Sunday, December 1, 2024
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !

தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !

-

திருமருகல் : குருவாடி – அண்ணவாசல், இன்னுமொரு நெடுவாசல்!
ஹைட்ரோகார்பன் திட்டம்:
விவசாயத்தை அழிக்க மோடி ஏவும் அணுகுண்டு !
விவசாயிகளே நாம் என்ன செய்யப்போகிறோம்?

டந்த சில ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆகவே மீத்தேன் திட்டத்தை திரும்ப பெறுவது போல் நடித்த மோடி அரசு தற்போது ”ஹைட்ரோகார்பன்‟ என்ற பெயரில் சதித்தனமாக இத்திட்டத்தை திணிக்க முயற்சி செய்கிறது.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள, மக்கள் அதிகமாக குடியிருக்கும்பகுதிகளில் இந்த ஹைட்ரோகார்பனை எடுப்பது அப்பகுதியையே சுடுகாடாக்கி அழித்துவிடும். பலநாடுகளும் இந்த திட்டத்தை கைவிட்டு, தடையும் விதித்துள்ளன. ஆனால் மோடி அரசோ நெடுவாசல், திருமருகல் உள்ளிட்ட 31 இடங்களில் இத்திட்டத்தை கொண்டுவர கார்ப்பரேட் நிறுவனங்களுக்குஅனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இன்னும் 15 ஆண்டுகளில் 40 மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. இதை அனுமதித்தால் நமது நிலமும், நீரும், வாழ்வாதாரமும் என்ன ஆகும்?

தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக டெல்லியில் போராடினர், உலகமே இவர்களின்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது, ஆனால் இந்த நாட்டின் பிரதமரான மோடிக்கு மட்டும் விவசாயிகளை சந்திக்க நேரமேயில்லையாம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு அந்நிய பானங்களான பெப்சி, கோக்கை விற்க தமிழக வணிகர் சங்கங்கள் தடைவிதித்தன. உடனே பெப்சியின் தலைமை அதிகாரி இந்திரா நூயி பிரதமரை சந்திக்கிறார், அடுத்த நாளே தாமிரவருணி நீரை அந்நிய குளிர்பானங்கள் பயன்படுத்திக் கொள்ள விதித்திருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்குகிறது. இப்படிபட்ட கார்ப்ரேட்டுகளின் விசுவாசியான பிஜேபியும், மோடியும் விவசாயிகளை அழிக்கும் இந்த நாசகார திட்டங்களை ”வளர்ச்சி” என்ற பெயரில் திணித்து நமது காதில் பூச்சுற்ற முயற்சிக்கின்றனர். பிஜேபியின்  தமிழக ஏஜென்ட் இல.கணேசனோ “நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்” என்று கொக்கரிக்கிறார்.

இதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், ONGC –ஷெல்எரிவாயு திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழித்து விவசாயிகளையும், மக்களையும் பிச்சைகாரர்களாக்கத் துடிக்கிறது மோடி கும்பல்.

தமிழக அரசோ ஆற்று மணலை கொள்ளையடிப்பது, மண்குவாரி, ஏரி – குளங்கள் ஆக்கிரமிப்பு,கிரானைட் கொள்ளை என உள்ளுர் மாஃபியா கும்பலாக மாறி விவசாயத்தை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகிறது. திருமருகல் ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சியில் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சவ்வூடு மண் குவாரியை கொண்டு வர ஒரு மாஃபியா கும்பல் எத்தணிக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் அடியாள் வேலை செய்கிறார்கள். நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, போராடும் மக்களிடம் “உங்களுக்கு விவசாயம் எப்படி ஒரு தொழிலோ, அவர்களுக்கு மண்குவாரி ஒரு தொழில்” என்று அடாவடியாக பேசி மக்களை மிரட்டுகிறார்.

ஆகவே காவல்துறை, கலெக்டர், நீதிமன்றம், அரசியல் கட்சிகள் என அரசின் அனைத்து உறுப்புகளும் பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயத்திற்கு எதிராக செயல்படுவதையே நம்மால் காணமுடிகிறது.

இதெல்லாம் எங்களுக்கு புரிகிறது, என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா? நம்மிடம் இருப்பது ஒரே தீர்வு தான். இந்த அரசு நமக்கு நல்லது செய்யும் என்று நம்புவதோ, மனுக்கொடுத்து கெஞ்சி கூத்தாடுவதோ அடிமுட்டாள்தனமான செயல். ஆகவே விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், தாய்மார்கள் என பாதிக்கப்படும் அனைவரும் களத்தில் இறங்குவதும், கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் தான் தீர்வு. இராணுவமே வந்தாலும் மக்கள் கமிட்டிகளை மீறி ஒருபிடி மண்ணைக்கூட அள்ளவிடாதபடி அரணாக மாறவேண்டும், இது தான் உண்மையான மக்களாட்சி.

வாருங்கள்! உங்களை மக்கள் அதிகாரம் அறைகூவி  அழைக்கிறது!

திருமருகல் ஒன்றிய பொதுமக்களே !
நீரையும் நிலத்தையும் காக்க திரண்டெழுங்கள் !

நாகை மாவட்ட ஆட்சியரே !
ஏர்வாடி ஊராட்சியில் மண்குவாரி  கொண்டுவர சதி செய்வதை நிறுத்து !

பொதுமக்களே !
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மண்குவாரிக்கு எதிராக ஒன்றுபடுவோம் !
கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுக்காப்போம் !

தகவல்
மக்கள் அதிகாரம் மற்றும் ஏர்வாடி ஊராட்சி பொதுமக்கள்
தஞ்சை, திருவாரூர், நாகை – 96263 52829

  1. காவிரியில் தண்ணீர் இல்லாதபோது என்னெவென்று விவசாயம் செய்வது. மாற்று ஏற்பாடுகளை தெரிந்து மேற்கொள்ளவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க