Monday, March 1, 2021
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?

நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?

-

“காசுக்கேற்ற தோசை”தான் வர்க்கத்திற்கேற்ற வாழ்க்கைதான். அதே நேரம் தமது வருமானம் குறைவாக இருந்தாலும் சுற்றி நடக்கும் வாழ்க்கை குறித்த ஏக்கத்தால் இளைப்போரும் இங்கே சகஜம். இத்தகைய நுகர்வு பண்பாடு அலை மோதும் சென்னை தி.நகரில் அனைத்துப் பிரிவு மக்களையும் காணலாம். வாங்கும் சம்பளத்தின் அளவுக்கேற்ப செலவழிக்க வரும் மக்கள் ஒரு பக்கம். வண்ண வண்ண பொருட்கள் நிறைந்த உலகை கண்டு மகிழ மட்டும் வரும் கூட்டம் இன்னொரு பக்கம். இவர்களுக்கிடையில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு நாள் சாப்பாட்டுக்காகவாவது இன்றைய வியாபாரம் வழிவகுக்குமா என்ற தவிப்பில் வியாபாரிகள் இருக்கிறார்கள். இப்படி இந்த மக்களில் சிலரை சந்தித்தோம். அவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழ் மக்கள், உள்ளூர், வெளியூரிலிருந்து வந்த மக்கள், சிறு வணிகர்கள், அனைவரும் உண்டு. பொதுவில் உரையாடினாலும் அவர்களிடம் உங்களின் பொழுது போக்கு என்ன என்று கேட்டோம்.

லெட்சுமி, வயது 50, குமரன் சில்க்ஸ் வாசலில் தள்ளு வண்டி கர்ச்சிப் கடை.

ங்க வர்றவங்கள பாக்குறதுதான் பொழுதுபோக்கு. வியாபாரத்துக்காக பொருள் வாங்க பாரிஸ் போவேன் அதுதான் ஷாப்பிங்கு. 40 வருசமா இந்த குமரன் சில்க் வாசல்லதான் கடை வச்சிருக்கோம். ஒரு மாடியா இருந்த கடை இன்னைக்கி நாலு மாடியா ஆச்சு. ஆனா எங்களுக்கு அதே கடை வாசல்ல பூ, பழம், கர்ச்சிப்புன்னு வியாபாரம் தான் மாறுதே தவிற பொழப்பு அப்படியேதான் இருக்கு.”

முன்னெல்லாம் இது போல பெரிய கடைகள்ள நாங்க வச்சுருக்க மாதிரியான சின்ன பொருளெல்லாம் இருக்காது. இப்ப பாருங்க வளச்சுப் பிடிச்சு கட்டடத்தக் கட்டி குண்டுசீல இருந்து கொழுந்து வெத்தல வரைக்கும் எல்லாத்தையும் கடைக்குள்ள வச்சுருக்கான்.  எங்களப் போல சின்ன கடைக்காரங்களுக்கு வியாவாரமெல்லாம் கெட்டுப்போச்சு. இப்ப நாலு மாசமா செல்லாத நோட்டு பிரச்சினையால இருக்குற வியாவாரமும் குறைஞ்சு போச்சு ”

தரணி, வயது 43 சீசன் பழ வியாபாரி.

னக்கு 43 வயசாகுது இந்த தி.நகர விட்டா வேற எடம் தெரியாது. காலையில8 மணிக்கு வந்தா ராத்திரி 10 மணிக்கு வீட்டுக்கு போவேன். மாசம் ஒருக்க சனக்கூட்டம் கொஞ்சம் கொறையிர நேரமா பாத்து அரமணி நேரத்துல சரவாணாவுல போயி மளிக சாமான் வாங்யாருவேன். அதுவுமே பக்கத்துல யாவாரம் பாக்கறவங்கக் கிட்ட பாத்துக்க சொல்லிட்டு போவேன். இதுல நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு?”

கற்பகம், வயது 50 வீட்டிலேயே தையல் தொழில் செய்பவர்.

னக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டும் இஞ்சினியரிங் படிக்குது. எங்கூட்டுக்காரரு காலையில 8 மணிக்கி வேலைக்கி போனா ராத்திரி 10 மணிக்கு மேல ஆயிரும் வீடு திரும்ப. வீட்டு வேலைய முடிச்சுட்டு தையல் மிஷின்ல உக்காந்தேன்னா பிள்ளைங்க வந்ததும்தான் எழுந்திருப்பேன். அதுங்களுக்கு பீசு கட்டி துணிமனி வாங்கி கொடுத்து வீட்டு வாடகை கொடுக்கவே நாக்கு தள்ளுது இதுல பொழுதுபோக்க ஏது நேரம். வீட்டு பிரச்சனையை சமாளிக்கறதுதான் பொழுதுபோக்கு வாழ்க்கை எல்லாம். நான் டைலருங்கிறதால என் தொழிலுக்கு தேவையான லைன் கிளாத், லேஸ், பார்டரு. புடவை ஃபால்ஸ் மாதிரி ஐட்டங்களை இங்க சரவணா ஸ்டோருலு வாங்க வருவேன். அப்படி வரும் போது என் பொண்ணையும் கூட்டிட்டு வருவேன். இதுல நமக்கு எங்கம்மா ஷாப்பிங்கு?”

மீனாம்பாள், வயது 60, சவுரி முடி விற்பவர்.

ந்த போத்தீஸ் வாசல்ல நின்னுதான் வித்துட்டு இருக்கேன். வாச்சுமேனுட்ட கேட்டுக்கிட்டு தண்ணி குடிக்க உள்ள போயிருக்கேன். ஆனா  ஒரு தடவ கூட உள்ள போயி எப்புடி இருக்குமுன்னு பாத்தது கூட கெடையாது. இதுல நாம எங்க ஊர் சுத்தி பாக்க போறது. விடியக்காலையில எட்டு மணிக்கு வூட்ட வுட்டு கிளம்புவேன். இங்க வந்துதான் நாஸ்டா துன்னுவேன். ராவுல வீடு திரும்ப 8 மணியாவும். ஒரு நாளைக்கு 200 ரூபா நின்னா ஜாஸ்தி.

முடிதான் அழகுன்னு நீண்ட முடிய விக்கிறீங்களே, நீங்க மட்டும் கிராப் வெச்சிருக்கிங்களே?

அதுவாம்மா, சொந்த வூடு இருந்தா நல்லாருக்கும். 1,500 ரூபா வாடகை குடுக்க முடியல. எதாவது வழி செய்யி ஆண்டவரேன்னு ஒரு தடவ வேளாங்கன்னி போயி முடிய காணிக்கையா கொடுத்துட்டு வந்துருக்கேன். அதான் நான் போன வெளியூரு.”

சண்முகம், சைக்கிளில் டி, காப்பி விற்பவர்.

மக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்குறதுதானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன். தொழில விட்டு வெளிய போறதுன்னா முக்கியமான சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கு தலைய காட்டுறதோட சரி. சினிமா, பீச்சு இப்படி வெளிய போகனுன்னு பிள்ளைங்க கேட்டா வீட்டுல சம்சாரம் கூட்டிட்டு போகும். இதுக்கு மேல உங்க கிட்ட பேசினாக்க என் டீ ஆறிப்போயிடும். வரட்டுமா?”

அர்ஜுன், வயது 30, தனியார் நிறுவன ஊழியர்.

ங்க வாரா வாரம் ஞாயித்துக் கிழம வந்துருவேன். எதுவும் பொருள் வாங்குறேனோ இல்லையோ வர்ரதுல ஒரு சந்தோசம். இங்கேருந்து பாண்டி பஜார் முழுக்க சுத்துவேன். கசகசன்னு சனங்க ஏதோ ஒன்னு வாங்கிட்டு போறதும் வர்ரதும் பாக்க வியப்பா இருக்கும். மதியம் சாப்பாட்ட முடிச்சுட்டு வீட்டுக்கு கெளம்பிருவேன். ஷூன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்க வர ஆரம்பிச்சு மூணு வருசத்துல எழு ஷூ வாங்கிருக்கேன். “

வேலு, வயது 45 ,ஆட்டோ ஓட்டுனர்.

ரெல்லாம் சுத்தி சுத்தி ஆட்டோ ஓட்டுறோம் எங்களுக்கும் கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு. குடும்பத்தோட அப்புடி சந்தோசமா எங்கனாச்சும் போயி வரலான்னு தோனும். ஆனா நேரம் கெடைக்க மாட்டேங்குது. எதுத்தாப்போல இருக்குற நகைக்கடைக்கி லட்ச கணக்குல பணத்த எடுத்துட்டு வந்து பேரமே பேசாம வாங்கிட்டு போறவங்க, ஆட்டோவுல ஏறும் போது பத்துருவா காசுக்கு நியாய தர்மப்படி எல்லாம் பேரம் பேசுவாங்க. டீசல் வெல ஏறிப்போச்சு, டீ வெல ஏறிப்போச்சுன்னு நாம வாதாடனும். இதுக்கு மத்தியில பொழுது போக்கு……. பாக்கலாம்!

கஸ்தூரி, வயது 35, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்.

நாம சும்மா இருந்தாலும் பிள்ளைங்க விடாது அவங்களுக்காக எங்கனா போயி வருவோம். சொல்லிக்கிறா போல பெருசா எந்த எடத்துக்கும் போனதில்ல. எங்க ஊருக்கு பக்கத்துல உள்ள எடங்களுக்கு கூட்டிட்டு போயிருக்கோம். நாங்க சென்னைக்கி ஒரு வேலையா பத்துப் பேரு வந்தோம். எங்கயுமே போகல சரி தி.நகராச்சும் போகலாம்ன்னு வந்தோம். ஈரோட்ட விட ஒரு மடங்கு விலை அதிகமா இருக்கு. வெளியூரு வந்தா எதுவும் வாங்கிட்டு போகனுமேன்னு கொஞ்சம் வாங்கினோம்.”

பானு, வயது 27, கணவருடன் வந்திருந்தார், ஸ்ரீபெரும்புதூர்.

பொழுது போக்குன்னு ஒன்னும் கெடையாது. ரெண்டு பேருமே ஒர்க் பன்றோம். ஆபீசுக்கு போட்டுட்டு போறதுக்கு துணிங்க எடுக்க மாசத்துக்கு ஒருக்க இங்க வருவோம். ரொம்ப விலையுள்ளத எடுக்க மாட்டோம். ஆயிரம்,ரெண்டாயிரம் செலவு செய்வோம். ஃபோட்டோல்லாம் எடுக்காதீங்க. நெட்ல போட்டு அசிங்கபடுத்துராங்க, பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நடிகை பாவனாவ என்ன செஞ்சுருக்கானுங்க பாத்தீங்களா? ஆக்சுவலா நீங்க யாரு? எங்கெருந்து வாரீங்க? என்ன பத்திரிக்கை?”

நாங்க வினவுங்குற இணைய பத்திரிக்கையில இருந்து வருகிறோம்..

“வினவா, தெரியுமே எனக்கு. ஒரு புத்தகம் பத்தி இணையத்துல தேடும் போது வினவு சைட்ட பாத்தேன். அதுலேருந்து தொடர்ந்து படிக்கிறேன். பரவால்ல பெண்கள் பிரச்சனையெல்லாம் எடுத்து பேசறீங்க. மீடியான்னதும் பயந்து போயிட்டேன். இப்ப நீங்கன்றதுன்னால எனக்கு பயமில்லை. ஃபோட்டோ எடுக்குறதுன்னா எடுத்துக்குங்க.”

ராதாகிருஷ்ணன், வயது 55, இலங்கையைச் சேர்ந்த கோயில் குருக்கள்.

னகல் பார்க் பக்கத்தில் மெகந்தி வைக்கும் வடமாநில தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களிடம் மெகந்தி வைத்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரைப் பார்த்தோம்.

“ பொழுது போக்கு…… வேலையே சரியா இருக்கும். நான் இலங்கையில குருக்களா இருக்கேன். வீட்டு விசேசம், பூசை, கோயில் திருவிழா எல்லா எடத்துலயும் வேலை செய்வேன். வருசத்துக்கு இரண்டு தடவை வெளிநாடுகளுக்கு போவேன்.  இத்தாலி, ஆஸ்த்ரேலியா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின் இன்னும் பல நாடு போயிருக்கேன்.  இங்க  மெகந்தி போட்றத பாத்ததும் எம்பொண்ணு ஆசப்பட்டுச்சு.

பல நாடு போற அளவுக்கு உங்க வேலையில வருமானம் இருக்கா?

இல்லன்னு சொல்ல முடியாது. சீசனுக்கு தகுந்தாப் போல ஓரளவு வருமானம் வரும். வெளிநாடுகள்ள இருக்கும் நம் பிள்ளைகளும் குடுத்து உதவாங்க. ஆண்டவன் புண்ணியத்துல சிரமம் எதுவும் கிடையாது.”

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க