Thursday, December 12, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.ககேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! - தேனி கருத்தரங்கம்

கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்

-

தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி! கேடுகெட்ட தொழிலா விவசாயம்! என்ற தலைப்பில் கடந்த 26/04/2017-ல் கம்பம் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு அவர்கள் கலந்துகொண்டார்.

தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, கேட்பாரற்றவனா விவசாயி! கேடுகெட்ட தொழிலா விவசாயம்! கருத்தரங்கம்

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்.மோகன் தனது உரையின் துவக்கத்தில்,”இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்தின் போது “இதுவரை ஓட்டுக்கட்சிகளை எல்லாம் புறக்கணித்து வந்த நீங்கள் இன்று ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ-வை கூட்டிவந்து கூட்டம் நடத்துகிறீர்களே நியாயமா?” என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். திரு.அப்பாவு அவர்களுக்கு விவசாயி என்பதுதான் முதல் அடையாளம். கட்சி என்பது அவருக்கு இரண்டாவது அடையாளம்தான். அப்படித்தான் அவர் கடந்த காலங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தனது பகுதியில் நடந்த ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி ஆற்றுநீரை கொள்ளையடிக்கும் கோக் நிறுவனத்திற்கு எதிராகவும் இன்றுவரை சமரசமின்றி போராடி வருகிறார். நதிநீர் இணைப்புப் பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்திருக்கிறார். தான் சார்ந்திருக்கும் கட்சி கடந்து, விவசாயிகள் நலனுக்காக போராடி வருகிறார். இதுபோன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட அப்பாவு போன்றவர்களை எங்கிருந்தாலும் தேடிச்சென்று அவர்களின் போராட்ட உணர்வை, அனுபவங்களை எங்களோடு இணைத்துக் கொள்வதற்கு மக்கள் அதிகாரம் தயங்காது என்று விளக்கமளித்தார். மேலும் டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்திய மத்திய மோடி அரசையும், மோடியின் தமிழகக் கைத்தடிகளான எச்.ராசா, தமிழிசை, பொன்னார் ஆகியோரையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

அடுத்துப் பேசிய வி வி மு. தோழர் மாறன், விவசாயத்தை ஒழித்துக்கட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம், கெயில் திட்டம், நியட்ரினோ திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் “தேசத்துரோகி” என்கிறது பி.ஜே.பி! மோடி கூறுவது போல இந்தியாவை “டிஜிட்டல் இந்தியா” என்று உலகநாடுகள் வர்ணிப்பதில்லை. விவசாய நாடு என்றுதான் கூறுகிறார்கள். ஏனென்றால் இன்றுவரை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு உணவளித்து உயிரூட்டி, வேலைவாய்ப்பும் அளித்து வருவது நமது விவசாயம் தான்! நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்தையும், விளை நிலங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறிக்குப் பலியிடும் மோடிக் கும்பல்தான் உண்மையான தேசத்துரோகிகள்!”என்றார்!

கூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்

சிறப்புரை ஆற்றிய திரு.அப்பாவு அவர்கள், ‘நாட்டைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு நீங்கள் வரவில்லை. மக்கள் அதிகாரத்தில் இருந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று எதையும் எதிர்பார்த்து நீங்கள் கூடவில்லை என்பதை நான் அறிவேன். நான் இங்கு எனது கட்சி நண்பர்களுடன் வந்திருந்தாலும், விவசாயிகளின் நலனுக்காகப் போராடும் உங்கள் முயற்சியில் கடுகளவாவது உதவி செய்ய முடியுமா என்ற எண்ணத்தில்தான் வந்திருக்கிறேன்” என்று தனது உரையைத் துவக்கியவர், ‘இந்தியாவில் ஆண்டுக்கு 88,000 டிஎம்சி நீர்வளம் கிடைக்கிறது. இதில் நாம் பயன்படுத்துவது வெறும் 6,900 டிஎம்சி தான்! கேரளாவில் 44 ஆறுகள் மூலம் 2500 டிஎம்சி நீர் கிடைக்கிறது. ஆனால் 500 டிஎம்சி நீரைத்தான் பயன்படுத்து கிறார்கள். மீதி நீரெல்லாம் வீணாக கடலில் கலக்கிறது! தண்ணீர் பற்றாக்குறையில் தள்ளாடும் தமிழகத்தில் 36 ஆறுகள் இருந்தும், ஆண்டுக்கு 240 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது! இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் ஒரு நாதியில்லையே! பென்னிகுயிக் போன்ற ஒருவர் இருந்தால் இப்படி நடக்குமா?” என்று விவசாயத்திற்கான நீராதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தினார்!

“1950-51-பட்ஜெட்டில் விவசாயத்திற்கு 14% தொகை ஒதுக்கப்பட்டது. அதனால் விவசாயத்துறையின் வளர்ச்சி விகிதம் 55% ஆக இருந்தது ! இது2012-13-ல் 6% ஆக குறைக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் வெறும்   3% மேலும் குறைந்துவிட்டது. 55% மக்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயத்திற்கு மோடியின் மத்திய அரசு காட்டியுள்ள அக்கறையின் அளவு இதுதான்! இதனால்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 55% ஆக இருந்த விவசாய உற்பத்தி இன்று வெறும் 17% ஆக குறைந்துபோனது. பிறகு எப்படி விவசாயம் செழிப்பாக வளர முடியும்?” என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும், “2010-11-ஆம் ஆண்டு இந்திராகாந்தி மற்றும் டாடா இன்ஸ்டியூட்கள், நபார்டு வங்கி, ஏ.ஜி.எம் வாங்கடே ஆகியோர் அடங்கிய குழு விவசாயிகள் தற்கொலை பற்றிய அறிக்கை ஒன்றை மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தது. அதில் “விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் இடுபொருள்களின் விலை உயர்வு, வங்கிக் கடன் தொல்லை,விளைபொருள்களுக்கு உரிய விலையில்லாதது ஆகியவைதான் 80% விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்” என்று குறிப்பிடுகிறது. இதனை முன்வைத்துதான் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 50% லாபத்துடன் விவசாய விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சியைப் பிடித்தார் மோடி! நியாயமாகப் பார்த்தால், கடந்த இரண்டு வருட ஆட்சியில் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மோடி, டெல்லியில் போராடிய நமது அய்யாக்கண்ணுவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்! ஆனால் போராடிய விவசாயிகளை நேரில் பார்க்காமலே அவமானப்படுத்தும் மோடியிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?”

“20 கார்ப்பரேட் கம்பெனிகளின் மொத்த வங்கிக் கடன் 12.25 லட்சம்கோடி ரூபாய் ! இதில் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகை  4 லட்சம் கோடி! மீதியுள்ள  8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கும் மத்திய அரசுதான் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது ! 18 பொதுத்துறை நிறுவனங்களை விற்று கார்ப்பரேட்டுகளின் 70,000 கோடி கடனை அடைத்த மோடிக்கு இப்படி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? இதையெல்லாம் தமிழ்நாட்டில் பேசுவதற்கே இடமில்லை. பேசினாலும் காதுகொடுத்து கேட்பதற்கு நாதியில்லை. அதனால்தான் மக்கள் அதிகார கூட்டத்தில் பேசுகிறேன் !”

பிற விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்

“காவிரி ஒருங்கிணைப்பு வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எனக்கு அதிகாரமில்லை என்று பேசுகிற மோடிக்கு இந்த உண்மை இன்றுதான் தெரியுமா ? GST திட்டத்தைக் கொண்டுவர அதிகாரமுள்ள மோடிக்கு காவிரி ஆணையம் அமைக்க மட்டும் அதிகாரமில்லாமல் போய்விடுமா ? 20,000 பேர் பேசும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 600 கோடி ஒதுக்கும் மோடி நதிநீர் இணைப்புக்கு வெறும் 100 கோடி ஒதுக்குகிறார் ! இவர் எப்படி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்?”

“சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமுலாக்கத்துறை இம்மூன்றும் வேட்டை நாய்கள் ! எதிரிகளை பிடி என்றால் கடிக்கும்! விடாதே என்றால் ஓடவிடாமல் சுற்றிவளைத்து விடும் ! இந்த நாய்களை மேய்ப்பவர்தான் மோடி! மோடியின் இந்த நாய் விளையாட்டுக்கள்தான் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது ! கொள்ளையடித்த சொத்தை பங்குபோடுவதற்கு துடிக்கும் கூட்டம்தான் தமிழகத்தை ஆள்கிறது!”

“ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் வளைவதைவிட, அதானியின் மகளிடம் வளைந்து நெளிகிறார் மோடி ! FICCI, CII போன்ற கார்ப்பரேட்டுகளின் சங்கங்களில் போடும் தீர்மானங்கள்தான் நமது நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்படுகிறது. இவர்களிடம் விவசாயிகளின் வாழ்வுக்கு வழி கிடைக்காது. பதவி சுகத்திற்கு ஆசைப்படாமல் தியாக உணர்வுடன் செயல்படும் மக்கள் அதிகாரத்தின் கோரிக்கைகளுக்கு நான் என்றைக்கும் துணை நிற்பேன்.” என்று முடித்தார்.

கூட்டத்தில் நெடுவாசல் போராட்டம் பற்றிக் கவிதை வாசித்த சிறுமி சிறிநிதிக்கு திரு. அப்பாவு அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். சிறப்புரை ஆற்றிய திரு அப்பாவு அவர்களுக்கு பெரியார் இன்றும்- என்றும் எனும் நூல் பரிசளிக்கப்பட்டது!

இறுதியில் தோழர் ஈஸ்வரன் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது. பிற விவசாய சங்கத்தினர் உட்பட சுமார் 200 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்

தேனி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க