தின்பால் மார்க்சிஸ்டு கட்சியின் அணுகுமுறையும் இதுதான். “போனஸ், கூலி உயர்வு, சூரியன், இரட்டை இலை தவிர வேறெதுவும் மக்களுக்குப் புரியாது, புரியத் தேவையில்லை” என்பது அவர்கள் கருத்து.
சமீபத்தில் மாணவர் போரட்டத்தின் போது “உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படிதான் கல்லூரிகள் தனியார்மயமாக்கப்படுகின்றன” என்ற விசயத்தை மாணவர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்பதே அவர்களுடைய கருத்தாய் இருந்தது. ஏனென்றால் அதெல்லாம் மாணவனுக்குப் புரியாதாம். “கட்டணம் உயரும் என்ற ஒரு விசயம்தான் மாணவர்களின் அறிவுக்கு எட்டும்” என்பது அவர்களின் முடிவு.
எனில், அரசியல், பொருளாதாரம், தத்துவம் எல்லாம் யாருக்கு? அது ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கு. பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய மற்றும் அனுப்ப விரும்புகிற வர்க்கத்திற்கு உலகமயமாக்கம் குறித்த தத்துவஞான உபதேசம்! அன்றாட வாழ்வில் பார்ப்பனியச் சாதிய சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்துப் போராட முனையாத L.I.C. வர்க்கத்துக்கு வரலாற்றில் பார்ப்பனமயமாக்கம், பூகோளத்தில் சமஸ்கிருதமயமாக்கம் குறித்த ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள்.
களத்தில் நிற்கும் அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு தீக்கதிர் சார்பில் தீபாவளி மலர், திருவண்ணாமலை தீபம் சிறப்பிதழ்; தொழிலாளி வர்க்கம் தன் அன்றாட வாழ்வில், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கு வழிகாட்ட தீக்கதிர் நாட்காட்டி, அதில் இந்து, கிறித்தவ, இசுலாமியப் பண்டிகைகளின் பட்டியல், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் இன்னபிற… இன்னபிற…
இது இரட்டை அணுகுமுறை மட்டுமல்ல, இரட்டை வேடம்! மார்க்சிஸ்டு கட்சியின் இந்த அரசியல் இரட்டை வேடத்தை அறம் சார்ந்த இரட்டை வேடமாக வெளிப்படுத்துகிறான் நல்லசிவம்.
நண்பர் மதன் தன்னை விருந்துக்கு அழைத்த இடம் முதலாளியின் வீடு என்று தெரிந்த பின்னரும் உள்ளே நுழைகிறான். (இதிலென்ன தப்பு தோழரே, நாம பேச்சுவார்த்தைக்கு முதலாளி வீட்டுக்குப் போறதில்லையா, அறிவொளி இயக்கத் தோழர்கள் கலெக்டர் விருந்துல கலந்துக்கிறதில்லையா?)
முதலாளியின் மகள் கைதவறிச் சிந்திய ஐஸ்கிரீமினால் கோலம் போட்டுக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறார். (நம்ம எழுத்தாளர்கள் குமுதத்தில் போட்டிக்கதை எழுதிப் பரிசு வாங்குறதில்லையா?) அவள் ‘சாரி’ என்று சொன்ன 30 நொடிகளில் காதல் வயப்படுகிறார். (B.J.P.யை ஆதரிச்சதுக்கு ‘சாரி’ன்னு ஜெயலலிதா சொன்னவுடனே நாம கூட்டணி வச்சுக்கறதில்லையா?)
இப்படி ஒரு பட்டியல் போடலாம். அன்பரசுவுக்கு அடுத்து நல்லசிவத்துடன் உறவு வைக்கும் முக்கியப் பாத்திரம் அவன் காதலி – அதாவது முதலாளியின் மகள். “தொழிலாளர்களுக்கெதிராக முதலாளி (காதலியின் அப்பா) செய்யும் சதியை அவளை வைத்து வேவு பார்க்கலாம்” என்று ஒரு தொழிற்சங்கத் தோழர் கூறியவுடனே அதை நிராகரிக்கிறான் நல்லசிவம். இதற்கு அவன் கூறும் காரணம்: தன் காதலி நேர்மையானவள்; இரண்டாவது காரணம்: இது நேர்மையற்ற வழிமுறை.
“தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை முதலாளி வர்க்கம் கூறிக் கொள்ளும் அறநெறிகளின்படி நடத்த வேண்டும்” என்று இலக்கணம் வகுக்கும் நபரைக் கடந்த காலத்தில் தேடினால் காந்தியிடம் பார்க்கலாம்; நிகழ்காலத்தில் அந்த தார்மீக ஆவேசத்தை சோம்நாத் சட்டர்ஜியிடம் பார்க்கலாம்.
‘புனிதமான’ அரசியல் சட்டத்தின் மீதும் அது எழுந்தருளியுள்ள பாராளுமன்றக் கருவறையின் மீதும் சங்க பரிவாரத்தினர் காலைத் தூக்கி அலட்சியமாக ஒன்னுக்கடிக்கும்போது, சாட்டர்ஜியின் முகத்தில் ஒளிரும் தார்மீக ஆவேசத்தையும், வாஜ்பாயிடம் நீதி கேட்கும்போது துடிக்கும் அவருடைய உதடுகளையும் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது.
பாத்திரங்களை மிக நுட்பமாக ஆய்வு செய்து தனது நடிப்புக்கு மெருகேற்றிக் கொள்ளும் கமலஹாசன் இந்தக் காட்சியைப் படமாக்குமுன் சிறிது நேரம் தூர்தர்சன் நேரடி ஒளிபரப்பை பார்த்திருந்தால் காட்சி வேறுவிதமாக மாறியிருக்கும். இப்படியொரு அறம் வழுவிய யோசனையைச் சொன்ன தோழரை ஓங்கி ஒரு அறை விட்டிருப்பான் நல்லசிவம்!
இதில் வேடிக்கை என்னவென்றால், முதலாளியின் வரவேற்பரையில் ஒவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் ‘அறவுணர்வு’ தடுக்கவில்லை. “கலை விலை போகலாம்; கலைஞந்தான் விலை போகக் கூடாது” என்று அவன் சார்பாக அவனுடைய காதலி தத்துவ விளக்கம் தந்து விடுகிறாள்.
மேலும் சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ.910-ஐயும் நல்லசிவன் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்தில் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவதுபோல!
மார்க்சிஸ்டு கட்சியின் அரசியலும் அவர்களது அழகியல் ரசனையும் துல்லியமாக ஒன்றுபடும் ஒரு காட்சியும் படத்திலிருக்கிறது. கமலஹாசனைக் கொலை செய்ய முதலாளி அனுப்பும் கூலிப்பட்டாளத்தைத் தன்னந்தனியே நின்று சமாளிக்கிறார் ஹீரோ. நகைச்சுவை நடிகர்களைப் போல தோழர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பிறகு சண்டையே நகைச்சுவை போல மாறுகிறது; “இந்த உதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று முழக்கமிட்டபடியே கமலஹாசனுக்குப் பின்னே அணிவகுக்கிறார்கள் தோழர்கள்.
“இந்தப் படை போதுமா…” என்று தி.மு.க., அ.தி.மு.க.வின் பின்னே மார்க்சிஸ்டுகள் கோஷம் போட்டுச் சென்ற காட்சிகளையும், சிரிக்கும் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம் எனத் தொழிலாளி வர்க்கத்துக்கு அவர்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கும் போராட்ட முறைகளையும் மனதில் ஓட விடுங்கள். அந்த அரசியல் இந்தக் காட்சியின் அழகியலுக்குக் கனக்கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.
படத்தில் பரிதாபத்துக்குரியவர்களாக வந்துபோகும் பாத்திரங்கள் இரண்டு. முதலாவதாக, பிரளயனின் வீதி நாடகக்குழு. சகலகலா வல்லவனான ஹீரோவுக்கு அவர்கள் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக, நாசர். வாய்க்கு வாய் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்லிக் கொண்டே வில்லன் வேலை செய்யும் M.R.ராதா வகைப்பட்ட பாத்திரம் அவருக்கு. கமலஹாசன் கூறுகின்ற உலகமயமாக்க சகாப்தத்தின் வகை மாதிரி இவரல்ல. அது யார் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டோம்.
பேச்சில் கடவுளும், செயலில் கயமையுமான கதாபாத்திரங்களை அண்ணாத்துரை காலத்துச் சினிமாக்களே போதிய அளவு சித்தரித்து விட்டன. “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று கூறும் இந்த முதலாளிதான் “ஜெய் சீயாராம்” என்று அலறும் இந்துத்துவச் சக்திகளின் வகை மாதிரி என்று கருதிக் கொண்டு சிலர் புளகாங்கிதம் அடையளாம். குஜராத் படுகொலைக்கு ‘பைனான்ஸ் பண்ணியவர்கள்’ N.R.I.யுப்பிகள் என்ற உலகறிந்த உண்மையை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
இந்த சூட்சமம் புரிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட இல.கணேசன் படத்தைப் பாராட்டி விட்டார். நாசர் பாத்திரத்தைக் காட்டி “உங்களுக்குக் கோபம் வரவில்லையா?” என்று அவரிடம் கேட்டால் “நான் அவனில்லை” என்று பதில் சொல்லிவிடுவார்.
இத்தகைய தொலைநோக்கில்லாத ஓட்டைவாயான இராம.கோபாலன் படத்தை எதிர்க்கிறார். “யார் யார் சிவம்” என்ற பாடல் காட்சியில் கன்னிகாஸ்திரி சிலுவை போடுவது மட்டும்தான் அவரை அலைகழித்திருக்கும்.
இல.கணேசனைக் கேட்டிருந்தால் “கிறிஸ்தவர்கள் சேவை செய்வதை நாங்கள் மறுக்கவில்லையே. அதை வைத்து மதமாற்றம் செய்வதைத்தானே கண்டிக்கிறோம்” என்று மிகச் சுலபமாக இந்தக் காட்சிக்குள் நுழைந்து வெளியே வந்திருப்பார்.
“மோசமான ஒரு முதலாளியை இந்து ஆன்மீகவாதியைச் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின் மதவுணர்வைப் புண்படுத்தி விட்டீர்கள்” என்று கமலஹாசனைக் குற்றம் சாட்டிப் பாருங்கள். “நானே ஆன்மீகவாதிதான், நான் தான் கடவுள்” என்று கண் சிமிட்டுவார் நல்லசிவம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ‘இந்து மதவெறி’ என்று பெயர் சொல்லிக் கண்டிக்காமல் “கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு?” என்று நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்கள் மார்க்சிஸ்டுகள். “எங்கள் இந்துமத உணர்வைப் புண்படுத்தி விட்டீர்கள்” என்று குற்றம் சாட்ட முடியாமல் தவித்தார்களே R.S.S.காரர்கள்! அதே உத்திதான்!
படத்தில் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா என்று நல்ல சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் வருத்தப்பட்டால் அவர்களுக்குக் கூறிக் கொள்கிறோம்: “ஐயா, படத்தையே பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனை துல்லியமாக யாரும் வழங்கியதில்லை. ஒருவேளை C.I.T.U.வின் அறிவிப்புப் பலகையைக் காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்ற உண்மை காட்சிக்கு காட்சி பொருத்தமான கலையம்சத்துடன் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்.
– மருதையன்
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2003
Our conscience is developed based on our experience. Definitely, our experiences are not complete and so our conscience is not something perfect. – Einstein.
ஒரு உயிருள்ள பெண்ணை கைகால்களைக் கட்டி கதறக்கதற கணவனோடு தீயில் போட்டுத் தீவைத்து எரித்து அதை குடும்பத்தார் எல்லாரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து சாந்தி அடைந்த மனசாட்சி நம் தேசத்தின் மனசாட்சி.
மனசாட்சி என்பது களிமண் போல தட்டித் தட்டி உருக்கொடுக்கப் படுவது தான். பகுத்தறிவுக்குக் கீழானதுதான் மனசாட்சி.
இந்தக் காரணத்தை உணர்ந்துதான், (பகவான் ஸ்ரீ) கிருஷ்ணன் முதல் விவேகானந்தர், காந்தி வரை, சொல்கிறார்கள்: “பகுத்தறிவுக்கு எல்லை உண்டு அதை மீறிய விஷயங்களில் உள்ளுணர்வு, அதாவது நாங்கள் உருவாக்கி விட்டிருக்கும் மனசாட்சி சொல்கிறபடி கேள்! அதுதான் தெய்வத்தின் குரல்!”
எல்லோரும் மனச்சாட்சிபடி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கை… எனும் வரிகள் மிகச் சரியானவை.
“கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவை விட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன் “ என்று காந்தி சொல்வதும், “பகுத்தறிவே நான் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் சிறந்த ஆயுதம் ஆனால் அதற்கு எல்லை உண்டு.” என்று கிருஷ்ணன் சொல்வதற்கும் வேறுபாடில்லை. காந்தி ஆன்மீகத்தில் விளைந்த உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்.
– ஜெகன்