கடந்த பத்து ஆண்டுகளாகக் காவிரியில் வஞ்சிக்கப்பட்டும், பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டும், வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி என்ன செய்யப் போகிறோம்?” என்ற பிரச்சார சுவரொட்டிகளைப் கீழத்தஞ்சை பட்டிதொட்டி எங்கும் காண முடியும். மக்கள் அதிகாரத்தின் இந்தச் சுவரொட்டி வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதலையும், அதிகார வர்க்கத்திற்கு எரிச்சலையும் உருவாக்கியுள்ளது.
கீழத்தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பு பாதிக்கப்பட்ட, விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த ஜனவரி 29 அன்று திருத்துறைப்பூண்டி, தெற்குவீதியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேருந்து பிரச்சாரம் மற்றும் குடியிருப்புகளில் மக்களைச் சந்திப்பது மூலம் பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணிதிரட்டி வந்தனர்
சட்டஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி 29-01-2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மீண்டும் 25-02-2017 அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டு, பேச்சுவார்த்தைக்குப் பிறகு 26-02-2017 அன்று பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று திருத்துறைப்பபூண்டி காவல்துறை ஆய்வாளர் வாய்வழி உறுதிஅளித்தார்.
பொதுகூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் 25-02-2017 அன்று நள்ளிரவில் கடிதத்தை கொடுத்து திடீர் தடை விதித்தது காவல்துறை. மக்கள் அதிகாரம் திருவாரூர் அமைப்பாளர் முரளி, திருத்துறைப்பூண்டி தோழர் செல்வம் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பொதுக்கூட்ட விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு 27-03-2017 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கழிப்பறை காகிதமாகவே கருதினார் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன்.
தற்போது டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி வாசகம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும், சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்றும் பொதுக்கூட்டத்திற்குத் தொடர்பற்ற காரணங்களைக் கூறி 15-04-2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது.
தடையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய முரளி, முருகானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து காவல் வைப்பு (ரிமாண்ட்) கோரியது காவல்துறை. திருவாரூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி காவல்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தும் கண்டனத்தைப் பதிவு செய்தும் தோழர்களை விடுவித்துள்ளார்.
மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், வறட்சி பாதிப்பு, நூறுநாள் வேலை கூலி மறுப்பு, டாஸ்மாக் எதிர்ப்பு என்று மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான். என்றாலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் கிரிமினல் குற்றவாளி சசிகலா கும்பலின் விசுவாசி என்பதால் உச்சத்திற்கே சென்று கூவுகிறார் என்பதே உண்மை.
எந்த மக்கள் போராட்டக் கூட்டு நடவடிக்கையாக இருந்தாலும், மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளதா? இருந்தால் அனுமதி கிடையாது என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கிறார் மயில்வாகனன். மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அரங்குகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று அரங்க உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
இதனைக் கண்டித்து 15-04-2017 அன்று தஞ்சை ரெட்கிராஸ் அரங்கில் பத்திரிகையாளர் சந்திப்பு மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காளியப்பன் பங்கேற்று திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் சட்ட விரோத, ஜனநாயக விரோத மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார். பொதுக்கூட்டத்திற்குத் தடைவிதித்த அன்றே தடையை அம்பலப்படுத்தி பேருந்து பிரச்சாரம், குடியிருப்பு பிரச்சாரம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் சுறுசுறுப்பாகி விட்டனர்.
அடக்குமுறைகளைக் கண்டு மக்கள் அதிகாரம் அஞ்சப்போவது இல்லை. திரளான மக்களுடன் திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதை மக்கள் அதிகாரம் தொண்டர்களின் உழைப்பும், உணர்வும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
-வினவு செய்தியாளர்