Sunday, March 7, 2021
முகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !

சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !

-

சத்தியபாமா பல்கலைக் கழகத் தொழிலாளிகள் போனஸ் வழக்கு உயர்நீதிமன்ற தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வெற்றி !

சென்னை செம்மஞ்சேரி OMR சாலையில் இயங்கிவரும் ஜேப்பியாருக்குச் JPR சொந்தமான சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் மாணவ – மாணவிகளை ஏற்றிவரும் வாகன ஓட்டுநர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் மற்ற பல்கலைக்கழக ஊழியர்கள் என அனைவரையும் நிர்வாகம் கொத்தடிமைகளாக நடத்தி வந்தது. இவர்களுக்கு தொழிலாளர் தகுதிகள் ஏதுமின்றியும், உரிமைகள், தற்காலிக விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு என எதுவும் முறைப்படி வெளிப்படையாக அறிவிக்காமல் நடத்தியது நிர்வாகம். தனக்கு ஏற்படும் தற்செயல் பிரச்சினைகளுக்குக் கூட விடுப்பு எடுக்க இயலாமல் இதுபற்றி கேட்கவும் முடியாமல், கேட்பாரற்ற நிலையில் இந்தத் தொழிலாளிகள் இருந்தனர்.

கல்வி கொள்ளையன் ஜேப்பியார்
கல்வி கொள்ளையன் ஜேப்பியார்

இந்த கொத்தடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு தொழிற்சங்கத்தைத் தொடங்க முடிவு செய்தார்கள் தொழிலாளிகள். இதற்காக 2006 இல் பெருங்குடி வட்டார CITU தொழிற்சங்கத்தை அணுகி கேட்டபோது, அவர்கள் உங்கள் நிர்வாகம் தொழிற்சாலை நடத்தவில்லை, கல்வித் தொழில் செய்கிறார்கள். அது சேவைக்குரிய தொழில் என்பதால் அங்கு தொழிற்சங்கம் கட்ட முடியாது என அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். இப்போது CITU-வும் சில கல்வி நிறுவனங்களில் தொழிற்சங்கம் கட்டிச் செயல்படுகின்றனர்.

இதை ஏற்க மறுத்தத் தொழிலாளிகள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிடம் வந்தனர். இவர்கள் பிரச்சினையைக் கேட்டு சங்கம் சேரலாம் என உணர்வூட்டி உறுப்பினராக்கியது புஜதொமு. பிறகு, புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம் என பதிவு எண் 3103/CNI என்ற சங்கத்தைப் பதிவு செய்து இதன் மூலம் நிர்வாகத்திற்கு கோரிக்கைகளைக் கொடுத்தது.

இதனால் கொதிப்படைந்த சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சேர்மன் திரு. ஜேப்பியார் அவர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியனை தடாலடியாக வேலைநீக்கம் செய்து தொழிலாளர்களை பணியவைத்து தொழிற்சங்கத்தை கலைக்க முற்பட்டார். இருந்தும் மற்ற நிர்வாகிகள் மூலம் சங்கம் உறுதியாக நின்றதால் அடுத்த கட்டமாக ஆத்திரம் கொண்டு சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னணியாளர்கள் என 20 தொழிலாளிகளை தொடர்ந்து சட்டவிரோத வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். இதன் பேரில் தொழிலாளர் ஆணையத்தில் தாவா எழுப்பியதும் முன்னுக்குப் பின் முரணாக அனைவர் மீதும் கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு புகார்களை ஜோடித்து, உள்துறை விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார்கள். தொழிலாளர்களை சங்கமாக்க வேண்டாமென்று பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த ஜேப்பியார் அவர்கள் சுயநிதி கல்லூரி முதலாளிகளின் சங்க செயலாளராக இருந்தார். இப்பொழுது அவரது சகபாடியான RMK & RMD கல்விக் குழும முதலாளி திரு. R.முனிரத்தினம் என்பவர் செயலாளராக செயல்படுகிறார். இவரது கல்லூரிகளிலும் தொழிலாளர் மீதான அனைத்து அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

உள்துறை விசாரணை அதிகாரிகள் அனைவரும் தொழிலாளர் நலத்துறையில் ACL, DCL, JCL என்ற பதவிகளில் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு தம்பிதுரை (ACL ஓய்வு). திரு அருணாச்சலம் (ACL ஓய்வு), திரு சந்திரமோகன் (JCL ஓய்வு), திரு ரவீந்திரன் (JCL ஓய்வு) ஆகியோர் ஆவர். இந்த தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் மூலம் தொழிலாளிகள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்து வேலைநீக்கம் சரியென உறுதி செய்தார்கள். தொழிலாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் இந்த மேற்படி அதிகாரிகளின் ஆலோசனைப்படியே ஜோடிக்கப்பட்டவை. தாங்கள் ஜோடித்தவைகளையே அவர்கள் நிரூபிக்கப்பட்டதாக தீர்வு எழுதினார்கள். இவர்கள் இந்த நிர்வாகம் மட்டுமின்றி இதுபோன்ற சுயநிதி கல்லூரிகள், தொழிற்சாலை முதலாளிகள் என முதலாளிகளுக்கு ஆலோசகர்களாக இருந்து தொழிலாளர்களின் உரிமைப்பறிப்புக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். மேற்கண்ட துரோகிகள் இன்னாள் தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும்படியான தரகு வேலைகள் செய்து வருகின்றனர்.

தொழிலாளிகள் மீது நிரூபித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. இதில் முதல் வழக்கான தோழர் வெற்றிவேல் செழியன் வேலைநீக்கம் தவறானது என தொழிலாளர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் பின் சம்பளத்துடன் பணி வழங்க ஆணையிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலைக்கு எடுத்துக்கொண்ட நிர்வாகம் தோழருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் வெறுமனே மரத்தடியில் உட்கார வைத்தது. அது மட்டுமின்றி மற்ற தொழிலாளர்களுடன் இவர் பேசாமலிருக்குமாறு பார்த்துக்கொள்ள ஒரு கங்காணியாக Transport incharge திரு முகமது கரிமுல்லா என்பவரை நியமித்தது நிர்வாகம். இவர் மூலம் 3 நாட்கள் தொடர்ந்து தகாத வழியில் இம்சிக்கப்பட்டதால் எதிர்த்துக் கேட்ட தோழர் வெற்றிவேல் செழியனை இழிவான வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தினார்கள். பதிலுக்கு இவரும் பேசவே, தள்ளுமுள்ளாகியது.

இதனை வைத்து இந்த கருங்காலியை அடித்துவிட்டதாக போலீசில் புகார் செய்து கிரிமினல் வழக்குப் போடப்பட்டது. இதில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் அப்போதைய செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் திரு சிவக்குமார் என்பவர் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை, தன்னால் இதில் எதுவும் செய்ய இயலாது, எல்லாம் மேலிருந்து நடக்கிறது என அவர்கள் சொல்லும் வேலையையே செய்தார். நமது தோழர்கள், வழக்குரைஞர்கள் என 50 பேர்களுக்கும் மேல் இருந்தும் 10க்கும் மேற்பட்ட உளவுப்பிரிவு  சஃபாரி போட்ட போலீசு கும்பல் மூலம் திடீரென ஒரு காரில் 4 கதவுகளையும் திறந்து வைத்து, ஒரு கடத்தல் கும்பலைப் போல நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ந்து கொண்டு தோழர் வெற்றிவேல்செழியனை கடத்திச் சென்றார்கள். எங்கு கொண்டுச் சென்றார்கள் என்ற விவரம் கூட தெரிவிக்கவில்லை. மாலை 4 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இரவு 10 மணிக்கு இது போன்ற ஏற்பாட்டைச் செய்து உளவுப் பிரிவு போலீசு ஜேப்பியாருக்கான ‘சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி சேவை செய்து’ தோழர் வெற்றிவேல் செழியனை சிறையிலடைத்தது.

சத்தியபாமா பல்கலைகழக வளாகம்
சத்தியபாமா பல்கலைகழக வளாகம்

தோழர் வெற்றிவேல் செழியனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முகம்மது கரிமுல்லாவுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க தனது பணபலத்தால் போலீசு உதவியுடன் முயற்சித்தார்கள். அன்றைய மருத்துவர், அவருக்கு ஒன்றுமில்லை என மருத்துவத்தை முடித்து அனுப்பி வைத்துவிட்டார். இந்த கருங்காலி கரிமுல்லாவை தாம்பரம் சரஸ்வதி தனியார் மருத்துவமனையில் சேர்த்து பிறகு பாதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவ பராமரிப்பில் உள்ளார் என மறைமுகமாக வைத்து ஏமாற்றினார்கள்.

அவர் டிஸ்சார்ஜ் ஆனால்தான் பெயில் கொடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் போலீசு பெயில் கொடுக்காமல் இழுத்தடித்தது. இதனை கண்டுபிடித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் உதவியுடன் தாம்பரம் சரஸ்வதி மருத்துவமனை நிர்வாகத்தை நேரில் அணுகியபோது, அவருக்கு ஒன்றுமில்லை, அவருக்கு பெட் ரெஸ்ட் வேண்டுமென எங்கள் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். மற்றபடி எங்களுக்கு உள் விவகாரங்கள் எதுவும் தெரியாது என்று கூறிய நிர்வாகம் உடனே அவரை அரைமணி நேரத்தில் வெளியேற்றியது மருத்துவமனை நிர்வாகம். இதற்கடுத்த நாள் போலீசின் வேசம் கலைந்து பெயில் கொடுக்கப்பட்டது.

இது போன்ற எல்லா நெருக்கடிகளையும் எமது சங்க உறுப்பினர்கள் உறுதியாக நின்று நிர்வாகத்திடம் தங்களது நியாயமான உரிமைகளுக்காக தொடர்ந்து சட்டபூர்வ வழிகளில் போராடி வந்தனர். இந்தப் போராட்டங்களால் அனைவருக்கும் நிர்வாகம் மூலம் பணிநிரந்தர ஆணை வழங்கப்பட்டது. அடுத்தபடியாக ESI மருத்துவப் பாதுகாப்பிற்கு சேர்க்க நிர்வாகம் மறுத்ததால் ESI நிர்வாகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் மீது நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. தொழிலாளர் தரப்பு நிர்வாகத்தின் தடையாணைக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. இதேபோல் தொழிலாளர் ஆய்வாளர் மூலம் தொழிலாளர்களுக்குரிய ஆவணங்களை பராமரிக்கும்படி தாவா மூலம் செய்யப்பட்டது. இதிலும் நிர்வாகம் பரங்கிமலை நீதிமன்றத்தில் 3 முறை தண்டத் தொகை கட்டியுள்ளது. இருந்தும் இன்னாள் வரை முறையான ஆவணங்களை பராமரிக்காமல் இழுத்தடித்து வருகிறது. போனஸ் கோரி சட்டபூர்வ போராட்டங்கள் நடத்தி அடுத்த கட்டமாக 2014 முதல் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் (tribunal) வழக்காடினார்கள். போனஸ் பெறுவதற்கான தங்கள் நியாயத்தை தமது வழக்குரைஞர்களான திரு பாலன் ஹரிதாஸ், திரு காமாட்சி சுந்தரேசன் மூலம் வாதாடினர். இதன் பேரில் தொழிலாளர் தீர்ப்பாயம் 24.03.2017 இல் இந்த வழக்கில் தொழிலாளர் தர்ப்பு நியாயங்களை ஏற்று போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.

கட்டணக் கல்வி சேவையாகாது. கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிறுவனங்களே கல்வியுடன் உபதொழில்களாக பேருந்து போக்குவரத்து, உணவு விடுதி, தங்கும் விடுதி, சுற்றுலா.. . என அனைத்திற்கும் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் கட்டாய வசூலில் தனியார் பள்ளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நுற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள், பல கோடிகளில் சொத்து வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இந்த கல்வி முதலாளிகள் வளர்ந்து வருவதை இந்த வழக்கின் மூலம் நீதிமன்றத்தில் எடுத்து வைத்ததன் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர் தீர்ப்பாயம் தொழிலாளர்க்கு போனஸ் உரிமை நியாயமானது எனக்  கூறியது.

எமது தொழிற்சங்கத்தை உடைக்க தொழிலாளிகளை தனித்தனியாகப் பேசி நிர்வாகம் கலைக்க முயற்சித்தது. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளை சட்டவிரோத வேலைநீக்கம் செய்து பழிவாங்கியதால் தொழிலாளிகள் அஞ்சுவார்கள் என எண்ணி ஏமாந்தது. அடுத்த கட்டமாக வெல்பர் அசோசியேசன் என்ற ஒரு ஸ்பான்சர் சங்கத்தை உருவாக்கி தொழிலாளர் சங்கம் என கூறி இந்தச் சங்கத்தில் உறுப்பினராகும் தொழிலாளிக்கே வருடந்தோறும் கல்விச் சலுகை கிடைக்கும் எனக் கூறி கட்டாயத்தின் பேரில் ஒரு பகுதி தொழிலாளர்களை பிரித்து அவர்களுக்கு நிர்வாகம் ID கார்டை மஞ்சள் நிறத்தில் வழங்கியது. எமது சங்க தொழிலாளிகளுக்கு ID கார்டை சிவப்பு நிறத்தில் வழங்கி பேதம் பிரித்தது, மஞ்சள் கார்டு தொழிலாளிகளுக்கு சில சொற்ப சலுகைகளை வழங்கிய நிர்வாகம், அவர்களை செல்லப்பிள்ளைகளாக அரவணைத்துப் பேசுவது அவர்கள் கேட்கிற ரூட்டு, விடுப்பு என வழங்கி தங்கள் கைப்பாவையாக வைத்திருக்கின்றனர். இருந்தும் நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கு பலியாகாமலும், தங்களது சுயமரியாதையை இழக்காமலும், சோரம் போகாமலும், தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர், எமது சங்கத் தொழிலாளிகள்.

இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்கள்
இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்கள்

1980-களில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க-வின் முதற்சுற்று கட்சிப் பெரும்புள்ளிகளாக இருந்த திரு ஜே.பங்கராஜ் என்கிற ஜேப்பியார், வேல்ஸ் கல்விக்குழும தலைவர் திரு ஐசரி கணேசன், காரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் இயங்கும் RMK, RMD கல்வி குழுமத் தலைவர் ஆர்.முனிரத்தினம், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக குழுமம் ஏ.சி.சண்முகம் போன்றவர்களால் தனியார் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. அதேபோல் SRM., SRE குழுமத்தின் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், தனலெட்சுமி சீனிவாசன் குழுமம், சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் இவை தவிர்த்து அமிர்தானந்த மாயி, சத்திய யோகி, சங்கராச்சாரி, கிறித்துவ மெஷினரிகள், முசுலீம் ட்ரஸ்ட்கள் என பலரும் இந்தத் தொழிலில் கோடிகளில் லாபமீட்டும் கார்ப்பரேட் பணக்காரர்களாக பல்கிப் பெருகி கல்விக் கொள்ளையர்களாக இருந்து வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட தனியார் கல்வி, தொழிற்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

இவர்கள் கல்வி வியாபாரத்தில் கொழுத்த பணக்காரர்களாக இருந்து கொண்டு இதில் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வித உரிமையுமற்ற கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். இதற்கான நியாயத்தை தொழிற்சங்கம் மூலம் கேட்டபோது, இவர்கள் கல்வி சேவை செய்வதாகக் கூறுகிறார்கள். இதற்கு தொழிலாளர்களை தங்கள் வாழ்க்கையையும் உரிமைகளையும் இழந்து சேவையாற்ற கோரி நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள்.

ஜேப்பியாரின் குழுமம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சேவை என்ற பேரில் அனைத்து கல்வி முதலாளிகளும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்களை உரிமைகளற்ற கொத்தடிமைகளாகவே இந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள், IT கம்பெனிகளில் பேருந்து ஓட்டுநர்களாக பணிபுரியும் சுமார் 1 லட்சம் தொழிலாளிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்குச் சென்று பேருந்திலேயே படுத்திருந்து அந்த வாரம் முழுவதும் பேருந்துள்ளேயே தனது வாழ்க்கையை நடத்தி சனிக்கிழமை இரவு வீடு சென்று மீண்டு ஞாயிறு மதியம் தனது பேருந்துக்கே வந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே வாழ்ந்து பராமரித்து கொத்தடிமைகளாக வாழும் இவர்கள் தமது குடும்பம், பிள்ளைகளை வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பார்த்து வர முடிகிறது. மற்ற 6 நாட்களில் ஒவ்வொரு 24 மணி நேரமும் தொடர்ந்தார்போல் பேருந்தை இயக்குவது, பராமரிப்பது, பாதுகாப்பது என கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பெறும் ஊதியமும் அடிப்படைச் சம்பளத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. செங்கல் சூளைகளில், விவசாயப் பண்ணைகளில் கொத்தடிமைகளை மீட்பதாக்க் கூறும் அரசும் தொழிலாளர் நலத்துறையும் இந்த கல்லூரிகள், IT நிறுவனங்களில் படித்து ஒரு தொழிலை செய்யும் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள வாகன ஓட்டுநகர்களைப் பற்றி இன்றுவரை பேச மறுத்து வருகிறது.

இவ்வாறே கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ESI சட்டத்தின் கீழ் மருத்துவ பாதுகாப்பு கொடுக்க முடியாது என அடாவடியாக மறுத்து வருகின்றனர். ESI நிர்வாகம் இந்த நிறுவனங்களை ESI சட்டப்படி சேரக்கேட்டதின்பேரில் 400-க்கும் மேற்பட்ட கல்வி முதலாளிகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி மறுத்து வருகின்றனர். ESI நிர்வாகம் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கல்வி நிறுவனங்களுடனும் வழக்கு நடந்து வருகிறது.

சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு எதிராக ESI கட்டக்கோரி புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றம் டெனிஷியன்கள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றனர். இந்த ஒரு வழக்கு மட்டுமே தொழிற்சங்கம் மூலம் ESI இல் தொழிலாளர்களுக்காக நடந்து வருகின்றது. மற்றவை அனைத்தும் ESI நிர்வாகத்திற்கும் கல்வி நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே நடைபெற்று வருகிறது.

கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் தகுதி, உரிமைகள், போனஸ், ESI. சம்பளத்துடன் கூடிய விடுப்பு என அனைத்திற்கும் நமது சங்கம்தான் உரிமை கோரி வந்தது. இந்த தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க தொழிற்சங்கம் கட்டியதும் நாம்தான். இதன் முதல் வெற்றியாக போனஸ் வழக்கு தீர்ப்பைப் பெற்றுள்ளோம். 80-களுக்குப் பிறகு உருவான தனியார் வேலைவாய்ப்பில் லட்சக்கணக்கான தொழிலாளிகள் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் உரிமைகளற்ற நிலையில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு அரசே நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்திற்கும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. இவர்களின் உரிமை நசுக்கப்படுவதை முறியடிக்க வேண்டும். அவர்கள் தொழிலாளிகள்தான் என்ற வரையறையில் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

இந்த போனஸ் தீர்ப்பிற்கு எதிராக கல்வி முதலாளிகள் செயல்படுவதை நிறுத்த, தொழிலாளிகள் போனஸ் பெற, அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க என அனைத்திற்கும் தொழிலாளிகள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்த புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவல் விடுகிறது.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
இணைப்பு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சத்தியபாமா பல்கலைக் கழகக் கிளை

***

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கத்தின் சுற்றறிக்கை

ன்பார்ந்த தொழிலாளர்களே நமது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நாம் தொழிலாளர்களாக அங்கிகாரம் பெறவும் பணிநிரந்தரம், தற்காலிக விடுப்பு முறையான வார விடுமுறை, மருத்துவ பாதுகாப்பு (EST) போனஸ், தொழிலாளர் என்பதற்கான ஆவணங்கள் (ரெக்காட்ஸ்) பராமரிப்பது, நமக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் ரசீது பெறுவது போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமை அனைத்தும் நாம் புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னிஸியன்கள் சங்கம் என்ற சங்கத்தை துவங்கி கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் பெற்று வருகிறோம்.

இதற்காக 20-க்கும் மேற்ப்பட்ட முன்னணி தொழிலாளர்கள் வேலையை இழந்தும் போராடி வருவது தாங்கள் அறிந்ததே இந்த ஒற்றுமையை கலைக்க நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் செய்து சத்யபாமா பல்கலைகழகம் டிரைவர்ஸ் மற்றும் டெக்னிஸியன்ஸ் வெல்பர் அசோசியேசன் என்ற சங்கத்தை உருவாக்கி ஒரு பகுதி தொழிலாளர்களை பிரிவினை முலம் எதிராக வைத்துள்ளது. தொழிற்சங்க சட்டத்தின் படி தொழிலாளர் சங்கமாக சத்யபாமா பல்கலைகழகம் டிரைவர்ஸ் மற்றும் டெக்னிஸியன்ஸ் வெல்பர் அசோசியேசன் அங்கிகாரம் பெற முடியாது. இதனை தொழிலாளர்கள் புரிந்து கொண்டு நமது உரிமைகளை காக்க தொடர்ந்து போராடி வரும் புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுகொள்கிறோம்.

போனஸ் வழக்கில் வெற்றி பெற்று உள்ளோம் (ESI) வழக்கில் வெற்றி பெற போகிறோம். நமது நிர்வாக தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கி வரும் 400-க்கு மேற்ப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களை தொழிலாளர் உரிமை பெறும் தகுதிக்கு உருவாக்கும் வரலாற்று கடமை நமது சங்கம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வழிகாட்டுதலில் நடந்து வருகிறது என்பதை உணர்ந்து நமது தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சங்கமாக சேர்ந்து நமது உரிமையை நிலை நாட்ட வருமாறு அறைகூவல் விடுகிறோம்.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க