Sunday, February 28, 2021
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

-

டந்த ஏப்ரல் முதல் நாளிலிருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்துவதைப் போல பாவ்லா காட்டிவிட்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தீர்ப்பும்கூட, நகரங்கள் எனில் நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் சாராயக் கடைகளை நடத்தலாம் என்றும், 20,000 பேருக்குக் குறைவான மக்கள் தொகை உள்ள கிராமப்புற – சிறுநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலையிலிருந்து 220 மீட்டருக்கு அப்பால் சாராயக் கடையை நடத்தலாம் என்றும் நீர்த்துப்போன வகையில்தான் உள்ளது.

பொள்ளாச்சியில், மூடப்பட்ட சாராயக் கடையைப் புதிதாகக் கட்டிடம் கட்டித் திறக்க முயற்சிப்பதைத் தடுக்கும் பொதுமக்கள்.
பொள்ளாச்சியில், மூடப்பட்ட சாராயக் கடையைப் புதிதாகக் கட்டிடம் கட்டித் திறக்க முயற்சிப்பதைத் தடுக்கும் பொதுமக்கள்.

தொளதொளப்பான இந்த உத்தரவையும்கூட செல்லாக்காசாகிவிட்டது தமிழக அரசு. விளக்குகளை அணைத்துவிட்டு பழைய டாஸ்மாக் கடைகளில் வியாபாரத்தை நடத்துவதோடு, அருகிலேயே புதிய கடைகளைத் திறந்தும், கிராமங்களில் அவரசமாகப் புதியக் கடைகளைக் கட்டியும் வருகிறது. இவற்றுக்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்மார்கள் துடப்பத்துடனும் செருப்புகளுடனும் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளன. போராடும் மக்களை மிருகத்தனமாகத் தாக்கி சாராய முதலாளிகளின் அடியாள் படையாக வெறியாட்டம் போடுகிறது தமிழக போலீசு.

இதர மாநிலங்களில் சாராயக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் போராட்டங்கள் தொடர்வதற்குக் காரணமே, தமிழகத்தில் டாஸ்மாக் என்பது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதுதான். கடலூர் மாவட்டம், கச்சிராயநத்தம் கிராமத்திலுள்ள 450 குடும்பங்களில் 105 பெண்கள் தங்கள் கணவரை டாஸ்மாக்கினால் இழந்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் சாராயம் குடிப்பதும்,  சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் பெருகுவதுமாக தமிழகமே மிகப் பெரிய சாராய சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

நேற்றுவரை இச்சீரழிவுக்கு எதிராக அக்கறை கொண்டவர்களைப் போல பேசியவர்கள், தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த வேண்டுமேயன்றி, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களிலுள்ள பார்கள் அனைத்தையும் வேண்டுமென்று உத்தரவிடுவது சரியல்ல என்று இப்போது நாக்கைச் சுழற்றிப் பேசுகிறார்கள். குடிப்பது தனிமனிதனின் உரிமை; அதைத் தடுக்க முடியாது; அதேசமயம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை சட்டப்படி தண்டிக்க வேண்டுமென்கிறார்கள். சாராயக் கடைக்கு வாகனத்தில் வந்து குடிக்கலாம்; ஆனால் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதுதான் குற்றம் எனும் இக்கோமாளித்தனமான சட்டத்தைத்தான் கடுமையாக நடைமுறைப்படுத்தச் சொல்கிறார்கள். இதன்படி வாகனத்தில் வரும் குடிமகனின் வாயை ஊதச் சொல்லி அபராதம் விதிப்பதாக மிரட்டி போலீசார் மாமூல் கறப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் பொதுமக்கள்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் பொதுமக்கள்

ஈராண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் வலுத்த நிலையில், சாராய சீரழிவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சஞ்சீவி குமார் எழுதிய “மெல்ல தமிழன் இனி…’’ என்ற  தொடர் கட்டுரையை தி இந்து தமிழ் நாளேடு வெளியிட்டது.  ஆனால் ஆங்கில தி இந்து நாளேடானது, தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் சுற்றுலாவை நம்பியுள்ள சிறிய மாநிலங்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் தலையங்கமே எழுதுகிறது. ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை விட, இரட்டை நாக்குடன் பேசும் இந்து நாளேட்டின் ஊடக சந்தர்ப்பவாதம் மிகக் கேவலமானதாக இருக்கிறது.

நெடுஞ்சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களின் சாராய பார்களையும் மூடச் சொல்வதால் ஓட்டல் தொழிலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் பல மாநில அரசுகள் நியாயவாதங்களை அடுக்குகின்றன. டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ. 25,000 கோடி ஆண்டு வருவாயில் ரூ.10,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும், சுமார் 10,000 ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் என்று கூச்சநாச்சமின்றி தமிழக அரசு வாதிடுகிறது. சாராய வியாபாரிகள் அரசாங்கத்தை நடத்தினால் எப்படியிருக்கும் என்பதை இந்த அரசுகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

ஆற்றுமணல் அள்ளுவதைத் தடை செய்தால், வீட்டுமனைத் தொழிலும் அதைச் சார்ந்துள்ள இலட்சக்கணக்கோனோருக்கு வேலையிழப்பும் வருவாய் இழப்பும் ஏற்படும் என்று வாதிடுவதைப் போன்ற அயோக்கியத்தனம்தான் இது. அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக் கூடிய லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்த்துவிட்டும், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்துவிட்டும், சாராயக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாதிடுவதே மோசடித்தனமானது.

ஓட்டல் அதிபர்களோ, எங்கள் வாடிக்கையாளர்கள் மேட்டுக்குடியினர், கார்களில் குடிக்க வரும் அவர்கள் தனியாக ஓட்டுநரை வைத்திருப்பதால், அவர்களால் சாலைகளில் விபத்துகள் நடப்பதில்லை என்கிறார்கள். ஆனால் சென்னையில் ஐஸ்வர்யா என்ற மேட்டுக்குடி பெண், எம்.பி.டிஸ்டில்லரிஸ் நிறுவன உரிமையாளர் மகன் ஷாஜி, நாமக்கல் தொழிலதிபர் யுவராஜ் ஆகியோர் போதையில் கார் ஓட்டிச் சென்று நடத்தியுள்ள விபத்தும் பலிகளுமே இந்த அண்டப் புளுகைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

திருப்பூர்-சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கும் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
திருப்பூர்-சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கும் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளால் விபத்துகள் அதிகரித்து வருவதால், இக்கடைகளை அகற்றக் கோரி ஆந்திராவின் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக இருந்த புல்லா ராவும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் 2003-லிருந்தே மைய அரசிடம் பலமுறை மனு கொடுத்து வலியுறுத்தி வந்த பிறகு, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்றுமாறு ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் 2007 அக்டோபரில் மைய அரசு அனுப்பியது.

ஆனால், தமிழகம் உட்பட எந்த மாநிலமும் இக்காகிதச் சுற்றறிக்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  மறுபுறம், நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் காரணமாக நாடெங்கும் விபத்துகள் மேலும் தீவிரமடையத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் சாலை விபத்துகளிலும், உயிரிழப்புகளிலும் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி அரசுச் செயலாளருக்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதிய போதிலும் தமிழக அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த 2012-இல் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

2003 லிருந்து 2013 வரை நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்ற மனு கொடுத்துப் போராடி, அதன் பிறகு மைய அரசு சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் தமிழகம் உள்ளிட்டு எந்த மாநில அரசும் செயல்படுத்தவில்லை. பின்னர் 2013-இல் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டபோதிலும் அதையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

நீதிமன்ற உத்தரவும் தோற்றுப் போன நிலையில்தான், தமிழக மக்கள் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய மாணவர்கள் ஜெ. அரசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். டாஸ்மாக்  எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறையிடப்பட்டனர். மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியவர்கள் மீதும், ம.க.இ.க. பாடகர் கோவன் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

வேலூர் மாவட்டம்-அணைக்கட்டுக்கு அருகேயுள்ள அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பூட்டுப் போட்டு மூடும் பெண்கள்.
வேலூர் மாவட்டம்-அணைக்கட்டுக்கு அருகேயுள்ள அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பூட்டுப் போட்டு மூடும் பெண்கள்.

குமரி மாவட்டம் உண்ணாமலைக் கடை எனும் ஊரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுளாகியும் அக்கடை மூடப்படாததால், முதியவர் சசிபெருமாள் 2015 ஜூலை 31 அன்று அலைபேசி கோபுரத்தின் உச்சி மீது ஏறி அக்கடையை மூடக் கோரி  போராடியபோது உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், ஜெ. அரசு அத்தீர்மானத்தை நெல்லை ஆட்சியரைக் கொண்டு ரத்து செய்தது. பின்னர் இதற்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அக்கடையை மூடாமல், இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெ. அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கையும், நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்றக்கோரி பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மான் சித்து மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகள் அனைத்தும் 2017 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும் என்று கடந்த 2016 டிசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசும் பத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. இவற்றைப்  பரிசீலித்து கடந்த மார்ச் 31 அன்று உச்ச நீதிமன்றம் தற்போதைய இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகள் மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி வழக்கம் போல சாராய வியாபாரத்தைத் தொடர்கின்றனர். காரைத் திருடுகிறவன் நம்பர் பிளேட்டை மாற்றி போர்ஜரி செய்வதற்கும் இந்த அரசுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. தமிழக அரசோ அவசரமாகப் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதோடு, அதற்கெதிராகப் போராடும் மக்கள் மீது அடக்குமுறை வெறியாட்டம் போடுகிறது.

சாராயத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், தனது கீழ்த்தரமான நடவடிக்கைகளால் இவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்கிறதே, இதனை ஒரு அரசு என்று அழைக்கத்தான் முடியுமா? வறட்சியும் விவசாயிகளின் மரணமும் தமிழக அரசுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை மூடவேண்டுமென்ற உத்தரவுதான் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனில் இது ஒரு அரசா?  தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகள் இப்படித்தான் உள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாக்காசாக்க அரசுகள் செய்துவரும் அயோக்கியத்தனமான வழிமுறைகளும், அவை முன்வைக்கும் வாதங்களும் இது ஒரு அரசு என்று சொல்லிக் கொள்வதற்கான தகுதியை இழந்துவிட்டதையே காட்டுகின்றன. மாஃபியா கும்பலுக்கும் அரசுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டதையும், அரசு எனும் அதிகார நிறுவனம் மக்களுக்கு முற்றிலும் எதிரானதாக மாறிவிட்டதையும் துலக்கமாகக் காட்டுகின்றன. நீதிமன்ற உத்தரவுகளால்கூட டாஸ்மாக் கடைகளை மூட முடியாது, இந்த அரசியலமைப்பில் இதற்குத் தீர்வு காணவும் முடியாது என்ற நிலையில், “மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்துடன் போராடி தமிழக மக்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க