privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்படக்கட்டுரை : ஒளிரும் மரகதம் - இருளும் கொலம்பியா !

படக்கட்டுரை : ஒளிரும் மரகதம் – இருளும் கொலம்பியா !

-

கொலம்பியா – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த செழிப்பான  நாடு. வற்றாத ஆறுகளான அமேசானும் ஒரினோக்கோவும் கொலம்பிய மக்களின் உயிராதாரங்கள். இயற்கை வனப்புகளும் வளங்களும் கொள்ளை அழகாய் இருக்கும் கொலம்பியாவில்தான் உலகின் மிகச்சிறந்த மரகத கற்கள் உற்பத்தியாகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு மரகத கற்களுக்கு தாயகம் கொலம்பியா. கண்கொள்ளா அழகுடன் பச்சை நிறத்தில் மின்னும் மரகத கற்களில் சில வகைகள் வைரத்தை விடவும் விலை உயர்ந்தவை. உலகெங்கும் பணக்காரர்களின் விரல்களில் அழகுடன் வீற்றிருக்கும் பச்சை நிற மரகத கல் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியினால் உருவானவை.  உழைப்பை நீக்கிவிட்டால் நிறத்தை தவிர கருங்கல்லிற்கும் மரகத கல்லிற்கும் வேறுபாடு ஏதுமில்லை.

மரகத கற்களை ஏற்றுமதி செய்யும் ஏகபோக உரிமைக்காக ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் 1980-களில் மாஃபியா கும்பல்களுக்கு இடையே நடந்த வன்முறைகளில் சிக்கிக்கொண்டு சிதைந்து போன கொலம்பிய மக்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும். கொலம்பிய அரசின் உதவியுடன் சட்டபூர்வமாகவும் மாபியா கும்பல்களால் சட்டவிரோதமாகவும் நடத்தப்படும் இந்த காட்டு வேட்டையினால் கொலம்பியா நாடு இழந்த இயற்கை வளங்களும் எண்ணி மாளாதவை.

கரிய பாறைகளில் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மரகதத்தின் மின்னும் பச்சை நிறம் வறுமையை அகற்றி தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று பல்லாயிரக்கணக்கான கொலம்பிய மக்கள் அன்று நம்ப வைக்கப்பட்டார்கள். மரகத கல்லைத் தேடி புறப்பட்ட கொலம்பிய மண்ணின் மைந்தர்கள் பேரகொய்ரா(Berraquera) என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அப்படி மரகதம் தேடிய பெரும்பான்மையான கொலம்பிய மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

இன்று அந்த படுபயங்கர பச்சை யுத்தம் இல்லாமல் போய்விடினும் அது தோற்றுவித்த உள்நாட்டு அரசியல் குழப்பங்களாலும் போதை கடத்தல் கும்பல்களாலும் இயற்கை வளங்கள் சூறையாடுவதாலும் கொலம்பியா இரத்தக்களரி ஆகிவிட்டது. ஒட்டுமொத்த கொலம்பிய மக்களுக்கும் சொந்தமான இயற்கையை எதிரிகளிடம் இருந்து மீட்பதற்கான ஒரு போராட்டக்களத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன மரகதத்தின் பச்சை நிறமும் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியும்.

கொலம்பியாவின் மேற்கு பொயகா(Boyaca) மாநிலத்தில்  இருண்டு போன ஒரு சட்டவிரோதமான சுரங்கமொன்றில் மரகத கல்லை தேடுகின்றனர் இரண்டு தொழிலாளர்கள்.
மாரிபியை சேர்ந்த லா பிடா(La Pita) சுரங்கத்தில் தோண்டி எடுத்த செப்பனிடப்படாத ஒரு சிறிய மரகதப் பாறையொன்றை தன் கையில் வைத்திருக்கிறார் ஒரு சுரங்க தொழிலாளி. செதுக்கியப் பின்னர் அளவில் சிறிதாக இருக்கும் அதன் வர்த்தக மதிப்புக் குறைவு.
லா பிடா சுரங்கத்தில் ஜார்ஜ் கூடியெரஸ்(Jorge Gutierrez) வேலை செய்கிறார். அவருடைய பச்சை நிறக் கண்கள் சனந்தர் பகுதியைச் சேர்ந்த மியூசோ(Muzo) பழங்குடியாக அவரை அடையாளம் காட்டுகிறது. அங்கு பெரும்பான்மையானவர்கள் அரிய வகை மியூசோ பூர்வகுடி மக்களைச் சேர்ந்தவர்கள்.
சுரங்கக் கழிவுகள் சுரங்கப்பாதையை ஒட்டியோ அல்லது ஆற்றிலோ கொட்டப்படுகின்றன. இந்த பொதுவான பழக்கவழக்கம் கொலம்பியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களால் தடை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது தான் கடுமையாக்கப்பட்டிருகின்றன
சுரங்க ஆறானது மேற்கு போயகாவை(Boyaca) கடந்து செல்கிறது. பல நிறுவனங்கள் அருகிலுள்ள மலைகளில் மரகத கற்களைத் தோண்டுகின்றன. அங்கு வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளிகளும் பேரகொய்ராக்களும் தாங்கள் முகாம்களை அதற்கருகே அமைத்து கொள்கிறார்கள்.
சுரங்க ஆற்றின் பள்ளத்தாக்கில் சுமார் 40 ஆண்டுகளாக பேரகொய்ராவாக இருக்கிறார் ஜோஸ் இலியாஸ் வல்லேஜோ (Jose Elias Vallejo). மியூசோ சுரங்கங்களுக்காக உருவாக்கப்பட்ட நகர்புறச் சேரிப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத குடியிருப்பான டாடிகபேவில்(Matadecafe) அவர் குடியிருக்கிறார்.
ஜெய்மி வார்கஸ்(Jaime Vargas), ஒரு சுரங்க விபத்தில் தனது இரண்டுக் கால்களையும் இழந்து விட்டார். அதன் பிறகு லூயிஸ் கோமஸ்(Luis Gomez) மற்றும் மர்கஸ் எர்ராடா(Marcos Errada) இருவருடன் சேர்ந்து மரகத கல்லை தேடுவதற்காக தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்.
சுரங்க ஆற்றினை வெறும் கைகளாலும் மண்வெட்டிகளாலும் துழாவி மரகத கல்லைத் தேடும் குழு ஒன்று தோண்டுகிறது. இங்கே முன்புறத்தில் இருக்கும் கார்லோஸ் சாலமன்சா(Carlos Salamanca) அந்தப் பகுதியில் அனுபவம் மிக்கவர்களில் ஒருவர்.
நிலத்தை ஊடுறுவி மரகத கல்லை தேடுவதென்பது முழுவதும் மனித உழைப்பைச் சார்ந்த ஒன்றாகும். கரும்பாறைகளில் ஒளிந்திருக்கும் மரகதப் பச்சையின் ஒளிக்கீற்றை கண்டறியும் திறமை அதற்கு தேவைப்படுகிறது.
பள்ளத்தாக்கில் இன்று இவர்கள் கண்டறியக் கூடிய கற்கள் சிறியது மற்றும் சந்தை மதிப்பும் குறைவு. தங்கள் சகாக்களிடம் ஏற்படும் பொறாமைகளைத் தவிர்க்கப் பொதுவாக கற்களை கண்டறிந்த பின்னர் வாயில் ஒளித்து அதன் ஒளியை மறைக்கிறார்கள்.
மரகதத்தைத் தேடி தனது வீட்டிலிருந்து பல மைல் தொலைவு பயணம் செய்த பிறகு பெண் பேரகொய்ரா ஒருவர் ஓய்வெடுக்கிறார்.
சுரங்கத் தொழிலாளிகளிலும் பேரகொய்ராக்களிலும் சிலர் மட்டுமே பெண்கள். பெரும்பான்மையான பெண்கள் கேன்டினஸ்(cantinas) என்றழைக்கபடும் உணவு மற்றும் மதுக்கூடங்களில் பணிப் புரிகிறார்கள். மேலும் சுரங்கத் தொழிலாளிகள் மற்றும் பேரகொய்ராக்களின் துணிகளைத் துவைக்கிறார்கள்.
மரகத கல் செதுக்கும்(carver) வேலை செய்பவரான பிரெடி மாண்டில்லா (Fredy Mantilla) தனது வீட்டில் அமைந்துள்ள பட்டறையில் மரகத கல்லொன்றை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். பேரகொய்ராக்கள் மரகத கல்லை கண்டறிந்தவுடன் ஒன்று அதை சராசரியான விலையில் விற்கிறார்கள் அல்லது தங்களது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுத்து அதை மறு மதிப்பீடு செய்கிறார்கள்.
சிறந்த மரகத கல்லைத் தேடுவதற்காக சுரங்கம் தோண்டுபவர்கள், பேரகொய்ராக்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் தங்களுக்குள்ளே நாள்தோறும் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள். போகோடோவின் ஜிமினேஷ்(Jimenez) தெருவைச் சுற்றிலும் உள்ள கடைகளில் சிறிய அளவிலான மரகத கல் வியாபாரம் நடைபெறுகிறது. விலை மதிப்பற்ற மரகத கல்லை மதிப்பீடு செய்யவும் மெருகேற்றவும் விற்பதற்கும் பல்வேறு வகையான கடைகளும் பட்டறைகளும் அங்கே அக்கம்பக்கமாக இருக்கின்றன.
மரகத சுரங்க முதலாளிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்க நடுவராக செயல்பட்டவர் மோன்சிங்கர் ஹெக்டர் குட்டியர்ஸ் பாதிரியார். ஆறு மரகத கற்களால் உருவான சிலுவை சின்னத்துடன் இருக்கும் மோதிரத்தை அணிந்துள்ளார். இவரது நண்பரான மறைந்த பிரபல மரகத மாபியா கும்பல் தலைவரான விக்டர் கிரான்சாவினால்(Victor Carranza) இவருக்கு இது பரிசாக வழங்கப்பட்டது.

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்:சுந்தரம்.

மூலக்கட்டுரை: Into the green land: Emerald mining in Colombia

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க