privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் - நேரடி ரிப்போர்ட்

குறிஞ்சிப்பாடியில் தூளான டாஸ்மாக் – நேரடி ரிப்போர்ட்

-

டலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள அன்னதானப்பேட்டை கிராமத்தில், அரசு சாராயக்கடை மக்கள் குடியிருப்புகளோடு கலந்து 22 கிராமங்களுக்கு ஊத்திக் கொடுக்கும் ஊழியத்தை செய்து வருகிறது. இந்த கிராமத்தில் குடியால் ஏராளமான வாகன விபத்துகளும், மரணங்களும் குடும்பங்களில் பிளவுகளும் ஏற்பட்டு குழந்தைகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது. விவசாயிகள் மாணவர்கள்-இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் குடிகாரர்களாக மாறி  சீரழிந்து உள்ளனர்.

அன்னதானபேட்டை டாஸ்மாக்கை முற்றுகையிடும் பெண்கள். படம் நன்றி: விகடன்

அரசு சாராயக்கடைக்கு இடம் கொடுத்தவரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் இந்த கடையை அகற்றுங்கள் என மனு அளித்தார் உடனே அவரின் கணவனின் சிந்தனையை இலவச மதுவால் நிரப்பி, அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கி, அவரை வைத்தே அவரின் மனைவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளது அரசு. குறிஞ்சிப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தற்போது ஏறக்குறைய 50 கிராமங்களுக்கு மேல் விதவிதமான கார்களிலும், ஆயிரக்கணக்கான மொட்டார் சைக்கிள்களிலும் பேருந்துகளிலும் இந்த பகுதிக்கு படையெடுக்கின்றன.

பாண்டிச்சேரியில் உள்ள  கன்னிக்கோயில் தமிழக குடிகாரர்களின் சொர்க்க பூமியாகும். ஆதலால் அன்னதானப்பேட்டையை கன்னிக்கோயில் என்றே அழைத்து ஆனந்தம் அடைகின்றனர். பேருந்துகளில் பயணச்சீட்டும் அப்படியே கேட்கப்படுகிறது. இரவு பத்துமணிக்கு மேல் குடிமகன்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொண்ட கடை ஊழியர்கள், பாச்சாரப்பாளையத்தை சார்ந்த அதிமுக கட்சியை சார்ந்த தங்கமணியை கள்ள வியாபாரியாக்கி பார் நடத்த அனுமதியும் கொடுத்து  விடிய விடிய சாராய விற்பனை ஓகோ என நடக்கிறது. வெய்யில் கொடுமை தாங்காமல் வீட்டிற்குள் படுக்க முடியவில்லையே என குழந்தைகளோடு வெளியில் படுத்து உறங்கினால், விடியும் வரைக்கும் எவர் எவரோ தெரியாத முகங்கள், பாட்டில் இருக்கா இல்லையா என்று விசாரிப்பதால் பயத்தில் யாரும் தூங்குவதே கிடையாது.

இரவில் வெளியில் தூங்கும் குழந்தைகளிடமும் தெருவில் விளையாடும் குழந்தைகளிடமும் அவர்களின் கழுத்தில் கிடந்த தங்க தாயத்துகள் இதுவரை நான்கு குழந்தைகளிடம் குடிகாரர்களால் அறுக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிறுத்தத்திற்கும் சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு, பெண்களையும் மாணவிகளையும் குழந்தைகளையும் அனுப்புவதற்கு மொத்த கிராமமும் பயப்படுகிறது. போதை குறைவாக உள்ள மதுபாட்டில்களில் ஆன்சை ஊறவைத்து அதன் சாரை ஊசியின் மூலமாக அந்த பாட்டில்களில் செலுத்தி அதிக விலைக்கு விவரம் அறியாதவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் ஏராளமான கொடுமைகளில் சிக்கிக்கிடந்த இப்பகுதிமக்கள், மாவட்ட ஆட்சியர் தான் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்குகிறார் என்பதை அறியாமல் அவரிடமே 5 முறை மனுகொடுத்தனர்.  கடலூர் குடிகாட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலரிடமும் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த பயனும் இல்லை. குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக MLA சபாராஜேந்திரனிடம் டாஸ்மாக் அகற்றுதல் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. நான் அதிகாரிகளை உடனே உங்களிடம் பேச அனுப்பி வைக்கிறேன் என்று உறுதியளித்தார். மறுநாள் டாஸ்மாக்கை நேரில் வந்து பார்த்துவிட்டு ஆமாம் டாஸ்மாக் ஊருக்குள் தான் இருக்கிறது என வாஸ்கொடகாமா போல கூறிவிட்டு சென்றவர்தான் இன்றுவரை அவரின் பேச்சு மூச்சு எதுவும் டாஸ்மாக்கிற்கு எதிராக இல்லை. இறுதியாக  அதிகாரிகளை சந்திக்கச் சென்ற மக்களிடம் நீங்கள் கடை இருக்கக் கூடாது என்கிறீர்கள், உங்க ஊரில் உள்ளவர்கள், கடையால் எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய வாழ்க்கையும் நாசமாக வில்லை என்றும் எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்துள்ளனர். ஆதலால் உங்கள் ஊரில் உள்ளவர்களிடம் பேசுங்கள் என மக்களுக்குள் மோதலை உருவாக்க முயற்சித்துள்ளனர்.

அரசின் கள்ள வியாபாரியும் பார் உரிமையாளருமான  தங்கமணி என்பவன்  டாஸ்மாக்கை மூடச் சொல்லி என்னுடைய பொழப்பை ஏன் இவளுங்க கெடுக்குறாளுங்க என்றும், கணவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வராததால் படுக்க ஆள்கிடைக்கல என்பதால் தான் இவளுங்க கடைய மூடச்சொல்லி அங்கும் இங்கும் அலையராளுங்க என்று திமிராக பேசி வந்தார். இந்த அயோக்கியர் கள்ளத்தனமாக மதுவை விற்பனை செய்வது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் மக்கள் புகார் செய்தபோது, அங்கிருந்த ஆய்வாளர் ரேவதி உங்க ஊரே ஒரு அம்மாத்தோப்பு  (குறிஞ்சிப்பாடியில் உள்ள அம்மாத்தோப்பு விபச்சாரம் நடைபெறும் பகுதி என கூறப்படுகிறது )  அதுல டாஸ்மாக்கு பெரிய பிரச்சனையாமா, உங்க ஊரில் எவடி யோக்கியம், முதல்ல உங்க ஊரில் உள்ளவளுங்களை திருத்துங்க தங்கமணியை திருத்தத் வந்துட்டாளுங்க என புகார்கொடுக்கச் சென்ற பெண்களைக் கேவலப்படுத்தினார். இதையெல்லாம் மக்கள் மனம் நொந்து வெளிப்படுத்தினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் பெண்கள். படம் நன்றி : தி இந்து

அதிமுக தங்கமணி என்ற பொறுக்கிக்கு ஒரு வரலாறு உள்ளது. இவர் கடந்த காலத்தில் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. இதே வடலூர் போலிஸ் தான் இவன் கழுத்தில் சாராய கேன்களைத் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்து பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இந்த மகா உத்தமனுக்கு தான் இதே காவல் நிலையம் சலாம் போடுகிறது.

இதையெல்லாம் சகிக்க முடியாத மக்கள் கடந்த மார்ச் மாதத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸ்காரர்கள் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டே என்ன பிரச்சனை என திமிராக விசாரித்தனர். அதிகாரிகள் கூடிய சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பிறகு நாளுக்கு நாள் அரசின் சாராயக்கடையால் பிரச்சனைகள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருந்தன. பல குடும்பங்களில் கணவன் மனைவிகளுக்கு இடையில் பிரச்சனைகள் பெருகிக் கொண்டே இருந்தன. மக்களும், போராடும் பெண்களின் கணவன்மார்களும் உங்கள் போராட்டம் என்ன ஆச்சு கடையை மூடிட்டீங்களா என ஏளனமாக பேச துவங்கினர்.

பொறுத்துக்கொள்ள முடியாத பெண்கள் சுமார் 500 பேர் திரண்டனர் அரசின் சாராயக்கடைக்கு எதிராக எந்தமாதிரியான போராட்டத்தை நடத்துவது என திட்டமிட்டனர். கண்டிப்பாக எந்த கட்சிகளையும் நாம் இணைத்துக் கொள்ளக் கூடாது, மீறி யாரேனும் உள்ளே நுழைந்தால் உடனே கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என தீர்மானித்தனர். பிறகு ஒருவர் சாலைமறியல் செய்யலாம் என்றார். ஒரு பெண்மணி கடையை முற்றுகையிட்டு அமரலாம் என்றார். சிலர் கடையை அடித்து நொறுக்கலாம் என்றார்கள். இறுதியாக நம்மைக் கேவலப்படுத்திய அரசுக்கு பாடம் புகட்டும் விதமாக 5 பாட்டில்களை மட்டும்  உடைப்போம் கடையின் கதவை இழுத்து பூட்டுவோம், சாலைமறியலும் செய்வோம் என்று மக்கள் முடிவு செய்தனர். இப்படி பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் 27.04.2017 அன்று காலை போராட்டம் தொடங்கப்பட்டது.

அரசின் சுரண்டலுக்கு  ஆளாக்கப்பட்ட பெண்கள், பார்ப்பனியத்தால் பின்னப்பட்டிருந்த அடிமைவிலங்கை உடைத்துக் கொண்டு வீறுகொண்டு வீதியில் இறங்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள் என உரக்க முழங்கினர், மொத்த குடும்பத்தினர்களையும் ஒன்று திரட்டினர். பேருந்துகளையும் வாகனங்களையும் மறித்தனர். நாம் தேடிச்சென்ற அதிகாரிகள் இப்போது நம்மைத்தேடி வரட்டும் என போராடிய பெண்கள் இரண்டாக பிரிந்து ஒரு பிரிவினர் சாராயக் கடையை முற்றுகையிட்டனர் அப்போது விற்பனையாளர் பாட்டிலை உடைத்து ஒரு பெண்ணின் கையை கிழித்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற பெண்கள்  கடையில் இருந்த 5 மது பாட்டில்களை மட்டும் முடிவு செய்தபடி உடைத்தனர், பிறகு கடையை இழுத்து பூட்டினர். அப்பகுதி மக்களின் குரல் விண்ணைமுட்டும் அளவிற்கு ஆர்ப்பரித்து இச்செயலை வாழ்த்தி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.  மற்றொரு பிரிவினர் சாலையை மறித்து கடையை மூடச்சொல்லி முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். வர்க்கப் பாசம் பொத்துக்கொண்டு அரசின் சாரயக் கடையை  பாதுகாக்க வந்த போலீசு ஒழுங்கா எல்லோரும் ஓடிவிடுங்க இல்லன்னா ரிசர்வ் போலீசை வரவழைத்து எல்லோரையும் உதைத்து கைது செய்வோம் என மிரட்டியது. போலிசின் மிரட்டலுக்கு அஞ்சாத மக்கள் முற்றுகையை விளக்கிக் கொள்ளாமல் நெஞ்சுரத்தோடு நின்றனர்.

காவல்துறையின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களை போலீசு மிரட்டியது. போராடிய இளைஞர்களை போலீசார் வீடியோ எடுத்தனர். எதற்கு சார் பசங்கள படம் எடுக்குறீங்க? நீங்க இப்படி செய்தா நாங்க பயந்துடுவோமா அந்த கட்டத்தை எல்லாம் நாங்க தாண்டிட்டோம் என பதிலளித்தனர் பெண்கள். இவர்களோடு ஏராளமான ஆண்களும் திரண்டிருந்தனர். இந்த கடை தான் என் குடும்பத்தை அழித்தது. இது இல்லை என்றால் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்போம் என்று கூறி சில ஆண்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

பஞ்சாயத்துத் தலைவரின் கணவரை போலீசு அழைத்து வந்து பேச வைத்தது. அவர் வந்து ஏம்மா உங்களுக்கு வேறு வேலை கிடையாதா இதல்லாம் உங்களுக்கு தேவையா என சொல்லி முடிப்பதற்குள் போனால் போகட்டும் என உன் பொண்டாட்டிக்கு ஓட்டுப் போட்டோம் இப்ப நீ வந்து எங்களுக்கு வேலை இல்லையா என்றா கேட்குற ஒழுங்கா கிளம்பிடு என மக்கள் விரட்டியதும் அவரின் உரையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

கடையின் உரிமையாளர் வந்து எனது வீட்டில் கடை உள்ளது உங்களுக்கு என்ன கெட்டுப்போச்சி என மக்களிடம் சண்டையிட்டார் அவரை மக்கள் கண்டுகொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

வட்டாட்சியர் ஜான்சி ராணியுடன் பேச்சு வார்த்தை நடத்தும் உழைக்கும் பெண். படம் நன்றி : தி இந்து

பாமக-வை சார்ந்த ஒருவர் முன்னணியார் போல் காட்டிக் கொண்டு செயல்பட்டார். அவரிடம் பெண்கள் தயவு செய்து மக்கள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம், போராட்டக் களத்தைவிட்டு உடனே வெளியேறுங்கள் என விரட்டியடித்தனர்.

பிறகு தாசில்தார் வந்து நானும் உங்களைப் போன்று ஒரு பெண்தான். இவ்வளவு நாட்களாக இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக எனக்குத் தெரியாது. கண்டிப்பாக உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றுகிறேன், எனக்கு இந்த போராட்டம் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனையோடு உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உறவு முடிந்து விடாது. உங்கள் முகத்தை நானும் எங்களின் முகத்தை நீங்களும் நாளை பார்க்கணும். ஆதலால்  தயவு செய்து சாலையைவிட்டு விலகுங்கள் என்று சென்டிமென்டாக பேசியதும் மக்கள் சாலையைவிட்டு மறியலையும், முற்றுகையையும் விலக்கிக் கொண்டனர்.

கடையை மூடும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு அகலமாட்டோம் என உறுதியாக நின்ற மக்களிடம் வரும் மே மாதம் 19 தேதி மாலையுடன் இந்த கடையிருக்காது என்றும் இவ்வளவு பணம் மதிப்பு கொண்ட பொருட்களை வேறு இடத்தில் வைக்க இடம் தயார் செய்து கொள்ளும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்  என தாசில்தார நைச்சியமாக பேசியதை மக்கள் நம்பி போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொள்வதாக முடிவு செய்தனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை வீடியோவாக வைத்திருக்கிறோம். நீங்கள் கூறிய படி நடக்கவில்லை என்றால்…  என ஒரு பெண் அங்கே திரண்டிருந்த போலீசைப் பார்த்து கூறியது, அந்த மக்களின் அடுத்தக்கட்டப் போராட்டத்தின் தன்மையைப் பறை சாற்றியது.

இப்பகுதி மக்களின் போராட்டத்தைக் கேள்விப்பட்ட பிறபகுதி மக்கள் எங்களை ஏன் கூப்பிடவில்லை சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போம். அதிகாரிகள் சொன்னபடி கடையை மூடவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெருந்திரளாக போராடலாம் என போராட்டத்தை திருவிழாவாக பாவித்து தீர்மானம் போட்டு கலைந்தனர்.

இச்செய்தியை கேள்விப்பட்டு கடலூர் புமாஇமு தோழர் சத்தியகுமார் தலைமையில் இரு தோழர்கள் அடுத்த நாள் அப்பகுதிக்குச் சென்றனர். மக்களை சந்தித்ததும் டாஸ்மாக் போராளிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த பிறகு குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது தாய்மார்களே விடாதீர்கள் விளக்குமாற்றால் அடித்து விரட்டுங்கள், என்ற  சுவரொட்டியை பகுதிகளில் ஓட்டியதும் மக்கள் மகிழ்ச்சியோடு பார்த்தனர். வீடுகளில் சுவரொட்டி போடலாமா என்று கேட்டால் மக்கள் திட்டுகிறார்கள், டாஸ்மாக்கிற்கு எதிரான சுவரொட்டி என்றால் இதை முன்னாடியே சொல்லவேண்டியது தானப்பா, ஒட்டுப்பா எந்த சுவற்றில் வேண்டுமானாலும் ஒட்டுப்பா என்றனர். மாணவர்கள் இளைஞர்கள் இதுபோன்ற சுவரொட்டிகளை நிறைய பார்த்துள்ளோம் ஆனால் யாருன்னுதான் தெரியாம இருந்தோம். கண்டிப்பாக அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு வருவோம் என அனைவரும் வீட்டு விசேஷத்திற்கு கூறுவதுபோல் மகிழ்ச்சியாக கூறினார்கள்.

பிறகு போராடிய மக்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதா என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டு போராடிய மக்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது என்றும், 20 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது 5 பாட்டில் உடைத்ததை 40 பாட்டில்கள் உடைத்தார்கள் என்றும் சாராயம் விற்பவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தார்கள் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

உங்களின் வழக்குகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமே இலவசமாக நடத்தும் என்று உறுதியளித்துவிட்டு, சுற்றுவட்டார மக்களை ஒற்றைக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்று திரட்டுவோம், அரசின் அடக்கு முறைக்கும், அரசின் நைச்சியமான பேச்சிக்கும் இடமளிக்காமல் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு தயாராவோம் என்ற தோழர்கள் பேசினிர்.

இது எங்களின் மானப்பிரச்சனை இந்த கடையை மூடியே தீரனும், அதனால் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையே ஏற்பட்டாலும் இந்த கடையை மூடியே தீருவோம், டாஸ்மாக் இல்லையென்றால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது நாங்கள் செத்தால் தான் மதுக்கடையை மூடமுடியும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். கட்சிகளை இணைத்துக் கொண்டால் எந்த போராட்டமும் வெற்றிபெறாது கட்சிகள் தங்களின் சுய லாபத்துக்காகத்தான் செயல்படுகின்றன ஓட்டு மட்டுமே அவர்களின் நோக்கம் ஆதலால்  மக்களின் போராட்டமே தீர்வைத்தரும்.

மக்கள் கூறுவதைத்தான் அரசு செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலையை உருவாக்கினால் தான் நாம் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும், அமைதியான கிராமத்தை உருவாக்க முடியும் என எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த திருமதி தையல்நாயகியும் ராஜேஸ்வரியும் கூறுவதை கேட்கும் போதும், வயது முதிர்ந்த நிலையிலும் என் தலைமுறை எப்படியோ போய்விட்டது, இந்த ஊரை அரசிடமிருந்து பாதுகாத்தாக வேண்டும் ஆதலால்  சுற்றுவட்டாரப் பகுதிகளை நான் திரட்டுகிறேன் நீங்கள் மட்டும் எங்களோடு இருப்பீர்களா என பெரியம்மா நாகவள்ளியம்மா கூறுவதையும் கேட்கும் போது,

புரட்சிகர காலகட்டங்களில் சமூக சூழல் மாற்றம் பெற்றுக்  கொண்டே இருக்கும் – என்ற தோழர் லெனினின் வார்த்தைகளே சாட்சியாக நிற்கின்றன.

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி

கடலூர் பகுதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க